search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிவரலாறு"

    பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.
    பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.

    காமெடியில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி, 1965-ம் ஆண்டில் நடிகை மணிமாலாவை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தார். நடிகர் -நடிகை என்ற முறையில் `ஹலோ' சொல்லிக் கொண்டார்கள். அடுத்தடுத்த சந்திப்புகள் யதார்த்தமாய் அமைய, நட்பு ஆனது.

    5 ஆண்டுகள் தொடர்ந்த இந்த நட்பு, திருமணத்தில் முடிந்தது. 1970-ம் ஆண்டில் மணிமாலாவை கரம் பற்றினார், மூர்த்தி.

    இதுபற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படிச் சொன்னார்:

    "பலரையும் பார்க்கிறோம். பேசுகிறோம். சிலர்தான் மனதில் நிற்கிறார்கள்.

    மணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள், "இப்படி அன்பும் பண்பும் அமையப்பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே'' என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித `ஈகோ'வும் இருந்ததில்லை. அதனால் "நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்'' என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.

    மணிமாலா தரப்பிலும் என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5-வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.

    திருமணத்துக்கு முன்னதாக, எங்கள் நட்பை காதல் வரை வலுப்படுத்த ஒரு சம்பவம் நடந்தது. மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள். நடிகர்கள் ஜெமினிகணேஷ், ஸ்ரீராம் வந்தார்கள். நடிகைகளில் மணிமாலா வந்திருந்தார். நானும் கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்தேன். அந்த நட்சத்திர டூரில் நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம்.

    நாங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால் மற்றவர்கள் எங்கள் உரையாடலில் கலந்து கொள்ளமாட்டார்கள். இப்படியாக வளர்ந்த நட்பும் அன்பும் காதலாகி, எங்களை நட்சத்திர தம்பதிகளாகவும் ஆக்கியது.

    திருமணத்துக்குப் பிறகு மணிமாலா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டுமே நிர்வகித்து வந்தார். எங்களுக்கு `மனோ' என்று ஒரே மகன். என்ஜினீயரிங் முடித்த மனோ இப்போது திருமணமாகி, குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் பணியில் இருக்கிறான். மனோ மூலம் எங்களுக்கு ஒரு பேரக்குழந்தையும் உண்டு.

    மனோவின் மனைவி சபிதா, கம்ப்ïட்டர் என்ஜினீயர். அதோடு பரத நாட்டியமும் தெரிந்தவர். நடனப்பள்ளி நடத்திக்கொண்டு வேலையையும் தொடர்கிறார்.

    மகன் மனோவைப் பொறுத்தமட்டில் எனது நல்ல நண்பன். அப்பா -மகன் மாதிரி இல்லாமல் நண்பர்களாக அத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்வோம். நான் கிழித்த கோட்டை இப்பவும் கூட மனோ தாண்டமாட்டான். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கிறபோது கூட, ஒரு சின்ன தப்புகூட அவனைப்பற்றி வந்தது கிடையாது. அதனால் அவனை நான் கண்டிக்கிறதுக்கான வாய்ப்பு கடைசி வரைக்கும் வந்தது கிடையாது. கேட்க ஆச்சரியமாக இருக்கும்.

    கோபத்துக்காக அவன் மேல் என் விரல்கூட பட்டது இல்லை. படிக்கிற சமயங்களில் வீட்டுக்கு வர தாமதமானால்கூட, உடனே போன் பண்ணி `இப்ப இந்த இடத்துல இருக்கிறேன். இவ்வளவு நேரத்தில் வந்துடுவேன்' என்று சொல்லிவிடுவான். இதனால் அவன் பத்தின ஒரு சின்ன டென்ஷன்கூட எனக்கும், மணிமாலாவுக்கும் ஒருபோதும் இருந்ததில்லை.

    மனோ அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதால், வருஷத்தில் 3 மாதம் அவனோட தங்கி விட்டு வருவோம். சமீபத்தில் இப்படி போயிருந்தப்ப என்னிடம், "அப்பா! அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கே பையனா பொறக்கணும்ப்பா'' என்றான். எனக்கு மனசு நெகிழ்ந்து விட்டது. "அடுத்த ஜென்மம்னு மட்டுமில்லப்பா... எல்லா ஜென்மத்திலும் நாங்களே உனக்கு பெற்றோரா அமையணும்'' என்றேன். நான் இப்படிச் சொன்னபோது, அவனும் கண் கலங்கிவிட்டான்.

    திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த மணிமாலாவை, டைரக்டர் கே.பாலசந்தர் "சிந்து பைரவி'' படத்தில் நடிக்க அழைத்தார். அந்த அழைப்பை தட்ட முடியாமல் மணிமாலா நடிச்சாங்க. படத்தில் சுஹாசினிக்கு அம்மாவா வர்ற கேரக்டர். அதுல நடிச்சதுக்கு அப்புறமா பாலசந்தரின் "சஹானா'' சீரியலிலும் நடிச்சாங்க. இப்ப நடிச்சது போதும் என்கிற மன நிறைவோட, என்னோட கலைப்பணிக்கு உதவியா இருக்கிறாங்க.''

    இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.

    மற்ற நகைச்சுவை நடிகர்களை விடவும், மூர்த்திக்கு ஒரு நடிப்புச் சிறப்பு உண்டு. தமிழ் சினிமாவில் காமெடியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கோலோச்சிக் கொண்டிருந்த நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அத்தனை பேருடனும் வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி நடிப்பைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.

    வைஜயந்தி மாலா நடித்த "வாழ்க்கை''யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் சேர்ந்து "எல்லைக்கோடு'' படத்தில் காமெடி செய்திருக்கிறார்.

    நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் என மூன்று பரிமாணங்களிலும் வெளிப்பட்டவர். அவருடனும் "சமையல்காரன்'' படத்தில் நடித்தார், மூர்த்தி.

    டைரக்டர் ஸ்ரீதர் டைரக்டராக இருந்த காலகட்டத்தில் `சித்ராலயா' என்ற சினிமா பத்திரிகையையும் நடத்தி வந்தார். மூர்த்தியிடம் நகைச்சுவை ஆற்றலுடன் இணைந்திருந்த எழுத்தாற்றலையும் ஸ்ரீதர் தெரிந்து கொண்டார். இதனால் சித்ராலயா பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியபடி நடிப்பை தொடர்ந்தார், மூர்த்தி.

    3 வருடத்திற்கு பிறகு அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து சினிமாவில் முழு நேர நடிகரானார், மூர்த்தி.

    வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடி வசனங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கிறது என்று திரையுலகில் ஒரு கருத்து நிலவியது. அதுபற்றி அவர் கூறியதாவது:-

    "தமிழ் செழிப்பான மொழி. ஒரு வார்த்தையில் ஏழெட்டு அர்த்தம்கூட வரும். ஏற்றி, இறக்கிச் சொல்லும்போது ஒரு அர்த்தம் வந்தால், நிறுத்தி நிதானமாகச் சொல்லும்போது இன்னொரு அர்த்தம் வரும். ஒரு வீட்டு புரோக்கரிடம் ஒருத்தர் வாடகைக்கு வீடு கேட்கிறார்.

    "எப்படி பார்க்கிறது? பட்ஜெட் சொல்லுங்க'' என்கிறார், புரோக்கர். `சின்ன வீடா' இருந்தாக்கூட பரவாயில்லை என்கிறார், வீடு கேட்டவர். அவர் "சின்னவீடு'' என்பதை தனது பட்ஜெட் அடிப்படையில் சொன்னார். இதுவே `சின்னவீடு' என்ற வேறு அர்த்தமும் கொண்டு வருகிறதில்லையா?

    அதுமாதிரிதான் என் ஜோக்கிலும் நானாக எதையாவது பேசப்போக, அதுவாக வேறொரு அர்த்தமும் வந்து உட்கார்ந்து கொள்கிறது. ஜன்னல் வழியாக வானத்தை எட்டிப் பார்த்தால் அதில் அழகான நிலவையும், நட்சத்திரங்களையும் காணமுடியும். கீழே எட்டிப்பார்த்தால் ரோட்டில் போகிற பன்றிகள், பூச்சிகள் கூட கண்ணில் பட்டுத் தொலைக்கும். நாம் பார்க்கும் பார்வையில்தான் வித்தியாசம் எல்லாமே.''

    இவ்வாறு கூறினார், வெண்ணிற ஆடை மூர்த்தி. 
    தனக்கு ஜோதிடர் சொன்ன ஜோதிடம் பலித்ததால், ஜோதிடக் கலையைக் கற்றுத் தேர்ந்தார், வெண்ணிற ஆடை மூர்த்தி. "நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆவீர்கள்'' என்று ரஜினிகாந்துக்கு ஜோதிடம் சொன்னார்.
    தனக்கு ஜோதிடர் சொன்ன ஜோதிடம் பலித்ததால், ஜோதிடக் கலையைக் கற்றுத் தேர்ந்தார், வெண்ணிற ஆடை மூர்த்தி. "நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆவீர்கள்'' என்று ரஜினிகாந்துக்கு ஜோதிடம் சொன்னார்.

    நாடகங்களில் நடித்த அனுபவத்தில் "வெண்ணிற ஆடை'' மூர்த்தியும் ஒரு நாடகம் உருவாக்கினார். "லட்சுமி கல்யாண வைபோகமே'' என்ற அந்த நாடகத்தில் பழமை மாறாத ஒரு கிராமத்தை கண்முன் நிறுத்தினார். இந்த நாடகம் சிங்கப்பூர், இலங்கை என வெளிநாடுகளிலும் நடந்தது.

    இந்த நாடகம் நூறாவது நாளாக மேடையேறியபோது, டைரக்டர் கே.பாலசந்தர், கவிஞர் வைரமுத்து போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

    வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவுக்காக 2 கதைகள் எழுதினார். "மாலை சூடவா'' என்ற கதை, கமலஹாசன் நடிக்க, சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் படமானது.

    "ருசி'' என்ற பெயரில் எழுதிய இன்னொரு கதையில் மோகன் நடிக்க, "அன்னக்கிளி'' டைரக்டர்கள் தேவராஜ் - மோகனில் ஒருவரான மோகன் இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் வசனமும் எழுதினார், வெண்ணிற ஆடை மூர்த்தி.

    இந்த காலகட்டத்தில் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையும் மூர்த்திக்கு பெரிய அளவில் வந்துவிட்டது. ஜோதிடம் தொடர்பாக புத்தகங்களை கருத்தூன்றி படித்து, அதில் தன்னை மெருகேற்றிக் கொண்டார். தனக்கு நடிக்கும் வாய்ப்பு தேடிவரும் என்று சொன்ன ஜோதிடர் `பண்டிட்' கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை அடிக்கடி சந்தித்து, ஜோதிடம் தொடர்பான புதுப்புது விவரங்களை தெரிந்து கொண்டார். இந்த முயற்சியில் ஜோதிடம் தொடர்பான 2 கட்டுரைகளை ஜோதிடர் ஆசிரியராக இருந்த பத்திரிகையிலேயே எழுதினார். ஒருநாள் அந்த ஜோதிடரே இவரிடம், "உனக்கு ஜோதிடம் நன்றாக வருகிறது. அதிலும் உன்னை வளர்த்துக்கொள்'' என்றிருக்கிறார்.

    வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஜோதிடமும் அத்துப்படியான நேரத்தில் ரஜினியின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தார். அப்போது ரஜினியின் சினிமா எதிர்காலம் பற்றி தெளிவாக சொன்னார். அதுபற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது:-

    "ரஜினியுடன் நான் "முள்ளும் மலரும்'' படத்தில் சேர்ந்து நடித்தேன். நீண்ட இடைவெளிக்குப்பிறகு, "சிகப்பு சூரியன்'' படத்தில் நடித்தோம். அப்போது அவர் நடிப்பில் வளர்ந்து வந்த நேரம். ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினி தனது ஜாதகத்தை என்னிடம் காட்டினார். அதைப்பார்த்த நான், "நடிப்பில் பெரும் புகழ் உங்களை வந்து சேரும். பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்துடுவீங்க'' என்றேன். ரஜினி சிரித்துக்கொண்டார். அடுத்தடுத்து அவர் நடிப்பில் வந்த படங்கள் பெரிய அளவில் வசூலைத்தர, ஜோதிடம் சொன்னது போலவே சூப்பர் ஸ்டாராகி விட்டார்.

    அதுமாதிரி நடிகர் திலகம் சிவாஜியுடனும் எனக்கு ஒரு ஜோதிட அனுபவம் உண்டு. சிவாஜி சார் நடித்த "அஞ்சல் பெட்டி-520'' படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது என்னிடம் பிரியமாக பேசுவார். "யோவ்! காமெடியன்! இங்கே வாய்யா'' என்றுதான் அழைப்பார்.

    நான் ஜோதிடக் கலையை கற்றுத் தேர்ந்த நேரத்தில் ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்த்தேன்.

    "வணக்கம் சார்! நல்லா இருக்கீங்களா?'' என்று கேட்டேன்.

    "உனக்கு ஜோசியம் தெரியுமாமே'' என்று கேட்டார், சிவாஜி.

    "தெரியும் சார்'' என்றேன்.

    "உன் ஜோசியம் எனக்கு என்னய்யா சொல்லுது?'' - கேட்டார் சிவாஜி.

    நான் அவரிடம் ஜாலியாக, "ஜோசியம் பார்த்தால் எல்லாரும் பணம் கொடுப்பாங்க. நீங்க என்ன கொடுப்பீங்க?'' என்று கேட்டேன்.

    "என்னடா நீ! வம்பு பிடிச்ச ஆளா இருப்பே போலிருக்கே'' என்று சிரித்த சிவாஜியிடம், "இல்ல சார்! உங்களுக்கு பார்த்து சொல்றதைவிட பெரிய பாக்கியம் என்ன இருக்கிறது?'' என்று சொன்னவன், அவர் ஜாதகத்தை வரவழைத்து அப்போதே  பார்த்தேன்.

    நான் அவரிடம், "அரசியலில் உங்களுக்கு ஒரு பதவி வர இருக்கிறது'' என்றேன்.

    நான் சொன்னதை நம்பவில்லை என்பதை அவரது கண்கள் காட்டிக் கொடுத்தன.

    ஆனால் ஜோதிடம் பொய்யாகவில்லை. சில நாட்களிலேயே ராஜ்யசபா எம்.பி.யாக சிவாஜியை நியமித்து அறிவிப்பு

    வந்தது.''

    இவ்வாறு மூர்த்தி கூறினார்.

    சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற ஏக்கம் மூர்த்திக்கு இருந்தது. எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை'' படத்தில் அப்படியொரு வாய்ப்பும் வந்தது. ஆனால் துரதிருஷ்டம்! கதையுடன் ஒட்டவில்லை என்று கூறி வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த காமெடிக் காட்சிகளையே நீக்கி விட்டார்கள்!

    இதுபற்றி மூர்த்தி கூறியதாவது:-

     "எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டேன். ஆனாலும் செட்டில் அவர் நடித்த நாட்களில் எனக்கு ஷூட்டிங் இருக்காது. எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்து

    2 நாட்களுக்குப் பிறகே என்னை அழைத்தார்கள். டி.எஸ்.பாலையா, ஜெயலலிதா நடித்த காட்சியில் நானும் நடித்தேன். நான் நடித்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்பது படம் ரிலீசான பிறகே எனக்குத் தெரியும்.

    அவர் படத்தில் நான் இல்லையே தவிர, நான் நடித்த நாடகம் ஒன்றில் என் நடிப்பை மனதார பாராட்டிய வள்ளல் அவர். மேஜர் சுந்தர்ராஜன் நடத்திய "தீர்ப்பு'' என்ற நாடகம் நூறாவது நாள் கண்டது. நூறாவது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர். வந்திருந்தார். முழு நாடகத்தையும் பார்த்து ரசித்தார். அவர் பேசும்போது, "மேஜர் சுந்தர்ராஜன் நன்றாக நடிப்பார் என்பது எனக்குத் தெரியும். இந்த நாடகத்தில் `ராமு' என்ற கேரக்டரில் நடித்தவரின் நடிப்பை நான் இதுவரை பார்த்ததில்லை. அருமையாக நடிக்கிறார். என் தாயின் ஆசியோடு சொல்கிறேன். அவர் நல்லா வருவார்'' என்றார்.

    நாடகத்தில் `ராமு'வாக நடித்தது நான்தான். அவரின் மனப்பூர்வ பாராட்டு எனக்கு `ஆசி'யாக அமைந்தது. நடிப்பில் எனக்கு வளர்ச்சியாகவும் அமைந்தது.

    எம்.ஜி.ஆர். அவர்களின் பாராட்டுக்கு இணையான பாராட்டு நான் நடிக்க வரும் முன்பே எனக்கு கிடைத்து விட்டது. அப்போது என்னைப் பாராட்டியவர் நகைச்சுவை மாமேதை `கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன்.

    அப்போது நான் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி விழாவில் நாங்கள் "ஐம்பதும் அறுபதும்'' என்ற பெயரில் ஒரு காமெடி நாடகம் போட்டோம். கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் தம்பதிகள் வந்திருந்தார்கள். எங்கள் நாடகத்தை பார்த்த தம்பதியர் இருவருமே பாராட்டினார்கள். மதுரம் அம்மா பேசும்போது, என்னை சுட்டிக்காட்டி, "இந்தப் பையன் ரொம்ப நல்லா `ஆக்ட்' பண்றான்'' என்றார். கலைவாணர் என்னை அழைத்து, "நல்லா படிப்பா. படிப்பை பூர்த்தி பண்ணிட்டு அப்புறமா சினிமாவுக்கு வா'' என்று கூறினார்.

    நான் சினிமா பற்றி சிந்திக்காத அந்தக் காலத்தில், என்னை நடிக்க வரச்சொல்லி வாழ்த்திய கலைவாணரின் ஆசியும் எனக்கு கிடைத்திருப்பதாகவே கருதுகிறேன்.''

    இவ்வாறு கூறினார், வெண்ணிற ஆடை மூர்த்தி.

    வெண்ணிற ஆடை படம் 1965-ல் வெளியானது. படத்தில் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த் என அமைந்த அறிமுகப்பட்டியலில் மூர்த்தியும் இருந்தார்.
    வெண்ணிற ஆடை படம் 1965-ல் வெளியானது. படத்தில் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த் என அமைந்த அறிமுகப்பட்டியலில் மூர்த்தியும் இருந்தார்.

    இந்தப்படம் மூலம் நிர்மலா, `வெண்ணிற ஆடை நிர்மலா'வாகவும், மூர்த்தி, `வெண்ணிற ஆடை மூர்த்தி'யாகவும் மாறிப்போனார்கள். படத்தின் பெயர், இருவரிடமும் இணைபிரியாமல் ஒட்டிக்கொண்டு விட்டது.

    வக்கீலுக்குப் படித்த மகன், அதற்காக பிராக்டீஸ் செய்வதை தவிர்த்து, விற்பனைப் பிரதிநிதியாக மாறி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்ததுதான் அப்பாவுக்குத் தெரியும். அதன்பிறகு ஸ்ரீதரின் `வெண்ணிற ஆடை' படம் மூலம் காமெடி நடிகராக தமிழ் ரசிகர்களிடம் அறியப்பட்ட மூர்த்தி, படம் வெளிவரும்வரை பெற்றோரிடமும்கூட சொல்லவில்லை.

    படம் வெளிவந்த பிறகும் மறைத்தால் சரியாக இருக்காது. யாராவது அப்பாவிடம் தவறாக சொல்லி அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, நாமே சொல்லி விடுவது என முடிவு செய்தார், மூர்த்தி. ஊருக்கு வந்து அப்பாவை சந்தித்த அவர், பேச்சினூடே தனக்கு கிடைத்த நடிப்பு வாய்ப்பு பற்றியும், நடிப்பிலும் எதிர்காலப் பிரகாசம் இருப்பது பற்றியும் நாசூக்காக சொல்லிவிட்டார். சொல்லி முடித்த பிறகு அப்பாவிடம் இருந்து பெரிய பிரளயத்தை எதிர்பார்த்தார். ஆனால் பலவீனமான அப்பாவிடம் இருந்து வெளிப்பட்டது அவரது உதடுகளில் இருந்து புன்னகைக்கீற்றுதான். "நல்லது கெட்டது தெரிஞ்சுக்கிற வயது உனக்கு வந்தாச்சு. எதில் ஆர்வமோ அதில் சாதிக்கப்பார்'' என்று சொன்னார் அப்பா.

    ஆனால் மூர்த்தியின் அப்பாவால் மகன் நடித்த `வெண்ணிற ஆடை' படத்தை பார்க்க இயலவில்லை. உடல் நலம் குன்றி அக்டோபரில் காலமாகி விட்டார். அம்மாவும் அப்போது அந்தப் படத்தை பார்க்காமலே இருந்து விட்டார். அதன் பிறகு டிவியில் ஒளிபரப்பியபோது மகனை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

    `வெண்ணிற ஆடை' வெற்றிப்பட பட்டியலில் நிச்சயம் சேரும் என்று நம்பினார் டைரக்டர் ஸ்ரீதர். ஆனால் கதைக்காக "ஏ'' சர்டிபிகேட் பெற்ற படத்தில், ரசிகர்கள் `எதிர்பார்த்த அம்சங்கள்' இல்லாததால் ஆரம்பத்தில் சரியாக ஓடவில்லை. பிறகு `பிக்அப்' ஆகி, நூறு நாட்கள் ஓடியது.

    வெண்ணிற ஆடை படம் ரிலீசாகி 6 மாதம் ஆகியும் மூர்த்தியை தேடி ஒரு தயாரிப்பாளர்கூட வரவில்லை. இதனால் தவறான பாதையில் அடியெடுத்து வைத்து விட்டோமோ என்று மூர்த்தி கூட கலக்கமுற்றார். உள் மனதில், பேசாமல் "சீனியர் வக்கீல் யாரிடமாவது ஜுனியராக சேர்ந்து விடுவோமா?'' என்றுகூட யோசித்தார். பிறகு எப்போதுதான் அடுத்த பட வாய்ப்பு வந்தது! அதுபற்றி `வெண்ணிற ஆடை' மூர்த்தி கூறியதாவது:-

    டைரக்டர் டி.என். பாலு அப்போது கதாசிரியராக இருந்தார். அவர் எழுதிய `காதல் படுத்தும்பாடு' கதையை டைரக்டர் ஜோசப் தளியத் படமாக எடுக்கிறார் என்பதை அறிந்தேன். படத்தில் தங்கவேலு சாருடன் கூடவே வருகிற ஒரு கேரக்டரில் நடிக்க ஆள் தேடிக்கொண்டிருப்பதை தெரிந்து கொண்டேன். இதனால் டைரக்டர் ஜோசப் தளியத்தை சந்தித்து பேசினேன்.

    நான் ஏற்கனவே டைரக்டர் ஸ்ரீதர் சாரின் படத்தில் நடித்திருப்பதை சொல்லி `சான்ஸ்' கேட்டேன். அவர் என்னிடம் "அந்தப்படத்தில் நீ நடித்த காமெடி போர்ஷனை மட்டும் வாங்கி வர முடியுமா?'' என்று கேட்டார். (விசிடி வராத காலம் அது) நான் ஸ்ரீதரின் சித்ராலயா பட நிறுவனத்துக்கு சென்று கேட்டபோது அவர்களும் பெருந்தன்மையாக நான் நடித்த ரீலை கொடுத்து அனுப்பினர்.

    அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் ஜோசப் தளியத், என் நடிப்பில் திருப்தியடைந்து அவரது படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார். தங்கவேலு சாருடன் வருகிற அந்த ஜாலி கேரக்டரும் எனக்கு பெயர் வாங்கித் தந்தது.

    டைரக்டர் ஜோசப் தளியத் ரொம்பவே பெருந்தன்மையானவர். படத்தை தயாரிப்பதும் அவரே என்பதால் சகல விஷயத்திலும் அவரது நேரடிப் பார்வை இருக்கும். சின்னவொரு விஷயத்தில்கூட அவரது அணுகுமுறை நமக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கும். செட்டில் தங்கவேலு சாருடன் நடித்துக் கொண்டிருந்தேன். `லஞ்ச் பிரேக்' வந்தது. தங்கவேலு சாரை தனியறைக்கு சாப்பிட அழைத்துப் போனார்கள்.

    என்னையோ கம்பெனி ஆட்கள் சாப்பிடுகிற இடத்துக்கு அழைத்துப்போனார்கள். இதை பார்த்துவிட்ட டைரக்டர் ஜோசப் தளியத் தனது தயாரிப்பு நிர்வாகியை உடனடியாக அழைத்து, "மூர்த்தியை நடிகர் தங்கவேலு சாப்பிடப்போகும் அதே அறைக்கு அழைத்துச் சென்று சாப்பிட வையுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார். நடிப்பில் வளரும் முன்பே எனக்கு அவர் மூலம் கிடைத்த இந்த மரியாதை என்னை நெகிழச் செய்தது.''

    இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.

    படத்தில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கொண்டிருந்தாலும், மூர்த்தியை நாடக உலகமும் கவர்ந்திழுத்தது. `சித்ராலயா' கோபுவுடன் சேர்ந்து நாடகங்களையும் நடத்த ஆரம்பித்தார். கோபுவுடன் சேர்ந்து `காசேதான் கடவுளடா', `வீட்டுக்கு வீடு', `ஸ்ரீமதி' போன்ற நாடகங்களை நடத்தினார். இதில் ஒரு ஆங்கில புத்தகத்தில் மூர்த்தி படித்த ஒரு கதையை கோபுவிடம் சொல்ல, அவர் அதையே நாடகமாக்கினார்.அதுவே"காசேதான் கடவுளடா'' நாடகம்.

    இந்த "காசேதான் கடவுளடா'' நாடகம், பார்ப்பவர்கள் அத்தனை பேரையும் விலா நோகச் சிரிக்க வைத்தது. மனம் விட்டுச் சிரித்தவர்கள் மறுபடி மறுபடி நாடகம் பார்க்க வந்தார்கள்.

    ஒருநாள் இந்த நாடகத்தை பார்க்க ஏவி.மெய்யப்ப செட்டியார் வந்தார். நாடகம் பிடித்துப்போக, அதை படமாக்கும் முடிவுக்கு வந்தார். கோபு உள்ளிட்ட பலருக்கும் அப்போது அட்வான்ஸ் கொடுத்தார். எல்லோரும் உற்சாகத்தில் துள்ளினார்கள்.

    இந்தப்படத்தில் மூர்த்திக்கும் இடம் கிடைத்தது. படத்தில் நடித்ததற்காக 5 ஆயிரம் ரூபாய் சம்பளமும் கிடைத்தது. இது மூர்த்தியை ரொம்பவே உற்சாகப்படுத்தியது.

    காரணம், அதுவரை படங் களுக்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் தான் வாங்கினார். செட்டியார் உபயத்தில் 2 ஆயிரம் உயர்ந்தது.

    ஆனால் "காசேதான் கடவுளடா'' நாடகம் பல தடவைகள் மேடையேறியதால், நாடகத்தின் மூலமாக மட்டும் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பளமாக கிடைத்தது, மூர்த்திக்கு.

    கவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
    கவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

    சொந்தப்படம் எடுத்ததால் சொத்துக்களை இழந்த மருதகாசி, எம்.ஜி.ஆரால் திரை உலகுக்கு மறுபிரவேசம் செய்தார். தன்னம்பிக்கையுடன், குடும்பத்தாருடன் மீண்டும் சென்னையில் குடியேறினார்.

    தேவர் படங்களுக்கு பாட்டு எழுதினார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த "தசாவதாரம்'', "காஞ்சி காமாட்சி'', "நாயக்கரின் மகள்'' ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

    மறுபிரவேசத்தில், டப்பிங் படங்கள் உள்பட சுமார் 100 படங்களுக்கு பாடல் எழுதினார்.

    இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த "தாய் மீது சத்தியம்.''

    இதில் இடம் பெற்ற "நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு'' என்ற பாடல் மருதகாசி எழுதியதாகும்.

    பொதுவாக, பட உலகில் ஒரு முறை தோற்றவர்கள் மீண்டும் தலை தூக்குவது மிகவும் கடினம். மருதகாசி அயராது உழைத்து, இழந்தவற்றை மீண்டும் பெற்றார். பழைய புகழோடு, 1989-ம் ஆண்டு, நவம்பர் 29-ந்தேதி காலமானார்.

    அப்போது அவருக்கு வயது 69.

    மருதகாசிக்கு 6 மகன்கள். 3 மகள்கள்.

    மூத்த மகன் இளங்கோவன் விவசாயத்தை கவனிக்கிறார். இரண்டாவது மகன் ராமதாஸ் "பி.ஏ'' பட்டதாரி. குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூன்றாவது மகன் பொன்முடி, ஓவியர்.

    4-வது மகன் மதிவாணன் "மெட்ரோ வாட்டர்'' நிறுவனத்திலும், அடுத்தவர் கிருஷ்ணமூர்த்தி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் நிறுவனத்திலும் வேலை பார்க்கிறார்கள்.

    6-வது மகன் மருதபரணி, தந்தையின் திரை உலக வாரிசாக விளங்குகிறார். பிற மொழிப் படங்களை தமிழில் மொழி மாற்றம் ("டப்பிங்'') செய்து வருகிறார். இவர் மனைவி உமா பரணி திரைப்படங்களுக்கு, பின்னணியில் குரல் கொடுக்கிறார்.

    மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும், கடந்த மே மாதம் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 லட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

    மருதகாசியுடன் நெருங்கிப் பழகியவரான பட அதிபர் ஏ.கே.வேலன் கூறியதாவது:-

    "வியாபார நோக்கமின்றி, கலை நோக்குடன் சினிமாவுக்கு பாடல்களை எழுதியவர் மருதகாசி. கற்பனை வளம் மிகுந்தவர்.

    அவர் எழுத்திலே தமிழ் மரபு இருக்கும்; தமிழின் தரம் இருக்கும்; புதிய பார்வையும் இருக்கும்.

    என்னுடைய "தை பிறந்தால் வழி பிறக்கும்'' படத்துக்கு அவர் எழுதிய "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்'' என்ற பாடல், ஒவ்வொரு பொங்கல் நாள் அன்றும், தொலைக்காட்சியிலும், வானொலியிலும் ஒலிக்கிறது.''

    இவ்வாறு ஏ.கே.வேலன் கூறினார்.

    கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:-

    "கவிஞர் மருதகாசி என்ற பெயர், கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்த் திரைப்படத் துறையில் கோலோச்சிய பெயர்.

    இன்றைய புதிய விளைச்சல்களுக்கு எல்லாம், முன்னோடியாய் இருந்த நாடறிந்த நாற்றங்கால்.

    அவருடைய பாடல்கள், காற்றையும், காலத்தையும் வென்று, இன்றும் அன்றலர்ந்த மலர்களைப் போல நின்று நிலவுகின்றன.

    கவிஞர் மருதகாசி அவர்கள், திரை உலகில் ஒரு சகாப்தம் படைத்தவர்.

    கால் சட்டை போட்ட பருவம் முதல் இன்று வரை இவரது திரை இசைப் பாடல்களில் எனக்கொரு சுக மயக்கம் உண்டு. மருதகாசியின் பெயர், காற்றைப் போல காலம் எல்லாம் நிலைத்து நிற்கும்.''

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
    சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.
    சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.

    இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-

    "1950-ம் ஆண்டில் என் அண்ணன் "மந்திரிகுமாரி''க்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.

    அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

    கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

    கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.

    1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள்.

    1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். "பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்'' என்று தேவரிடம் சொல்லிவிட்டார்.

    அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். "நான் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் பெயர் "மறுபிறவி.'' எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும் மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4 ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு சென்னைக்கு வாருங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும், தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின் திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.

    "மறுபிறவி'' படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, "தேர்த்திருவிழா'' படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.

    தேவருக்கு பெரும்பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.

    எம்.ஜி.ஆர். என் அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன் திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.''

    இவ்வாறு பேராசிரியர் முத்தையன் கூறினார்.

    மருதகாசிக்கு கவிஞர் கா.மு.ஷெரீப் நெருங்கிய நண்பர். ஆரம்பத்தில் மருதகாசியும், கா.மு.ஷெரீப்பும் இணைந்து, பல பாடல்களை எழுதினார்கள். பிறகு தனித்தனியாக எழுதினார்கள்.

    தமிழரசு கழகத்தின் முக்கிய பிரமுகராகவும், பேச்சாளராகவும் கா.மு.ஷெரீப் விளங்கினார். கட்சிப்பணி காரணமாக, அவர் அதிக பாடல்களை எழுதவில்லை. பாடல்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும், கருத்தாழம் மிக்க பாடல்கள்.

    புலவர் ஏ.கே.வேலனும், மருதகாசியும் சம காலத்தவர்கள். இருவரும் தேவி நாடக சபையில் ஒன்றாக பணியாற்றினார்கள்.

    ஏ.கே.வேலன் வசன கர்த்தாவாக உயர்ந்து, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கி "தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதற்கு, "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்'' என்ற பாடலை மருதகாசி எழுதினார்.

    அதன் பிறகு, ஏ.கே.வேலன் தயாரித்த பல்வேறு படங்களுக்கும் ஏராளமான பாடல்களை மருதகாசி எழுதினார். "பொன்னித்திருநாள்'' என்ற படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதினார்.

    உடுமலை நாராயணகவியை தன் குருவாக நினைத்தவர், மருதகாசி. "என்னுடைய 2 ஆயிரம் பாடல்கள், கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது'' என்று மனந்திறந்து பாராட்டுவார்.

    அத்தகைய உடுமலை நாராயணகவி, மருதகாசி மீது அளவற்ற பாசமும், அன்பும் வைத்திருந்தார். அவருக்கு வந்த வாய்ப்புகள் பலவற்றை அவர் ஏற்க மறுத்த சந்தர்ப்பங்களில், "இதற்கு பொருத்தமானவர் மருதகாசிதான். அவரை எழுதச் சொல்லுங்கள்'' என்று கூறியிருக்கிறார்.

    குறிப்பாக, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிரமாண்டமாகத் தயாரித்த "தசாவதாரம்'' படத்துக்கு பாடல் எழுத முதலில் அழைக்கப்பட்டவர் உடுமலை நாராயணகவிதான். அவர், "மருதகாசிதான் இதற்கு நன்றாக எழுதக்கூடியவர். அவரைக் கூப்பிடுங்கள்'' என்று கூறிவிட்டார்.

    இதன் காரணமாக "தசாவதாரம்'' படத்துக்கு எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார்.

    ஆயிரக்கணக்கான சிறந்த பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, ஒரே ஒரு சொந்தப் படத்தைத் தயாரித்து இழந்து கடனாளி ஆனார், மருதகாசி.
    ஆயிரக்கணக்கான சிறந்த பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, ஒரே ஒரு சொந்தப் படத்தைத் தயாரித்து இழந்து கடனாளி ஆனார், மருதகாசி.

    "கல்யாணப்பரிசு'' படத்தை இயக்கி, புகழின் சிகரத்தைத் தொட்ட ஸ்ரீதர், "சித்ராலயா'' என்ற படக்கம்பெனியைத் தொடங்கி "தேன் நிலவு'' படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். இதற்கு இசை அமைக்க ஏ.எம்.ராஜாவும், பாடல்கள் எழுத மருதகாசியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

    இந்தப் படத்துக்காக, 3 பாடல்களையும் மருதகாசி எழுதிக் கொடுத்து விட்டார்.

    இதற்கிடையே சிவாஜி பிலிம்சின் இன்னொரு நிறுவனமான பிரபுராம் பிக்சர்ஸ் சார்பில், "விடிவெள்ளி'' என்ற படம் தயாராகி வந்தது. சிவாஜிகணேசன், சரோஜாதேவி நடித்த இந்தப் படத்தை ஸ்ரீதர்தான் டைரக்ட் செய்தார். இசை ஏ.எம்.ராஜா. பாடல்கள் மருதகாசி.

    இந்தப் படத்தில் மருதகாசி எழுதிய "கொடுத்துப்பார் பார் உண்மை அன்பை'' என்ற பாட்டு இடம் பெற்றது. அந்த பாட்டுக்கான மெட்டு அடிக்கடி மாற்றப்பட்டது. இதனால் பட அதிபர்களுக்கும், ஏ.எம்.ராஜாவுக்கும் உரசல் ஏற்பட்டது. இதில், மருதகாசியும் பங்கு கொள்ள நேரிட்டதால், ஏ.எம்.ராஜாவுக்கும், மருதகாசிக்கும் மோதல் ஏற்பட்டது. "இனி ஏ.எம்.ராஜா இசை அமைக்கும் படங்களுக்கு பாடல் எழுதமாட்டேன்'' என்று சபதம் செய்துவிட்டு வெளியேறினார், மருதகாசி.

    டைரக்டர் ஸ்ரீதர், ஜெமினிகணேசன் ஆகியோர் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மருதகாசி தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

    இதன் காரணமாக, "தேன்நிலவு'' படத்தில் அவர் பணியாற்ற முடியாமல் போய்விட்டது. ஏற்கனவே எழுதிக்கொடுத்த 3 பாடல்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று மருதகாசி கூறிவிட்டார்.

    1956-ம் ஆண்டு, ஏ.பி.நாகராஜன் பட உலகில் முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் ïனிட்டில் கே.சோமு (டைரக்ஷன்), கோபண்ணா (கேமரா), டி.விஜயரங்கம் (எடிட்டிங்), கே.வி.மகாதேவன் (இசை), மருதகாசி (பாடல்) ஆகியோர் இருந்தார்கள்.

    இந்த ïனிட் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக, ஏ.பி.நாகராஜன் கதை- வசனத்தில் பல்வேறு கம்பெனிகளின் பெயர்களில் படங்கள் தயாரிக்கப்பட்டன.

    மருதகாசி, கே.வி.மகாதேவன், வி.கே.ராமசாமியின் தம்பி முத்துராமலிங்கம், "வயலின்'' மகாதேவன் ஆகிய 4 பேரையும் பங்குதாரர்களாகக் கொண்ட "எம்.எம்.புரொடக்ஷன்ஸ்'' என்ற படக்கம்பெனி தொடங்கப்பட்டது. இந்தக் கம்பெனி சார்பில் "அல்லி பெற்ற பிள்ளை'' என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தியில் வெற்றிகரமாக ஓடிய "டாங்கா வாலா'' என்ற படத்தின் கதையை தழுவி, திரைக்கதை அமைக்கப்பட்டது.

    இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, பண்டரிபாய் ஆகியோர் நடித்தனர். திரைக்கதை -வசனம் ஏ.பி.நாகராஜன். டைரக்ஷன் கே.சோமு. பாடல்களை மருதகாசி எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

    இந்தப் படத்தில், ஒரு குதிரை முக்கிய கதாபாத்திரமாக நடித்தது. மருதகாசி மங்களூர் சென்று, ஒரு வெள்ளைக்குதிரையை வாங்கி வந்தார். குதிரையைப் பார்த்த சின்னப்ப தேவர், "குதிரைக்கு சுழி சரியில்லையே! விற்றுவிடுங்கள்'' என்றார்.

    ஆனால் திட்டமிட்டபடி, குதிரையை படத்தில் நடிக்க வைத்தார்.

    ஒரு குழந்தை தொட்டிலில் படுத்திருக்க, தொட்டில் கயிற்றை குதிரை தன் வாயினால் இழுத்து, குழந்தையை தூங்க வைக்கும். அப்போது குதிரையின் மன நிலையை விளக்கும் விதமாக, "எஜமான் பெற்ற செல்வமே'' என்ற பாடலை மருதகாசி எழுதினார். அவரும், கே.வி.மகாதேவனும் விரும்பிக் கேட்டுக்கொண்டதால், பாடலை பிரபல இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் பின்னணியில் பாடினார்.

    6 மாத காலத்தில் படத்தை முடித்து ரிலீஸ் செய்வதாக விநியோகஸ்தர்களுடன் படக்கம்பெனி ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் படம் முடியவில்லை. படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே போயிற்று. கடனும், வட்டியும் ஏறிக்கொண்டே இருந்தன.

    பாடல் எழுதுவதில் மருதகாசி `பிசி'யாக இருந்த நேரம். ஆனால், அவருக்கு வேண்டாத சிலர், "மருதகாசி சொந்தப் படத் தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறார். இனி வெளிப்படங்களுக்கு குறிப்பிட்ட நாளில் பாடல் எழுதித்தர மாட்டார்'' என்று பிரசாரம் செய்தனர்.

    இதனால் புதுப்பட வாய்ப்புகள் குறைந்தன.

    இரண்டு ஆண்டு காலம் தயாரிப்பில் இருந்த "அல்லி பெற்ற பிள்ளை'' 31-7-1959-ல் வெளிவந்தது. படம் ஓரளவு நன்றாக இருந்தும், தோல்வியைத் தழுவியது.

    மருதகாசியின் தம்பி அ.முத்தையன், கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். "மருதகாசியின் திரையுலகச் சாதனைகள்'' என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.

    மருதகாசியின் சொந்தப்பட அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:-

    "என் அண்ணன் ஒரே ஒரு படம் எடுத்தார். குசேலர் ஆனார்.

    இந்த காலக்கட்டத்தில் அவர் ஒரு மகத்தான தவறு செய்தார். ஒரு சீமைப்பசுவை வாங்கி வைத்திருந்த அவர், இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன் புதிதாக கட்டிய வீட்டின் கிரகப்பிரவேச விழாவின்போது, அதை பரிசாகக் கொடுத்து விட்டார்.

    இப்படி பசுவை தானமாகக் கொடுப்பது சரியல்ல என்றும், ஜோதிடப்படி ஏதாவது கிரகக் கோளாறு ஏற்படும்போதுதான் இப்படி செய்வார்கள் என்றும், பசுவை தானம் செய்வது நமது லட்சுமியை அடுத்தவர் வீட்டில் கொண்டுபோய் விடுவதற்குச் சமம் என்றும் டைரக்டர் கே.சோமு என்னிடம் சொன்னார்.

    அவர் சொன்னது போலவே நடந்து விட்டது.

    "அல்லி பெற்ற பிள்ளை'' படத்தினால் என் சகோதரர் நஷ்டம் அடைந்ததை அறிந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், என் அண்ணனை சந்தித்து "தூண்டா மணிவிளக்கு'' என்ற கதையை கொடுத்து, அதை படமாக்கச் சொன்னார். என் சகோதரரும் சம்மதித்து, கதைக்கு அவரையே வசனம் எழுதச் சொன்னார்.

    பூஜை போட்டு, நடிகர் -நடிகைகளுக்கு அட்வான்சும் கொடுக்கப்பட்டது. படத்தில் சிவாஜிகணேசன், சாவித்திரி, ரங்காராவ், அசோகன், தாம்பரம் லலிதா போன்றோர் நடிக்க இருந்தார்கள். ஆனால் ஏனோ, கடைசியில் என் சகோதரர் பின்வாங்கி விட்டார்.

    பின்னர் இந்தக் கதையை கோபாலகிருஷ்ணனே சொந்தமாகத் தயாரித்தார். அந்தப்படம்தான் "கற்பகம்.'' அந்தப் படம் வெள்ளி விழா கண்டது. அதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, கோபாலகிருஷ்ணன் "கற்பகம்'' ஸ்டூடியோவை கட்டினார்.''

    இவ்வாறு முத்தையன் கூறினார்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர், மருதகாசி. "திரைக்கவி திலகம்'' என்று பட்டம் பெற்ற அவர், சினிமாவுக்காக 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
    எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர், மருதகாசி. "திரைக்கவி திலகம்'' என்று பட்டம் பெற்ற அவர், சினிமாவுக்காக 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

    திருச்சி மாட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் 13-2-1920-ல் பிறந்தவர் மருதகாசி. தந்தை அய்யம்பெருமாள் உடையார். தாயார் மிளகாயி அம்மாள்.

    உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்து, "இன்டர்மீடியேட்'' வரை படித்தார்.

    1940-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் தனக்கோடி அம்மாள்.

    மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார்.

    கல்லூரி படிப்புக்குப்பிறகு, குடந்தையில் முகாமிட்டிருந்த "தேவி நாடக சபை''யின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். அப்போது, இன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதைத்தொடர்ந்து, கருணாநிதி எழுதிய "மந்திரிகுமாரி'' போன்ற நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.

    இந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகராக திருச்சி லோகநாதன் கொடிகட்டிப் பறந்தார். "வானவில்'' என்ற நாடகத்தின் பாடலுக்கு அவர் இசை அமைத்தபோது, மருதகாசியின் கவியாற்றலை நேரில் கண்டார். இதுபற்றி, மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் தெரிவித்தார்.

    உடனே டி.ஆர்.சுந்தரம் மருதகாசியை சேலத்திற்கு வருமாறு அழைத்தார். இந்த சமயத்தில், மருதகாசியுடன் கவி. கா.மு.ஷெரீப் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு சேலம் சென்றார், மருதகாசி.

    அப்போது (1949) சேலம் மாடர்ன் தியேட்டர்சார் "மாயாவதி'' என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி.ஆர்.மகாலிங்கமும், அஞ்சலிதேவியும் இணைந்து நடித்த இந்தப்படத்தை டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்து வந்தார்.

    இந்தப் படத்திற்கு தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். "பெண் எனும் மாயப் பேயாம்... பொய் மாதரை என் மனம் நாடுமோ...'' என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.

    இவ்வாறாக மருதகாசியின் திரை உலகப் பயணம், மாடர்ன் தியேட்டர்ஸ் "மாயாவதி'' மூலமாகத் தொடங்கியது.

    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய "எதிர்பாராத முத்தம்'' என்ற குறுங்காவியத்தை, "பொன்முடி'' என்ற பெயரில் மாடர்ன் தியேட்டர்சார் திரைப்படமாகத் தயாரித்தனர். வசனத்தை பாரதிதாசன் எழுதினார்.

    இந்தப் பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார். எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். கதாநாயகனாக நரசிம்மபாரதியும், கதாநாயகியாக மாதுரிதேவியும் நடித்தனர்.

    1950 பொங்கலுக்கு வெளிவந்த "பொன்முடி'' படத்தின் பாடல்கள் ஹிட் ஆயின.

    இதன் பிறகு கருணாநிதியின் கதை-வசனத்தில் மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்த படம் மந்திரிகுமாரி. இந்தப்படம் மாபெரும் வெற்றி

    பெற்றது.இந்தப் படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக "வாராய்... நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!'' என்ற கிளைமாக்ஸ் பாடலும், "உலவும் தென்றல் காற்றினிலே'' என்ற பாடலும் மிகப்பிரமாதமாக அமைந்தன. இந்த டூயட் பாடல்களைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன் - ஜிக்கி.

    இந்தக் காலக்கட்டத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும், இசை இலாகாவில் மருதகாசியும் பணிபுரிந்தது

    குறிப்பிடத்தக்கது.

    மந்திரிகுமாரியில் மருதகாசி எழுதிய பாடல்கள் எம்.கே.தியாகராஜ பாகவதரை வெகுவாகக் கவர்ந்தன. சுரதாவின் கதை-வசனத்திலும், எப்.நாகூர் டைரக்ஷனிலும் உருவாகி வந்த தனது "அமரகவி'' படத்துக்கு பாடல் எழுத மருதகாசியை அழைத்தார்.

    அதன்படியே, சில பாடல்களை மருதகாசி எழுதினார்.

    அருணா பிலிம்ஸ் பட நிறுவனம் "ராஜாம்பாள்'' என்ற துப்பறியும் கதையை படமாக்கியது. இந்தப் படத்தில்தான் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக அறிமுகமானார்.

    இந்தப் படத்துக்கு மருதகாசி எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    அதைத்தொடர்ந்து அருணா பிலிம்ஸ் அடுத்து தயாரித்த "தூக்குத்தூக்கி'' படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பை மருதகாசி பெற்றார்.

    இந்தப் படத்தில் சிவாஜிகணேசன், லலிதா, பத்மினி, ராகினி, டி.எஸ்.பாலையா என்று பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தது. ஆர்.எம்.கிருஷ்ணசாமி டைரக்ட் செய்த இந்த படத்துக்கு, ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.

    இந்தப் படத்தில், சிவாஜிகணேசனுக்கு யாரைப் பின்னணியில் பாட வைப்பது என்ற கேள்வி எழுந்தது. "மந்திரிகுமாரி''யில், "அன்னமிட்ட வீட்டிலே, கன்னக்கோல் சாத்தவே...'' என்று தொடங்கும் பாடலை, வெகு சிறப்பாக டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார். அவரைப் பாடச் சொல்லலாம் என்று மருதகாசியும், டைரக்டர் ஆர்.எம்.கிருஷ்ணசாமியும் கூறினார்கள். ஆனால், சிதம்பரம் ஜெயராமனைப் போடும்படி, சிவாஜி கூறினார்.

    முடிவில் "3 பாடல்களை சவுந்தரராஜனை வைத்து பதிவு செய்வோம். சிவாஜிக்கு பிடிக்கிறதா என்று பார்த்து இறுதி முடிவு எடுப்போம்'' என்று மருதகாசியும், கிருஷ்ணசாமியும் தீர்மானித்தார்கள்.

    அதன்படியே, மூன்று பாடல்களை பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்கள். டி.எம்.சவுந்தரராஜனின் குரல் சிவாஜிக்குப் பிடித்து விட்டது. அன்று முதல், சிவாஜிக்கு தொடர்ந்து டி.எம்.சவுந்தரராஜன் பாடலானார்.

    26-8-1954-ல் வெளியான "தூக்குத்தூக்கி'', மகத்தான வெற்றிப்படமாக அமைந்து, வசூல் மழை கொட்டியது. எங்கு திரும்பினாலும், அந்தப் படத்தின் பாடல்கள் எதிரொலித்தன. மருதகாசிக்கு பல்வேறு படக்கம்பெனிகளில் இருந்து அழைப்பு வந்தது.

    மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் மருதகாசி வல்லவர். எனவே, இசை அமைப்பாளர்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.

    அந்தக் காலக்கட்டத்தில் ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.
    புகழின் உச்சியில் இருந்தபோது, டைரக்டர் டி.ஆர்.ராமண்ணாவை ஈ.வி.சரோஜா மணந்து கொண்டார்.
    புகழின் உச்சியில் இருந்தபோது, டைரக்டர் டி.ஆர்.ராமண்ணாவை ஈ.வி.சரோஜா மணந்து கொண்டார்.

    அதன்பின் "கொடுத்து வைத்தவள்'' என்ற படத்தை ராமண்ணாவும், ஈ.வி.சரோஜாவும் தயாரித்தனர். இந்தப்படத்தில், எம்.ஜி.ஆரும், ஈ.வி.சரோஜாவும் இணைந்து நடித்தனர். இது வெற்றிப்படம்.

    அதன் பிறகு ஈ.வி.சரோஜா படங்களில் நடிக்கவில்லை குடும்பத் தலைவியானார்.

    ஈ.வி.சரோஜா - ராமண்ணா தம்பதிகளுக்கு ஒரே மகள். பெயர் நளினி. இவருக்கு 1981-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் பெயர் சிவப்பிரகாஷ். துபாயில் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் துணைத் தலைவராக இருக்கிறார்.

    நளினிக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் பெயர் வஷின்யா. மகன் பெயர் ராகுல். இருவரும் கனடாவில் படித்து வருகிறார்கள்.

    துபாயில் கணவருடன் வசித்து வரும் நளினி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ சென்னை வந்து இங்குள்ள தனது தாயாருடைய சொத்துக்களை கவனித்துச் செல்கிறார். இவற்றை ஈ.வி.சரோஜாவின் தம்பி ஈ.வி.ராஜன் பொறுப்பேற்று கவனித்து

    வருகிறார்.கடந்த வாரம் சென்னை வந்த நளினி தன் தாயார் ஈ.வி.சரோஜாவின் நினைவுகளை "தினத்தந்தி'' நிருபரிடம் பகிர்ந்து

    கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது:- "எனது தாயார் சினிமாவில் நடிப்பதைவிட,நடனம் ஆடுவதையே அதிகம் விரும்புவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களில் நடித்தார். மொத்தம் 50 அல்லது 60 படங்கள் இருக்கும். பெரும்பாலான படங்களில் நடனம் மட்டுமே ஆடியுள்ளார்.

    கதாநாயகியாக நடித்த படங்கள் வெகு சிலவே. சந்திரபாபுவுடன் காமெடி நடிகையாகவும் நடித்துள்ளார்.

    எனது தாயார் சினிமாவில் நடிப்பதில் என் தந்தைக்கு விருப்பம் இல்லை. அதனால் எனது தாயார் 26 வயதிலேயே சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, குடும்பத் தலைவி ஆகிவிட்டார்.

    அவர் காலத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் எல்லாம் பிற்காலத்தில் குணச்சித்திர நடிகைகளோ அல்லது அம்மா வேடம் போட்டோ நடிக்க வந்துவிட்டார்கள். ஆனால் என் தாயார் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், மீண்டும் நடிக்கவே இல்லை.

    அவருக்கு நடனத்தின் மீதே அதிக நாட்டம் இருந்ததால், "மனோன்மணியம்'' கதையை நாட்டிய நாடகமாக தயாரித்து அந்த நடன நிகழ்ச்சியை இந்தியாவில் உள்ள ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் நடத்தி இருக்கிறார்.

    என் அம்மாவுக்கு குடும்பம்தான் முக்கியம். மிகவும் இளகிய மனம் படைத்தவர். யார் வந்து உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உதவும் குணம் படைத்தவர். படிப்பதற்கு யாராவது உதவி கேட்டால், தன்னிடம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது படிக்க உதவுவார்.

    எங்கள் கிராமத்தில் இருந்தவர்கள் சென்னையிலும் மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் பலருக்கு என் அம்மா செய்த உதவிதான் காரணம்.

    இவ்வளவு இளகிய மனம் படைத்தவர், என் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஒரு டீச்சரைப்போல் என்னை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார்கள். அப்போது எனக்கு அது கஷ்டமாக இருந்தது. ஆனால் இப்போது அதையெல்லாம் நினைக்கும்போது என் மீது அம்மா தன் உள்ளத்தில் வைத்திருந்த அன்பை உணர முடிகிறது.

    எனக்கு சிறு வயதிலேயே நடனம் கற்றுக் கொடுத்தார்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் ஆடினேன். பல பேர் என்னை திரைப்படத்தில் நடிக்க வைக்க, எனது பெற்றோர்களிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. இந்த விஷயம் எனக்கு திருமணம் ஆன பிறகு, என் பெற்றோர்கள் என்னிடம் சொன்ன பிறகுதான் தெரிந்தது.

    என்னை கண்ணுக்குள் வைத்து வளர்த்து ஆளாக்கி ஒரு நல்லவரிடம் ஒப்படைத்த எனது பெற்றோர்கள் என் தெய்வங்கள்.

    எனது தாயார் ஊரான திருவாரூரை அடுத்த எண்கண் கிராமத்தில் ஈ.வி.சரோஜா கல்வி நிலையம் என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடத்தை எனது தாயார் கட்டிக் கொடுத்துள்ளார்கள்.

    அந்தப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது. அதை எனது சொந்த செலவில் உயர்நிலைப்பள்ளியாக ஆக்குவதே எனது தாயாருக்கு நான் செய்யும் நன்றியாகும்.

    என்னுடைய 25-ம் ஆண்டு திருமண வெள்ளி விழாவில் கலந்து கொண்ட எனது தாயார் அதற்கு பிறகு ஒரு வாரமே உயிருடன் இருந்தார்கள். 2006 நவம்பர் 3-ந்தேதி காலமாகிவிட்டார்கள். அதை நினைக்கும்போது என் இதயமே வெடித்து விடும் போல் உள்ளது.

    துபாயிலிருந்து இங்கு வந்து வீட்டிற்குள் நுழைந்து, வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போது என் தாயாரின் நினைவுதான் எனக்கு வரும்.

    அந்த அளவிற்கு என் தாயாரின் இழப்பு என்னை பாதித்துள்ளது.''

    இவ்வாறு நளினி கூறினார்.

    ஈ.வி.சரோஜாவிற்கு, உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் தன்னுடைய மகள், மருமகன், பேரக்குழந்தைகளுடன் உலகின் பெரும்பா லான நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

    ஈ.வி.சரோஜா, 1974-ம் ஆண்டு "கலைமாமணி'' விருது பெற்றார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவருடைய கணவர் ராமண்ணாவிற்கும், அப்போதுதான் "கலைமாமணி'' விருது கிடைத்தது. கணவன் - மனைவி இருவரும் ஒரே நேரத்தில் "கலைமாமணி'' விருதை, அப்போது முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி கையில் பெற்றார்கள்.

    முத்தமிழ்ப் பேரவை சார்பில் "நாட்டிய செல்வி'' என்ற பட்டம் ஈ.வி.சரோஜாவுக்கு வழங்கப்பட்டது.

    2002-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் "எம்.ஜி.ஆர். விருதை'' அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஈ.வி.சரோஜாவிற்கு வழங்கினார்.

    மு.க.அழகிரியின் பேத்தியின் நடன அரங்கேற்றம் சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிதான் ஈ.வி.சரோஜா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. அதில் கலைஞர் கருணாநிதி பேசும்போது, "நடனத்தில் மிகச்சிறந்த மேதையான ஈ.வி.சரோஜா போன்றவர்கள் வந்து என் கொள்ளுப்பேத்தியை வாழ்த்தியதை நான் பெருமையாக கருதுகிறேன்'' என்றார்.
    மான்போல துள்ளிக் குதித்து நடனம் ஆடுவதில் புகழ் பெற்றவர், ஈ.வி.சரோஜா.
    மான்போல துள்ளிக் குதித்து நடனம் ஆடுவதில் புகழ் பெற்றவர், ஈ.வி.சரோஜா.

    இவரது சொந்த ஊர் திருவாரூரை அடுத்த எண்கண். பெற்றோர்: வேணுபிள்ளை - ஜானகி.

    சரோஜாவுக்கு ஒரு அண்ணனும், 2 தம்பிகளும் உண்டு.

    தனது ஏழாவது வயதிலேயே தந்தையை இழந்தார், சரோஜா.

    சிறு வயதில் இருந்தே இவருக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் அவருக்கு முறைப்படி நடனப்பயிற்சி அளிக்க தாயார் முடிவு

    செய்தார்.இந்தக் காலக்கட்டத்தில், நடனக் கலையில் பெரிய மேதையாகத் திகழ்ந்தவர், வழுவூர் ராமையாப்பிள்ளை. குமாரி கமலா உள்பட பலருக்கு இவர்தான் குரு. அவர் திருவாரூருக்கு வந்திருந்த சமயம், அவரிடம் ஈ.வி.சரோஜாவை தாயார் அழைத்துச் சென்றார். "இவருக்கு நடனம் என்றால் உயிர். நீங்கள்தான் குருவாக இருந்து, நடனம் கற்றுத்தர வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    ஈ.வி.சரோஜாவின் தோற்றமும், துறுதுறுப்பும், அழகிய கண்களும் ராமையாப்பிள்ளையை கவர்ந்தன. `இந்தப்பெண் நடனத்தை முறையாகக் கற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் சிறந்த நடன நட்சத்திரமாகப் பிரகாசிப்பாள்'' என்று கருதினார். எனவே நடனப் பயிற்சிக்கு, சென்னைக்கு அழைத்துச் சென்றார்.

    வழுவூர் ராமையாப் பிள்ளையிடம், பரதநாட்டியத்தை கற்றுக்கொண்ட ஈ.வி.சரோஜா, வெகு விரைவிலேயே நடனத்தில் முழுத் தேர்ச்சி

    பெற்றார்.1951-ல் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில், நீதிபதி ஏ.எஸ்.பி.அய்யர் முன்னிலையில் ஈ.வி.சரோஜாவின் நடன அரங்கேற்றம் நடந்தது. அப்போது அவருக்கு வயது 15.

    சிறந்த முறையில் நடனம் ஆடி, அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் ஈ.வி.சரோஜா பெற்றார்.

    இந்த சமயத்தில், அசோகா பிக்சர்சார் "என் தங்கை'' என்ற படத்தை தயாரித்து வந்தார்கள். எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகன். அவருக்கு ஜோடி கிடையாது! படம் முழுவதும் சட்டை - வேட்டியுடன் வருவார்.

    இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு தங்கை மீனாவாக நடிக்க, ஒரு பெண்ணை பட அதிபர்கள் தேடிக்கொண்டு இருந்தார்கள். நடன நிகழ்ச்சியில் ஈ.வி.சரோஜாவை அவர்கள் பார்த்தார்கள். "மீனாவாக நடிக்க இந்தப் பெண்தான் பொருத்தமானவர்'' என்று தீர்மானித்து, அவரை ஒப்பந்தம் செய்தார்கள்.

    "என் தங்கை''யில் ஈ.வி.சரோஜாவின் வேடம் மிக மிக முக்கியமானது. அவரைச் சுற்றிதான் கதை பின்னப்பட்டிருந்தது.

    இந்தப் படத்தில், ஈ.வி.சரோஜா பார்வையற்ற பெண்ணாக நடித்தார். ஏழையான எம்.ஜி.ஆர். தன் தங்கை மீது உயிரையே வைத்திருப்பார். நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க படாதபாடு படுவார். "குருட்டுப் பெண்ணுக்கு கல்யாணமா?'' என்று எல்லோரும் கேலியாகப் பேசி மறுத்து விடுவார்கள்.

    கடைசியில் ஒரு மாப்பிள்ளை அமையும்போது, சரோஜா இறந்து விடுவார். சோகத்தின் உச்சிக்கே சென்றுவிடும் எம்.ஜி.ஆர்., தங்கையின் உடலை தோளில் போட்டுக்கொண்டு கடற்கரையில் நடந்து செல்வார்; பிறகு விறுவிறுவென்று கடலுக்குள் இறங்கி விடுவார்.

    உள்ளத்தைத் தொடும் உருக்கமான காட்சிகள் நிறைந்த இந்தப்படம் வெற்றி பெற்றது.

    ஒரே படத்தின் மூலம் புகழ் பெற்றார், ஈ.வி.சரோஜா.

    ஏ.பி.நாகராஜனின் "பெண்ணரசி''யிலும் நடித்தார்.

    பின்னர், டி.ஆர்.ராமண்ணா டைரக்ஷனில் எம்.ஜி.ஆர், டி.ஆர்.ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி ஆகியோர் நடித்த "குலேபகாவலி'' படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார்.

    "சொக்கா போட்ட நவாப்பு... செல்லாதுங்கள் ஜவாப்பு'' என்று சந்திரபாபுவுடன் சேர்ந்து பாடி ஆடிய நடனம், அவரை நாடறிந்த நட்சத்திரம் ஆக்கியது.

    இதன்பின், "நீதிபதி'', "நல்லதங்காள்'' முதலிய படங்களில் சந்திரபாபுவுடன் இணைந்து நடித்தார்.

    எம்.ஜி.ஆர்., பானுமதி, பத்மினி நடித்த "மதுரை வீரன்'' படத்தில் ஈ.வி.சரோஜாவும் இடம் பெற்றார்.

    "வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க'' என்ற பாடலுக்கு ஈ.வி.சரோஜா ஆடிய நடனம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    "மதுரை வீரன்'', 35 தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சில ஊர்களில் 25 வாரங்கள் ஓடியது.

    டைரக்டர் கே.பாலசந்தர் டைரக்ஷனில் உருவான "தாமரை நெஞ்சம்'' படத்தில், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு விஜயகுமாரியை தேடி வந்தது. ஆயினும், அந்த வாய்ப்பை நழுவ விட்டார். அவருக்கு பதிலாக சரோஜாதேவி நடித்து பெரும் புகழ் பெற்றார்.
    டைரக்டர் கே.பாலசந்தர் டைரக்ஷனில் உருவான "தாமரை நெஞ்சம்'' படத்தில், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு விஜயகுமாரியை தேடி வந்தது. ஆயினும், அந்த வாய்ப்பை நழுவ விட்டார். அவருக்கு பதிலாக சரோஜாதேவி நடித்து பெரும் புகழ் பெற்றார்.

    "பூம்புகார்'' படத்தின் மூலம் புகழின் சிகரத்தைத் தொட்ட விஜயகுமாரி, தன் திரை உலகப் பயணம் பற்றி தொடர்ந்து கூறியதாவது:-

    "கலைஞர் வசனத்தில் கண்ணகி வேடத்தில் நடித்த எனக்கு, மற்றொரு அதிர்ஷ்டமும் வந்தது. உதயசூரியன் பட நிறுவனம் தயாரித்த "எதையும் தாங்கும் இதயம்'' படத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய வசனத்தை பேசி நடித்தேன்.

    இந்தப் படத்தில் என் கணவருக்கு நான் ஜோடியாக நடித்தேன். கே.ஆர்.ராமசாமி, சந்திரகாந்தா, பி.எஸ்.சரோஜா ஆகியோர்

    நடித்தனர்.இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு அண்ணா, எம்.ஜி.ஆர் அவர்களும் வந்திருந்தார்கள். இதை எங்களுக்க கிடைத்த பாக்கியமாக கருதினோம். அதோடு இந்தப்படம் வெற்றிப்படமாக அமைந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் "தெய்வத்தின் தெய்வம்'' படத்திற்குப் பிறகு ஒரு புதிய படம் தயாரித்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்காக என்னை கேட்டார்கள். என்னால் அந்த சமயத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு வருத்தம் இருந்தது. உடனே அவர் கோபமாக "நான் இந்த விஜயாவிற்கு பதில் இன்னொரு விஜயாவை உருவாக்குகிறேன்'' என்று சொல்லி, எனக்குப் பதிலாக புதுமுகத்தைப் போட்டு எடுத்தார். அந்தப் புதுமுகம்தான் கே.ஆர்.விஜயா! அந்தப்படம் "கற்பகம்!''

    ஒரு நல்ல படத்தை இழந்து விட்டோமே என்கிற வருத்தம் இன்னும்கூட எனக்கு இருக்கிறது.

    எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தின் சார்பில், கலைஞர் கதை வசனத்தில் நாங்கள் நடத்தி வந்த "மணி மகுடம்'' நாடகத்தை படமாக எடுத்தோம். இதில் என் கணவர், நான், ஜெயலலிதா, எம்.என்.நம்பியார் எல்லோரும் நடித்திருந்தோம். படம் முடிந்து, பிரத்தியேகக் காட்சி காமதேனு தியேட்டரில் போடப்பட்டது. படத்தைப் பார்க்க அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், பேராசிரியர், ம.பொ.சி. அவர்கள் மற்றும் தி.மு.கழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர்.

    படம் முடிந்தவுடன் பாராட்டு விழா நடைபெற்றது. மேடையில் அமர்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கருத்தைச் சொல்லி எங்களை வாழ்த்தினார்கள். அண்ணா அவர்கள் பேசும்போது, "இந்தப் படத்தில் விஜயகுமாரி புரட்சிகரமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை வாழ்த்துகிறேன்'' என்று என்னை பாராட்டிப்பேசியது, இன்னும் என் நினைவில் இருக்கிறது.

    இவ்வளவு பெரியவர்களுடைய வாழ்த்துக்களை எல்லாம் பெற்ற இந்தப்படம், ஏன் சரியாக ஓடவில்லை என்பதற்கான காரணத்தை இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    எஸ்.எஸ்.ஆருடன் அதிகப்படங்களில் நடித்தவள் நான்தான்.

    வடநாட்டில் ராஜ்கபூர் - நர்க்கீஸ் ஜோடி புகழ் பெற்று விளங்கியதுபோல தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி ஜோடி புகழ் பெற்றது. யாரும் எதிர்பாராதவிதமாக ராஜ்கபூர் - நர்க்கீஸ் ஜோடி பிரிந்ததுபோல, நானும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும்

    பிரிந்தோம்.எஸ்.எஸ்.ஆரை பிரிந்த பிறகு, `எப்படியும் வாழலாம்' என்று நினைக்காமல், `இப்படித்தான் வாழவேண்டும்' என்று எனக்குள் ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள் வாழ்ந்து வந்தேன். என்னால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு எனக்கு சோதனை காலம் ஆரம்பமானது. என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை.

    இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த என் மாமியார் "இதோ, பாரம்மா! நீ சும்மா குழம்பிக்கொண்டு படங்களில் நடிக்காமல் இருக்காதே. மீண்டும் படங்களில் நடிக்கிற வழியைப் பார்'' என்று கூறி, எனக்கு தைரியம் கொடுத்தார்கள்.

    என்னை நம்பி என் குழந்தை, அப்பா, பாட்டி, அக்கா, தங்கை என்று ஒரு கூட்டமே இருந்தது. குழம்பிப்போய் இருந்த எனக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்தது.

    சினிமா... நான் ஆசைப்பட்ட சினிமா! அந்த சினிமா ஒன்றுதான் என்கூடவே இருந்து எனக்கு உதவப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டு, நான் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன். டைரக்டர் ராமண்ணாவின் படம் "பவானி.'' இதில் நான் நடிக்க சம்மதித்தேன். இந்தப்படத்தில் ஜெய்சங்கர், அசோகன், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், எல்.விஜயலட்சுமி எல்லோரும் நடித்தோம்.

    அந்த சமயத்தில் நான் திடீரென்று தேனாம்பேட்டை வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது எனக்கு உடனடியாக குடியிருக்க வீடு தேவைப்பட்டது.

    அப்போது தி.நகரில் ஒரு வீடு விலைக்கு வருகிறது என்று கேள்விப்பட்டு விசாரித்ததில் அந்த வீடு வீனஸ் கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டேன். அவருடைய "கல்யாணப்பரிசு'' படத்தில் நான் நடித்திருந்ததால், எனக்கு அவரை நன்கு தெரியும். ஆதலால் அவரிடம் சென்று என் நிலையை விளக்கி எனக்கு அந்த வீட்டை விலைக்குத் தரும்படி கேட்டேன். அவரும் சம்மதித்தார்.

    பிறகு அவரிடம், "எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டும்'' என்றேன். அதற்கு வீனஸ் கிருஷ்ணமூர்த்தி, "என்ன?'' என்று கேட்டார்.

    "வீட்டின் விலையில் ஒரு பகுதியை இப்போது கொடுத்து விடுகிறேன். மீதியை படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன்'' என்றேன். அதற்கு அவரும் சம்மதித்தார்.

    தேவர் பிலிம்ஸ் சின்னப்பா தேவர் அண்ணன் அவர்களுக்கு, என் அப்பாவை நன்றாகத் தெரியும். கோயமுத்தூரிலேயே நன்கு பழக்கம். அதனால் நான் என் அப்பாவை தேவர் அண்ணனிடம் சென்று, வீடு வாங்குவதற்கான பணத்தை கடனாக கேட்கச் சொன்னேன். தேவர் அண்ணன் அவர்களும் மறுநாளே அவருடைய தம்பி திருமுகத்திடம் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

    நான் திருமுகத்திடம் சொன்னேன்: "தேவர் அண்ணனிடம் சொல்லுங்கள். எனக்கு நடிக்க படம் கொடுத்து, இந்தப் பணத்தை கழித்துக் கொள்ளச் சொல்லுங்கள்'' என்றேன். அவரும் "சரி'' என்று சொல்லிவிட்டு சென்றார். பிறகுதான் தெரிந்தது. தேவர் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களிடம் கேட்காமல் எதையும் செய்யமாட்டார் என்று. எம்.ஜி.ஆர். அவர்கள் சொல்லித்தான் தேவர் அண்ணன் எனக்குப் பணம் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.

    அதன் பிறகு அந்தப்பணத்தை தேவர் அண்ணன் அவர்கள் தயாரித்த "விவசாயி'', "தேர்த்திருவிழா'' ஆகிய இரண்டுப் படங்களில் நடித்து நான் சொன்ன மாதிரியே கடனை அடைத்து விட்டேன்.

    அதன் பிறகு என் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும் தேவர் அண்ணனை கூப்பிட்டுத்தான் விளக்கேற்றி வைக்கச் சொல்வேன்.

    சடையப்ப செட்டியார் தயாரித்த "கணவன்'' படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜோடியாக நடித்தார்கள். ப.நீலகண்டன் டைரக்ட் செய்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தேன்.

    மல்லியம் புரொடக்ஷஸ் படம் "ஜீவனாம்சம்.'' இதில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்தேன். இந்தப்படத்தில்தான் நடிகை லட்சுமி
    அறிமுகமானார்.

    சுபலட்சுமி மூவிஸ் கம்பெனி படம் "டீச்சரம்மா.'' டைரக்டர் புட்டண்ணா. கதை - வசனம் பாலமுருகன். இந்தப் படத்தின் கதை வித்தியாசமானது. தோழிக்காக தன்னுடைய காதலை தியாகம் செய்யும் ஒரு வித்தியாசமான டீச்சர் வேடம் எனக்கு. படம் நன்றாக

    ஓடியது.பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்-அமைச்சராக இருந்தபோது, இந்தப்படம் டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. டி.வி.யில் படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர், எனக்கு போன் செய்து என்னை வாழ்த்தினார். "படம் ரொம்ப நல்லா இருக்கு. நீ நன்றாக நடித்திருக்கிறாய். உன்னுடைய நடிப்பு உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது'' என்று, எப்போதோ நடித்த படத்திற்கு டி.வி.யினால் எனக்கு எம்.ஜி.ஆரின் வாழ்த்து கிடைத்தது.

    "டீச்சரம்மா'' படப்பிடிப்பின்போது டைரக்டர் கே.பாலசந்தர் அவர்கள் அவருடைய படத்தில் நடிக்க என்னைக் கேட்டார்கள். நான் அவரிடம், `வேறு யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர் `ஜெமினிகணேசன், வாணிஸ்ரீ' என்றார். உடனே நான், `டீச்சரம்மா படத்திலும் நானும் வாணிஸ்ரீயும்தான் நடிக்கிறோம். அது உங்களுக்கு சரியாக வருமா?' என்று கேட்டேன்.

    கே.பாலசந்தர் படத்தில் நடிக்க ஒவ்வொருவரும் துடித்துக்கொண்டிருக்கும்போது நான் அசட்டுத்தனமாக இப்படிக் கேட்டு, அந்தப் படத்தை தவறவிட்டு விட்டேன். அந்தப் படம் "தாமரை நெஞ்சம்.'' பாலசந்தர் எனக்குத் தருவதாகச் சொன்ன வேடத்தில் சரோஜாதேவி நடித்து பெரும் புகழ் பெற்றார். அந்தப்படம் அமோக வெற்றி பெற்றது.

    அப்போது, "அடி போடி பைத்தியக்காரி'' என்று என்னைப்பார்த்து நானே பாடவேண்டும் போல் இருந்தது!

    அதன் பிறகு "மகனே நீ வாழ்க'' படத்தில் ஜெய்சங்கருடனும், "எல்லைக்கோடு'' படத்தில் ரவிச்சந்திரனுடனும், "தெய்வ சங்கல்பம்'' படத்தில் ஏவி.எம்.ராஜனுடனும், "கல்லும் கனியாகும்'' பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுடனும், "அமுதா''வில் ரவிச்சந்திரனுடனும், "மகளுக்காக'' படத்தில் ஏவி.எம்.ராஜனுடனும் இணைந்து நடித்தேன்.

    அடுத்து கே.சங்கர் டைரக்ஷனில் "சுப்ரபாதம்'' என்ற படத்தில் நடித்தேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 108 விஷ்ணுகோவில்களிலும், மற்றும் வடநாட்டில் உள்ள புண்ணிய ஸ்தலங்களில்எல்லாம் நடந்தது.

    ஜி.உமாபதி அவர்கள் எடுத்த படம் "ராஜராஜசோழன்.'' தமிழ்நாட்டின் முதல் சினிமா ஸ்கோப் படம் இது. ஏ.பி.நாகராஜன் டைரக்ட் செய்தார். நான், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு மனைவியாக நடித்தேன்.

    "பார் மகளே பார்'' படத்தில் அவருக்கு மகளாக நடித்தேன். "அன்பைத்தேடி'' படத்தில் அவருக்கு அக்காவாக நடித்தேன். "குங்குமம்'' படத்தில் அவருக்கு முறைப்பெண்ணாக நடித்தேன். "சவாலே சமாளி'' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தேன்.

    ஆக குடும்பத்தில் எத்தனை உறவு முறைகள் இருக்குமோ அத்தனை பாத்திரங்களிலும் நடிகர் திலகத்துடன் நான் நடித்திருக்கிறேன். இது வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத பாக்கியம். அதுமட்டுமல்ல. அத்தனை படங்களும் வெற்றிப்படங்கள்! இது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்.'' - இவ்வாறு விஜயகுமாரி கூறினார். 
    கலைஞர் மு.கருணாநிதியின் திரைக்கதை - வசனத்தில் உருவான "பூம்புகார்'' படத்தில், விஜயகுமாரி கண்ணகியாகவே வாழ்ந்து காட்டினார்.
    கலைஞர் மு.கருணாநிதியின் திரைக்கதை - வசனத்தில் உருவான "பூம்புகார்'' படத்தில், விஜயகுமாரி கண்ணகியாகவே வாழ்ந்து
    காட்டினார்.ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் "கோவலன்'' என்ற பெயரில் நீண்ட நெடுங்காலமாக நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது.

    இந்தக் கதையை, 1942-ல் ஜுபிடர் பிக்சர்சார் "கண்ணகி'' என்ற பெயரில் படமாகத் தயாரித்தனர். கண்ணாம்பா கண்ணகியாகவும், பி.யு.சின்னப்பா கோவலனாகவும் அற்புதமாக நடித்தனர்.

    குறிப்பாக, தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் வசனத்தை தெளிவாகவும், உணர்ச்சி பொங்கவும் பேசி நடித்தார், கண்ணாம்பா. பாண்டிய மன்னன் அவையில், "என் கணவன் கள் வனா?'' என்று நீதி கேட்கும்போது, தீப்பொறி பறக்க அவர் பேசிய வசனங்கள், காலத்தைக் கடந்தும் வாழ்கின்றன.

    உணர்ச்சியும், உயிர்த் துடிப்பும் நிறைந்த தமிழில் வசனங்களை எழுதியிருந் தார், இளங்கோவன். வசனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முதன் முதலாக இலக்கணம் வகுத்தவர் இளங்கோவன்.

    கண்ணகி - கோவலன் கதையை புதிய மெருகுடன் தயாரிக்க கருணாநிதி விரும்பினார். "பூம்புகார்'' என்ற பெயரில், திரைக்கதை - வசனம் எழுதினார். மேகலா பிக்சர்ஸ் அதைப் படமாகத் தயாரித்தது.

    கண்ணகியாக விஜயகுமாரி, கோவலனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன், மாதவியாக ராஜஸ்ரீ நடித்தனர். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். 1964-ல் வெளியான இந்தப்படம், பெரிய வெற்றி பெற்றது.

    "பூம்புகார்'' படம் உருவாக பின்னணியில் நடைபெற்ற நிகழ்ச்சி என்ன, கண்ணகி வேடம் தனக்குக் கிடைத்தது எப்படி என்பது பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-

    "நானும் என் கணவரும் முத்து மண்டபம் என்ற நாடகத்தை சென்னையில் நடத்தினோம். கலைஞர், மா.பொ.சி., டி.கே.சண்முகம் மற்றும் நிறைய பேர் நாடகத்திற்கு வந்திருந்தார்கள்.

    நாடகம் முடிந்த பிறகு, எல்லோரும் வாழ்த்திப் பேசினார்கள். "சிலம்பு செல்வர்'' ம.பொ.சி. அவர்கள் பேசும்போது, "விஜயகுமாரியை இந்த நாடகத்தில் பார்க்கும்போது எனக்கு கண்ணகியின் நினைவுதான் வருகிறது. மறுபடியும் கண்ணகி வரலாற்றை படமாக எடுத்தால் என்ன என்று தோன்றுகிறது. கண்ணகியாக விஜயகுமாரி நடிக்க வேண்டும். அந்த அளவிற்கு விஜயகுமாரியின் நடிப்பு மெய்சிலிர்க்கச் செய்தது'' என்று

    கூறினார்.அதையடுத்து பேசிய கலைஞர் அவர்கள், "கண்ணகி வரலாற்றை நான் `பூம்புகார்' என்ற பெயருடன் படமாக எடுக்கிறேன். அந்தப் படத்தில் ராஜேந்திரனும், விஜயகுமாரியும் நடிக்க வேண்டும். நடிப்பார்கள்!'' என்று சொன்னார்.

    பிறகு பேசிய என் கணவர், "கலைஞர் அவர்கள் சொன்னதுபோல், பூம்புகார் படத்தில் நானும் விஜயகுமாரியும் நடிக்கிறோம்'' என்று சொன்னார்கள்.

    இப்படித்தான் பூம்புகார் படம் எடுக்க பிள்ளையார் சுழி போடப்பட்டது. பூம்புகார் படப்பிடிப்பு தொடங் குவதற்கு முன்பாக, கண்ணாம்பா நடித்த "கண்ணகி'' படத்தைப் பார்க்கும்படி என்னிடம் சிலர் சொன்னார்கள். நான் அதை பார்க்கவில்லை. காரணம், அவர் நடித்த அளவிற்கு என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம்!

    நான் கண்ணாம்பா அம்மா வீட்டிற்கு போனேன். "அம்மா! நீங்கள் நடித்த கண்ணகி வேடத்தில் நான் நடிக்கப் போகிறேன். என்னை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று அவர் காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி வந்தேன்.

    இந்தப்படத்தில் நடிக்கும்போது நான் உண்ணாவிரதம் இருந்து நடித்தேன். "கண்ணகி சாதாரணப் பெண் இல்லை. அம்மனின் அவதாரம்'' என்று என் பாட்டி சொன்னார்கள்.

    பூம்புகார் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு. "என் கணவர் கள்வன் இல்லை'' என்று பாண்டிய மன்னன் முன் நான் வாதாடும் காட்சி. படப்பிடிப்பு கோல்டன் ஸ்டூடியோவில் நடந்தது.

    கையில் வசனங்கள் எழுதிய காகிதத்துடன் நான் உற்சாகத்துடன் படப்பிடிப்பு நிலையத்திற்குள் சென்றேன். அங்கு கலைஞர் அவர்கள், மாறன், டைரக்டர் ப.நீலகண்டன் ஆகியோருடன் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும், நான் மனப்பாடம் செய்து வந்த வசனங்கள் எல்லாம் மறந்து போயிற்று. ஒரே பயம். கலைஞர் என்னை அழைத்து, "பயப்பட வேண்டாம். தைரியமாக நடி'' என்றார்.

    ஓ.ஏ.கே. தேவர் பாண்டிய மன்னன் வேடத்திலும், பாண்டிய மன்னன் மனைவி வேடத்தில் ஜி.சகுந்தலாவும் மற்றும் நிறைய பேர் அரச உடையிலும் சபையில் அமர்ந்திருந்தார்கள்.

    இந்த காட்சியில் எப்படி வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று, காட்சி எடுக்கும் முன் விவரமாக சொன்னார்கள். நான் ஒரு தடவை நடித்துக் காட்டினேன். "நீ இதை மனதில் வைத்துக் கொண்டு இப்படியே நடிக்க வேண்டும்'' என்று சொன்னார்கள்.

    அந்த தர்பார் மண்டப செட் ரொம்ப பெரிதாக இருந்தது. இப் போது மாதிரி முதலில் நடித்து விட்டு, பிறகு வேறொரு நாள் போய் வசனத்தை பதிவு செய்யும் வசதி அக்காலத்தில் கிடையாது. நடிக்கும்போதே வசனங்களை பதிவு செய்வார்கள். அதற்காக தலைக்கு மேலே மைக் இருக்கும். இந்த தர்பார் மண்டப செட் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக போடப்பட்டிருந்ததால் `மைக்'கை ரொம்பவும் மேலே வைத்திருந்தார்கள். இதனால் நான் வசனங்களை சத்தம் போட்டு பேசவேண்டியிருந்தது.

    சீன் நன்றாக அமையவேண்டும் என்று என் மனதில் ஒரு வெறி - ஒரு வேகம் இருந்தது. எந்த அளவிற்கு நான் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன் என்பது எனக்குத்தான் தெரியும்.

    ஒரு சமயம் வசனத்தை கத்திப்பேசியதால், என் தொண்டையில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. இப்படி ரத்தம் சிந்தி நடித்த "பூம்புகார்'' வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. என்னை வாழ்த்தி ஏராளமான வாழ்த்துக் கடிதங்கள் வந்தன. அதே சமயம், நேரிலும், போன் மூலமும் வாழ்த்தியவர்கள் ஏராளம். இப்படி வாழ்த்து மழையில் நனைந்து கொண்டு இருந்தேன்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், இந்தப் படத்தைப் பார்த்தார். "கண்ணகி வேடத்தில் நீ நடித்ததை பார்க்கும்போது, கண்ணகி உன்னைப்போல்தான் இருந்திருப்பார் என்று எல்லோருக்கும் தோன்றுகிறது. உனக்கு என் வாழ்த்துக்கள்'' என்று என்னைப் பாராட்டினார். அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.

    நான், கண்ணகி வேடத்தில் நடித்ததற்கு ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் உலகம் உள்ளவரை கண்ணகி நினைவு வரும் போதெல்லாம் என் பெயரும் நினைவுக்கு வரும் அல்லவா?

    என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வேடத்தைக் கொடுத்த கலைஞர் அவர்களுக்கும், எனக்கு இந்த வேடம் கிடைக்க காரணமாய் இருந்த சிலம்புச்செல்வர் மா.பொ.சி. அவர்களுக்கும், டி.கே.சண்முகம் அவர்களுக்கும் நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    இதற்கெல்லாம் மகு டம் வைத்தாற்போல், கண்ணகிக்கு சிலை எடுக்க வேண்டும் என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

    அதன்படி கடற்கரையில் கண்ணகிக்கு சிலை அமைக்கப்பட்டது. கையில் சிலம்புடன் கண்ணகி நிற்கும் சிலை, பூம்புகார் படத்தில் நான் தோன்றிய தோற்றத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. எனவே, கடற்கரையில் நானே சிலையாக நிற்பது போன்ற ஒரு உணர்வு எனக்குள்

    இருக்கிறது.அப்போதெல்லாம் தினமும் காலை 4-30 மணிக்கு எழுந்து கடற்கரைக்கு வாக்கிங் போவேன். தினமும் கடற்கரையில் இருக்கும் கண்ணகி சிலையைப் பார்ப்பேன். அப்போது என் மனதில் எண்ணற்ற இன்ப அலைகள் வந்து மோதும். தினமும், கண்ணகி தெய்வத்தை கையெடுத்துக் கும்பிடுவேன்.

    பூம்புகார் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சமயம், நாங்கள் இலங்கைக்கு சென்றோம்.

    என் கணவருக்கு வில்லுப்பாட்டு நன்றாகத் தெரியும். கண்ணகி வரலாற்றை வில்லுப்பாட்டாக தயாரித்து, அந்த நிகழ்ச்சியை நடத்தத்தான் நாங்கள் இலங்கைக்கு சென்றோம்.

    இலங்கையில் எங்களுக்கு கிடைத்த வரவேற்பை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு. மக்களின் அன்பான வரவேற்பு. ஒவ்வொரு வீட்டிலும் விருந்து உபசரிப்பு. எங்களுக்குத்தான் நேரம் போதவில்லை.

    இலங்கை பயணத்தை முடித்துவிட்டு, நாங்கள் சென்னைக்கு திரும்பினோம். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் இருக்கும் எங்கள் வீடு வரைக்கும் நாங்கள் திறந்த ஜீப்பில் வந்தோம். ரோட்டின் இரு பக்கமும் ரசிகர்கள் நின்று கொண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.''

    இவ்வாறு  கூறினார், விஜயகுமாரி. 
    விஜயகுமாரி நடித்த "சாரதா'' படத்தைப் பார்த்த பானுமதி, அவர் நடிப்பைப் பாராட்டி, பரிசு வழங்கினார்.
    விஜயகுமாரி நடித்த "சாரதா'' படத்தைப் பார்த்த பானுமதி, அவர் நடிப்பைப் பாராட்டி, பரிசு வழங்கினார்.

    விஜயகுமாரி நடித்த சிறந்த படங்களில் ஒன்று "போலீஸ்காரன் மகள்.'' இது எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்தி வந்த நாடகம். அது, ஸ்ரீதர் டைரக்ஷனில் திரைப்படமாகியது. ஸ்ரீதர் டைரக்ஷனில் விஜயகுமாரி நடித்த இரண்டாவது படம் இது.

    போலீஸ்காரராக எஸ்.வி.சகஸ்ரநாமமும், அவர் மகளாக விஜயகுமாரியும் நடித்தனர். விஜயகுமாரியை ஏமாற்றி விடும் இளைஞனாக பாலாஜி நடித்தார்.

    இந்தப் படத்தில் ஒரு கட்டத்தில் சகஸ்ரநாமம் தன் இடுப்பிலிருந்த `பெல்ட்'டைக் கழற்றி, விஜயகுமாரியை அடித்து விளாசுவார். பார்த்தவர்கள் திகைத்து உறைந்துபோய் விடும் அளவுக்கு, அக்காட்சி தத்ரூபமாக அமைந்திருந்தது.

    இதில் இடம் பெற்ற "கண்ணிலே நீர் எதற்கு? காலம் எல்லாம் அழுவதற்கு!'' என்ற பாடல் பெரிய ஹிட் ஆகியது.

    ஸ்ரீதர் டைரக்ஷனில் "கொடி மலர்'' என்ற படத்திலும் விஜயகுமாரி நடித்தார். இதில் அவருக்கு ஊமைப்பெண் வேடம். அவருக்கு ஜோடி முத்துராமன். மற்றும் ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, நாகேஷ் ஆகியோரும் நடித்தனர்.

    இந்த படத்தில் நடிக்கும் போது, தனக்கு ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் பற்றி விஜயகுமாரி சொன்னார்:

    "கொடிமலர்'' படப்பிடிப்பின்போது ஸ்ரீதர் அவர்கள் என்னிடம், "நான் புதுமுகங்களைப் போட்டு ஒரு படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன். அதற்காக 2 பெண்களை மேக்கப் டெஸ்ட் எடுத்து இருக்கிறேன். இந்த 2 பேரில் ஒரு பெண்ணை போடலாம் என்று நாங்கள் நினைத்து இருக்கிறோம். நீ அந்தப் பெண்களின் படத்தைப் பார்த்து, உன் அபிப்பிராயத்தை சொல்'' என்று கூறினார்.

    மேக்கப் டெஸ்ட் எடுத்த 2 படங்களையும் போட்டு காட்டினார்கள். அதில் ஒரு பெண் மிகவும் ஒல்லியாக இருந்தார். கைகள் நீளமாக, குச்சி குச்சியாக இருந்தன.

    மற்றொரு பெண் அளவான உடம்போடு இருந்தார். முகம் பார்க்க அழகாக இருந்தது.

    நான் இரண்டாவதாக நினைத்தப் பெண்ணை குறிப்பிட்டு, "இந்தப் பெண் நன்றாக இருக்கிறாள்'' என்று சொன்னேன்.

    "நாங்களும் அந்தப் பெண்ணைத்தான் தேர்வு செய்து வைத்திருக்கிறோம்'' என்று டைரக்டர் ஸ்ரீதர் கூறி, "இந்தப் பெண் யார் தெரியுமா? சந்தியா அம்மா அவர்களுடைய பெண்'' என்று சொன்னார். ஆம்; ஜெயலலிதாதான் அவர்.

    மற்றொரு பெண் ஒல்லியாக குச்சிபோல் இருந்தார் என்று சொன்னேன் அல்லவா? பிற்காலத்தில் வடநாட்டில் கனவு கன்னியாக கொடிகட்டிப் பறந்த ஹேமமாலினிதான் அவர்!

    ஸ்ரீதரின் "வெண்ணிறஆடை'' படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான ஜெயலலிதா குறுகிய காலத்தில் நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிற மொழிப் படங்களிலும் அவரே வசனம் பேசி நடித்தார். நானும் பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன்.

    முக்தா பிலிம்சின் "சூரியகாந்தி'' படம் ஜெயலலிதாவின் 100-வது படம். அந்தப் படத்தின் விழா கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்தது. அந்த விழாவிற்கு சந்தியா அம்மா என் வீட்டிற்கு வந்து, என்னை அழைத்திருந்தார். நானும் அந்த விழாவிற்கு போனேன். விழாவில் என்னை ஜெயலலிதா அவர்களுக்கு மலர் கிரீடம் வைத்து வாழ்த்தி பேசச் சொன்னார்.

    நான் பேசினேன். "ஜெயலலிதா சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நான் அவரைப் பார்த்து இருக்கிறேன். அமைதியாக இருப்பார். அப்படிப்பட்டவர் இன்று 100 படங்கள் நடித்து கலைஞர் தலைமையில் விழா நடந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த 100 படங்களில் மட்டுமல்லாமல் இன்னும் பல 100 படங்களில் நடித்து விழா காணவேண்டும். அது மட்டும் இல்லை. வரும் காலத்தில் இவர் ஒரு இந்திரா காந்தி மாதிரி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை'' என்று பேசினேன். நான் பேசும்போது அரசியலுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்காக, நான் பேசியதால்தான் அவர் அரசியலுக்கு வந்தார் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்!

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சொந்தப்படம் "தெய்வத்தின் தெய்வம்.'' இந்தப் படத்தின் கதை - வசனம் - டைரக்ஷன் எல்லாம் அவர்தான். இந்தப் படத்தில் நான் எஸ்.எஸ்.ஆருக்கு ஜோடி. சந்தியாம்மா, மணிமாலா, ரங்காராவ், எஸ்.வி.ராஜம்மா எல்லோரும் நடித்தோம்.

    இந்தப் படத்தின் கதை, காமெடி கலந்த குடும்பப்பாங்கான கதை. உண்மையிலேயே நாங்கள் எல்லோரும் ரசித்து ரசித்து நடித்தோம். இந்தப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

    பி.எஸ்.வி. பிக்சர்ஸ் "ஆலயமணி'' டைரக்டர் கே.சங்கர் டைரக்ஷனில் உருவான படம். சிவாஜிகணேசன் - சரோஜாதேவி ஆகியோருடன் எஸ்.எஸ்.ஆர், நான், நாகையா, எம்.ஆர்.ராதா, புஷ்பலதா, எம்.வி.ராஜம்மா எல்லோரும் நடித்தோம்.

    இந்தப் படத்தில் வரும் பாட்டுக்கள் எல்லாமே நன்றாக இருந்தன. இந்தப் படத்தில் நடிக்க பி.எஸ்.வீரப்பா என்னிடம் கேட்டபோது, "இந்த வேடத்தில் நடிக்க எனக்கு பிடிக்கவே இல்லை'' என்று சொன்னேன். அப்படி விருப்பமில்லாமலே நடித்த அந்தப்படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.

    அந்தப் படத்தில் வரும், "தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே'' என்ற பாடல் அந்த சமயத்தில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட பாட்டு.

    மேகலா பிக்சர்ஸ் படம் "காஞ்சித் தலைவன்.'' கதை - வசனம் கலைஞர். டைரக்ஷன் காசிலிங்கம்.

    இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர், பானுமதி, எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா எல்லோரும் நடித்தோம்.

    இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு நான் தங்கையாக நடித்தேன். அவரோடு நான் நடித்த முதல் படம் இதுதான்.

    இந்தப் படத்தில் பானுமதி அம்மாவும், நானும் சேர்ந்து வருவது போல் ஒரு சீன்கூட இல்லை! இதனால், படப்பிடிப்பின்போது, ஒருநாள்கூட பானுமதி அம்மாவை பார்க்க முடியவில்லை. ஆகவே, அவரைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

    அந்தச் சமயத்தில் "சாரதா'' படப்பிடிப்பு நிலையத்தில் எனக்கு "படித்த மனைவி'' படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. பக்கத்து செட்டில் "காஞ்சித் தலைவன்'' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அன்று என் கணவர் எஸ்.எஸ்.ஆரும், பானுமதி அம்மாவும் பங்கு கொள்ளும் காட்சியை படமாக்கிக் கொண்டு இருந்தார்கள்.

    அன்று பலத்த மழை கொட்டிக் கொண்டிருந்தது. நான் ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு அவர்கள் இருவரும் இருக்கும் இடத்திற்குப் போனேன். அங்கு என்னை பானுமதி அம்மாவிற்கு எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்தி வைத்தார். என் தலையில் கையை வைத்து "நல்லா இரும்மா'' என்று பானுமதியம்மா வாழ்த்தினார். பிறகு, "நீ நடித்த படம் ஒன்றைப் பார்க்க வேண்டுமே'' என்றார்.

    நான் நடித்த "சாரதா'' படத்தை அவர்களுக்குப் போட்டுக் காட்டினேன். படத்தைப்பார்த்த பானுமதி அம்மா, "நீ ரொம்ப நல்லா நடித்திருக்கிறாய்'' என்று என்னை பாராட்டினார்.

    அதன் பிறகு வரலட்சுமி நோன்பு அன்று பானுமதி அம்மா  என் வீட்டிற்கு வந்து, எனக்கு காதில் போடும் ஒரு நகையை பரிசாகக் கொடுத்தார். அதை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.'' - இவ்வாறு சொன்னார் விஜயகுமாரி.

    ×