search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரம்பலூர்"

    பெரம்பலூர் மாவட்டத்தில் 78 வாக்குச்சாவடிகள் பதற்றம் மற்றும் நெருக்கடி மிகுந்தவை என மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலை (2019) முன்னிட்டு பதற்றமான மற்றும் நெருக்கடியான வாக்குச்சாவடி மையங்களில் சுமூகமான முறையில் தேர்தல் நடத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் பதற்றமானவை, 90 சதவீதத்திற்கு மேல் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் நெருக்கடியானவை என பிரிக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 332 வாக்குச்சாவடி மையங்களில் 36 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 4 வாக்குச்சாவடி மையங்கள் நெருக்கடியானவை எனவும் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் 37 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 1 வாக்குச்சாவடி மையம் நெருக்கடியானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் சுமூகமான முறையில் தேர்தல் நடத்த போலீஸ் துறையினர் மூலமாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) பாலசுப்ரமணியன், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் போலீஸ் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.

    எனவே விவசாயிகள் அன்றைய தினம் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    இத்தகவலை கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர் அருகே இலவச மின்சாரம் வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், விவசாயிகளின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் ஒரு மனு கொடுத்தார். அதில், மின்நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாய மின் இணைப்பு கேட்டு கடந்த 2000-ம் ஆண்டு மனு செய்து 18 ஆண்டுகளாக காத்திருக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்காக மின் இணைப்பு கிடைக்கவில்லை என்ற காரணங்களை அதிகாரிகள் தெரிவித்து, அவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது. இதேபோல் விவசாயிகள், மின்நுகர்வோர்கள் பலர் மேற்பார்வை பொறியாளரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாநில சார்பு அணி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாநில சார்பு அணி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி, மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பன்னீர்செல்வம், மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதை மாரியப்பன், மற்றும் அந்தந்த அணி நிர்வாகிகள் துணைச் செயலாளர்கள் கலந்து கொண்டு பெரம்பலூர், மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுகள் மேற் கொண்டனர்.

    நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கண்ணுசாமி, பெரம்பலூர் நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தவசி அன்பழகன், சிவா அய்யப்பன், மலர்மன்னன், பொன் சாமிதுரை, மாவட்ட துணை செயலாளர் சங்கர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் நகரில் அனைத்து வியாபாரிகள், பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகள் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய வணிகர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.
    பெரம்பலூர்:

    சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நீர்நிலைகள் மற்றும் வளிமண்டல சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கவும் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை ஜனவரி 1-ந் தேதி முதல் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை செய்து உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அரசின் உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்யும் விதமாக ஓட்டல்களில் சாப்பாடு, கலவைசாதங்கள், டிபன் வகைகளை மடித்து தருவதற்கு பட்டர் பேப்பருக்கு பதிலாக வாழை இலைகள் மற்றும் காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன. சாம்பார் சட்னி ஆகியவற்றை வினியோகிக்க அலுமினியம் பாயில் தாள்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிறு, சிறு கவர்கள் பயன்படுத்தப்பட்டன. பிளாஸ்டிக் கேரி பைகளுக்கு பதிலாக ஓவன் கேரி பைகள் வினியோகிக்கப்பட்டது.பெரம்பலூரை பொறுத்தவரையில் முதல் நாளன்றே பெரும்பாலான ஓட்டல்கள் அரசின் கொள்கை முடிவை முழுமையாக கடைபிடித்தன. அதேபோல பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் கப் விற்பனைக்கு பதிலாக பேப்பர் கப் விற்பனை செய்யப்பட்டது. பிளாஸ்டிக் கேரி பைகள் விற்பனை தடை செய்யப்பட்டதால், பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் வெகுவாக குறைந்திருந்தது.

    இதனிடையே பெரம்பலூர் நகரில் அனைத்து வியாபாரிகள், பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகள் பயன்பாட்டை அதிகரிக்க செய்யவும், ஓட்டல்கள், உணவுப்பொருட்கள், இறைச்சி வாங்க செல்லும்போது பாத்திரங்களை கொண்டு செல்வதற்காக வணிகர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார இயக்கம் நேற்று நடத்தப்பட்டது.பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்த பிரசார இயக்கத்தை அதன் தலைவர் சத்யா நடராஜன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பொது செயலாளர் நல்லதம்பி, மாவட்ட அவைத்தலைவர் தனபால், துணைதலைவர் முகமது ரபீக், பொருளாளர் விநாயகா ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பழைய பஸ் நிலையம், சூப்பர் பஜார்தெரு, பால் நிலையத்தெரு, பள்ளிவாசல் தெரு, கடைவீதி போன்ற பகுதிகளில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். #tamilnews
    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ.விற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. #FormerMLARajkumar #PerambalurMLA
    சென்னை:

    கடந்த 2006 முதல் முதல் 2011ஆம் ஆண்டு வரை பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ராஜ்குமார்.

    2012-ல் இவர் வீட்டில் வேலை செய்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாக ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கர் உள்பட சிலர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் மீது ஆள்கடத்தல், பாலியல் வன்முறை, மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பன்னீர்செல்வம் இறந்து போனார்.

    ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி இன்று தீர்ப்பளித்தார்.

    இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளி ஜெய்சங்கர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், இருவரும் 42 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் மற்றவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். சிறப்பு நீதிமன்றம் அளித்த முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.  #FormerMLARajkumar #PerambalurMLA
    பெற்ற தாயே குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. இவரது மனைவி கோவிந்தம்மாள்(வயது 30). இந்த தம்பதிக்கு ரஞ்சிதா (6) என்ற மகளும், பிரினித்தா என்ற 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பிச்சைபிள்ளை துபாயில் கூலி வேலைசெய்து வருகிறார். ரஞ்சிதா தேவையூர் பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    நேற்று பிரினித்தாவுக்கு வெள்ளி கொலுசு வாங்குவதற்காக கோவிந்தம்மாள், குழந்தையை தூக்கிக்கொண்டு பெரம்பலூருக்கு புறப்பட்டார். பெரம்பலூர் சென்ற ஒரு அரசு பஸ்சில் கோவிந்தம்மாள் குழந்தையுடன் பயணம் செய்தார். பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தபோது, பஸ்சில் இருந்து கோவிந்தம்மாள் சுயநினைவின்றி கீழே இறக்கி விடப்பட்டார்.

    பின்னர் அவர் தன்னை அறியாமல் நடந்து சென்றார். இதனை கண்ட அவருக்கு தெரிந்த நபர்கள் கோவிந்தம்மாளை நிறுத்தி, அவர் முகத்தில் தண்ணீரை தெளித்தனர். இதனால் சுயநினைவுக்கு வந்த அவர், பிரினித்தாவையும், வெள்ளி நகைகள் வாங்க வைத்திருந்த ரூ.5 ஆயிரம் இருந்த மணி பர்சு, விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றையும் திருடு போனதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து புகார் அளிக்க சென்ற கோவிந்தம்மாளிடம் போலீசார் புகாரினை பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த அவரது உறவினர்கள் நேற்று இரவு பெரம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிந்தம்மாளிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் பஸ்சில் தனது அருகே அமர்ந்து பயணித்த பெண், தன் மீது மயக்க மருந்து தெளித்ததாகவும், பின்னர் தான் சுயநினைவை இழந்ததும் பணம், செல்போனை திருடிக் கொண்டு, எனது குழந்தையையும் கடத்திச்சென்று விட்டார் என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதற்கிடையே ஓடும் பஸ்சில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது கோவிந்தம்மாளின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் இருந்தே விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.

    இதனால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கினர். அப்போது குழந்தை பிரினித்தாவை கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறியுள்ளார். இதனால் அங்கு நின்ற அவரது உறவினர்கள் உட்பட அனைவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    பின்னர் இது குறித்து கோவிந்தம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    தனது கணவர் பிச்சைபிள்ளை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனால் தன்னையும், குடும்பத்தையும் கவனிக்காமல் விட்டுவிட்டார். இதனால் இரு குழந்தைகளையும் வளர்க்க சிரமமாக இருந்தது.

    இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன். அப்போது தனது மூத்த மகள் ரஞ்சிதாவை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு, கைக் குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு பெரம்பலூர் அருகே உள்ள வாடிகண்டபுரம் பகுதிக்கு சென்றேன். அங்குள்ள ஒரு கிணத்தில் குழந்தையை வீச முடிவு செய்தேன். ஆள் நடமாட்டம் இல்லாததை பார்த்து குழந்தையை தண்ணீரில் வீசி எறிந்தேன்.

    சிறிது நேரம் தண்ணீரில் தத்தளித்த குழந்தை நீரில் மூழ்கியது. அதன்பின்னர் அங்கிருந்து கிளம்பி பஸ்சில் பெரம்பலூருக்கு திரும்பினேன். பின்னர் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்படும் என்பதால் செய்வதறியாது திகைத்தேன். இதனால் குழந்தையை கடத்தியதாக நாடகமாட முடிவு செய்தேன். அதன்படி தன்மீது பேருந்தில் பயணித்த பெண் மயக்க மருந்து தெளித்து, குழந்தை மற்றும் உடமைகளை திருடி சென்றதாக புகார் அளித்தேன். தற்போது போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்டேன் என கூறினார்.

    கோவிந்தம்மாள் குழந்தையை கொன்று வீசியதாக கூறிய வாடிகண்டபுரம் கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள கிணற்றில் பச்சிளம்குழந்தை பிரினித்தா பிணமாக தண்ணீரில் மிதந்தது. பின்னர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் குழந்தையை மீட்டனர்.

    மேலும் கோவிந்தம்மாள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையை கொலை செய்தாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்
    பெரம்பலூர்:

    கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் கணினி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான பணிமாறுதல், கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று உட்பிரிவுகளில் பட்டா வழங்குதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த 28-ந் தேதி முதல் பட்டா உள்ளிட்ட சான்றிதழ்களை இணையதள வாயிலாக கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை புறக்கணித்தும், கடந்த 5-ந் தேதி தாலுகா அலுவலகங்களில் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் பொருளாளர் கார்த்திகேயன் தலைமையில் பெரம்பலூர் தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று பணியை புறக்கணித்து தாலுகா அலுவலக வளாகத்தில் சாமியானா பந்தல் போட்டு, அதன் கீழ் அமர்ந்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 
    பெரம்பலூர் பயனாளிகளுக்கு கலெக்டர், தலைமை கொறடா நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் 65-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. விழாவிற்கு எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் தொடக்கமாக கூட்டுறவு கொடியினை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி ஏற்றி வைத்தார். திருச்சி மத்திய கூட்டுறவு வங்கியின் இணை பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான உமாமகேஸ்வரி கூட்டுறவு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் அதனை திரும்பக்கூறி உறுதிமொழியை எடுத்து கொண்டனர். பின்னர் கலெக்டர் சாந்தா பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், 2018-ம் ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் நினைவுப்பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், 2017-18-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டதாக தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    பெரம்பலூர், வெண்பாவூர், அரும்பாவூர், கல்பாடி, புதுவேட்டக்குடி, புஜங்கராயநல்லூர், சிறுகுடல், சாத்தனுர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் வாயிலாக விவசாய நகைக்கடன் மற்றும் பயிர்க் கடன் நேரடிக் கடன் மற்றும் 25 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 2 ஆயிரத்தை கலெக்டர் வழங்கினார். விழாவில் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளின் 500 படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்்றும் மத்திய அரசின் கல்வி திட்டம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல், கணிதம், அறிவியல் கண்காட்சி தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.



    இதில் தானியங்கி சிக்னல், ராக்கெட் தொழில்நுட்பம், கழிவுநீர் சுத்திகரிப்பு, ஆக்வா தொழில்நுட்பத்தில் பயிர்சாகுபடி மற்றும் மீன்வளர்ப்பு, மருத்துவகுணங்கள் கொண்ட தாவரங்கள், தானியங்கள், வேதிவினைகள், ஆர்க்கிமிடிஸ் கோட்பாடு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, காடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து ஏறத்தாழ 500 படைப்புகள் அமைக்கப்பட் டிருந்தன. இதில் இப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் அஜீத்-முகிலன் ஹைடிராலிக் கருவிகளை கொண்டு உருவாக்கிய நடமாடும் நாற்காலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுகளை பெற்றது.

    கண்காட்சியில் முதன்மை கல்வி அதிகாரி அருள் அரங்கன், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட கல்வி அதிகாரிகள் அம்பிகாபதி, செந்தமிழ்ச்செல்வி, தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளின் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். 
    பெரம்பலூர் மாவட்டத்தில் 652 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களிலும் என மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன.

    சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக தனது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொண்டனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள, வாக்காளர்கள் அதற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதிகாரியிடம் வழங்கினர். இதில் வேப்பந்தட்டை தாலுகா வேப்பந்தட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமினை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
    பெரம்பலூர் மற்றும் அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    அரியலூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிவதோடு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் பெரம்பலூர் -அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி 19-ந்தேதி காலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் கவர்னர் பின்னர் கார் மூலம் பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அதன் பின்னர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

    மதிய உணவுக்கு பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். பின்னர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் கார் மூலம் அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். மறுநாள் 20-ந்தேதி காலை 10 மணிக்கு அரியலூரில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். இதையடுத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மதிய உணவுக்கு பிறகு பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி முகமை, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா? ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளதா ?பாலங்கள், சாலைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்றும், அரசு சிமெண்ட் ஆலையில் ரூ.200 கோடியில் நடைபெறும் விரிவாக்க பணிகள் குறித்தும், அரியலூர் பெரம்பலூர் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.

    பின்னர் இரவு 8 மணியளவில் கார் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பகுதிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
    ×