search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரம்பலூர்"

    பெரம்பலூரில் 2-வது நாளாக நடந்த தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 661 பேர் கலந்து கொண்டு தட்டச்சு செய்தனர்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு தொழில்நுட்ப துறை நடத்தும் தட்டச்சு தேர்வு பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் பொதிகை பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் தமிழ், ஆங்கில மொழியில் ஜூனியர் கிரேடில் 4 பிரிவுகளுக்கும், சீனியர் கிரேடில் ஒரு பிரிவுக்கும் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என மொத்தம் 952 பேர் பங்கேற்றனர்.

    அதே கல்லூரியில் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து தட்டச்சு தேர்வுநடந்தது. இதில் தமிழ், ஆங்கில மொழியில் ஜூனியர் கிரேடில் ஒரு பிரிவுக்கும், சீனியர் கிரேடில் 3 பிரிவுகளுக்கும், உயர் வேகத்தேர்வு 2 பிரிவுகளுக்கும், ஜூனியர் கிரேடில் 2 பிரிவுகளுக்கும் நடத்தப்பட்ட தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 661 பேர் கலந்து கொண்டு தட்டச்சு செய்தனர். 
    பெரம்பலூரில் நடந்த தட்டச்சு தேர்வில் 952 பேர் பங்கேற்றனர்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு தொழில்நுட்ப துறை நடத்தும் தட்டச்சு தேர்வு பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் பொதிகை பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் தமிழ், ஆங்கில மொழியில் ஜூனியர் கிரேடில் 4 பிரிவுகளுக்கும், சீனியர் கிரேடில் ஒரு பிரிவிற்கும் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என மொத்தம் 952 பேர் பங்கேற்றனர். 2-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து தட்டச்சு தேர்வுகள் நடக்கிறது.

    இதில் ஜூனியர் கிரேடில் ஒரு பிரிவிலும், சீனியர் கிரேடில் 3 பிரிவுகளிலும் புதுமுக இளநிலையில் 2 பிரிவுகளிலும், உயர் வேக தேர்வில் 2 பிரிவுகளிலும் என மொத்தம் 8 பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் தட்டச்சு செய்ய உள்ளனர் என்று பெரம்பலூர் மாவட்ட மைய தேர்வு மைய பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, மைய முதன்மை கண்காணிப்பாளரும், பொதிகை பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வருமான சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்தனர். துணை மைய கண்காணிப்பாளராக செல்வகுமார், விக்னேஷ் ஆகியோர் செயல்பட்டனர். அறை கண்காணிப்பாளராக 12 பேர் செயல்பட்டனர். 
    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் கதவுகள் ஏன் நேற்று அடைக்கப்பட்டது என்பது அரசு அதிகாரிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம், வேளாண்மை துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றனர்.

    மேற்கண்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள், அங்கு பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் செல்வதற்கு கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் வழியே தான் பிரதான பாதையாக பயன்படுத்தி வருவார்கள். இதனால் கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் கதவுகள் பகல் நேரங்களில் எப்போதும் திறந்தே கிடக்கும். இரவு நேரங்களில் அடைக்கப்படுவது வழக்கம். அரசு விடுமுறை நாட்களிலும் கூட கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் கதவுகள் பகல் நேரங்களில் திறந்திருக்கும். ஆனால் நேற்று நுழைவு வாயிலின் கதவுகள் அடைக்கப்பட்டு பூட்டுகள் போடப்பட்டிருந்தன.

    நுழைவு வாயில் அருகே நடந்து செல்வதற்கு வசதியாக வழியின் கதவுகள் மட்டுமே திறந்திருந்தன. பிரதான நுழைவு வாயிலின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானத்திற்கு விடுமுறை நாட்களிலும் கூட அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை பார்வையிட கார், மோட்டார் சைக்கிள்களில் வரும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் திரும்பி மாற்று வழியில் தங்களது அலுவலகங்களுக்கு சிரமத்துடன் சென்றனர். எப்போதும் பகல் நேரங்களில் திறந்திருக்கும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் கதவுகள் ஏன் நேற்று அடைக்கப்பட்டது என்பது அரசு அதிகாரிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
    பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மனித சங்கிலி இயக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் நேற்று மாலை நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மனித சங்கிலி இயக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை தாங்கினார். இதில் சிறிது தூரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்றனர். அப்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர், காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    பெரம்பலூர்:

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர், காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவினர் முறை சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் செயலாளர் தினகர், பொருளாளர் பால்ராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், வக்கீலுமான தமிழ்ச்செல்வன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி மூக்கன், தங்கவேல், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இந்திராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயலாளர் குணசேகரன் தலைமையில், அக்கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று விடுமுறை நாளாக இருந்தாலும் பள்ளிகளில் காமராஜர் பிறந்த தினத்தை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், தமிழக கல்வித்துறை சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    அதன்படி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவிற்கு தலைமை ஆசிரியர் சுந்தரராசு தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். அப்போது பள்ளி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் காமராஜர் பிறந்த நாளையொட்டி காமராஜர் பற்றிய பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்டவைகள் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற முதல் மூன்று மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

    இதை போல் கல்வி வளர்ச்சி நாள் விழாவையொட்டி பெரம்பலூர் தனியார் தொடக்கப்பள்ளியில் அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினர். துறைமங்கலம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தனியார் சிறப்பு பள்ளியிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாற்றுத்திறனாளி மாணவர்கள் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவியும், இரு கரங்களையும் கூப்பியும் மரியாதை செலுத்தினர்.

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (முகநூல்), வாட்ஸ்-அப் களில் நிறைய பேர் காமராஜர் படத்தினை பகிர்ந்தனர். நிறைய பேர் வாட்ஸ்-அப்களில் ஸ்டேட்டஸ்களில் காமராஜர் படங்களையும், அவரை பற்றின வீடியோ காட்சிகளையும் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரம்பலூரில் உள்ள நிறைய தனியார் பள்ளிகளில் நேற்று முன்தினமே காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர். காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்படாத பள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. 
    பெரம்பலூரில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சத்துணவு அமைப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அசூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சத்துணவு சாப்பிட்டனர். இதில் 7 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை மாணவ, மாணவிகள் சாப்பிட்டதாக தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி , சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு அவை தஞ்சையிலுள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே வேப்பூர் ஒன்றிய ஆணையர் செந்தில், அசூர் அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பத்மாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இதனிடையே அசூர் அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பத்மாவை, பரவாய் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து வேப்பூர் ஒன்றிய ஆணையர் செந்தில் உத்தரவிட்டுள்ளனர்.
    பெரம்பலூரில் ரூ.3 கோடி செலவில் நடைபெற்று வரும் உள் விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உள்விளையாட்டு அரங்கம் 52 அடி நீளம், 34 அடி அகலத்துடன், மரத்தினாலான தரைத்தளம் 40 மீ நீளம், 20 மீ அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, இறகுப்பந்து, கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, டேபிள்டென்னிஸ், கேரம், செஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடுவதற்கு மின்னொளி வசதியுடன் இந்த அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ. 1½ கோடியும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.1½ கோடியும் என மொத்தம் ரூ. 3 கோடி செலவில் உள்விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைக்கப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்கின் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகளின் தன்மை குறித்து கேட்டறிந்த கலெக்டர், உள் விளையாட்டு அரங்கின் கட்டுமானப்பணிகளை உயர்ந்த தரத்துடன் விரைந்து முடித்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிக்கும் அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராமசுப்பிரமணியராஜா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். 
    பெரம்பலூரில் பா.ஜனதா கட்சி சார்பில் சட்டமன்றத் தொகுதியின் மகா சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பா.ஜனதா கட்சி சார்பில் சட்டமன்றத் தொகுதியின் மகா சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சாமி இளங்கோவன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் முருகேசன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக திருச்சி கோட்ட பொறுப்பாளரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ராமகிருஷ்ணா சிவசுப்பிரமணியம் கலந்துகொண்டு 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து விளக்கி பேசினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சுபிக்‌ஷா சாமிநாதன், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் மணிவேலு நன்றி கூறினார். 
    பெரம்பலூரில் கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பாண்டியன் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டு பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் மேற்கூரையில் உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரையில் உள்ள கண்ணாடியை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. #Tamilnews
    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய உயர்வில் 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும். 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு, ஆசிரியர் இயக்கங்களை அழைத்து கலந்துரையாடல் செய்ய வேண்டும். கல்வித்துறையை குழப்பத்தில் ஆக்கும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். பள்ளிக்கல்வி துறையில் ஆட்குறைப்பு என்ற அடிப்படையில் பணிநிரவல் மூலம் ஆசிரியர்களை பணிமாறுதல் செய்வதை கைவிட வேண்டும்.

    அரசு பொதுத்தேர்வு சுமையை கருத்தில் கொண்டு முதுநிலை ஆசிரியர்களை 11,12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் சார்பில், நேற்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை வரவேற்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மகேந்திரன் பேசினார். இதில் தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி-தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட தலைவர் தேவேந்திரன், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் காந்தி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசந்தர் ஆகியோர் 10 அம்ச கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் இணைப்பு சங்கங்களில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு நியமித்துள்ள பணியாளர் சீர்திருத்த குழுவை ரத்து செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சர்பூன்னிசா, செல்வமணி, தியாகராஜன், வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சவீதா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் தயாளன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

    முடிவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சின்னதுரை நன்றி கூறினார்.

    இதேபோல் வேப்பூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க குன்னம் வட்ட செயலாளர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், செந்தில், ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    பெரம்பலூரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் இமயவரம்பன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஆளவந்தார், துணை தலைவர் குமரிஆனந்தன், வட்ட இணை செயலாளர் மருதராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் பெரம்பலூரில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    பெரம்பலூர்:

    ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சென்னை, கடலூர், புதுக்கோட்டை, ராமேசுவரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் உள்பட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பெரம்பலூர் சிறு வியாபாரிகள் மீன்களை கொள்முதல் செய்து வந்து பெரம்பலூரில் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    பெரம்பலூர் நகரில் உள்ள மீன் கடைகளில் கிலோ ரூ.150-க்கு விற்ற ரோகு வகை மீன் தற்போது ரூ.180-க்கும், கிலோ ரூ.170-க்கு விற்ற கட்லா மீன் ரூ.200-க்கும், கிலோ ரூ.170-க்கு விற்ற பாப்பு லெட் மீன் ரூ.180-க்கும், கிலோ ரூ.800-க்கு விற்ற வஞ்சிரம் மீன் ரூ.900-க்கும், கிலோ ரூ.300-க்கு விற்ற சீலா மீன் ரூ.350-க்கும் விற்கப்படுகிறது. மேலும் அயிலைபாறை மீன் கிலோ ரூ.250-க்கும், கொடுவா பாறை ரூ.250-க்கும், தேங்காய் பாறை ரூ.200-க்கும், நெத்திலி ரூ.250-க்கும், இறால் ரூ.300-க்கும், அயிலைசம்பா ரூ.120-க்கும், மத்தி ரூ.120-க்கும், சங்கரா ரூ.250-க்கும், பிளாச்சி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கண்ணாடி பாறை கிலோ ரூ.350-க்கும், கிளி மீன் ரூ.300-க்கும், விறால் ரூ.500-க்கும், உயிர்மீன் (மயிலை) ரூ.150-க்கும், வாழை மீன் ரூ.350-க்கும், பால்சுறா, வஞ்சிரம் பாறை ரூ.400-க்கும், நண்டு ரூ.250-க்கும், புளூ நண்டு ரூ.450-க்கும், கடல் வவ்வால் ரூ.450-க்கும், கடல் விறால் ரூ.350-க்கும், கடல் கெழுத்தி ரூ.300-க்கும், அயிலை ரூ.250-க்கும், ஜிலேபி ரூ.130-க்கும், பங்கஸ் வகை மீன் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மீன்களின் விலை அதிகரித்தது குறித்து பெரம்பலூரை சேர்ந்த பெண் மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனால் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கண்மாயில் பிடிக்கப்படும் கெண்டை, கட்லா மீன்களை மொத்த வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைகாலம் முடிந்த பின்னரே மீன்களின் விலை கணிசமாக குறையும்” என்றார். இந்நிலையில் மீன் கடைகளுக்கு மீன் வாங்க வந்தவர்கள், மீன்கள் விலை அதிகமாக இருந்ததால் குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்றனர். 
    ×