search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 123319"

    நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்ற ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு தடை கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, செவிலியர்களின் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் குழுவை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்தநிலையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க கோரி ஒப்பந்த செவிலியர்கள் தரப்பில் ஜெயப்பிரகாஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஒப்பந்த செவிலியர்களின் மாத ஊதியத்தை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக 15 நாட்களுக்குள் அரசாணை பிறப்பிக்கப்படும்’ என்று தமிழக அரசுத்தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் புகழ்காந்தி, ஒப்பந்த செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரி வழக்குத் தொடரவில்லை. பணிநிரந்தரத்துடன் சம வேலைக்கு சம ஊதியம் என்பதே ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கை. எனவே இதுகுறித்து தமிழக அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஒப்பந்த செவிலியர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பாக ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் குழுவிடம் முறையிட வேண்டும். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களும் தாங்கள் பணியில் சேர்ந்த நாள், பணிக்காலம் போன்ற விவரங்களை குழுவிடம் கொடுக்க வேண்டும். அவற்றை பரிசீலித்து ஒப்பந்த செவிலியர்களுக்கான சரியான ஊதியத்தை 6 மாதத்தில் நிர்ணயித்து அரசுக்கு, அதிகாரிகள் குழு பரிந்துரைக்க வேண்டும். அதன் அடிப்படையில் அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    நாகையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ரமேஷ் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்), சிவகுருநாதன் (தமிழக தமிழாசிரியர் கழகம்), லட்சுமிநாராயணன் (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), கல்யாணசுந்தரம் (தமிழக ஆசிரியர் கூட்டணி) ஆகியோர் தலைமை தாங்கினர். 

    ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு உயர்வில் 21 மாதகால நிலுவை தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் குழு ஆசிரியர் இயக்கங்களை அழைத்து கலந்துரையாடல் செய்து முரண்பாடுகளை முழுமையாக களைந்திட வேண்டும்.

    சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் கல்வித்துறையை குழப்பத்தில் ஆழ்த்தி நிர்வாகத்தினை சீர்குலைக்கும் அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    தா.பேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தா.பேட்டை:

    தா.பேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராமிய தபால் ஊழியர்கள் 7-வது ஊதியக்குழுவை அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி முதல் தொடர் வேலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்த நிலையில் தா.பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு போராட்ட குழுவின் தலைவர் சிவாஜி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் விஷ்ணு தேவன், நிர்வாகிகள் மனோகரன், துரைசாமி, முருகேசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 

    அப்போது கிராம புறத்தில் பணி புரியும் கிராமிய தபால் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பெண்களுக்கான மகப்பேறு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும், கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிராமிய தபால்துறை ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட தீர்மானம் நிறைவேற்றி தி.மு.க.வை மீண்டும் சபைக்கு வரவழைக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் மற்றும் விஜயதரணி கோரிக்கை விடுத்துள்ளனர். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்விநேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி பேசியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக மூடப்படுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அந்த ஆலைக்கு மத்திய அரசு கொடுத்த லைசென்சை ரத்து செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை அனுமதி ரத்து செய்வது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    காமராஜர், எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது சட்டமன்றத்தை புறக்கணித்த எதிர்க்கட்சியை அழைத்து மீண்டும் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க வைத்திருக்கிறார்கள். அதுபோல் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை அழைத்து அனைவரும் இணைந்து ஸ்டெர்லைட் ஆலை உரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

    சபையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சி நாங்கள் தான். எனவே தி.மு.க.வை அவைக்கு வரவழைக்க வேண்டும் என்று சபாநாயகருக்கும் முதல்வருக்கும் கோரிக்கை விடுக்கிறோம்.

    அபுபக்கர் (முஸ்லிம் லீக்):- எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக இருக்கும் போது தி.மு.க. ஒட்டுமொத்தமாக சபையை புறக்கணித்தது. உடனே கருணாநிதியை எம்.ஜி.ஆர் அழைத்து சட்டசபையில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். எம்.ஜி.ஆர். வழியில் வந்த இந்த அரசு அதுபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    தினகரன் (அ.ம.மு.க.):- நான் அரசுக்கு வைக்கும் கோரிக்கை அனைத்து கட்சிகளும் இந்த சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதுதான். தி.மு.க. ஒரு பிரதான எதிர்க்கட்சி. அதையும் அழைத்து சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக என்ன நடந்தது என்ற உண்மை மக்கள் அனைவருக்கும் தெரியும். சட்டமன்றம் என்பது மக்கள் கருத்துக்களை தெரிவித்து தீர்வுகாண வேண்டிய இடம். எனவே பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வையும் வரவழைக்க வேண்டும். அவர்கள் ஜனநாயக கடமையாற்ற சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீசெல்வம்:- கருத்துக்களை சொல்ல அனைவருக்கும் முழு உரிமை இருக்கிறது. அதை தி.மு.க. சபையில் வந்து சொல்லலாம். அதை விட்டுவிட்டு வெளியே கூட்டம் நடத்துகிறார்கள். ஜனநாயக கடமையாற்ற அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. அவர்களை யாரும் வெளியேற்றவில்லை. எனவே அவர்களாகவே சபைக்கு வந்து பங்கேற்கலாம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly
    ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என்று பிரிட்டன் எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. #Vedanta #LabourParty
    லண்டன்:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில், லண்டன் பங்குச் சந்தையில், வேதாந்தா பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. சூழலியலுக்கு எதிரான தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதையடுத்து லண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழும பங்குகளை விலக்க வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.



    ‘போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதையடுத்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த  நிறுவனம் சுற்றுச்சூழலை சீரழித்து பொதுமக்கள் கட்டாயமாக வெளியேறும் வகையில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலை செய்து வருகிறது. பிரச்சார இயக்கங்கள் சர்வதேச பொது மன்னிப்பு சபை போன்ற அரசு சாரா அமைப்புகளும் வேதாந்தா நிறுவனம் மீது குற்றம்சாட்டியுள்ளன’ என தொழிலாளர் கட்சி தலைவர் ஜான் மெக்டோனல் கூறியுள்ளார்.

    மும்பை பங்கு சந்தையில் ஏற்கனவே வேதாந்தா அளித்த அறிக்கையில், தூத்துக்குடியில் தங்கள் நிறுவனத்தின் முதல் அலகு மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து லண்டன் பங்கு சந்தையிலும் வேதாந்தா குழுமத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால் லண்டன் பங்குச் சந்தை இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. #Vedanta #LabourParty
    புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரை 23 நாள் நடத்த வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    அன்பழகன் எம்.எல்.ஏ. சபாநாயகரிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    இவ்வாண்டின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கி உரைக்கு நன்றி கூட தெரிவிக்காமல் அவசர அவசரமாக ஒரு நாளிலேயே முடித்து வைக்கபட்டுள்ளது. அன்றைய தினமே 3 மாத அரசின் முக்கிய செலவினங்களுக்கு முன் அனுமதியும் வழங்கப்பட்டது.

    தற்போது இவ்வாண்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 4-ந் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனநாயக ரீதியில் துறை வாரியாக விவாதம் செய்து நடத்த போதிய கால அவகாசம் கடந்த காலங்களில் வழங்கப்படவில்லை.

    தற்போது தமிழகத்தில் நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தொடர் வரும் 29-ந் தேதி தெடங்கி 23 அமர்வு நாட்கள் நடைபெற உள்ளது. புதுவையிலும் நடைபெற இருக்கும் சட்ட மன்ற கூட்டத் தொடரை 23 அமர்வு நாட்களுக்கு குறைவில்லாமல் நடத்திட தாங்கள் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தல், பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவித்தல், துறை ரீதியான விவாதங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கால நிர்ணயம் செய்ய உடனடியாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை ஒன்றிரண்டு தினங்களுக்குள் கூட்ட பேரவை தலைவர் உரிய ஏற்பாட்டை செய்திட வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

    சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    சிவகங்கை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் கோபால், நிர்வாகிகள் ஆறுமுகம், திருச்செல்வம், முருகன், குணாளன், நாச்சியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 2016-17-ம் ஆண்டுக்கு பயிர்காப்பீட்டு செய்த 13 ஆயிரம் விவசாயிகளுக்கு இன்றுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். 2017-18-ம் ஆண்டிற்கு பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளதா என்பது குறித்த எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இது குறித்து அறிக்கையை வெளியிட வேண்டும்.

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு அனுப்புவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நோயாளிகளுக்கு சிவகங்கை மருத்துவமனையிலேயே சிகிச்சைஅளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் வைகை மற்றும் சிற்றாறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதால் நீர் ஆதாரங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    எஸ்.வி. சேகருக்கு எதிராக இன்று மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.
    சென்னை:

    பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்த சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

    எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து 25 நாட்களாகியும், இதுவரை கைது செய்வதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் எஸ்.வி. சேகருக்கு எதிராக இன்று மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் லஸ் கார்னரில் அனைத்து இந்திய மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எஸ்.வி.சேகருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனரையும் பிடித்திருந்தனர்.

    இந்த நிலையில் எஸ்.வி. சேகரை தேடப்படும் நபராக அறிவித்து சென்னை நகரம் முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி மயிலாப்பூர் பகுதியில் அதிகமாக காணப்பட்டது. அவருக்கு எதிரான வாசகங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

    எஸ்.வி.சேகர் மீது பொது அமைதியை சீர் குலைத்தல், அவதூறு பரப்புதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
    மனோகர் பாரிக்கர் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில் மாநிலத்தில் நிரந்தர முதல்- மந்திரியை நியமிக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். #ManoharParrikar #GoaCM
    பனாஜி:

    கோவாவில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. மனோகர் பாரிக்கர் முதல்-மந்திரியாக இருக்கிறார். இவர் கணைய நோய் காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். எனவே 3 மூத்த மந்திரிகளை கொண்ட ஆலோசனை குழு மாநில விவகாரங்களை கவனித்து வருகிறது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தில் நிரந்தர முதல்- மந்திரியை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தொடர்பாக அவர்கள் கவர்னர் உள்ளிட்டோரிடம் மனுவும் வழங்கி உள்ளனர்.



    இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் பனாஜியில் மிராமர் கடற்கரையையொட்டி உள்ள கோவாவின் முதலாவது முதல்-மந்திரியான தயானந்த் பன்டோட்கரின் நினைவகம் முன்பாக நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதற்கிடையில், பனாஜியில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, அமெரிக்காவில் இருந்து மனோகர் பாரிக்கர் பேசிய வீடியோ பதிவு அங்கு உள்ள பெரிய திரையில் திரையிடப்பட்டது. அதில் பேசிய மனோகர் பாரிக்கர் ‘அடுத்த சில வாரங் களில் நான் கோவா திரும்பிவிடுவேன்’ என கூறினார். 
    நீட் தேர்வு தமிழ் வழி வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளது. 49 கேள்விகளில் 68 வார்த்தைபிழைகள் உள்ளது. எனவே கருணை மதிப்பெண் வழங்க சி.பி.எஸ்.இ.க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #NEET2018 #TamilQuestionPaper #CBSE
    சென்னை:

    ‘நீட்’ தேர்வு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்தது. தமிழக மாணவர்கள் 5 ஆயிரம் பேருக்கு ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு, பிள்ளைகளை தேர்வு மையத்துக்கு அழைத்து சென்ற 2 தந்தைகள் மரணம் என ‘நீட்’ தேர்வு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

    இந்த குளறுபடிக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தான் காரணம் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ‘நீட்’ தேர்வு தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடி நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது. 49 கேள்விகளில் 68 வார்த்தை பிழைகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக அனைவருக்குமான தொழில்நுட்பம்(டெக் பார் ஆல்) என்ற அமைப்பின் நிறுவனர் ஜி.பி.ராம்பிரகாஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘நீட்’ தேர்வுக்காக கிராமப்புற மாணவர்கள் 3 ஆயிரம் பேருக்கு நாங்கள் இலவச பயிற்சி அளித்திருந்தோம். அவர்கள் தமிழ் வழி வினாத்தாளில் தேர்வு எழுதினர். இந்த வினாத்தாளை ஆய்வு செய்த போது 49 கேள்விகளில் 68 வார்த்தை பிழைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதன்படி இயற்பியல் கேள்வியில் 10 வார்த்தைபிழைகளும், உயிரியல் கேள்வியில் 50 வார்த்தைபிழைகளும், வேதியியல் கேள்வியில் 8 வார்த்தை பிழைகளும் உள்ளன.

    குறிப்பாக ‘வவ்வால்’ என்பதற்கு ‘வவ்னவால்’, ‘சிறுத்தை’ என்பதற்கு ‘சீத்தா’, ‘விதை வங்கி’ என்பதற்கு ‘வதை வங்கி’ ‘ரகம்’ என்பதற்கு ‘நகம்’, ‘பழுப்பு’ என்பதற்கு ‘பழப்பு’ போன்று வார்த்தைபிழைகள் உள்ளன.

    180 கேள்விகள். தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்களுக்கு ‘நீட்’ தேர்வு நடைபெற்றுள்ளது. எனவே வார்த்தைபிழை ஏற்பட்டுள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்களாக 196 மதிப்பெண்களை சி.பி.எஸ்.இ. வழங்க வேண்டும். இந்த குளறுபடிகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பிறமொழிகளை போன்று தமிழ் மொழியிலும் புத்தகங்களை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NEET2018 #TamilQuestionPaper #CBSE
    ×