search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட்"

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்வது தான் தனக்கு மகிழ்ச்சி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். #Rajinikanth #SterliteProtest
    நடிகர் ரஜினிகாந்த் கடந்தாண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கட்சியை இன்னும் தொடங்கவில்லை என்றாலும். அதற்கான ஆரம்ப கட்ட பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

    இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தான் தூத்துக்குடிக்கு செல்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

    சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியதாவது, 

    தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்திக்க செல்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி. நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்தது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை என்றார். 



    தூத்துக்குடி சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என முதலமைச்சர் குற்றச்சாட்டு குறித்த பதில் அளித்த ரஜினி, திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது தான் அரசியல், பழைய நிகழ்வுகளை பேசி பயனில்லை என்று கூறினார்.

    காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதித்திருப்பது குறித்து கேட்ட போது, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும் என்றார்.
    #Rajinikanth #SterliteProtest #BanSterlite #SaveThoothukudi

    திமுக ஆட்சியின் போது ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #SterliteProtest #BanSterlite

    சென்னை:

    பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கதக்கது. இதற்கு முன்பு இதேபோல் முடிவெடுத்து மறுபடியும் நீதிமன்றம் சென்று திறக்கப்பட்டது. இதேபோல் மீண்டும் நடைபெறக் கூடாது.

    ஸ்டெர்லைட் ஆலை பணியாளர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போராட்டத்தில் சமூக விரோதிகள் இருக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.

     


    இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது ஒரு கண்துடைப்பு என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

    1996-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின்போது அபாயகரமான மூடப் படவேண்டிய ஸ்டெர்லைட் ஆலையை திறந்த பாவத்தை தி.மு.க. ஆட்சி தான் செய்தது. இதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ஆலையை திறந்ததற்கான காரணத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை திறந்ததில் காங்கிரசுக்கு என்ன பங்கு என்று திருநாவுக்கரசர் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.#SterliteProtest #BanSterlite

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது, போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். #Sterlite #Rajini
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். 

    துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.

    இதனை அடுத்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது.

    அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு வெளியில் அரசின் நோட்டீஸை ஒட்டி, சீல் வைத்தார். இதற்கு அரசியல்வாதிகளும், முக்கிய பிரபலங்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறும்போது, ‘போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு ஸ்டெர்லைட் வெற்றி சமர்ப்பணம். அப்பாவி மக்களின் இரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்’ என்றார்.
    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு வழங்கியுள்ள அரசாணை தற்காலிக வெற்றி என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். #Sterlite #GVPrakash
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். 

    இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசு மருத்துமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.

    இதனை அடுத்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டுள்ளது.

    பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக, இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு வெளியில் அரசின் நோட்டீஸை ஒட்டி, சீல் வைத்தார்.



    அரசாணை வெளியிட்டத்தற்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ், இது தற்காலிக வெற்றி என்று கூறியிருக்கிறார். மேலும், ‘உயிரைக் குடுத்து உரிமை காத்த போராளிகளின் உதிரம் பேசும் எம் மக்கள் வீர வரலாறு... அரசாணை தற்காலிக வெற்றி.. நிரந்தரவு தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்கும் வரை எதுவும் மாறாது, மாறவும் கூடாது..!!’ என்று கூறியிருக்கிறார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும் சென்னையில் நாடார் சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. #SterliteProtest #ThoothukudiShooting

    சென்னை:

    தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும் நாடார் சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே 29-ந் தேதி(நாளை) காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் தலைவருமான த.பத்மநாபன் தலைமை தாங்குகிறார். சின்னமணி நாடார், ஜி.டி.முருகேசன், மயிலை எம்.மாரித்தங்கம், டி.செல்வகுமார் நாடார், எஸ்.ஜெயகுமார், எம்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தட்சணமாற நாடார் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார், மகாஜன சங்கத்தலை வர் ஜி.கரிகோல்ராஜ் நாடார், நாடார் பேரவை தலைவர் ஏ.நாராயணன், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன்,சென்னைவாழ் நாடார் சங்கத்தின் செயலாளர் டி.தங்கமுத்து நாடார், சிம்மப்பேரவை தலைவர் ராவணன் ராமசாமி, காமராஜர் ஆதித்தனார் சங்கத் தலைவர் எஸ்.சிலம்பு சுரேஷ், நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜகுமார் நாடார், பாரதிய கல்சூரி ஜெய்ஸ்வால் நாடார் சங்க செயலாளர் தங்கம் ஆர்.செல்வராஜ், நாடார் மக்கள் சக்தி அமைப்பாளர் ஏ.ஹரி நாடார், தமிழ் நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் நாடார், கிறிஸ்தவ நாடார் சங்கத் தலைவர் பி.தாமஸ் நாடார், தட்சண நாடார் சங்க சென்னை கிளை இயக்குனர் கே.சி.ராஜா உள்பட பல்வேறு நாடார் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் கண்டன தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்.

    முன்னதாக துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்த 13 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. #SterliteProtest #ThoothukudiShooting

    ஸ்டெர்லைட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு இருந்தால் நிரூபித்து காட்டட்டும் என்று ஆலை அதிபர் அனில் அகர்வால் கூறியுள்ளார். #SterliteProtest #ThoothukudiShooting #Anilagarwal

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலவரத்துக்கு காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையின் அதிபர் அனில் அகர்வால் லண்டனில் இருக்கிறார். அவர் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த துயரம் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

    பதில்:- 13 அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்பட்டு இருப்பதை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். ஆனால், இந்த சம்பவம் எங்களது ஆலையில் இருந்து சில கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் நடந்துள்ளது.

    எங்களது வேதாந்தா நிறுவனம் மனிதாபிமான விவகாரங்களில் பொறுப்புள்ள இந்திய தொழில் நிறுவனம் ஆகும். நாங்கள் இதில் உயிர் இழந்தவர்கள் குடும்பம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்.

    கே:- இந்த கலவர சம்பவத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை காரணம் இல்லை என்கிறீர்களா?

    ப:- எங்கள் ஆலையில் இருந்து 5 கி.மீட்டருக்கு அப்பால் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. மே 22-ந் தேதி ஏதோ நடக்கப் போகிறது? என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது.

    நாங்கள் இது சம்பந்தமாக கோர்ட்டை அணுகினோம். கோர்ட்டு உள்ளூர் நிர்வாகத்திடம் தகவல் கூறி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தது. அதன்படி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.


    கே:-ஸ்டெர்லைட் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மூலம் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் மேலும் உள்ளூர் மக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறதே?

    ப:- அப்படி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை எந்த தனி அமைப்புகள் வேண்டுமானாலும் நிரூபித்து காட்டட்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    எங்கள் நிறுவனம் அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி நடத்தப்படுகிறது. எந்த கழிவுகளும் ஆலையில் இருந்து வெளியேறுவதில்லை. எந்த ஒரு தனி அமைப்பும் ஆய்வு செய்து பார்க்கட்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம்.

    சுற்றுச்சூழல் விதிமுறைகளை நாங்கள் கடுமையாக கடைபிடிக்கிறோம். எங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என்பதை நிரூபிக்க எங்களிடம் போதுமான தகவல்களும், ஆய்வு அறிக்கைகளும் உள்ளன. தேவை என்றால் எந்தவொரு இந்திய அமைப்போ, அல்லது வெளிநாட்டு அமைப்போ ஆய்வு செய்து பாதிப்பு இருக்கிறது என்பதை நிரூபிக்கட்டும்.

    கே:- அப்படியானால் பொதுமக்கள் போராட்டத்துக்கு காரணம் என்ன?

    ப:- மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதற்கு காரணம். இதில், சில சக்திகள் தூண்டுகோலாக இருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அவர்கள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த சக்திகள் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

    நாங்கள் சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக ஆலைக்கு வந்து பாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தோம். அதுபோல் பல தலைவர்களையும், போராட்ட அமைப்பினரையும் அழைத்தோம். ஆனால், யாரும் உள்ளே வந்து பார்வையிடவில்லை. தூத்துக்குடி மக்களுக்கு இதுபற்றிய அனைத்து விவரங்களையும் தருவதற்கு தயாராக இருக்கிறோம்.


    கே:- இந்த விவகாரத்தை கையாண்டது தொடர்பாக தமிழக அரசு மீது நீங்கள் அதிருப்தியில் இருக்கிறீர்களா?

    ப:- தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் யாரையும் நோக்கி கைகாட்ட விரும்பவில்லை. இந்த போராட்டக்காரர்களால் என்ன நடக்கும்? என்பது யாரும் எதிர்பார்க்காதது.

    போராட்ட குழுவில் பல அமைப்பினர் உள்ளனர். அவர்களில் பலர் எங்களை சந்தித்து உரிய விளக்கங்களை பெற தயாராக இருக்கிறார்கள்.

    ஆனால், அவர்களை சிலர் தடுக்கிறார்கள். எங்களை பொருத்த வரை நாங்கள் தொழில் செய்கிறோம். நாங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறோம்.

    எங்களுக்கு அரசின் உறவு வலுவாக தேவை. அதே நேரத்தில் எங்கள் தொழிலை அரசியலுக்கு அப்பால் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வர்த்தகத்தை அரசியலோடு கலந்தால் அது வெற்றிகரமாக அமையாது.

    இந்தியாவில் எங்களோடு சேர்த்து 3 ஆலைகள் உள்ளன. இந்துஸ்தான் காப்பர், பிர்லா காப்பர் ஆகிய நிறுவனமும் செயல்படுகின்றன. நாங்கள் 20 ஆண்டுகளாக ஆலையை நடத்தி வருகிறோம். ஆலை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட காற்றின் தரம் தற்போது உயர்ந்து காணப்படுகிறது.

    அதேபோல் நிலத்தடி நீரின் தரமும் உயர்ந்துள்ளது. நாங்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்குகிறோம். உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கு மட்டும் நாங்கள் ரூ.500 கோடி வரை செலவு செய்து இருக்கிறோம்.

    இவ்வாறு அனில் அகர்வால் கூறினார். #SterliteProtest #ThoothukudiShooting #Anilagarwal

    மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக தமிழக அரசு உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார். #Kanimozhi #BanSterlite #SterliteProtest

    காரைக்குடி:

    காரைக்குடியில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக தமிழக அரசு உள்ளது. தீய சக்தியாக விளங்கக் கூடியதும் இந்த அரசுதான். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kanimozhi #BanSterlite #SterliteProtest

    தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 6 பேரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.#SterliteProtest
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கடந்த 22-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலவரம் தொடர்பாக 126 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

    பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுடன் வெளியூர்களை சேர்ந்த பலர் சேர்ந்து போலீசாரை தாக்கியதால் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மேலும் தூத்துக்குடியில் சந்தேகப்படும்படி வெளியூர் நபர்கள் யாரேனும் இருந்தால் இதுபற்றி உடனடியாக அதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

    மேலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி சந்தேகப்படும்படி திரிந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றார்கள். தூத்துக்குடி அண்ணாநகர், பிரைண்ட்நகர் பகுதிகளில் வீடு வீடாக போலீசார் சோதனை நடத்தி ஏராளமான இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டார்கள்.

    மேலும் பலரை சட்ட விரோதமாக காவலில் வைத்ததாக வக்கீல் சந்திரசேகர் என்பவர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் போலீசாரால் சட்டவிரோதமாக காவலில் வைத்த 95 பேரை மீட்டார்கள். இது போல பல்வேறு பகுதியில் இருந்தும் இன்னும் பலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

    அவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேரும் உள்ளனராம். மேலும் பல அப்பாவி இளைஞர்களையும் போலீசார் விசாரணைக்கு என அழைத்து சென்றுள்ளார்கள். அவர்களை போலீசார் எங்கு வைத்துள்ளார்கள் என தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

    எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்கள் கதி என்ன என கண்டறிந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.#SterliteProtest
    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிசூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புழல் சிறையில் 23 பேருடன் வேல்முருகன் 2-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். #Thoothukudifiring #bansterlite #SterliteProtest #Velmuruganfasting

    சென்னை:

    கடந்த மாதம் 1-ந்தேதி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் வேல்முருகன் நேற்று காலை புழல் சிறையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு உண்மை நிலையை கண்டு அறிய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து சாப்பிட மறுத்த வேல்முருகன் இன்று 2-வது நாளாக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.


    அவரது கோரிக்கைகளுக்கு ஆதரவாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள், புரட்சிகர இளைஞர்கள் முன்னணி, தமிழ் தேசிய மக்கள் இயக்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்களும் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

    ஏற்கனவே வேல்முருகன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், இப்போது 3 இயக்கங்களை சேர்ந்த மேலும் 22 பேர் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர். வேல்முருகனுடன் மொத்தம் 23 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

    வேல்முருகன் இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருப்பதால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது. புழல் சிறையில் 23 பேர் உண்ணாவிரதம் இருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Thoothukudifiring #bansterlite #SterliteProtest #Velmuruganfasting

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தேவையில்லாமல் நடந்துள்ளது என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். #SterliteProtest #BanSterlite #Amitshah

    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

    தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாரதிய ஜனதாவும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை விமர்சித்து இருந்தது.

    இது சம்பந்தமாக பாரதிய ஜனதா தலைவர்கள் சிலர் கூறும் போது, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சட்டம்- ஒழுங்கு பிரச்சினை தொழில் முதலீட்டுக்கு எதிராக அமைந்துள்ளது என்று கூறி இருந்தனர்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கூறினார். நான் 18 மாதங்களுக்கு முன்பு இது சம்பந்தமாக எச்சரித்து இருந்தேன். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்காது என்று அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் அகில இந்திய தலைவர் அமித்ஷாவும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தனது கவலையை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-


    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழக அரசு விளக்கங்களை மத்திய உள்துறைக்கு அனுப்பி உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சில விளக்கங்களை கேட்டு இருக்கிறார். விளக்கங்களை எதிர்பார்த்து மத்திய அரசு காத்து இருக்கிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு சம்பவத்தை கையாண்ட முறை சரியில்லை. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதை தவிர்த்து இருக்கலாம். தேவை இல்லாமல் இது நடந்திருக்கிறது.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    அமித்ஷாவே துப்பாக்கி சூடு சம்பவத்தை சுட்டிக் காட்டி தமிழக அரசை விமர்சித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அ.தி.மு.க. தலைமை பாரதிய ஜனதாவுக்கும், மத்திய அரசுக்கும் ஏவல் ஆட்களாக இருக்கிறார்கள் என்று அடிக்கடி கூறி வருகிறார்.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா தமிழக அரசை விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #SterliteProtest #BanSterlite #Amitshah

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 3 பேரை நேற்று கைது செய்த டவுன் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். #SterliteProtest #BanSterlite

    சேலம்:

    சேலம் தலைமை தபால் நிலையம் அருகே கடந்த 26-ந் தேதி மார்க்சிஸ்டு லெனினிஸ்டு மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கையில் வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் படங்கள் இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசார் அவர்களிடம் இருந்து அந்த பிளக்ஸ் பேனரை பிடுங்க முயன்றனர்.

    அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் மணிமாறன், செல்வக்குமார், மூர்த்தி ஆகிய 3 பேரை நேற்று கைது செய்த டவுன் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.#SterliteProtest #BanSterlite

    தூத்துக்குடி போராட்டக்காரர்களுக்கு பிஸ்கட், குடிநீர் கொடுக்க சென்ற என்னை போலீசார் சுட்டனர் என்று காயமடைந்த பட்டதாரி வாலிபர் கூறினார்.#sterliteprotest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த தூத்துக்குடியை சேர்ந்த சந்தோஷ்ராஜ் கூறியதாவது:-

    நான் பி.காம். படித்துள்ளேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக நான் உள்பட எனது கல்லூரி நண்பர்கள் என 200 பேர் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு குடிநீர், பிஸ்கட் இலவசமாக வழங்க முடிவு செய்தோம்.

    அதன்படி அன்று நாங்கள் 50 மூட்டை தண்ணீர் பாக்கெட், பிஸ்கட்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றோம். ஆனால் அங்கு கலவரம் வெடித்ததால் நாங்கள் தப்பி ஓடினோம். அப்போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் என் மீது குண்டு பாய்ந்து காயம் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டோ டிரைவர் மரியசெல்வன் மனைவி பொன்மாரி கூறியதாவது:-

    கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் அருகே நாங்கள் ஆட்டோவில் வந்துகொண்டு இருந்தோம். அப்போது, போலீசார் ஆட்டோவை வழிமறித்து என்னை தாக்க முயன்றனர். இதை எனது கணவர் தடுத்ததால் அவரை போலீசார் தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    போலீசார் மக்களை தீவிரவாதி என்று கூறுகிறார்கள். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாகனத்திற்கு போலீசாரே தீவைத்து, கேமராக்களையும் உடைத்து உள்ளனர். பழியை எங்கள் மீது போடுகிறார்கள். பொதுமக்கள் யாரும் வாகனத்தை சேதப்படுத்தவில்லை. மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த போலீசார் கடுமையாக போராடியவர்களை குறிபார்த்து சுட்டனர். எனவே அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். போலீசார் தான் தீவிரவாதிகள் போல் செயல்பட்டுள்ளனர். கலவரத்தின்போது, காணாமல்போனவர்களை கணக்கெடுத்து மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். வீடு வீடாக சென்று கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்த எபுலின் விக்டோரியா (43) கூறுகையில், ‘நான் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்தபோது போலீசார் துப்பாக்கியால் என்னை சுட்டனர். எனது இடது கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மறுபக்கம் வெளியேறியது. அந்த குண்டு எனது அருகில் நின்ற இளம்பெண்ணின் மீது பட்டது. இதில் அவர் இறந்துவிட்டார்.

    போராட்டத்தில் முன்னின்று ஆவேசமாக பேசியவர்களை போலீசார் குறிவைத்து சுட்டனர். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். #sterliteprotest 
    ×