search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியட்நாம்"

    வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. #KimJongUn
    டாங் டாங்:

    வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வந்தது. அதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் கொரிய தீப கற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது.

    அதை தடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது.

    அதை தொடர்ந்து மீண்டும் இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நாளை (27-ந் தேதி) மற்றும் நாளை மறுதினமும் (28-ந் தேதி) சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில் பங்கேற்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பியாங் யாங்கில் இருந்து தனி ரெயில் மூலம் வியட்நாம் தலைநகர் ஹனோய் புறப்பட்டு சென்றார். அவருடன் அதிகாரிகள் குழுவும் சென்றது.

    இந்த நிலையில் அவரது ரெயில் 2½ நாட்களாக 4 ஆயிரம் கி.மீட்டர் (2500 மைல்) பயணம் செய்து இன்று வியட்நாம் எல்லையில் உள்ள டாங் டாங் நகரை வந்தடைந்தது.

    வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    பள்ளிக் குழந்தைகள் வெள்ளை சீருடையுடன் வடகொரியா நாட்டு தேசிய கொடிகளை அசைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். தற்போது அங்கு தங்கியிருக்கும் வடகொரிய அதிபர் கிம் பேச்சுவார்த்தை நடைபெறும் ஹனோஸ் நகருக்கு புறப்பட்டு செல்கிறார்.

    கிம் வருகையையொட்டி டாங் டாங் நகரில் இருந்து ஹனோஸ் வரை 170 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமானப்படை விமானத்தின் மூலம் புறப்பட்டு இன்று மாலை ஹனோஸ் வந்து சேருகிறார். கிம்முடன் ஆன சந்திப்பு குறித்து டிரம்ப் டுவிட்டரில் செய்தி வெளியிட்டார்.

    அதில், “அணு ஆயுதங்களை வடகொரியா முற்றிலும் அளித்துவிட்டால் பொருளாதாரத்தில் முழு நிறைவு பெற்று சக்தி வாய்ந்த நாடாக திகழும். அது கிம் எடுக்கும் புத்திசாலிதனமான முடிவில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

    மற்றொரு டுவிட்டர் செய்தியில் கிம்முடன் ஆன 2-வது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

    டிரம்ப்-கிம் வருகையை யொட்டி வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  #KimJongUn
    வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உடனான இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்துள்ளார். #TrumpKimMeet #NorthKoreanLeader
    வாஷிங்டன்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது.
     
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.

    இதற்கு தீர்வு காண 2-வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரஸ்பரம் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த மாத இறுதியில் வியட்நாமில் நடக்கலாம் எனவும், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் பரவலாக பேசப்பட்டது.



    இந்நிலையில், வடகொரிய தலைவருடனான சந்திப்பு மற்றும் சந்திப்பு நடைபெறும் தேதியை டிரம்ப் உறுதி செய்துள்ளார். பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றிய டிரம்ப், வடகொரியா விஷயத்தில் இன்னும் நிறைய வேலைகள் இருப்பதாகவும், ஆனாலும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் நல்ல நட்புறவு நீடிப்பதாகவும் கூறினார்.

    மேலும், வியட்நாமில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வடகொரிய தலைவரை சந்தித்து பேச உள்ளதாகவும் டிரம்ப் அறிவித்தார். #TrumpKimMeet #NorthKoreanLeader
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. #DonaldTrump #KimJongUn #Vietnam
    டோக்கியோ:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்தது. அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.

    அதோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வார்த்தை யுத்தம் நடந்தது. இருநாடுகளின் மோதல் போக்கு சர்வதேச நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இதற்கிடையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றதை தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் சந்தித்து பேசுவதற்கான சூழல் உருவானது.

    அதன் படி கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதோடு, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என கிம் ஜாங் அன் உறுதிமொழி அளித்தார். அதன்படி தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை வடகொரியா மூடியது.

    எனினும் வடகொரியா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், எந்த நேரத்திலும் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பி விடுவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.

    புத்தாண்டையொட்டி வடகொரிய மக்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் அன், ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றத் தவறினால் வடகொரியா புதிய நடவடிக்கைகளை கையாளும் என எச்சரிக்கை விடுத்தார்.

    அதே சமயம் சர்வதேச சமூகம் வரவேற்கும் வகையில், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கிம் ஜாங் அன் அறிவித்தார்.

    அதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க தான் ஆவலுடன் இருப்பதாகவும், இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

    அதன் படி இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் 2-வது உச்சி மாநாட்டை எங்கு? எப்போது? நடத்துவது என்பது குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தாய்லாந்து அல்லது வியட்நாமில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

    அந்த இருநாட்டு அரசுகளும் இந்த சந்திப்புக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், தங்கள் தரப்பில் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை செய்துதர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தன. அதன் படி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆய்வு குழு தாய்லாந்தின் பாங்காங் மற்றும் வியட்நாமின் ஹனோய் நகரங்களுக்கு சென்று ஆய்வு நடத்தின.

    வடகொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வியட்நாமின் ஹனோய் நகரில் பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தென் கொரிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில் வியட்நாமில் அடுத்த மாதம் (பிப்ரவரி) மத்தியில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யா வடகொரியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக புதிய தகவல் கிடைத்திருக்கிறது. ஜப்பானில் வெளிவரும் தினசரி நாளிதழ் ஒன்றில் இது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

    வியட்நாமில் உச்சி மாநட்டை நடத்தலாம் என்கிற அமெரிக்காவின் திட்டம் குறித்து வடகொரியா தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது பற்றி அமெரிக்கா மற்றும் வடகொரியா தரப்பில் எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, பாதுகாப்பு காரணங்களையொட்டி ஹனோய் நகரத்துக்கு பதிலாக டா நாங் நகரில் இந்த சந்திப்பை நடத்திட வியட்நாம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  #DonaldTrump #KimJongUn #Vietnam
    சீனாவில் பாலின சமநிலையின்மை காரணமாக மணப்பெண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வியட்நாமில் இருந்து சிறுமிகள் கடத்தி வரப்பட்டு திருமணத்திற்காக விற்கப்படுகின்றனர்.
    பெய்ஜிங்:

    சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 50 ஆண்டுகளாக சீன அரசு கடுமையான குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

    இதற்கு பலன் கிடைத்தது. மக்கள்தொகை குறையாவிட்டாலும் கடந்த சில வருடங்களாக பிறப்பு விகிதம் சீராக இருப்பதால் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை. ஆனால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

    பெண்கள் பிறப்பு விகிதம் குறைந்து ஆண்கள் பிறப்பு அதிகரித்துள்ளது. பாலின விகிதாச்சாரம் 100 பெண்களுக்கு 110 ஆண்கள், 120 ஆண்கள் என்று இருக்கிறது. இதனால் இளம் பெண்கள் பற்றாக்குறையில் சீனா தத்தளிக்கிறது. 3 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் மணப்பெண் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இவர்களுக்கு சீனாவில் மணப்பெண்கள் கிடையாது. இதனால் இளைஞர்கள் பலர் வயது அதிகரித்து முதுமை அடைந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் பெண் சிசுக்கொலை தான் என்று தெரிய வந்துள்ளது. மக்கள்தொகையை கட்டுப்படுத்த அரசு சிசுக்கொலையை கண்டு கொள்ளாமல் ஆதரித்தது.

    மேலும் சீனப்பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்வதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு, திருமணத்தை தள்ளி போடுதல் போன்றவையும் ஒரு காரணம்.

    சீனாவில் மணப்பெண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இதனை கவனித்த ஆட்கடத்தல் கும்பல், பிரச்சினையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள வியட்நாமில் இருந்து சிறுமிகளையும், இளம்பெண்களையும் ஆசைவார்த்தை கூறி கடத்தி வந்து, சீனாவில் மணப்பெண்களாக நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.

    கம்போடியா, மியான்மர், லாவோ, நாடுகளில் இருந்தும் இளம்பெண்கள் சீனாவுக்கு கடத்தப்படுகிறார்கள். வியட்நாம்- சீன எல்லையில் பெண்கள் கடத்தல் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. இது சீன அரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. #ChinaMaleFemaleRatio #VietnameseGirlsTrafficked
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒரு வார காலமாக அரசுமுறை பயணமாக வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு செல்கிறார். #RamnathKovind ##Vietnam #Australia
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒருவார கால அரசுமுறை பயணமாக வரும் நவம்பர் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வியட்நாம் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது  பல ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே கையெழுத்தாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    நவம்பர் 21ம் தேதி வியட்நாமில் இருந்து புறப்படும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆஸ்திரேலியா செல்கிறார். அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசனை சந்திக்கிறார்.

    மேலும், மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு பாராமட்டா பகுதியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழாவில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார் என தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. #RamnathKovind ##Vietnam #Australia
    வியட்நாம் நாட்டின் புதிய அதிபராக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான குயேன் பு டிராங் இன்று பதவி ஏற்றார். #NguyenPhuTrong #Vietnampresident
    ஹனோய்:

    தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் தெற்கு சீனக் கடல் பகுதியின் அருகாமையில் அமைந்துள்ள அழகிய நாடு வியட்நாம். இந்த நாட்டின் ஆட்சி முறையில் ஒருநபர் அதிகாரம் என்பது கிடையாது.

    அதிபர், பிரதமர், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என இந்த நான்கு தரப்பினரின் கைகளிலும் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது.

    வியட்நாம் நாட்டின் அதிபராக பதவி வகித்த டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் காலமானார். இதைதொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களால் இன்று தேர்வு செய்யப்பட்ட ந்குயேன் ஃபு டிராங்(74) வியட்நாம் புதிய அதிபராக பதவி ஏற்று கொண்டார்.

    கம்யூனிச சித்தாந்தத்தில் அதிக பிடிப்புள்ள ந்குயேன் ஃபு டிராங், கடந்த 1997-ம் ஆண்டில் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரானார். 2011-ம் ஆண்டில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2016-ம் ஆண்டில் அவரது பதவிக்காலம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

    வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரும் முன்னாள் அதிபருமான ஹோ சி மின்ஹ் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும், அதிபர் பதவியையும் ஒருசேர வகிப்பவர் ந்குயேன் ஃபு டிராங் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. #NguyenPhuTrong #Vietnampresident
    வியட்நாம் நாட்டின் அதிபரான ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் இன்று காலை மரணமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Vietnam #PresidentTranDaiQuang #RIPTranDaiQuang
    ஹனோய்:

    வியட்நாம் நாட்டின் ராணுவ மருத்துவமனையில் தீவிர உடல்நலக்குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அந்நாட்டின் அதிபர் ட்ரான் டாய் குவாங். இவர் தனது உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் வியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 வயதான அதிபர் ட்ரான் டாய் குவாங் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் வியட்நாமின் அதிபராக பதவிவகித்து வந்தார்.

    வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ட்ரான் டாய் குவாங், சட்டப்படிப்பில் பி.எச்.டி பட்டம் பெற்றவர் ஆவார்.

    இவர் கடந்த 2006 முதல் 2011 வரை மக்கள் பாதுகாப்புத்துறையின் துணை மந்திரியாகவும், பின்னர் 2011 முதல் 2016 வரை அதே துறையில் மந்திரியாகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Vietnam #PresidentTranDaiQuang #RIPTranDaiQuang
    அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நிகுயென் சுவான் புக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #NguyenXuanPhuc #Vietnam
    ஹனாய்:

    ஆசியான் அமைப்பில் நேசநாடுகளில் ஒன்றாக வியட்நாம் உள்ளது. வியட்நாமின் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வியட்நாம் சென்றுள்ளார். வியட்நாமை தொடர்ந்து 29-ம் தேதி (நாளை) கம்போடியாவுக்கு செல்ல உள்ளார்.

    இந்நிலையில், இன்று வியட்நாம் பிரதமர் நிகுயென் சுவான் புக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வியட்நாம் பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோருக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. #SushmaSwaraj #NguyenXuanPhuc #Vietnam
    கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரும் 27 முதல் 30-ம் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #Sushma #Vietnamvisit #Cambodiavisit
    புதுடெல்லி:

    ஆசியான் அமைப்பில் உள்ள நேசநாடான வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வரும் 27-ம் தேதி வியட்நாம் நாட்டுக்கு பயணமாகிறார்.

    இந்த பயணத்தின்போது,  இருநாட்கள்  வியட்நாமில் தங்கியிருக்கும் சுஷ்மா, இந்திய பெருங்கடல்சார்ந்த மாநாட்டின் மூன்றாவது அமர்வை தொடங்கி வைக்கிறார். வியட்நாம் பிரதமர்  நுகுயென் க்சுவான் ஃபுக்-ஐயும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    அங்கிருந்து 29-ம் தேதி கம்போடியா நாட்டுக்கு செல்லும் அவர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிராக் சோக்ஹான், கம்போடியா பிரதமர் ஹூன் சென் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சேய் சும் ஆகியோரை சந்தித்து இந்தியா - கம்போடியா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #Sushma #Vietnamvisit  #Cambodiavisit
    இந்தியா மற்றும் வியட்நாம் ராணுவம் இணைந்து முதல்முறையாக மெற்கொள்ள இருக்கும் கூட்டுப்பயிற்சியில் மூன்று இந்திய போர் கப்பல்கள் பங்கேற்கின்றன. #IndoVietnam #navalexercise

    புதுடெல்லி: 

    இந்திய கடற்படை முதல் முறையாக வியட்நாமுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. அதற்காக ஐ.என்.எஸ். சஹாயத்ரி, ஐ.என்.எஸ். கமோர்டா மற்றும் எண்ணெய் கப்பலான ஐ.என்.எஸ். சக்தி ஆகியவை வியட்நாமின் டீன் சா துறைமுகத்துக்கு சென்றுள்ளன. இன்று (21-ம் தேதி) முதல் 25ம் தேதி வரை வியட்நாம் கடற்படையுடன் இணைந்து இக்கப்பல்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றன. 

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் வியட்நாம் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என கூறப்படுகிறது. 



    அதைத்தொடர்ந்து வியட்நாம் தரைப்படை மற்றும் கடற்படை தலைவர்கள் இந்தியா வர உள்ளனர். தெற்கு சீன கடல் பகுதியை சீனா உரிமை கொண்டாடுவதற்கு வியட்நாம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்நாட்டுடன், இந்தியா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #IndoVietnam #navalexercise
    ×