search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுவார்த்தை"

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியமைக்க காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் இழுபறி நீடிப்பதால், 8 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவற்கு சச்சின் பைலட் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. #Results2018 #RajasthanElections2018 #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், பாஜக ஆளும் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

    ஆனால், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆனாலும் மெஜாரிட்டியை நெருங்கவில்லை. பாஜகவும் காங்கிரசை நெருங்கி வருவதால் இழுபறி நீடிக்கிறது. ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 100 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி மதியம் வரை 93 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

    எனவே, மெஜாரிட்டியை உறுதி செய்வதற்காக 8 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவை பெற காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக சச்சின் பைலட் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    ராஜஸ்தான் மாநில தேர்தல் வெற்றி குறித்து சச்சின் பைலட் கூறுகையில், “ராஜஸ்தான் மக்கள் எங்களுக்கு ஆசி வழங்கி உள்ளனர். பாஜகவின் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக வாக்களித்துள்ளனர். பெரும்பாலான பாஜக எம்எல்ஏக்கள் பின்தங்கி உள்ளனர். எனவே, ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை நிச்சயம் பெறுவோம். ஆனாலும், பாஜகவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகளை வரவேற்கிறோம். அவர்கள் எங்களுடன் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர்” என்றார். #Results2018 #RajasthanElections2018 #SachinPilot
    இரு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவ பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். #ImranKhan #PMModi #KashmirIssue
    இஸ்லாமாபாத்: 

    பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் இம்ரான்கான். இஸ்லாமாபாத்தில் இவர் இந்திய செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவுடன் அமைதி நிலவுவதையே பாகிஸ்தான் மக்கள் விரும்புகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினால் நான் மகிழ்ச்சி அடைவேன். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன். இதற்காக மக்களின் மனநிலை மாற வேண்டும்.



    வெளிநாடுகளில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகளை பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்த அனுமதிப்பது எங்களின் நோக்கம் கிடையாது.

    காஷ்மீர் விவகாரம் தீர்க்க கூடிய பிரச்னைதான். முயன்றால் முடியாதது என எதுவும் கிடையாது. காஷ்மீர் பிரச்னைக்கு ராணுவ ரீதியிலான தீர்வு ஏற்படாது. இந்தியாவுடனான எந்த பிரச்சனை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்.

    இந்தியாவில் பொதுத்தேர்தல் முடியும் வரை அமைதி பேச்சுவார்த்தைக்காக காத்திருக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார். #ImranKhan #PMModi #KashmirIssue
    ஆப்கானிஸ்தான் தொடர்பாக ரஷியா நடத்திய கூட்டத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பங்கேற்றாலும், தலீபான்களுடன் இந்தியா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #India #Taliban #FederalGovernment
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. ஆனால் தொடர்ந்து 18 ஆண்டுகளாக அங்கு உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. பல பகுதிகள் இன்னும் தலீபான்கள் ஆதிக்கத்தின்கீழ்தான் உள்ளன. அவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதால் அந்த நாட்டின் மறுசீரமைப்பு பணிகள் பாதித்து உள்ளன. இந்தநிலையில் மாஸ்கோவில் ஒரு கூட்டம் நடத்தி, அதில் தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை ரஷியா வெளியிட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் பல நாடுகள் தயக்கம் காட்டின. அமெரிக்காவும், ஆப்கானிஸ்தான் அரசும் இதில் பங்கேற்க மறுத்து விட்டன.

    இருப்பினும் மாஸ்கோவில் இந்த கூட்டம் நேற்று நடந்தது. ஈரான், சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகளுடன் தலீபான்களும், ஆப்கானிஸ்தான் உயர் அமைதி கவுன்சில் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்தியாவும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கலந்து கொண்டது. இந்தியாவின் சார்பில் ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் தூதர் அமர்சின்காவும், பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதர் டி.சி.ஏ.ராகவனும் கலந்து கொண்டனர். இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த கூட்டத்தில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் பேசும்போது, “ஆப்கானிஸ்தான் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவதில், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என கூறினார்.

    ரஷிய கூட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பு தொடர்பாக மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தலீபான்களுடன் இந்தியா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    ரஷிய கூட்டத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில் கலந்து கொள்வது என்பது மத்திய அரசு எடுத்த முடிவு ஆகும். இந்த அளவில் பங்கேற்பதற்கு எதற்காக முடிவு செய்யப்பட்டது என்பது குறித்த விளக்கத்திற்குள் நான் உண்மையிலேயே செல்ல முடியாது.

    தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக நாங்கள் எங்கே கூறினோம்? நாங்கள் அவ்வாறு சொல்லவே இல்லை. ரஷியா நடத்துகிற ஒரு கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று மட்டுமே சொன்னோம். அதிகாரபூர்வமற்ற முறையில் அதில் கலந்து கொள்வது என முடிவு எடுத்திருக்கிறோம் என்றுதான் சொன்னோம்.

    ஒரு முடிவு எடுப்பதில் நிறைய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இந்த முறை, அந்த கூட்டத்தில் நாம் பங்கேற்பது என்பது மத்திய அரசு பரிசீலித்து எடுத்த முடிவு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் சிறப்பு தூதரும், மூத்த தலைவருமான கிம் யாங் சோலுடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #NorthKorea #MikePompeo #KimYongChol
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப் பேசினர்.

    இந்த சந்திப்பின்போது இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க இரு தரப்பிலும் உழைப்பது என உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து பகைவர்களாக இருந்து வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் இடையே இணக்கமான நல்லுறவு மலர்ந்தது. ஆனால் அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா குறிப்பிடத்தக்க அளவில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ளாத நிலையில், மீண்டும் அணு ஆயுதங்கள் தயாரிக்கிற நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்தது.

    இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நியூயார்க் நகரில் கிம் ஜாங் அன்னின் சிறப்பு தூதரும், மூத்த தலைவருமான கிம் யாங் சோலுடன் இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டு விட்டது.

    இதுபற்றி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த சந்திப்பு மற்றொரு நாளில் நடைபெறும்” என கூறப்பட்டுள்ளது.

    இன்று நடக்கவிருந்த சந்திப்பு ரத்தானதின் காரணம் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. 
    அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். #NorthKorea #MikePompeo
    வாஷிங்டன்:

    சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.



    கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதி உள்ளார்.

    இந்த நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை எப்படி நிறைவேற்றிக்காட்டுவது என்பது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என கூறினார்.

    இதற்கு இடையே வடகொரியா மீது ஏற்கனவே விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக உள்ள நாடுகள் பற்றி விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை நாளை (திங்கட்கிழமை) கூட்டவேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்து உள்ளது.  #NorthKorea #MikePompeo
    பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கானுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எதுவும் கூறவில்லை என்று மத்திய அரசு மறுத்து உள்ளது. #ImranKhan #NarendraModi
    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது.

    தேர்தலுக்கு பின் சிறு சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 18-ந் தேதி பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார்.

    இதுபற்றி நேற்று முன்தினம் பாகிஸ்தானின் புதிய வெளியுறவு மந்திரி மஹ்மூத் ஷா குரேசி கூறுகையில், “பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.

    பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இவ்வாறு கூறிய நிலையில் மத்திய அரசு இதை நேற்று மறுத்தது. மேலும் இம்ரான்கானுக்கு, பிரதமர் மோடி எழுதிய வாழ்த்து கடிதத்தை முழுமையாகவும் வெளியிட்டது.

    அந்த வாழ்த்து கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், “அண்டை நாடான பாகிஸ்தானுடன் அமைதியான முறையில் உறவை பராமரிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. மேலும் ஆக்கப்பூர்வமாகவும், அர்த்தமுள்ள விதமாகவும் இணைந்து செயல்படுவதை பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா எதிர்பார்க்கிறது. அதேநேரம், தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத செயல்கள் இல்லாத நிலையை உறுதிப்படுத்துவதும் அவசியம் ஆகும்” என்று தெரிவித்து உள்ளார்.

    பிரதமர் மோடியின் கடிதத்தில் எந்த இடத்திலும் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை என்ற சொல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  #ImranKhan #NarendraModi
    ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் எங்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தலீபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Afghanistan #Taliban
    காபூல்:

    அமெரிக்காவில் ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001-ம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்தனர்.

    உடனே தலீபான்களுக்கு புகலிடம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து, தலீபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் மூண்டது. தொடர்ந்து 18-வது ஆண்டாக அது நீடிக்கிறது.

    சமீபத்தில் கஜினி நகரை பிடிப்பதற்காக தலீபான்கள் கடுமையாக சண்டையிட்டனர். இந்த சண்டையில் ஆப்கானிஸ்தான் படையினர் 100 பேரும், அப்பாவி பொதுமக்கள் 35 பேரும் பலியாகினர்.

    இந்த நிலையில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி தலீபான்கள் தலைவர் மவுலவி ஹைபதுல்லா அகுன்ஜதா வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இருக்கிற வரையில் அமைதிக்கு வழி இல்லை. அமைதி திரும்ப வேண்டும் என்றால் எங்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என கூறி உள்ளார்.  #Afghanistan #Taliban
    வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து இந்திய வங்கிகள் சங்கம், அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினரும் இன்று மும்பையில் மீண்டும் சந்தித்து சம்பள உயர்வு தொடர்பாக விவாதிக்கின்றனர். #BankUnion #WageHike
    மும்பை:

    இந்தியாவில் உள்ள பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்திய வங்கிகள் சங்கம் சம்பள நிர்ணயம் செய்கிறது. வங்கி ஊழியர்களின் 2-ம் கட்டத்துக்குரிய சம்பளத்தை நிர்ணயிக்க பேச்சுவார்த்தை கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. ஆனால் வங்கிகள் சங்கம் 2 சதவீத அளவிற்கே ஊதிய உயர்வு அளிக்க முடியும் என்று கூறியது. இதனால் அதிருப்தி அடைந்த வங்கி ஊழியர்கள் மே மாத இறுதியில் நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கம், அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினரும் இன்று (திங்கட்கிழமை) மும்பையில் மீண்டும் சந்தித்து சம்பள உயர்வு தொடர்பாக விவாதிக்கின்றனர். இதுபற்றி ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் மராட்டிய மாநில அமைப்பாளர் தேவிதாஸ் கூறுகையில், “எங்களது கோரிக்கை 25 சதவீத ஊதிய உயர்வு. என்றபோதிலும் எங்கள் நிலையில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கிறோம். இதுவரை சம்பள உயர்வு இரட்டை இலக்க சதவீதத்தில்தான் வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கையில் வங்கிகள் நிர்வாகம் 2 சதவீதம்தான் தர முடியும் என்று கூறுவதை ஏற்க இயலாது” என்றார்.  #BankUnion #WageHike #tamilnews 
    மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வரும்படி ரஷிய அதிபர் புதினுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். #Trump #Putin #Meeting
    வாஷிங்டன்:

    பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து பேசினர். அதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

    அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இல்லை என்று பொருள் தரும் வகையில் டிரம்ப் பதில் அளித்தார். இது அமெரிக்காவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    இதை தொடர்ந்து அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டு “ஒரு வார்த்தை மாறிவிட்டது” என்றார். அமெரிக்க தேர்தலில் தலையிட்டது வேறு யாராவது கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

    இந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வரும்படி புதினுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

    அதில், ரஷியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மக்களின் உண்மையான எதிரிகளை தவிர, போலி செய்தி வெளியிடும் பத்திரிகைகளை தவிர, மற்றவர்களுக்கு அந்த பேச்சுவார்த்தை பெரும் வெற்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.

    2-வது பேச்சு வார்த்தையில் பயங்கரவாதத்தை நிறுத்துவது, இஸ்ரேலுக்கு பாதுகாப்பு, அணுஆயுதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



    இதற்கிடையே டிரம்பின் இந்த அறிவிப்புக்கு எதிர் கட்சியான ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் சக் ஷூம்மர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    ஹெல்சின்கியில் நடந்த 2 மணி நேர சந்திப்பில் என்ன நடந்தது என்பதை பற்றி நாம் அறியும் முன்பாக புதினும், டிரம்பும் சந்தித்து பேசக்கூடாது என்றார். டிரம்புக்கு அமெரிக்காவின் தேசிய உளவுப்பிரிவு இயக்குனர் பான் கோட்சு ஆதரவு தெரிவித்துள்ளார். #Trump #Putin #Meeting
    பின்லாந்து நாட்டில் நாளை ரஷிய அதிபர் புதினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #TrumpPutinmeeting #lowexpectations #Helsinkimeeting
    லண்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

     இந்தநிலையில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷியாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதன் விளைவாக 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் ஜூலை 16-ம் தேதி (நாளை) இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

    முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பின்னர், டிரம்ப்பும் புதினும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து, கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், தற்போது பிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நாளை பின்லாந்து நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பெரிய எதிர்பார்ப்புகளுடன் நான் போகவில்லை. குறைந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை புதினை சந்திக்கச் செல்கிறேன் என தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் தொணியில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று பேட்டியளித்துள்ளார்.

    அவரது ஆர்வமின்மையை பார்க்கும்போது, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னுடன் சிங்கப்பூரில் நடத்திய பேச்சுவார்த்தைபோல், ஹெல்சின்கியில் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையும் பெரிய பலன்களை அளிக்காமல் போகலாம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். #TrumpPutinmeeting #lowexpectations #Helsinkimeeting 
    சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் நிறைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument
    சிங்கப்பூர்:

    அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தன. இதற்காக சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி அமெரிக்க அதிபர், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டது.

    எனினும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நீடித்தது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சந்திப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்படி சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு நடந்தது. உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

    இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாகவும், மிகப்பெரிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல் கிம் ஜாங் அன்னும் சாதகமான கருத்தையே கூறினார்.



    அதன்பின்னர், இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், அமைதி மற்றும் நட்புறவு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒப்பந்தமாக இருக்கலாம் என தெரிகிறது.  #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument

    சிங்கப்பூரின் சென்டோசா தீவில் இன்று நடைபெற இருக்கும் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து உள்ளார். #Singaporesummit #DonaldTrump
    சிங்கப்பூர்:

    அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் நீண்ட காலமாக இருந்து வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கான காலம் கனிந்து இருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா நட்சத்திர ஓட்டலில் உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு (இந்திய நேரம் காலை 6.30 மணி) சந்தித்து பேச்சுவார்தை நடத்துகிறார்கள். இதற்காக இரு தலைவர்களும் நேற்று முன்தினம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தனர்.



    வரலாற்று சிறப்புமிக்க இந்த பேச்சுவார்த்தையை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. இன்று நடைபெற இருக்கும் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கருதுவதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

    பேச்சுவார்த்தை முடிந்து, டிரம்ப் இன்று அமெரிக்கா திரும்புகிறார். ஒரு நாள் முன்னதாக உள்ளூர் நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு அவர் சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா திரும்புவதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. 
    ×