search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதாரம்"

    பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளிக்க முடியாது. பாகிஸ்தானின் தொடர்பை அம்பலப்படுத்துவதே எங்களது முக்கிய நோக்கம் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றுக் கொண்டது. இருப்பினும், அதுதொடர்பான ஆதாரங்களை இந்தியா அளித்தால், சதிகாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார்.

    இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசில் நிலவும் எண்ணத்தை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

    2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்தது. ஆனால், குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பதன்கோட் விமான தளத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக நேரில் வந்து ஆய்வு நடத்த பாகிஸ்தான் விசாரணை குழுவை அனுமதித்தோம். ஆனால், தங்கள் நாட்டுக்கு திரும்பிய பாகிஸ்தான் குழு, இந்தியா ஆதாரம் அளிக்க தவறி விட்டதாக கூறியது.

    பாகிஸ்தான் இத்தகைய முறையில் நடந்து கொள்ளும்போது, அதனிடம் ஆதாரங்களை அளிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, ஆதாரம் அளிப்பது பற்றிய கேள்விக்கே இடமில்லை.

    அதற்கு பதிலாக, எங்கள் நட்பு நாடுகளிடம் அந்த ஆதாரங்களை அளித்து, பாகிஸ்தானின் முகமூடியை கிழித்து எறிவோம். புலவாமா தாக்குதல் உள்பட இந்திய மண்ணில் நடந்த பயங்கரவாத சம்பவங்களில் பாகிஸ்தானின் தொடர்பை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதே எங்களது முக்கிய பணி ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஷ்மீரில் துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலால் இரு நாட்டு உறவு மேலும் சீர்குலைந்துள்ளது. இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்ப அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றன. மேலும் இந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கப்படும் என இந்திய தலைவர்களும், பாதுகாப்பு படையினரும் சூளுரைத்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

    இதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் கவலை வெளியிட்டு உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறியுள்ளார். காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அங்கு நிலவி வரும் பதற்றத்தை குறைக்க உடனடி நடவடிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொள்ளுமாறும் குட்டரஸ் கூறியதாக ஸ்டீபன் தெரிவித்தார்.

    முன்னதாக காஷ்மீர் தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கூறியதாவது:-

    மும்பை தாக்குதல், பதன்கோட் தாக்குதல் தொடர்பாக இந்தியா ஆதாரங்கள் அளித்தும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. இருப்பினும், இம்ரான் கான் புதியவர் என்பதால், அவர் எப்படி செயல்படுகிறார் என்று பார்ப்பதற்காக அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆதாரங்களை அவரிடம் அளிக்க வேண்டும்.

    போர் மூள்வது இரு நாடுகளுக்கும் நல்லதல்ல. பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தரலாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #KodanadVideo #Stalin #OPS
    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரை சந்தித்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை வைக்க உள்ளார்.



    இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், அரசியலில் தங்களை நேரடியாக எதிர்க்க முடியாத சக்தியற்ற எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதாக கூறினார்.

    “கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தரலாம். ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஓபிஎஸ் எச்சரித்தார்.

    தேர்தல் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ், அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம் என்றும், கூட்டணி தொடர்பாக விரைவில் நல்லது நடக்கும் என்றும் கூறினார். #KodanadVideo #Stalin #OPS
    மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் கைது விவகாரத்தில் முக்கிய ஆதாரமான கடிதத்தை எப்படி பத்திரிகையாளர்கள் முன் படித்து காட்டி பகிரங்கப்படுத்தலாம் என போலீசாருக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. #BombayHC #MaharashtraPolice
    மும்பை:

    பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் 5 மாவோயிஸ்டு ஆதரவாளர்களை கைது செய்தனர். இதில் மும்பையை சேர்ந்த வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோரும் அடங்குவார்.

    இடதுசாரி சிந்தனையாளர்களான இவர்களின் எதிர்ப்பு குரலை ஒடுக்கும் நோக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதாக போலீசார் கூறினர்.

    இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை புனேயில் பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பரம்வீர் சிங், புனே மாவட்டம் பீமா-கோரேகாவ் வன்முறையில் கடந்த ஜூன் மாதம் கைதானவர்களும், தற்போது கைதான மாவோயிஸ்டு ஆதரவாளர்களும் தகவல் பரிமாறிக்கொண்ட கடிதத்தை படித்து காட்டினார்.

    இதற்கிடையே புனே போலீசார் இந்த வழக்கை நியாயமற்ற, தீய எண்ணத்துடன் விசாரித்து வருவதாக கூறி சதீஷ் கெய்க்வாட் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மிருதுலா பாத்கர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் கடிதத்தை பத்திரிகையாளர்கள் முன்னால் போலீசார் படித்து காட்டி பகிரங்கப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருக்கும் நிலையில், போலீசார் எவ்வாறு இப்படி செய்யலாம்? இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் வழக்கு தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவது தவறானது என தெரிவித்தனர்.

    பின்னர் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 7-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 
    உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டில் கழிவறை இருப்பதை நிரூபிக்காவிட்டால் மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Sitapur #submittoiletproof
    லக்னோ:

    இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் மின்வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றை சீர்திருத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. குறிப்பாக திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களை உருவாக்க அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டில் கழிவறை கட்டியதற்கான ஆதாரத்தையும், அந்த கழிவறை அருகே நின்றபடி புகைப்படம் ஒன்றையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



    அவ்வாறு அதிகாரிகள் சமர்ப்பிக்க மறுத்தால், மே மாதத்துக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Sitapur #submittoiletproof
    ×