search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125752"

    கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஆலப்புழா, குட்டநாட்டில் 6 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இவர்களை மீட்டு வர கடற்படையின் உதவியை கோர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #heavyrain #Keralarain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    ஆலப்புழா, குட்டநாடு, கோட்டயம் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. மலை கிராமங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் வசித்த மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

    ஆலப்புழா- சங்கனாச்சேரி இடையிலான சாலை வெள்ளத்தில் மூழ்கியது. கடந்த 7 நாட்களாக இச்சாலையில் போக்குவரத்து நடைபெறவில்லை.

    ஆலப்புழா மற்றும் குட்டநாடு பகுதியில் மட்டும் சுமார் 6 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலான வீடுகள் மழையால் சேதம் அடைந்து இடிந்து விட்டது. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    ரேசன் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் மழையால் சேதமாகி விட்டது. நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு உணவு விநியோகமும் தடைபட்டு உள்ளது.

    கோட்டயம் பகுதியில் மழை வெள்ளத்தில் மூழ்கிய வீட்டை படத்தில் காணலாம்

    ஆலப்புழா, குட்டநாடு, கோட்டயம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மாநில வருவாய்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். மந்திரிகளும் அங்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.

    இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்டு வர கடற்படையின் உதவியை கோர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு இதனை தெரிவித்து கடற்படை வீரர்களை நிவாரண பணிக்கு அழைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். #heavyrain #Keralarain
    மவுலிவாக்கம் சம்பவம் நடந்த பின்னரும், அடையாறு ஆற்றங்கரையோரம் அடுக்குமாடி குடியிருப்பை கட்ட அனுமதி வழங்குவதா? என்று அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை, அனகாபுத்தூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியதை எதிர்த்து ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் வி.டி.பாலாஜி ஆஜராகி வாதிட்டார். விசாரணையின்போது, சைதாப்பேட்டை, அடையாறு ஆற்றங்கரை அருகில் தனியார் கட்டுமான நிறுவனம் 11 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தை கட்டி வருவதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கில் அந்த தனியார் நிறுவனத்தை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்தனர். பின்னர், இந்த நிறுவனம் கட்டி வரும் அடுக்குமாடி கட்டிடத்துக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,) பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கட்டுமான நிறுவனமும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.எம்.டி.ஏ. சார்பில் ஆஜரான வக்கீல் திருவேங்கடம், ‘அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் நிலம் பட்டா நிலம். அந்த நிறுவனத்திடம் 1903-ம் ஆண்டு இந்த நிலத்துக்குரிய ஆவணங்கள் எல்லாம் உள்ளன. எல்லா துறைகளிடமும் முறையான அனுமதியை பெற்ற பின்னரே, சி.எம்.டி.ஏ. கட்டிட திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை’ என்று கூறினார்.

    பொதுப்பணித்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளடர் உதயகுமாரும், இதேபோல வாதிட்டார்.

    அப்போது அதிகாரிகள் சார்பில், அந்த அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும் இடம், அந்த கட்டிடம் குறித்த புகைப்படங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புகைப்படத்தை பார்த்த நீதிபதிகள், ‘அடையாறு ஆற்றங்கரைக்கு மிக அருகில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை கட்ட எப்படி அனுமதி வழங்கப்பட்டது? அந்த ஆற்றின் அகலம் எவ்வளவு?. மவுலிவாக்கம் சம்பவம் நடந்த பின்னரும், இதுபோன்ற அனுமதி எப்படி வழங்கப்பட்டது?’ என்று சரமாரியாக அரசு வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினர்.

    மேலும், இந்த புகைப்படத்தை நிபுணர்கள் பார்க்க வேண்டாம். சாதாரண மனிதர்களிடம் காட்டுங்கள். அவர் கள் இதில் விதிமீறல் இல்லை என்று கூறட்டும் என்று கூறி, அந்த புகைப்படத்தை கோர்ட்டில் இருந்தவர்கள் எல்லாரும் பார்க்கட்டும் என்று கூறி வழங்கினார்கள்.

    இதன்பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-

    முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்காதீர்கள். தமிழ்நாட்டில் தான் அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகளை எல்லாம் விருப்பம் போல ஆக்கிரமிக்க முடியும். பணம் இருந்தால் போதும் எதுவேண்டுமானாலும் இங்கு செய்யலாம் எனற நிலை உள்ளது.

    அடையாறு ஆற்றின் அகலம் என்ன? இந்த விவரம் கூட இல்லாமல், அரசு அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர்.

    எங்களை பொறுத்தவரை யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இன்னொரு மவுலிவாக்கம் சம்பவம் நடக்கக்கூடாது என்பதுதான் எங்களது நோக்கம்.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்த அதிகாரிகளுக்கு பாடத்தை தரவில்லையா?, ஆற்றங்கரையோரம் எப்படி அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்குகிறீர்கள்?

    இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் இடத்தில், மண் பரிசோதனை செய்யப்பட்டதா?, அவ்வாறு பரிசோதனை செய்திருந்தால், அந்த அறிக்கையை எங்கே?’ என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பதில் சொல்ல வில்லை.

    இதையடுத்து, ‘இந்த வழக்கில் கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் மற்றும் சென்னை நதிகள் மீட்பு அறக்கட்டளையின் அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்கள் அனைத்து ஆவணங்களுடன் நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராக வேண்டும்’ என்று கூறி விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #tamilnews
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒழுங்காக பணியாற்றாத அரசு ஊழியர்களை 50 வயதில் கட்டாய ஓய்வு அளிக்க உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. #UPGovt
    லக்னோ:

    அரசு அதிகாரிகள் முறையாக பணியாற்றுவது இல்லை என்பது அனைத்து தரப்பினரும் சொல்லும் பொதுவான குற்றச்சாட்டு ஆகும். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் 31-ம் தேதியில் இருந்து இந்த வயது வரம்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், முறையாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்டம் 1986-ம் ஆண்டு முதல் நடப்பில் இருந்து வருவதாகவும், ஆனால் பல்வேறு அரசு அலுவலகங்களில் இது பின்பற்றப்படவில்லை எனவும், இனி வரும் காலங்களில் இந்த சட்டம் தீவிரமாக பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  #UPGovt
    மணல் கடத்தல் கும்பலோடு தொடர்புடைய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையும், சி.பி.சி.ஐ.டியும் விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் ஓடும் வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருடப்பட்டு, அப்பகுதியில் உள்ள அழியா நிலை, கோங்குடி, அத்தாணி, நற்பவளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மணல் சேமிக்கப்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணல் கடத்தல் கும்பலுக்கு மணல் தராத மாட்டுவண்டிக்காரர்கள் குறித்து மணல் கடத்தல் கும்பல் வருவாய்த்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து சிக்க வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் அறந்தாங்கியை சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவர் குறித்தும், அவர் தினசரி பல லாரிகளில் மணல் கடத்துவதாகவும், மணல் கடத்தலை கண்டு கொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அறந்தாங்கி பகுதியில் துண்டு பிரசுரம் ஒன்று வெளியாகி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மேலும் இந்த துண்டு பிரசுரம் குறித்து தகவல் அறிந்த மேல் அதிகாரிகள், துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அதிகாரிகளை போனில் அழைத்து எச்சரித்ததுடன், சட்டவிரோதமாக அறந்தாங்கி பகுதியில் சேமிக்கப்பட்டுள்ள மணலை கைப்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

    மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் உத்தரவின்பேரில், அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா தலைமையில், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் செந்தில் முன்னிலையில் நற்பவளக்குடி, கோங்குடி அத்தாணி உள்ளிட்ட 2 இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த மணலை, அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    அறந்தாங்கியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை காட்டுகிறார்களோ இல்லையோ தினசரி இரவு திருட்டு மணல் பிடிக்க கிளம்பி விடுகின்றனர். அவ்வாறு ரோந்து செல்லும் அதிகாரிகள் பெரிய மணல் கடத்தல் கும்பலை கண்டு கொள்ளாமல், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுபவர்களையும், டிராக்டர் மற்றும் சொந்த தேவைக்காக ஒரு லாரியில் மணல் அள்ளுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து கொண்டு செல்கின்றனர். ஆனால் பெரிய மணல் கடத்தல் கும்பலோடு இணைந்து செயல்பட்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக துண்டு பிரசுரம் வெளிவந்த பின்பு,சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்ட மணலை பறிமுதல் செய்கின்றனர். இத்தனை நாள் இந்த இடங்களில் மணல் குவித்து வைக்கப்பட்டது இந்த அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். எனவே மணல் கடத்தல் கும்பலோடு தொடர்புடைய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையும், சி.பி.சி.ஐ.டியும் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அறந்தாங்கி இயற்கை வளத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு சரியான பாடம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    அறந்தாங்கியில் மணல் கொள்ளை தொடர்பான துண்டு பிரசுரம் வெளியான பின்பு சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இனிமேலும் மணல் கடத்தலை தடுக்க வெளியூர் அதிகாரிகள் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    உத்தரபிரதேசம் மாநிலத்தில் பொதுப்பணித்துறை நிதி ஒதுக்கியும் சாலை போடப்படாததால் தனது இரு மகன்களின் துணையுடன் மாநில மந்திரி சாலைப் பணியாளராக மாறினார். #UPMinisterconstructsroad #Ministerconstructsroad
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநில மந்திரிசபையில் கேபினட் அந்தஸ்துடன் மந்திரியாக பதவி வகிப்பவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரான இவர் வாரனாசி மாவட்டம் பதேபூர் கவுடா கிராமத்தை சேர்ந்தவராவார்.

    மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பரின் மகனுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுகிறது, இந்த திருமண விழாவுக்கு மாநில மந்திரிகள் பலர் வருவார்கள் என்பதால் தனது வீடு இருக்கும் பாதையை முக்கிய சாலையுடன் இணைக்கும் வகையில் தனது வீட்டின் அருகே 500 மீட்டர் தூரத்துக்கு புதிய சாலையை ஏற்படுத்த வேண்டும் என மாநில பொதுப்பணி துறைக்கு இவர் கடிதம் எழுதி இருந்தார்.

    இதற்கு அனுமதி அளித்தும் சாலை போடும் பணிக்காக 16.77 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தும் கடந்த 30-5-2018 அன்று பொதுப்பணி துறை உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், இந்த உத்தரவுக்கு பின்னர் 20 நாட்களாகியும் அங்கு சாலை போட அதிகாரிகள் முன்வராததால் தனது சொந்த செலவில், மகன்கள் அரவிந்த், அருண் ஆகியோரின் துணையுடன் தானே சாலைப் பணியாளராக மாறிய ஓம் பிரகாஷ் ராஜ்பர். சுமார் மூன்று மணிநேர உடல் உழைப்பில் சாலையை போட்டு முடித்து விட்டார்.

    ஒரு மந்திரியால் தனது வீட்டின் அருகே சாலை போட முடியவில்லை என்றால் பொதுமக்களின் நிலைமை என்னவாக இருக்கும்? என்று கேட்கிறார் ஓம் பிரகாஷ் ராஜ்பர். #UPMinisterconstructsroad  #Ministerconstructsroad
    காவேரிப்பட்டணம் அருகே ஆடு மேய்ச்சலுக்காக ரூ.5 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட சிறுவனை மீட்ட அதிகாரிகள் அவனை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 38). விவசாயியான இவர் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த ஆடுகளை 7 வயது சிறுவன் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றான்.இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜேஷ் என்பவர் தேசிய தொழிலாளர் திட்ட இயக்குனர் பிரியாவுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து இயக்குனர் பிரியா, தொழிலாளர் உதவி ஆணையாளர் ஞானவேல், துணை ஆய்வாளர் முத்து, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி மற்றும் வின்சென்ட் உள்ளிட்டோர் சிறுவனை மீட்டு கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் அந்த சிறுவனிடம் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் விசாரணை நடத்தினார்.

    அந்த சிறுவனை விவசாயி வடிவேலிடம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்றுச் சென்ற அவனது தந்தையை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சிறுவனை வேலைக்கு அமர்த்திய விவசாயி வடிவேலுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட சிறுவன் தருமபுரியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளான். இன்று அவனை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பரிசோதனை செய்து அவனுக்கு வயது சான்றிதழ் பெற்று அதன்பிறகு அவனை பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் சிறுவனை விலைக்கு வாங்கி ஆடு மேய்க்க பயன்படுத்திய விவசாயி வடிவேல், சிறுவனின் தந்தை ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
    போக்குவரத்து கழக ஊழியர்கள் வருகிற 19-ந் தேதி அல்லது அதற்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரிகளிடம் நோட்டீசு வழங்கியுள்ளனர். #transportworkers #strike
    சென்னை:

    சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் நடராஜன், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆறுமுகநயினார், சுப்பிரமணியன், வேணுராம், திருமலைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழகங்களை சீரமைக்க நிதி வழங்குவதோடு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தை அரசு வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், சமனற்ற ஊதிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். ஊழியர்களுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வின்போதே ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் இதுவரை இல்லாத அளவு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் 30 லட்சம் பயணிகள் வேறுவிதமான பயண முறைக்கு மாறிவிட்டனர். சட்டவிரோதமான ஷேர்ஆட்டோக்கள், ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் போக்குவரத்து கழகங்கள் கடும்போட்டியை சமாளிக்க வேண்டியுள்ளது. எனவே பேருந்து கட்டணத்தை முறைப்படுத்தி பொதுபோக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும்.



    போக்குவரத்து கழகங்களில் 20 ஆயிரம் காலி பணியிடங்கள் காரணமாக 2 ஆயிரம் பேருந்துகளை இயக்க முடியவில்லை. சென்னையில் 450 பேருந்துகள் இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் கட்டண உயர்வுக்கு முன்பு ரூ.8 கோடியாக இருந்த நஷ்டம் தற்போது ரு.9 கோடியாக உயர்ந்துள்ளது.

    எனவே போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீசு அளித்துள்ளோம். அரசின் நடவடிக்கையை பொறுத்து 19-ந் தேதி அல்லது அதற்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே சம்பள உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  #transportworkers #strike
    திண்டிவனம் அருகே இன்று நடைபெற இருந்த சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.

    இதையொட்டி திருமண ஏற்பாடுகளில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பதாக சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, திண்டிவனம் தாசில்தார் கீதா, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோர் ஊரல் கிராமத்துக்கு விரைந்து சென்று மணமகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

    18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதையும் மீறி திருமணம் நடத்தி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவுரை கூறினர்.

    இதனையேற்ற மணமகளின் பெற்றோர், திருமணத்தை நிறுத்திக்கொள்வதாக அதிகாரிகளிடம் கூறியதோடு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, அந்த சிறுமியை மீட்டு சமூக நலத்துறை மூலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதன் மூலம் இன்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காரணமான கலெக்டர், அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். #sitaramyechury #thoothukudiincident

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குடும்பங்களை சந்தித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உரிய விதிகளை பின் பற்றாமல் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது மாவட்ட கலெக்டர் அங்கு இல்லை. அப்படியென்றால் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், நீர், பெருமளவு மாசு பட்டு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான கலெக்டர், அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sitaramyechury #thoothukudiincident

    நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு ரே‌ஷன் கடைகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் குருமூர்த்தி உத்தரவின் பேரில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு ரே‌ஷன் கடைகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் குருமூர்த்தி உத்தரவின் பேரில், துணை பதிவாளர் ரியாஜ் அகமது தலைமையில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையில் 24 கிலோ அரிசி, 55 கிலோ சீனி, 17 லிட்டர் மண்எண்ணெய், 9 கிலோ கோதுமை, 25 கிலோ துவரம் பருப்பு, 4 லிட்டர் பாமாயில், 344 பாக்கெட் தேயிலை, 271 பாக்கெட் உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறைவு ஏற்படுத்தியதும், போலி பதிவு மூலம் விற்பனை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. சில கடைகளில் கூடுதல் இருப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டின் மதிப்பு ரூ.15 ஆயிரத்து 366 ஆகும். தவறு செய்த பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் பாயிண்ட் விற்பனை எந்திரங்கள் மூலம் விற்பனை பட்டியல் போடப்படுவதால், போலி விற்பனை பதிவு செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.#tamilnews
    உ.பி.யில் பாலம் இடிந்த விபத்தில் அலட்சியப்போக்குடன் செயல்பட்டதாக உத்தரபிரதேச மாநில பால கழகத்தின் அதிகாரிகள் மீது சிக்ரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #VaranasiFlyoverCollapse
    வாரணாசி:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் ஒன்று நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 30 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிகாரிகள் 18 பேர் பலியானதாக தெரிவித்தனர். இந்த நிலையில் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், வாரணாசிக்கு நேற்று சென்றார். பால விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களை ஆஸ்பத்திரியில் சந்தித்து அவர் நலம் விசாரித்தார். அப்போது அவர் இந்த விபத்தில் 15 பேர் பலியானதாக தெரிவித்தார்.

    இதற்கு இடையே பாலம் இடிந்து விழுந்ததில், அலட்சியப்போக்குடன் செயல்பட்டதாக உத்தரபிரதேச மாநில பால கழகத்தின் அதிகாரிகள் மீது சிக்ரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ள நிலையில் மாஜிஸ்திரேட்டு விசாரணை தொடங்கி உள்ளது.  #VaranasiFlyoverCollapse 
    நாமக்கல் மாவட்டத்தில் 70 நகைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் துறை அதிகாரிகள் மறுமுத்திரையிடாத 9 எடை அளவுகளை பறிமுதல் செய்தனர்.
    நாமக்கல்:

    சென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் அறிவுறுத்தலின்படி எடை அளவுகளில் முத்திரையிடாத நகைக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி பகுதிகளில் உள்ள அனைத்து நகைக்கடைகளிலும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மஞ்சள்நாதன் தலைமையிலான குழுவினர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    70 நகைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட இந்த குழுவினர், மறுமுத்திரையிடாத 9 எடை அளவுகளை பறிமுதல் செய்தனர். மேலும் 36 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின்போது நகைக்கடை வணிகர்களிடம், தங்களது நிறுவனங்களில் உள்ள எடையளவுகளின் மதிப்பில் 10-ல் ஒருபங்கு அளவு சோதனை எடைகற்கள் வைத்திருக்கவும், வாடிக்கையாளர்களுக்கு எடையளவு குறித்த சந்தேகங்கள் எழும் பட்சத்தில் சோதனை எடைகற்களை கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் தவறாது தங்களது எடை அளவுகளை மறுமுத்திரையிடவும், மறுமுத்திரையிடாத எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

    இந்த ஆய்வில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் சங்கர், ராகவன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் இளங்கோவன், ராஜன், சுதா, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
    ×