search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 126608"

    கோவையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மதுக்கடை வனவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட கரடி மடை பிரிவில் கண்ணன் என்பவர் வனவராக பணியாற்றி வந்தார்.

    இவர் வனச்சரக அலுவல கத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் ஊழியர், மாவட்ட வன அதிகாரி வெங்கடேசனிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த குழுவிசாரணைக்கு கண்ணன் ஒத்துழைக்கவில்லை. மேலும் குழுவில் இடம்பெற்ற பெண் அதிகாரி ஒருவர் மீது கண்ணன் புகார் கூறினார். இதையடுத்து அந்த அதிகாரி கூடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் விசாரணை குழுவும் கலைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் புகாருக்குள்ளான வனவர் கண்ணனை வேலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யும்படி முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா மாவட்ட வன அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கண்ணனை இடமாற்றம் செய்து வனஅலுவலர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, கண்ணன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த சேலம் சரகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட புதிய விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மதுரை:

    நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு, மாசுக்கட்டுப் பாட்டு வாரியத் தலைவராக பணியாற்றி வந்த அதிகாரி நசிமுதீன், அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

    நசிமுதீனுக்கு பதிலாக சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள மூத்த. ஐ.ஏ.எஸ். அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகரும் சிறந்த அதிகாரி ஆவார்.

    ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை.

    அடுத்த. சில நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாய குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும். இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

    எனவே, கடந்த 23-ந் தேதி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய தலைவராக இருந்த நசிமுதீனை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி விதிகளை உருவாக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ் என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஹென்றி திபேன் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து ஆராயும் குழுவில் மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் நசிமுதீன் உள்ளார்.

    அவருக்கு தான் ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமான அனைத்து விபரங்களும் தெரிந்து இருக்கும். அவரது பணியிட மாறுதல் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது போல் உள்ளது.

    அதை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் சம்பந்தமான விசாரணையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பழைய அதிகாரி நதிமுதீனும், புதிய அதிகாரியாக பொறுப்பேற்க உள்ள ‌ஷம்பு கல்லோலிக்கரும் இணைந்து ஒத்துழைக்க முடியுமா என தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

    பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    கேரளாவில் பெண் போலீஸ் ஒருவர் போலீஸ்காரருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி செல்போன் மூலம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    செல்போனில் படம் பிடிக்கப்படும் அந்தரங்க காட்சிகள் வெட்டவெளிச்சமாகி பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    தற்போது கேரளாவில் பெண் போலீஸ் ஒருவர் போலீஸ்காரருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி செல்போன் மூலம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த காட்சியை அந்த பெண் போலீஸ், தான் இணைந்துள்ள வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி உள்ளார். தானும் அந்த போலீஸ்காரரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அதில் அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த காட்சியை யாரோ மற்ற வாட்ஸ்-அப் குரூப்களிலும் பரவவிட்டதால் தற்போது அது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

    இதைதொடர்ந்து இந்த விவகாரம் கேரள உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். விசாரணையில் அந்த பெண் போலீஸ்காரர் மாலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றுவது தெரிய வந்தது.

    இதைதொடர்ந்து அவரை கேரளாவில் உள்ள வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில் இந்த காட்சியை பரப்பியவர்கள் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள ஒரு போலீஸ்காரர் தான் இந்த காட்சியை பரப்பியவர் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் போலீஸ் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×