search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூளைச்சாவு"

    மும்பையில் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் தானமாக பெறப்பட்டு 38 நிமிடத்தில் மின்சார ரெயில் மூலம் கொண்டு செல்லப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. #Liver
    மும்பை:

    மும்பை உல்லஸ் நகரைச் சேர்ந்த 53 வயதான சுகாதார உதவியாளர் ஒருவர் கடந்த 13-ந்தேதி தும்பிவிலியில் நடந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    தானேவில் உள்ள ஜுபிட்டர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி முன் வந்தார்.

    இதையடுத்து சுகாதார உதவியாளர் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டன. இதில் கல்லீரல் பரேலில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரிக்கு ஒதுக்கப்பட்டது.

    அந்த ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளி ஒருவருக்கு உடனடியாக கல்லீரல் பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் சாலையில் சென்றால் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது.

    இதையடுத்து உள்ளூர் மின்சார ரெயிலில் கல்லீரலை கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு ஆஸ்பத்திரி சார்பில் தகவல் தெரிவித்தனர். அவர்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    உடனே கல்லீரலை ஒரு குளிர்சாதன பெட்டியில் வைத்து ஆம்புலன்சில் தானே ரெயில் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். அங்கிருந்து மின்சார ரெயிலில் 4 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கல்லீரலை கொண்டு சென்றனர்.

    38 நிமிடப் பயணம் செய்து பரேலில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று நோயாளிக்கு பொருத்தப்பட்டது.


    முதல் முறையாக உடல் மாற்று சிகிச்சைக்காக ரெயிலில் உடல் உறுப்பு கொண்டு செல்லப்பட்டது. இதுவே சாலையில் கொண்டு சென்று இருந்தால் 2 மணி நேரம் ஆகி இருக்கும்.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறும்போது, “கல்லீரலை எவ்வளவு சீக்கிரம் கொண்டு சென்று சேர்க்க முடியுமோ அவ்வளவு நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.

    இதற்காக உள்ளூர் மின்சார ரெயில் சேவையை தேர்வு செய்தோம். தானே ஆஸ்பத்திரியில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் செல்ல தனிப்பாதை ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர் ரெயிலில் கல்லீரல் 38 நிமிடத்தில் கொண்டு வரப்பட்டது” என்றனர். #Donorliver #Liver
    2 கைகளை இழந்த வாலிபருக்கு மூளைச்சாவு அடைந்தவரின் கைகளை பொருத்தி ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த போடிக் காமன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (30). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.

    கொத்தனாரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி சித்தையன் கோட்டை என்ற இடத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். கான்கிரீட் போடுவதற்காக ஒரு நீண்ட கம்பியை தூக்கினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் வயரில் அந்த கம்பி உரசியது. இதில் அவரது 2 கைகளும் முழங்கைக்கு கீழே கருகியது. கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இருந்தும் பலனில்லை. 2 கைகளையும் இழந்துவிட்டார். அவரால் வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பம் வறுமையில் வாடியது.

    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் டி.ஜி. வினய்யை சந்தித்தார். அப்போது அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சென்று சிகிச்சை பெறுமாறு ஆலோசனை வழங்கினார்.

    அவரது உதவியுடன் கடந்த ஆண்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களை சந்தித்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தானமாக பெற்று உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் 2 கைகளையும் மீண்டும் பொருத்த முடியும் என நம்பிக்கை அளித்தனர்.

    இதற்கிடையே மரணம் அடைந்த ஒருவரின், 2 கைகளையும் தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன் வந்தனர். உடனே கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி மதுரையில் இருந்து விமானம் மூலம் நாராயணசாமி சென்னை வந்தார்.

    அங்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் வி.ரமாதேவி தலைமையில் 75 பேர் அடங்கிய குழுவினர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 13 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக அவருக்கு தொடர் சிகிக்சையும், தொடர் கண்காணிப்பும் அளிக்கப்பட்டது. தற்போது பூரண குணமடைந்த அவர் நேற்று வீடு திரும்பினார்.

    அது குறித்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரமாதேவி கூறியதாவது:-

    ஸ்டான்லி ஆஸ்பத்திரி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நிலை மையமாகும். இருந்தாலும் மூளை சாவு ஏற்பட்டவரின் கைகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அரசு மருத்துவமனையில் இதுவே முதல் முறையாகும்.உலகம் முழுவதும் 87 ஆஸ்பத்திரிகளில் இதுவரை 110 பேருக்கு இந்த வகை அறுவை சிகிச்சை மூலம் மறு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

    உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகளும் பொருத்தப்பட்ட நாராயணசாமியால் சில பணிகளை சிறப்பாக செய்ய முடியும். பிசியோ தெரபி சிகிச்சையை கட்டாயம் அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். அதன் மூலம் தான் அவரது கைகள் சரியாக செயல்படுத்த முடியும்.

    தற்போது அவரால் கைகளை உயரே தூக்க முடியும், செல்போன் மற்றும் டெலிபோனில் கால் செய்ய முடியும். கோப்பை உள்பட பாத்திரங்களை எடுக்க முடியும். தமிழ்நாட்டிலேயே இவருக்குதான் முதன் முறையாக அரசு ஆஸ்பத்திரியில் இத்தகைய ஆபரேசன் மூலம் மாற்று கைகள் பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்றார்.

    ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமசிவாயம் கூறும் போது, “முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. அது தொடர வேண்டுமெனில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் கைகளை தானம் செய்ய பொதுமக்கள் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் கைகள் துண்டிக்கப்பட்ட சுமார் 6 மணி நேரத்துக்குள் அறுவை சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு பொருத்த வேண்டும். தாமதம் ஏற்பட்டால் மீள்சி திறன் குறையும் என்றார்.

    இதற்கிடையே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகளும் பெற்ற நாராயணசாமிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

    அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணியிடத்திற்கான அரசாணையை வழங்கினார். அதை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். #tamilnews
    மூளைச்சாவு அடைந்த ஈரோட்டை சேர்ந்த பெண்ணின் உடல் உறுப்பு தானமாக வழங்கியதால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
    கோவை:

    ஈரோடு மாவட்டம், பெத்தாம் பாளையத்தில் வசித்து வருபவர் முத்துசாமி. இவரது மனைவி இந்திராணி (வயது 50) இவர் கடந்த15-ந் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தார். உடனடியாக கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திராணி உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் முத்துச்சாமி முன் வந்தார். இந்திராணி சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல், ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது.

    இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர். நல்லா ஜி பழனிசாமி கூறுகையில் மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய இந்திராணி குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
    விபத்தில் மூளைச்சாவு அடைந்த உதவி பேராசிரியரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகன் பூவரசன் (வயது 27). உதவி பேராசிரியர். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் அருகே சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு, சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்தநிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இது குறித்து பூவரசனின் தந்தை சுப்ரமணியன், தாய் செல்வி மற்றும் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பூவரசனின் உடலை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து கே.எம்.சி.எச். மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் பாரி விஜயராகவன், மகேஸ்வரன் பிச்சைமுத்து ஆகியோர் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பூவரசனின் இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பிற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு அனுப்பிவைத்தனர்.

    அதன்படி ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் என்.பழனிசாமி கூறும் போது, உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்கள் இடையே அதிக விழிப்புணர்வு தேவைப்படு கிறது. ஒருவர் இறந்தபிறகு அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரை காப்பாற்ற உதவும். விபத்தில் மூளைச்சாவு அடைந்த பூவரசன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த அவருடைய குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர் என்றார். 
    கீழ்கட்டளையில், சாலையை கடந்து செல்ல முயன்றபோது மோட்டார்சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த வாலிபர், மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் காந்திநகரைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(வயது 37). இவர், கீழ்கட்டளையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 28-ந் தேதி இரவு உணவகத்தின் அருகே மேடவாக்கம் சாலையை கடந்து செல்ல முயன்றார்.

    அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் அலெக்சாண்டரும், அவர் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கண்ணன் என்பவரும் காயம் அடைந்தனர்.

    அலெக்சாண்டர் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கண்ணன், அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அலெக்சாண்டர், மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    இதையடுத்து வாலிபரின் உடலில் இருந்து இருதயம், கணையம், சிறுநீரகம் உள்பட 5 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேருக்கு பொருத்தப்பட்டது.

    மூளைச்சாவு அடைந்த அலெக்சாண்டருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், அன்பரசி(7) என்ற மகளும், ஆதர்ஸ் விஷ்வா(5) என்ற மகனும் உள்ளனர். மூளைச்சாவு அடைந்த அலெக்சாண்டர் ஆலந்தூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் துரைவேலுவின் அண்ணன் மகன் ஆவார். #tamilnews
    மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
    திருபுவனை:

    திருபுவனை பாலாஜி நகரை சேர்ந்தவர் ரகு (வயது55). இவர் திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குமுதசெல்வி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ரகு மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு சென்று கொண்டு இருந்தார்.

    திருபுவனை ஏரிக்கரை அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ரகு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரகு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு ரகு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை ரகு இறந்து போனதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×