search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித்பவார்"

    பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கூட்டணியில் நவநிர்மாண் சேனா சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அக்கட்சி தலைவர் ராஜ்தாக்கரேயை அஜித்பவார் நேற்று சந்தித்து பேசினார். #AjitPawar #RajThackeray
    மும்பை:

    மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த தடவை நடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்தித்தன.

    அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில் தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி கண்டன.

    பின்னர் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை இருக்கட்சிகளும் தனித்து களம் கண்டன. இதன் காரணமாக அக்கட்சிகள் 15 ஆண்டு கால கூட்டணி ஆட்சியை பா.ஜனதாவிடம் பறிகொடுத்தது.

    இந்த நிலையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மூலம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி சேர்ந்து உள்ளன. ஓட்டுகள் சிதறுவதை தடுக்க சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இருப்பினும் இதற்கு பெரிய அளவில் பலன் கிட்டவில்லை.

    இதுஒருபுறம் இருக்க காங்கிரசுடன் கொள்கை அடிப்படையில் வேறுபட்ட ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியை கூட்டணியில் சேர்க்க தேசியவாத காங்கிரஸ் காய் நகர்த்தி வருகிறது.

    நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மத்திய, மாநில பா.ஜனதா அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார். மேலும் அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

    காங்கிரஸ் தலைமையிலான அணியில் ராஜ் தாக்கரே இணைந்தால் கூட்டணிக்கு அது பலமாக இருக்கும் என தேசியவாத காங்கிரஸ் கருதுகிறது.

    ஆனால் காங்கிரஸ் இதற்கு தயக்கம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில், கொள்கை ரீதியாக ஒத்துப்போகாதவர்களுடன் கூட கடந்த காலத்தில் கூட்டணி வைக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா, சிவசேனா கூட்டணியை தோற்கடிக்க நவநிர்மாண் சேனா நம்முடன் இணைய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இவ்வாறு கருத்து தெரிவித்த சூட்டோடு, அவர் நேற்று தாதரில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 1½ மணி நேரம் நடந்தது.

    பின்னர் வெளியே வந்த அஜித்பவார், நவநிர்மாண் சேனாவை கூட்டணியில் சேர்ப்பது பற்றி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என்றார்.

    இந்த கூட்டணி அமையும் பட்சத்தில் தனது கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் கல்யாண் தொகுதியை நிவநிர்மாண் சேனாவுக்கு விட்டு கொடுக்க தேசியவாத காங்கிரஸ் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது..

    இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் நவநிர்மாண் சேனா இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    காங்கிரசுக்கும், நவநிர்மாண் சேனாவுக்கும் கொள்கை ஒத்துப்போகாத நிலையில், அக்கட்சிகள் கூட்டணி வைக்கப்போவதாக கூறப்படுவது மராட்டிய அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×