search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 127535"

    ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்கிட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதல்-அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். #Edappadipalaniswami
    சென்னை:

    “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட, 1.1.2019 முதல் அமலுக்கு வர உள்ள பிளாஸ்டிக் தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பத்து உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மூன்று மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மூன்று மண்டல ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து செயலாற்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளை கொண்ட ஏழு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 23.8.2018 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மாநில அளவிலான பிரச்சாரத்தினை துவக்கி வைத்தார்.

    அதற்கான இலச்சினையை அறிமுகம் செய்து, கைப்பேசி செயலியையும் துவக்கி வைத்து, பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது குறித்த குறும்படங்களை வெளியிட்டார். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட விளம்பரத்தூதரையும் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன், சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில்முனைவோருக்கு தொழில் துவங்க காசோலைகளையும் வழங்கினார்.

    அதன் தொடர்ச்சியாக, இன்று “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த பிரச்சார வாகனம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ்நாடு அரசின் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த உறுதுணையாக இருக்கும்.

    நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கருப்பணன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். #Edappadipalaniswami

    தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த உள்ள பிளாஸ்டிக் தடை சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என விருதுநகர் தொழில்துறை சங்கம் கோரி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் வி.வி.எஸ்.யோகன், முதல்- அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணை எண் 84-ன்படி குறு மற்றும் சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் பொருட் கள் அடுத்த ஆண்டு முதல் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை. இதனால் குறு, சிறு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை தடுக்க வாய்ப்பு இருக்காது. பிற மாநிலங்களில் தடை இல்லாமல் தமிழகத்தில் மட்டும் தடை செய்வதால் நம்முடைய உற்பத்தி மற்றும் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். அதிலும் பிளாஸ்டிக் உற்பத்தியை வாழ்வாதாரமாக கொண்டுள்ள சிறு நிறுவனங்களும் அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். தமிழகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுக்கும் முறையை முழுமையாக செயல்படுத்திட வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான பிளாஸ்டிக் தார்சாலை இதுவரை அமைக்கப்படவில்லை. இவைகளை நிறைவேற்றுவதால் கழிவு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து மாசு ஏற்படுவதை தடுக்க முடியும்.

    எனவே பொதுமக்கள் நலனிலும், குறு,சிறு நிறுவனங்களின் வளர்ச்சியிலும் அக்கறை உள்ள தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு அமல்படுத்த உள்ள தடையை உடனடியாக செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து அதற்கு நல்ல தீர்வு காண வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் துணிப்பை பயன்பாட்டுக்கு வியாபாரிகள் மாறி இருக்கின்றனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ‘உன்னத உதகை‘ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் மூலமாகவும், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலமாகவும் பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தவிர மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்வோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டு சுற்றுலா வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கான ரசீது வினியோகிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்ட வியாபாரிகள் துணிப்பை பயன்பாட்டுக்கு மாறி இருக்கின்றனர். தங்கள் கடைகளில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை துணிப்பையில் போட்டு கொடுத்து வருகின்றனர். மேலும் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. துரித உணவகங்களில் பாக்கு மட்டையால் ஆன தட்டுகள், தேநீர் விற்பனை நிலையங்களில் சில்வர் டம்ளர்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகளில் எளிதில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்கள் பேக்கிங் செய்து தரப்படுகின்றன. மேலும் பேக்கிங் செய்வதற்கு செய்தித்தாள்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தவிர கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களும் துணிப்பைகளை கொண்டு வருவதால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் ஒழிப்புக்கான மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது.

    மேலும் தமிழக அரசும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    உத்தரகாண்ட் மாநிலத்தில் மந்திரிகளுக்கு இடையிலான ஆலோசனை கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதும் தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகாஷ் பண்ட் தெரிவித்துள்ளார். #PlasticBan #Uttarakhand #PrakashPant
    டேராடூன்:

    பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் பல்வேறு மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க நிரந்தர தடை விதிக்கப்பட்டது.



    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மந்திரி பிரகாஷ் பண்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதற்கும், சேமித்து வைக்கவும் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விளம்பரப்படுத்தவும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். #PlasticBan #Uttarakhand  #PrakashPant
    சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தாமல் காகிதத்தினால் செய்யப்பட்ட தேசிய கொடியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் கந்தசாமி கூறியுள்ளார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லா சுதந்திர தினம் கொண்டாட மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தாமல் காகிதத்தினால் செய்யப்பட்ட தேசிய கொடியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் கந்தசாமி கூறியுள்ளார்.

    இந்திய தேசிய கொடி என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலையில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவும், உண்மையான பாதையில் செல்லவும், தர்மத்தின் படியும், சட்டத்தின் படியும், நடப்பதற்கான உத்வேகத்தை அளிக்கக் கூடியது.

    இன்றைய கால கட்டத்தில் உலகளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் ஒழித்திட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளும் பிளாஸ்டிக் ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைள், விழிப்புணர்வுகள் பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள்.

    பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடுகிறது. கால்நடைகள், விலங்களுகள் உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இதனால் 15-ந்தேதி அன்று நடைபெறும் 72-வது சுதந்திர தினத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் காகிதத்தினால் செய்யப்பட்ட இந்திய தேசிய கொடியை பயன்படுத்த வேண்டும்.

    நம் வருங்கால சந்ததியினர் ஆரோக்கியமான, சுகாதாரமான சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு நாம் வழிவகை செய்வோம். ‘பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்போம், பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவோம்’ என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

    திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகப் பதிவேடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு உரப்பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலெக்டர் லதா ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகப் பதிவேடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு உரப்பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலெக்டர் லதா ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணிப்பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்து குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து செயல் அலுவலர் சண்முகத்திடம் கேட்டறிந்தார்.

    பின்னர் தெருவிளக்கு பராமரிப்பு பதிவேட்டினை ஆய்வு செய்தார். தொடர்ந்து 18 வார்டுகளிலும் மக்கும் மக்கா குப்பைகள் எனப் பிரித்து வாங்கப்படுகிறதா? எனக் கேட்டறிந்தார். தொடர்ந்து பேரூராட்சி அலுவலக வணிக வளாகக் கடைகளிலும் உழவர்சந்தை உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து பொதுமக்களிடம் உங்களின் வருங்கால சந்ததிகளுக்காக பிளாஸ்டிக் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    திடக்கழிவு மேலாண் மைப் பணிகளை ஆய்வு செய்வதற்காக சிவகங்கை சாலையில் உள்ள பேரூராட்சி உரக்கிடங்கு பகுதிக்குச் சென்று அங்கு குப்பைகள் பிரிக்கப்படுவதையும் பிளாஸ்டிக் அரைப்பு எந்திரைத்தையும் பார்வையிட்டு துப்புரவு மேற்பார்வையாளர் தங்கதுரையிடம் உரம் தயாரிக் கப்படும் உரப்படுக்கை முறையினையும் அவற்றை சந்தைப்படுத்துதல் முறை குறித்தும் விளக்கினார்.

    பின்னர் அதே பகுதியில் கோழிக்கழிவுகள் உர மாக்கப்படுவதையும் பார்வையிட்ட கலெக்டர் லதா, இந்தப்பகுதியில் காய்கறித் தோட்டம் ஆரம்பிக்கச் செய்து அதனை பயனாளிகளே அனுபவிக்க கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின் போது பேரூராட்சியின் உதவி இயக்குனர் ராஜா, உதவிப் பொறியாளர் பாலசுப் பிரமணியன், பணி மேற்பார்வையாளர் சந்திரமோகன், உதவி செயற்பொறியாளர் குமரகுரு ஆகியோர் உடனிருந்தனர்.

    தூத்துக்குடி மாநகராட்சியில் பிளாஸ்டிக்கை கொடுங்கள் - பரிசை பெறுங்கள் என்னும் புதிய திட்டத்தை ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியை அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத நகரமாக அறிவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மளிகை பொருட்கள், பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றின் கவர்களை தனியாக பிரித்து, அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பிளாஸ்டிக்கை கொடுங்கள் - பரிசை பெறுங்கள் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி பயன்படுத்திய 10 பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து கடைகளில் வழங்குபவர்களுக்கு ஒரு பரிசு கூப்பன் வீதம் வழங்கப்படும். அதில் உள்ள பரிசுத் தொகையை பொருட் கள் வாங்கும் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இதற்காக கடைகளில் தனியாக பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இது தூத்துக்குடி மாநகராட்சியால் முதன் முதலாக செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டம் ஆகும்.

    இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி சுடலை காலனியில் நடந்தது. நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார். மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறும் போது, பொதுமக்கள் இந்த பரிசுப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது துணிப்பை மற்றும் பாத்திரங்களை கொண்டு சென்று சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவ வேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் அற்ற மாநகராட்சியாக தூத்துக்குடியை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். நிகழ்ச்சியில் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக பாத்திரங்களை கொண்டு வந்து உணவு வாங்கும் நபர்களுக்கு இலவசமாக சாம்பார் தூக்குவாளி வழங்கும் நிகழ்ச்சி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தொடங்கி வைக்கப்பட்டது. 
    ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அம்மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயிக் உத்தரவிட்டுள்ளார். #BanPlastic #Odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயிக் காணொளி காட்சி மூலம் மக்களிடம் நேரடியாக இன்று உரையாடினார். அந்த உரையாடலின் போது, அடுத்த 2 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக ஒடிசாவை உருவாக்குவதற்காக ஒடிசாவின் பல பகுதிகளில் பிளாஸ்டிக்கை தடை செய்வதாக அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புவனேஸ்வர், கட்டாக், பெர்காம்பூர், சாமல்பூர், ரோர்கெலா, பூரி நகர், மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய முதல்மந்திரி பட்னாயிக், அனைவரும் வீடுகளில் மரக்கன்று நடுமாறும், அதன்மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறும் கூறியுள்ளார்.

    பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் உபயோகம் குறித்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும் முதல்மந்திரி நவீன் பட்னாயிக் மக்களுடனான காணொளி உரையாடலில் தெரிவித்துள்ளார். #BanPlastic #Odisha
    சென்னை விமான நிலையத்தில் ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி கூறினார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையத்தின் சார்பில் ‘உலக சுற்றுச்சூழல் தின விழா’ மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையத்துக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

    இதில் தென் மண்டல ஆணையக அதிகாரி ஸ்ரீகுமார், சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி, வனத்துறை அதிகாரி ரவீந்திரநாத் உபதாய்யா, மத்திய தொழிற்படை போலீஸ் அதிகாரி பொன்னியின் செல்வன் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது உள்பட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பல்வேறு தீமைகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும் 21 தினங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் பற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    பின்னர் விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. நம்முடைய வாழ்க்கையில் பிளாஸ்டிக்கை எப்படி தவிர்ப்பது என ஆராயப்பட்டது. 21 தினங்கள் ஒரு பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தால் அது நிரந்தர பழக்கமாக மாறிவிடும். எனவே 21 தினங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது தொடர்பாக விழாவில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    விமான நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக தவிர்ப்பது பற்றியும், முதற்கட்டமாக மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம் என்றும் இந்திய விமான நிலைய ஆணையக தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் பல்வேறு விமான நிறுவனங்கள் மற்றும் பல தரப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. பிளாஸ்டிக் ஒழிப்புக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும். வருகிற ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து, சென்னை விமானநிலையத்தை பிளாஸ்டிக் இல்லா விமான நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    2019-ம் ஆண்டு முதல் மட்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், தயாரித்து விற்பனை செய்யவும் தடை விதித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #WorldEnvironmentDay #noplasticfrom2019
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக்கை ஒழிக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறியதாவது:-

    இன்று, ஜுன் 5, “உலக சுற்றுச்சூழல் தினம்”. சமுதாயம் நலமாக வாழவும், வளமுள்ள நாடு உருவாகவும் இன்றியமையாததாக விளங்குவது சுற்றுச்சூழல். இத்தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் உறுதி எடுப்போம். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் துறை மூலமாக புரட்சிகரமான திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா நிறைவேற்றினார். அவர்கள் வழியில் செயல்படும் அம்மாவின் அரசு தொடர்ந்து அதனை பின்பற்றி வருகிறது.

    “பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுனர் குழு” என்ற சிறப்புக் குழுவினை அம்மா அமைத்தார். இந்த வல்லுனர் குழு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்ற பொருட்களை தடை செய்யவும், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியது.

    இவற்றில், அன்றாடம் மக்களுக்கு தேவைப்படும் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் போன்ற பொருட்களுக்கான பிளாஸ்டிக் உறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், நிலங்களில் தேங்கிவிடும் போது, நீர்நிலைகளை நோக்கிச் செல்லும் நீரின் போக்கு மாறி, நீர் தேங்கி விடும் நிலை உருவாகிறது.

    மேலும், கழிவு நீர் செல்லும் பாதைகளிலும் இதன் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால் தண்ணீர் மாசடைகிறது. மேலும் மழைநீர், பூமியில் கசிந்து நிலத்தடியினை அடையாமல் போவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதும் பாதிக்கப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கும் போது, கொசு உற்பத்தியாகி, அதன் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன.

    மேலும், மழைநீர்க் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, வெள்ளப்பெருக்கு ஏற்படவும் காரணமாகி விடுகிறது. மண் வளமும் பாதிக்கப்படுகிறது.


    தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும்போது, அதன் மூலம் வெளியாகும் நச்சு வாயுவின் மூலமாக மனிதன் மற்றும் உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றும் மாசடைகிறது. உணவுப் பொருட்களுடன் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பிற உணவுகளுடன் சேர்ந்து உண்ணும் நிலை ஏற்படுவதனால், கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் உயிரிழப்புக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகி விடுகிறது.

    மேலும், பிளாஸ்டிக் பொருட்கள், பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை உடையதால், அவற்றை அழிப்பதோ, ஒழிப்பதோ இயலாத காரியம்.

    இவ்வாறு நிலம், நீர், காற்று போன்ற பல்வேறு நிலையில் மாசு ஏற்பட்டு, மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் தீங்கு விளைவிக்க காரணமாகி விடுகிறது. எனவே இவற்றை அறவே தவிர்ப்பது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமாகிறது.

    மேற்படி பாதிப்புகளை கருத்தில் கொண்டும், இந்தத் தீங்கினை நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லக்கூடாது என்ற உயரிய நோக்கத்திலும், தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு, ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறு பாடின்றி, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர், தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்ய அம்மாவின் அரசு முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் தடை செய்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல், 2019, ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அம்மாவின் தொலை நோக்குத் திட்டமான ‘மழை நீர் சேகரிப்புத் திட்டம்’, பொதுமக்களின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும், வெற்றிகரமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு, நிலத்தடி நீர் பெரிய அளவில் செறிவூட்டப்பட்டது.

    அதே போன்று, உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும், அம்மாவின் அரசு செயல்படுத்த இருக்கும் “பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை” நம் எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம் ! என்று கூறி அமர்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNCM #EdappadiPalanisamy #WorldEnvironmentDay #noplasticfrom2019
    ×