search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளவரசி"

    பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் இருந்து சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. #Sasikala
    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சி (1991-96) நடந்தபோது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பான விசாரணையில் சசிகலாவும் அவரது உறவினர்களும் ரூ.66.65 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக கூறப்பட்டது. பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் இதுபற்றி விசாரணை நடந்தது.

    கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

    அதோடு ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து நான்கு பேரும் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட்டு, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தீர்ப்பை வெளியிட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகள் என்பதை சுப்ரீம்கோர்ட்டு உறுதி செய்தது. விசாரணை கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

    இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    பெங்களூர் ஜெயிலில் பெண்களுக்குரிய பகுதியில் இளவரசி தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சிறை விதிகளை மீறி நடந்து கொண்டதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு அவர் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது.



    இந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிய உள்ளது. வருகிற 15-ந்தேதியுடன் அவர்களது சிறை வாழ்க்கை 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

    இதற்கிடையே அவர்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தாவிட்டால் அவர்களது சொத்துக்களை முடக்கலாம் என்று கோர்ட்டு கூறியிருந்தது. ஆனால் அவர்களது அபராதத் தொகைக்காக இதுவரை சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்கள் எதுவும் முடக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் கையகப்படுத்தப்பட்ட சசிகலாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அது முழுமை பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    ஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்தும் வி‌ஷயத்திலும் வருமான வரித்துறை மவுனமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் இருந்து சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகா மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் இரண்டு பங்கு காலத்தை ஜெயிலில் கழித்து விட்டால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.

    மேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது.

    இந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்புள்ளது. சசிகலா 2017-ம் ஆண்டு சிறைக்கு சென்றார். 4 ஆண்டு தண்டனைப்படி அவர் 2021-ம் ஆண்டு வரை சிறையில் இருக்க வேண்டும்.

    ஆனால் நன்னடத்தை அடிப்படையில் அவரை 1 ஆண்டுக்கு முன்பு விடுவிக்கலாம். எனவே அடுத்த ஆண்டு சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்புள்ளது. #Sasikala
    ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் பதவிக்கு அந்நாட்டின் இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் போட்டியிடுகிறார். #UbolratanaMahidol
    பாங்காக்:

    தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.

    அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது.

    இதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.

    இதையடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில் அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது.

    பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்படுவது வாடிக்கையானது.

    இந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனை தொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று உப்லோரட்டனா மஹிடோல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    முன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்‌ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சியின் வேட்பாளராக அவர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.

    இதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உப்லோரட்டனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜ்ரலோங்கோனியின் சகோதரியும் ஆவார்.#UbolratanaMahidol
    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என விசாரணைக்குழு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. #Sasikala

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை கண்டுபிடித்தார்.

    சசிகலாவுக்கு விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் சிக்கின. அந்த வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார்.

    சிறை விதிகளை மீறி சசிகலா, இளவரசி ஆகியோருக்கு 4 விசே‌ஷ அறைகள் ஒதுக்கப்பட்டன. அவர்களுக்கு தனி சமையலறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மற்ற கைதிகளுக்கு அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட சசிகலாவுக்கு அதிக அளவிலான பார்வையாளர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது போன்ற விதி மீறல்கள் நடந்ததாக ரூபா குற்றம் சாட்டினார்.

     


    சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், சிறைத்துறை டி.ஜி.பிக்கும் அனுப்பி இருந்தார்.

    தன் மீதான லஞ்சப் புகாரை அப்போதைய டி.ஜி.பி.சத்யநாராயண ராவ் மறுத்தார். ரூபா மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்தார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரூபா சிறைத்துறையில் இருந்து போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.

    இதற்கிடையே சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விணய்குமார் தலைமையில் உயர்மட்டகுழுவை கர்நாடக அரசு நியமித்தது.

    இந்த குழுவில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும், பெங்களூரு குற்றப்பிரிவு கூடுதல் கமி‌ஷனருமான ரவி, மைசூரு சிறை தலைமை சூப்பிரண்டு ஆனந்த் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    இவர்கள் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். புகார் கூறிய அதிகாரி ரூபா மற்றும் புகாருக்கு உள்ளான சத்யநாராயணராவ் ஆகியோரிடம் வாக்கு மூலம் பெற்றனர்.

    சிறை அதிகாரிகள், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். சிறையில் கண்காணிப்பு கேமிராக்கள் இருந்த இடங்களையும் பார்வையிட்டனர். சசிகலா, இளவரசி தங்கி இருந்த அறைகளையும் பார்வையிட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

    இந்த குழுவின் பதவிக் காலம் 2 முறை நீடிக்கப்பட்டது. அதன் பிறகு விசாரணை அறிக்கையை இந்த குழுவினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக உள்துறை செயலாளரிடம் தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் அறிக்கை விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:-

    சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கும், இளவரசிக்கும் தங்க 4 அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அந்த அறைகளில் ஏர்கண்டிசன் வசதி செய்யப்பட்டு இருந்தது. பூனைகள் நுழையாத வகையில் அறைகளில் திரைச்சீலைகள் போடப்பட்டு இருந்தன.

    குக்கர் உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்தன. சசிகலாவும், இளவரசியும் தாங்களே சமையல் செய்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இது சம்மந்தமாக டி.ஐ.ஜி. ரூபா புகைப்பட ஆதாரங்களை கொடுத்து இருந்தார்.

    நாங்கள் விசாரணைக்கு சென்ற போது சமையல் அறை மாயமாகி இருந்தது. ஒரு அறையில் சோதனை நடத்தியபோது சமையலுக்கான மஞ்சள் தூள் பாக்கெட்டை கண்டுபிடித்து கைப்பற்றினோம். இதனால் சசிகலா தங்கி இருந்த அறையில் சமையல் செய்தது உறுதி செய்யப்பட்டது.

     


    சசிகலா, இளவரசி ஆகியோர் தங்கி இருந்த பகுதிகளில் ஆண் காவலர்கள் யாரும் பணியமர்த்தப்பட வில்லை. பெண் காவலர்கள் மட்டுமே அங்கு பணியில் இருந்தனர்.

    சசிகலா, இளவரசி ஆகியோர் கைதிகள் அணியும் உடை அணியாமல் சொந்த உடைகள் அணிய அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 2 பேரும் ஷாப்பிங் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சசிகலா சுடிதார் உடையிலும், இளவரசி சேலையிலும், பெண்கள் சிறையின் நுழைவு வாயில் வழியாக வெளியே சென்று ஷாப்பிங் செய்து கையில் பையுடன் வரும் காட்சி சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது.

    இதுபோல 74 ஆதாரங்களை ரூபா கொடுத்திருந்தார். நாங்கள் சிறைக்கு சென்று ஆய்வு நடத்தியபோது சில ஆதாரங்களை அழிக்க அதிகாரிகள் முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சி.சி.டி.வி. கேமிராக்களையும் இயங்கவிடாமல் அதிகாரிகள் சுவிட்ச்-ஆப் செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட 4 அறைகளில் ஒரு அறையில் சொகுசு கட்டில் மற்றும் படுக்கை விரிப்புகள் போடப்பட்டு இருந்தது.

    சசிகலா சிறையில் பார்வையாளர்களை சந்திக்க ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக சிறையில் உள்ள பயன்படுத்தப்படாத ஒரு அறையை அவருக்கு அலங்கரித்து அதிகாரிகள் ஒதுக்கி கொடுத்தனர். மற்ற கைதிகள் பார்வையாளர்களை சந்திக்க குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சசிகலாவுக்கு அதிக அளவில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    சசிகலாவுக்கு ஏ.கிளாஸ் வசதியை எந்த நீதிமன்றமும் பரிந்துரைக்கவில்லை. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் ஏ.கிளாஸ் வசதியை அவருக்கு செய்து கொடுத்துள்ளனர். இது குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை ஒதுக்கியதாக தெரிவித்தனர்.

    நீதிமன்றத்திடம் ஏன் அனுமதி வாங்கவில்லை என்று கேட்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர். இது கர்நாடக சிறைத்துறை விதிகளின்படி அப்பட்டமான விதிமுறை மீறல் ஆகும்.

    இந்த சிறையில் 28 அறைகள் உள்ளன. இந்த அறைகளில் 100க்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். சசிகலாவுக்கு வசதி செய்து கொடுக்கவே ஒரு அறையில் 4 பெண் கைதிகள் தங்குவதற்கு பதிலாக அளவுக்கு அதிகமாக பெண் கைதிகள் அடைக்கப்பட்டனர்.

    குக்கரில் சசிகலா சமையல் செய்தது பற்றி சிறைத் துறை ஊழியர்களிடம் நாங்கள் கேட்டபோது அது கைதிகளுக்கு உணவு சமைக்க பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறினர். ஆனால் அது உண்மையல்ல.

    19-7-2017 அன்று நாங்கள் சிறையில் ஆய்வு நடத்திய போது சசிகலா அறையில் இருந்த அலமாரிகளை அகற்றிக் கொண்டு இருந்ததை நாங்களே நேரில் பார்த்தோம். சசிகலாவுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதும் உண்மை தான். சிறையில் சசிகலா, இளவரசிக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதும் உண்மை தான்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட கர்நாடக அரசு இதுபற்றி ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    சசிகலாவுக்கு சலுகைகள் கொடுத்ததுபோல முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அப்துல்கரீம் டெல்கிக்கும் சலுகைகள் வழங்கப்பட்டதும் உண்மைதான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    ஊழல் தடுப்பு துறை விசாரணைக்குப்பின் இதில் மேல் நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

    இதனால் சசிகலாவுக்கு சிறையில் நன்னடத்தை பாதிக்கப்படும் என்றும் முன் கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. #Sasikala

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி 15 நாட்கள் ‘பரோல்’ காலம் முடிவடைந்ததை அடுத்து நேற்று சிறைக்கு திரும்பினார். #Ilavarasi #BangaloreJail
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 20 மாதங்கள் ஆகின்றன.

    உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்க்க 15 நாட்கள் பரோல் வழங்குமாறு இளவரசி முதல் முறையாக சிறை நிர்வாகத்திடம் மனு வழங்கினார்.

    அதை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட சிறை நிர்வாகம், இளவரசிக்கு நிபந்தனையுடன் 15 நாட்கள் பரோல் வழங்கியது. இதையடுத்து இளவரசி கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். அவர் சென்னையில் தங்கியிருந்தார்.

    15 நாட்கள் பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து இளவரசி நேற்று பெங்களூரு சிறைக்கு திரும்பினார். #Ilavarasi #BangaloreJail

    பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி வகுப்பில் சேர்ந்துள்ளனர். #SasikalalearnKannada #SasikalaenrolBU
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி பயில விண்ணப்பித்துள்ளனர். இளவரசி சமீபத்தில் 15 நாள் பரோலில் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

    அவர் பரோலில் செல்வதற்கு முன்னர் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விண்ணப்ப நடைமுறைகள் முடிவடைந்து, இருவரும்  தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி சான்றிதழ் வகுப்பில் இணைந்து விட்டதாக பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வித்துறை இயக்குனர் மயிலரப்பா தெரிவித்துள்ளார்.

    இவர்களை தவிர பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள 257 கைதிகளும் பல்வேறு வகுப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களின் விண்ணப்பங்கள் இன்று (சனிக்கிழமை) பரிசீலிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    தொலைதூர கல்வி வழியாக பயிலும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும், ஆசிரியர்கள் நேரடியாக சிறைக்கு பாடங்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #SasikalalearnKannada #SasikalaenrolBU  
    சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது. #Ilavarasi
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா 2 முறை பரோல் மூலம் சென்னை சென்று வந்தார்.

    ஆனால் இளவரசி சிறைக்கு சென்ற பிறகு இதுவரை பரோல் கேட்கவில்லை. இதற்கிடையே சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலா, இளவரசிக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதில் லஞ்சம் கைமாறப்பட்டதாக எழுந்த புகாரை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



    இந்த நிலையில் தனது சகோதரரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை பார்க்க பரோல் வழங்க கோரி சிறை நிர்வாகத்திடம் இளவரசி மனு அளித்து இருந்தார்.

    இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை இளவரசிக்கு பரோல் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இன்று மாலை சிறையில் இருந்து இளவரசி வெளியே வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ, ஊடகங்களை சந்திக்கவோ கூடாது போன்ற நிபந்தனைகளுடன் இளவரசிக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதி மாலை 6 மணிக்குள் மீண்டும் சிறைக்கு திரும்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு 21 மாதங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Ilavarasi
    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி, பரோல் கேட்டு மனு கொடுத்துள்ளார். #ilavarasi
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா 2 முறை பரோல் மூலம் சென்னை சென்று வந்தார்.



    ஆனால் இளவரசி சிறைக்கு சென்ற பிறகு இதுவரை பரோல் கேட்கவில்லை. இதற்கிடையே சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலா, இளவரசிக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதில் லஞ்சம் கைமாறப்பட்டதாக எழுந்த புகாரை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நெருங்கிய உறவினர் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை பார்க்க பரோல் வழங்க கோரி சிறை நிர்வாகத்திடம் இளவரசி மனு வழங்கியுள்ளார்.

    அவருக்கு விரைவில் பரோல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 15 நாட்கள் வரை பரோலில் செல்ல அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி உள்பட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு 21 மாதங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  #ilavarasi
    லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் வந்த இளவரசி மேகன் மார்க்கல் கார் கதவை தானே சாத்திய நிகழ்வு வெளிநாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. #MeghanMarkle
    லண்டன்:

    நாம் காரில் இருந்து இறங்கியவுடன், கார் கதவை நாமே சாத்துவது அனிச்சை செயலான ஒன்று.

    ஆனால், இங்கிலாந்து இளவரசி மேகன் மார்க்கல், கார் கதவை அவரே சாத்தியது, இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியிலும், பிரமிப்பிலும் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்து பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகவும் ஆகி உள்ளது.

    ஏனென்றால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அரச குடும்பத்தினர், கார் கதவை தாங்களே சாத்துவது இல்லை.

    இளவரசர் சார்லஸின் மகன் இளவரசர் ஹாரியை மணந்தவர்தான், மேகன் மார்க்கல். அவருக்கு வயது 37. அமெரிக்க நடிகையாக இருந்தவர்.

    சமீபத்தில், லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் அவர் வந்தார். அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளவரசியை கைகுலுக்கி வரவேற்ற ஒருவர், அவரது கார் கதவை மூட முனைந்தார். அந்த வினாடி, சற்றும் எதிர்பாராமல், இளவரசியே கார் கதவை சாத்தி விட்டார். அந்த நபர், கையை சடாரென்று விலக்கிக்கொண்டு, ஆச்சரியத்தில் வாய் பிளந்தார்.

    இந்த நிகழ்வுதான், புகழ்பெற்ற பி.பி.சி., சன், டெய்லி மெயில் உள்ளிட்ட ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. அத்துடன், நாடு முழுவதும் விவாதப்பொருளாகவும் ஆகி உள்ளது.

    இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதற்கு என்றே ஒரு சாரார் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்கள், இளவரசி மேகன் மார்க்கலையும் கவனித்து வருகிறார்கள். அவர் எவ்வித பாசாங்கும் இல்லாமல், எளிமையாக இருப்பார் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

    அரண்மனை தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களில் ஒருவர், “வெல்டன் மேகன்” என்று எழுதி உள்ளார். மற்றொருவர், “இளவரசி மேகன் எந்த மரபையும் மீறவில்லை. அவர் பழக்க தோஷத்தில்தான் கதவை மூடி உள்ளார்” என்று எழுதி உள்ளார்.  #MeghanMarkle
    ×