search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128233"

    • முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு எட்டு வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது.
    • தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளையில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.

    5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழா அன்று அதிகாலை உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளல், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா, 8-ம் திருவிழா காலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி வீதி உலாவும், சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தேரோட்டம் நடைபெற்றது.

    அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி (கூடுதல் பொறுப்பு), தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு எட்டு வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், மண்டல இணை ஆணையர் அன்புமணி (கூடுதல் பொறுப்பு) மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, மகா தீபாராதனை நடந்தது.
    • நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று வழக்கமான பூஜைகளுக்கு பின்னர், காலை 6 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார்.

    பின்னர் பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, மகா தீபாராதனை நடந்தது. பகல் 11.10 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை நிற கடைசல் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் பெருமாள் அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆவணி திருவிழாவின் 10-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வருகிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்கிறது. தொடர்ந்து வள்ளியம்பாள் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் காலையிலும் மாலையிலும் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வருபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளைமலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    பகல் 11.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) காலையில் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.
    • வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 7-ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

    5 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின், சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    காலை 8.10 மணிக்கு சுவாமி சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4.35 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வீதி உலா முடிந்து மேலக்கோவில் வந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் பந்தல் மண்டபம் முகப்பில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டு அணிந்து பச்சை நிற மலர்கள் சூடி பெருமாள் அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து கோவிலை வந்தடைகிறார்.

    பின்னர் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின் மேலக்கோவில் சேர்கிறார்கள்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி அம்பாளுடன் பல்லக்கில் வீதி உலா வருகிறார். இரவு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி தேர் கடாட்சம் அருளி எட்டு வீதிகளிலும் வலம் வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.

    10-ம் திருநாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • விழா நாட்களில் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
    • வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.

    திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெள்ளித்தேரிலும், வள்ளியம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    7-ம்திருவிழாவான இன்று காலையில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    10-ம் திருவிழாவான வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை (செவ்வாய்க்கிழமை) சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நடக்கிறது.
    • 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    ஆவணி திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடந்தது. இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. அங்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டவுடன் குடவருவாயில் தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனை நடந்தது.

    7-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 5 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். பின்னர் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும்.

    மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். 8-ம் திருநாளான நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், பகல் 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 10-ம் திருநாளான 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும்.
    • திருசெந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரியாக இயங்கி வரும் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புகளாக எம்.ஏ. பொருளியல், எம்.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. வேதியியல் (சுயநிதி), எம்.எஸ்சி. விலங்கியல் (சுயநிதி) ஆகிய பிரிவுகளும், எம்.பில். ஆய்வு படிப்புகளாக எம்.பில். ஆங்கிலம், எம்.பில். பொருளியல், எம்.பில். கணிதம், எம்.பில். வேதியியல், எம்.பில். விலங்கியல் ஆகிய பிரிவுகளும் உள்ளன.

    இவற்றில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் ஆதித்தனார் கல்லூரி இணையதளத்தில் (www.aditanarcollege.com) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 04639-220625, 220632 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    திருசெந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உறுதிமொழியை படித்தார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்கள் 43, 44, 45, 48, 231 மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, கல்லூரி அலுவலர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் மருதையா பாண்டியன் மற்றும் அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துகிடா வாகனத்தில் வீதி உலா வந்தார்.
    • வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 17-ந் தேதி ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

    3-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைந்தனர்.

    பின்னர் மாலை 6.45 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    ஆவணித்திருவிழாவின் 4-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் உலா வருகிறார்கள்.
    • விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். 2-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும், வள்ளி அம்பாள் சிறிய பல்லாக்கிலும் எழுந்தருளி தூண்டுகை விநாயாகர் கோவில் அருகே உள்ள ஆழ்வார் திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபம் சேர்ந்தனர். மாலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவு 8.15 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளியம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    ஆவணித் திருவிழாவின் 3-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி பூங்கடேயச் சப்பரத்திலும், அம்மன் கேடயச் சப்பரத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் உலா வருகிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழா நிறைவு பெறுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. 4 மணியளவில் கொடிப்பட்டமானது வீதி உலா வந்தது.

    அதிகாலை 5.40 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடி மரத்தில் காப்பு கட்டிய அரிகரசுப்பிரமணிய பட்டர் கொடியினை ஏற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 7.05 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, கோவில் கண்காணிப்பாளர்கள் சீதாலெட்சுமி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பணியாளர்கள், தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் அர. கருத்தப்பாண்டி, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், தி.மு.க. நகர செயலர் வாள் சுடலை மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் காலை 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    5-ம் திருவிழாவான 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். இரவு 7.30 மணியளவில் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது.

    7-ம் திருவிழா 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தான்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவை நடக்கிறது. 8.45 மணிக்கு வெற்றிவேர் சப்ரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

    8-ம் திருவிழா நண்பகல் 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 12-ம் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடற்கரையில் மணல் சிற்பம் செய்யப்பட்டிருந்தது.
    • மணற்சிற்பத்தை செந்தூர் பசுமை இயக்க செயலாளர் ஜெயக்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    திருச்செந்தூர்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் பசுமை இயக்கம் சார்பில் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மணல் சிற்பம் செய்யப்பட்டிருந்தது.

    மணற்சிற்பத்தை செந்தூர் பசுமை இயக்க செயலாளர் ஜெயக்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். பின்னர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடை பெற்றது. இதில் திருச்செந்தூர் பசுமை இயக்கம் சார்பில் தலைவர் அருணாச்சலம், துணை தலைவர் சங்கர வடிவேல், பொருளாளர் கணேஷ் குமார் மற்றும் தமிழக மாணவர் இயக்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆவணித் திருவிழா வரும் 17-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது.
    • திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வரும் 17-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இத்திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் புகாரி தலைமை தாங்கினார். கோவில் இணை ஆணையர் கார்த்திக், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், தக்கார் பிரதிநிதியும் ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி கமிஷனர் வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், திருவிழா நாட்களில் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்வது, நகரில் 8 இடங்களில் நகராட்சி சார்பில் தற்காலிக தண்ணீர் பந்தல் அமைக்கப்படும். விழா நாட்களில் 120 தூய்மைப் பணியாளர்கள் மூன்று ஷிப்ட் முறையில் பணியாற்றுவது என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    பக்தர்களின் பாதுகாப்பு கருதி கூடுதலாக 400 போலீசாரை பணியில் ஈடுபடுத்தப்படுத்தவும், முக்கிய நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்குவது, தங்கு தடையின்றி மின்சாரம் சப்ளை செய்வது, என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகாபாய், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவி, காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அம்பிகாபதி, தீயணைப்பு நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி. அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜசேகர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன், மின்சார வாரிய இளநிலை பொறியாளர் முத்துராமன், திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கிருஷ்ண ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×