search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோல்கேட்"

    புதுவை அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    வானூர்:

    புதுவை- திண்டிவனம் 4 வழிச்சாலையில் மொரட்டாண்டி என்ற இடத்தில் டோல்கேட் உள்ளது. இங்கு வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    புதுவை நகர பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த டோல்கேட்டுக்கு புதுவைபகுதியை சேர்ந்த வணிகர்கள், தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வானூர் பகுதியை சேர்ந்த வக்கீல்கள் மகேஷ், அய்யப்பன் மற்றும் பரசுராமன், சத்தியராஜ், ஞானமூர்த்தி ஆகியோர் வானூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், புதுவை - திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டியில் டோல்கேட் உள்ளது. ஆனால் விதிப்படி புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் டோல்கேட் அமைத்திருக்கவேண்டும்.

    ஆனால், 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் டோல்கேட் அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனவே, டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்வதை தடை செய்யவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வெங்கடேசன், வருகிற 20-ந் தேதி வரை அனைத்து வாகனங்களுக்கும் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இந்த இடைக்கால உத்தரவை கோர்ட்டு ஊழியர் கொடுத்த போது, அதனை டோல்கேட் நிர்வாகத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவு, டோல்கேட் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. இதையடுத்து டோல்கேட் வழியாக சென்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

    ×