search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயிலம்"

    மயிலம் அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலம்:

    திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி பிரான்சிஸ்ராஜம் (வயது 58). இவர்களது மகன் செல்லதுரை. இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். செல்லதுரையின் மனைவி ஷெர்லிக்கு வருகிற 10-ந்தேதி சென்னையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரான்சிஸ்ராஜம் தனது உறவினர்களுடன் சென்னை செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று காலை பிரான்சிஸ்ராஜம் தனது பேத்தி தாட்னி(2½), உறவினர்கள் மோசஸ்(82), சகாயமேரி(77) மற்றும் நண்பர் ரவிச்சந்திரன்(55) ஆகியோருடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை திருச்சியை சேர்ந்த மாரிமுத்து(38) என்பவர் ஓட்டினார்.

    இந்த கார் மயிலம் அடுத்த தென்பசார் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. கார் இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மாரிமுத்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரான்சிஸ்ராஜம் உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    விபத்துகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரான்சிஸ்ராஜம், மோசஸ் ஆகிய 2 பேரும் நேற்று இரவு பரிதாபமாக இறந்தனர்.

    சிறுமி தாட்னி, சகாயமேரி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். மயிலம் முருகன் கோவிலின் 20 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.
    1. தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் மயிலத்தில் வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்கு உள்ள மயில் வாகனத்துக்குக் கிடைத்திருக்கிறது.

    2. முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

    3. கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன.

    4. மயிலம் கோவில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினை அகலும் என்பது நம்பிக்கை.

    5. மயிலம் ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது.

    6. மயிலம் முருகன் கோயில் திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது.

    7. பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

    8. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    9. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

    10. காலை 6 மணி முதல் 12மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மயிலம் ஆலயம் திறந்திருக்கும்.

    11. முருகன் தன் மனைவிகளை தேடி மயிலம் சென்றது தெய்வீகமே என்றாலும் அதற்கு காரணம் பாலுணர்ச்சியே என்று சிலர் விமர்ச்சிக்கின்றார்கள். நான்காம் நாள் திருவிழாவில் ‘திருவாட்டல்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதில் ‘வள்ளி’ அவளுடைய கணவரான முருகனை சந்திக்க மறுப்பது போன்ற காட்சி வருகின்றது. மற்ற ‘சிவன்’ ஆலயங்களில் இந்தக் காட்சியில் ‘சுந்தரர்’ மத்தியஸ்தம் செய்வது போல் இருக்க இந்த ஆலயத்தில் ‘பிரும்மா’ மத்தியஸ் தம் செய்வதாக ஐதீகம் உள்ளது.

    12. தல புராணத்தின்படி ‘சங்ககுணா’ ஒரு அசுரன். அழகில்லாத, நிலையில்லாத அசுரன். ஆகவே தான் அவன் பெயரில் உள்ள சங்க மற்றும் சங்கு என்ற வார்த்தை கள் ஒலி தரும் சங்கைக் குறிக்கும். சங்கு ஊதும் பல பூத கணங்களிலும் அவரும் ஒன்றாக இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட உருவ சிலைகள் அங்குள்ள தேர்களில் நிறையவே செதுக்கப்பட்டு உள்ளன.

    13. ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்க இரண்டு தேர்கள் செய்யப்பட்டு உள்ளன. அவற்றை பங்குனி பிரும்மோத்ச வத்தில் உபயோகிக்கின்றார்கள்.

    14. மைலத்தில் உள்ள சிற்பத்தில் கிருத்திகைகள் ஆறு குழந்தைகளாக தாமரையில் இருந்த முருகனை தங்களுடைய கரங்களில் எடுத்துக் கொள்வதைப் போன்ற காட்சி உள்ளது.

    15. தங்கும் வசதியோ, பெரிய ஹோட்டல்களோ இல்லாத கிராமம் என்பதால், தொலைதூரத்திலிருந்து வருகிறவர்கள் பக்கத்து நகரங்களில் தங்குவது உசிதம்.

    16. இதற்கு பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் எல்லாவற் றையும் தரிசிக்கும் ஏற்பாடுகளோடு பக்தர்கள் வரலாம்.

    17. வாகனங்களில் வருகிறவர்கள் நேராக மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல சாலை வசதி உள்ளது. இது தவிர நடந்து வருகிறவர்களுக்காக நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டு வழி உள்ளது.

    18. எப்போதும் அமைதி நிலவும் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.

    19. பல்வேறு பெருமை களைத் தாங்கிய மயிலம் திருத்தலத்தை அருணகிரிநாதர், ஸ்ரீசிவப் பிரகாச சுவாமிகள், வைத்திய நாத தேசிகர், பண்ருட்டி மணி அய்யர், அப்பாவு அய்யர், ஆ.சிவலிங்கனார், தியாகராஜ கவிராயர், வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள், நமச்சி வாய முதலியார், தே.ஆ.சீனி வாசன், இராஜ மாணிக்கம் நடராஜன், இரத்தின முதலியார், வீரபத்திரன், பெரிய சாமிப்பிள்ளை, திரு.வி.கலியாண சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், வே.விஜயரங்கம் உள்ளிட்ட பல்வேறு புலவர்கள் போற்றிப் பாடியுள்ளனர்.

    20. ஞாயிறு மற்றும் விழாக்காலங்களில் கோவில் முழுநேரம் திறந்திருக்கும்.
    மயிலம் முருகன் கோவில் கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோயிலைப் போலவே இந்த மலையையும் புனிதமாகக் கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்திலிருந்து பார்க்கும்போது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது.

    கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோயிலைப் போலவே இந்த மலையையும் புனிதமாகக் கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
    முருகப்பெருமானால் போரில் சூரபத்மன் தோற்கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி... மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது ‘‘என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’’ என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான்.

    மேலும் ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன்பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!’’ என்றும் கோரிக்கை வைத்தான்.

    உடனே முருகன் அவனிடம் ‘‘எதிர்காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்தார். சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.
    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் விவசாயி வீட்டின் ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் சதிஷ் (வயது 28), விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி (25). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் இருக்கும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி சாவியை கதவின் மேல் வைத்து விட்டு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 8½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.84 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    பின்னர் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும். விவசாய நிலத்துக்கு சென்றிருந்த சதிஷ், மகாலட்சுமி ஆகியோர் வீடு திரும்பினர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. இதைப்பார்த்து 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மயிலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாதி இருந்த ரேகைகளை சேகரித்தனர்.

    கொள்ளை சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    முன் விரோத தகராறில் முதியவரை கத்தியால் குத்திய விவசாயி போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கீழ்தேரடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), விவசாயி. இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

    அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாமுவேலுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ஊர் நாட்டாமை சுப்புராயன் (70) என்பவர் பஞ்சாயத்து பேசியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து சுப்புராயனுக்கும், செல்வராஜுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு சுப்புராயன் வீட்டு முன்பு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வராஜ் கத்தியால் சுப்புராயன் உடலில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து கீழே சாய்ந்து கூச்சலிட்டார். இதனை தொடர்ந்து செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சுப்புராயனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். அங்கு சுப்புராயன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவரை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சுப்புராயனை கத்தியால் குத்தியதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என செல்வராஜ் பயந்தார். இன்று அதிகாலை அவர் அதே பகுதியில் தனது அண்ணன் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலம் இன்ஸ் பெக்டர் பால்சுதர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×