search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்புதல்"

    அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக, மேலும் 2 பெட்ரோலிய பொருள் சேமிப்பு நிலையங்களை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #OilStorage #PiyushGoyal
    புதுடெல்லி:

    கடந்த 1990-ம் ஆண்டு வளைகுடா போர் வெடித்தது. அப்போது, இந்தியாவின் கைவசம் இருந்த பெட்ரோலிய பொருட்கள், 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.

    இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விலை கடுமையாக உயர்ந்தது. அதுபோன்ற நிலைமை மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில், மத்திய அரசு எச்சரிக்கையாக உள்ளது.

    அந்த அடிப்படையில், ரூ.4 ஆயிரத்து 100 கோடி செலவில், தென்னிந்தியாவில் 3 பெட்ரோலிய பொருள் சேமிப்பு நிலையங்களை அமைத்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கர்நாடக மாநிலம் மங்களூரு, படூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவை தரைக்கு அடியில் கட்டப்பட்டுள்ளன.

    இவற்றில், படூரில் மட்டும் இன்னும் எண்ணெய் சேமித்து வைக்கப்படவில்லை. மற்ற 2 இடங்களிலும் மொத்தம் 53 லட்சத்து 30 ஆயிரம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க முடியும். இவை 10 நாட்களுக்கான பெட்ரோலிய பொருள் தேவையை பூர்த்தி செய்யும்.

    இந்நிலையில், மேலும் 2 அவசர கால பெட்ரோலிய சேமிப்பு நிலையங்களை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஒடிசா மாநிலம் சந்திக்கோல் பகுதியிலும், கர்நாடக மாநிலம் படூரிலும் புதிய பெட்ரோலிய சேமிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. சந்திக்கோலில் அமையும் நிலையத்தில், 44 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க முடியும்.

    படூரில் அமையும் நிலையத்தில், 25 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க முடியும். இவற்றின்மூலம் மொத்தம் 69 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்கலாம். இவை 12 நாட்களுக்கான பெட்ரோலிய பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.  #OilStorage #PiyushGoyal  #Tamilnews
    ரூ.6 ஆயிரம் கோடிக்கு 6 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. #Helicopter
    வாஷிங்டன்:

    ராணுவ தாக்குதலில் பல்வேறு சாகசங்களை புரியும் ‘அப்பச்சி’ ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்ய இந்தியா விரும்பியது. இந்தியாவின் விருப்பத்துக்கு இணங்கியுள்ள அமெரிக்க அரசு, 6 அப்பச்சி ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ கூறியுள்ளது.

    இது குறித்து ‘பென்டகன்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அமெரிக்க நிர்வாகம் ‘வெளிநாட்டு ராணுவத்துக்கு விற்பனை’ என்ற அடிப்படையில் 930 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.6 ஆயிரம் கோடி) 6 ஏ.எச்-64இ அப்பச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.

    அத்துடன், ஹெல்பயர், ஸ்டிங்கர் ஏவுகணைகள், 14 டி700-ஜி.இ-701டி ரக என்ஜின்கள், 4 ஏ.என் மற்றும் ஏ.பி.ஜி.78 தீத்தடுப்பு ரேடார்கள், 4 ரேடார் எலக்ட்ரானிக் அலகுகள், இரவுநேர பயன்பாட்டுக்கு உதவும் சென்சார்கள் உள்ளிட்ட ஏராளமான தளவாடங்களையும் இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்து இருப்பதாக பென்டகன் மேலும் கூறியுள்ளது.

    இதுபற்றி அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ‘பென்டகன்’ தனது அறிவிக்கையை அனுப்பி வைத்துள்ளது. எந்த எம்.பி.யும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், இந்த விற்பனை விவகாரத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்.

    ‘பென்டகன்’ தனது அறிவிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

    ‘அப்பச்சி’ ரக ஹெலிகாப்டர்கள், அமெரிக்க ராணுவத்தாலும், சர்வதேச படைகளாலும் பயன்படுத்தப்படுபவை. இவற்றை பயன்படுத்துவதிலோ, தனது ராணுவத்தில் சேர்ப்பதிலோ இந்தியாவுக்கு எந்த கஷ்டமும் இருக்கப்போவதில்லை.

    தனது நாட்டை பாதுகாத்துக்கொள்ளவும், பிராந்திய அச்சுறுத்தலை சமாளிக்கவும் இந்தியாவுக்கு இது வலிமையை அளிக்கும். தனது படைகளை நவீனமயமாக்குவதற்கும் உதவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அடுத்த மாதம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மற்றும் ராணுவ மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதற்கு முன்பாக இந்த ஹெலிகாப்டர்கள் விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
    நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம் வருகிறது. இதற்கான மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. #DamSafefyBill #Cabinet
    புதுடெல்லி:

    நமது நாட்டில் 5 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இந்த அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டம் இயற்றுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வல்லுனர்களின் ஆலோசனை பெற்று இந்த சட்டம் இயற்றப்படுகிறது.



    இதற்கான மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் அணைகளை பாதுகாக்க ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும். மேலும், அணைகளை பாதுகாப்பதுடன், அந்த அணைகளின் மூலம் அடைகிற பலன்களை பாதுகாக்கவும் உதவும்.

    இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * அனைத்து அணைகளும் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில், அவற்றின் பராமரிப்பு, இயக்கம், ஆய்வு, சரியான கண்காணிப்புக்கு இந்த சட்டம் வழிகாட்டும்.

    * அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், தேவையான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு குழு அமைக்கப்படும்.

    * அணைகள் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டும் நெறிமுறைகள், பாதுகாப்பு தரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.

    * மாநில அரசுகள் அணை பாதுகாப்பு மாநில குழுக்களை அமைக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

    * டெல்லியில் பிரகதி மைதானத்தின் 3.7 ஏக்கர் நிலத்தில் தனியார் ஓட்டல் கட்டுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சிலை மறுசீரமைப்பு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

    * வேளாண் கல்வி பிரிவு, ஐ.சி.ஏ.ஆர். (இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம்) இன்ஸ்டிடியூட்டுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 225 கோடியே 46 லட்சத்தில் 3 ஆண்டு செயல்திட்டம் தீட்டி செயல்படுத்த அனுமதி தரப்பட்டது.

    * எச்.டி.எப்.சி. வங்கி தனது வர்த்தக வளர்ச்சிக்காக ரூ. 24 ஆயிரம் கோடி நேரடி அன்னிய முதலீடு பெறுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தற்போது வங்கித்துறையில் 72.62 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி உள்ளது. எச்.டி.எப்.சி. வங்கியைப் பொறுத்தமட்டில் இந்த வரம்பை கடந்து 74 சதவீத அன்னிய நேரடி முதலீடு பெற வழி வகுக்கிறது.  #DamSafefyBill #Cabinet #Tamilnews 
    சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ. 8,500 கோடியிலான திட்டத்துக்கும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
    புதுடெல்லி:

    சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ. 8,500 கோடியிலான திட்டத்துக்கும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    நாடு முழுவதும் சர்க்கரை ஆலைகள் நெருக்கடியில் உள்ளன. சர்க்கரைக்கான தேவையை விட உற்பத்தி அளவு அதிகரித்து உள்ளதால், சர்க்கரை ஆலைகள் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.9 வரை இழப்பை சந்திக்கின்றன.

    சர்க்கரை விலையில் ஏற்பட்டு உள்ள சரிவு காரணமாக கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.20 ஆயிரம் கோடிக்கு அதிகமாக பாக்கி வைத்து உள்ளன.

    இந்த பிரச்சினைகளில் இருந்து சர்க்கரை ஆலைகள் மீண்டு வருகிற வகையில் சர்க்கரை இறக்குமதி மீதான வரியை 100 சதவீத அளவுக்கு மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஏற்றுமதி வரியை ரத்து செய்தது. சர்க்கரை ஆலைகள் 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யுமாறு மத்திய அரசு கூறி உள்ளது.

    இந்தநிலையில், சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்டி, மறுவாழ்வு வழங்குகிற வகையில் ரூ.8 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு தீட்டி உள்ளது.

    இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய மத்திய மந்திரிசபை வழங்கியது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி வசதி கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ரூ.4 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * சர்க்கரை ஆலைகளில் புதிதாக எத்தனால் உற்பத்தி வசதியை ஏற்படுத்தவும், இருக்கிற வசதியை விரிவுபடுத்தவும் வழங்குகிற கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்யும் வகைக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கப்படுகிறது.

    * கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய பாக்கி தொகையை செலுத்த உதவும் வகையில் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளவும் மத்திய மந்திரிசபை தீர்மானித்தது. இதன்படி சர்க்கரை உற்பத்தி அடிப்படையில் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்கு ரூ.1,540 கோடி ஒதுக்கப்படும்.

    * சர்க்கரை கையிருப்பை அதிகளவில் வைத்திருப்பதற்காக ரூ.1,200 கோடி வழங்கப்படும்.

    சர்க்கரையில் இருந்து எடுக்கப்படுகிற எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து வாகனங்களை இயக்க முடியும். எத்தனால் கலந்தால் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    அஞ்சல் துறையில் பணியாற்றி வருகிற ஜி.டி.எஸ். என்று அழைக்கப்படுகிற கிராமப்புற தபால் அலுவலக ஊழியர்களின் சம்பளம், அலவன்சுகள் உயர்த்தப்படுகின்றன. கிராமப்புற தபால் அலுவலக ஊழியர்கள் கிளை அஞ்சல் அதிகாரி, உதவி கிளை அஞ்சல் அதிகாரி என்று இரு பிரிவின்கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

    இவர்களது சம்பளம், அலவன்ஸ் உயர்த்துவதால் மத்திய அரசுக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.1,257 கோடியே 75 லட்சம் செலவு பிடிக்கும். இதன்மூலம் 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் பலன் அடைவர்.

    நலிவு அடைந்த, நஷ்டத்தில் இயங்குகிற அரசு நிறுவனங்களை குறித்த காலத்தில் மூடுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    விண்வெளித்துறையில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டங்களை தொடர்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதற்கு ரூ.6 ஆயிரத்து 131 கோடி நிதி ஒதுக்கீடு தேவைப்படும்.

    நாடு முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்குகிற 3 லட்சம் தெரு விளக்குகளை அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது. 
    திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதில் வீடு வாங்குகிறவர்களுக்கு நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்து உள்ளது. #UnionCabinet #Bankruptcy
    புதுடெல்லி:

    மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்து உள்ளது என்று கூறினார்.

    “திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு 14 உறுப்பினர்களை கொண்ட திவால் சட்ட குழு பரிந்துரைகள் செய்து உள்ளது. அதன் அடிப்படையில், வீடுகள் வாங்குவோருக்கான நிவாரண அம்சங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளதா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு ரவிசங்கர் பிரசாத், “இது ஒரு புதிய சட்டம். நான் எல்லாவற்றையும் இங்கு சொல்லி விட முடியாது. அரசியல் சாசன மரபு என்று ஒன்று இருக்கிறது. அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிற வரையில், அதன் விவரங்கள் குறித்து நான் பேச முடியாது” என பதில் அளித்தார்.

    திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு கார்ப்பரேட் விவகாரங்கள் துறை செயலாளர் இன்ஜெட்டி சீனிவாஸ் தலைமையிலான குழு செய்த பரிந்துரையில், வீடு வாங்குகிறவர்களை பாதுகாக்கிற விதத்தில் சில புதிய விதிகளை சேர்க்குமாறு கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

    குறிப்பாக, வீடு வாங்குபவர்கள் நிதி கடன் வழங்குபவர்களாக கருதப்பட வேண்டும், அப்படி கருதப்படுகிறபோது, அவர்கள் திவால் தீர்மான செயல்முறையில் பங்கேற்க அனுமதி கிடைக்கும்.

    இந்த பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்ததா என்பது தெரியவில்லை.

    மேலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரை செய்தது. அதுவும் என்னவாயிற்று என்பது தெரியவரவில்லை.

    பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

    * உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு டென்மார்க் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டு உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.

    * நாட்டின் முதலாவது தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை மணிப்பூரில் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

    * மரபுசாரா எரிசக்தி துறையில், ஒத்துழைப்பதற்காக பிரான்ஸ், மொராக்கோ நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * பணியாளர் மேலாண்மை, பொது நிர்வாக துறைகளில் ஒத்துழைப்பதற்கு சிங்கப்பூருடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. 
    இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள் தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. #India #Nepal #ModiVisitNepal
    காட்மாண்டு:

    பிரதமர் மோடி அண்டை நாடான நேபாளத்துக்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று அவர் காட்மாண்டு அருகே பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பசுபதி நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதேபோல் மஸ்டாக் மாவட்டத்திக்கு சென்று அங்குள்ள முக்திநாத் கோவிலிலும் சாமி கும்பிட்டார். கடல் மட்டத்தில் இருந்து 12,172 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் இருவருக்குமே புனித ஸ்தலமாகும். மோடிக்கு இந்த 2 கோவில்களிலும் கோவில் நிர்வாகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.



    இதைத்தொடர்ந்து தலைநகர் காட்மாண்டு திரும்பிய மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலியுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள்(2015-ல் நேபாள நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டம் அறிவிக்கப்பட்ட தினம்) தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.

    குறிப்பாக சரக்குகளை கையாளுதல், வர்த்தகம், நேபாளத்துக்கு மேலும் 4 வழித்தடங்களில் விமான போக்குவரத்து, எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைத்தல், எரிசக்தி பகிர்வு, டெராய் பகுதியில் 1,000 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைத்தல், உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்படும் என்று இரு நாடுகளின் அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    தனது 2 நாள் நேபாள சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை மோடி நாடு திரும்பினார்.  #India #Nepal #ModiVisitNepal 
    ×