search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிஐசிஐ"

    ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் விவகாரத்தில், சி.பி.ஐ.க்கு அருண் ஜெட்லி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #ICICIBank #ArunJaitley #CBI
    புதுடெல்லி:

    ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தலைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கொச்சாரின் கணவர் தீபக் நடத்திய நிறுவனத்தில் வீடியோகான் குழுமம் முதலீடு செய்தது. அதற்கு பதிலாக, வீடியோகான் நிறுவனத்துக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் ரூ.3,250 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால், சந்தா கொச்சார் பதவி விலகினார்.

    இந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ., சந்தா கொச்சார், கணவர் தீபக், வீடியோகான் நிர்வாக இயக்குனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது கடந்த 22-ந்தேதி வழக்கு பதிவு செய்தது.

    அடுத்தபடியாக, வீடியோகான் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த தகவல் கசிந்ததாக சி.பி.ஐ.க்கு சந்தேகம் எழுந்தது. உள்மட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு சுதன்சு தார் மிஸ்ராவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர் விசாரணை அதிகாரி பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். புதிய விசாரணை அதிகாரியான மொகித் குப்தாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு, வீடியோகான் நிறுவனம் தொடர்பான இடங்களில் 24-ந்தேதி சோதனை நடத்தப்பட்டது.

    இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவர் கே.வி.காமத், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி தலைமை செயல் அதிகாரி ஜரின் தாருவாலா உள்ளிட்ட வங்கியாளர்களிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

    இதற்காக, சி.பி.ஐ.க்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வழக்கில் குறிவைக்கப்படுபவர்களின் பட்டியலை படித்து பார்த்தவுடன், என் மனதில் ஒரு சிந்தனை ஓடியது. இலக்கின் மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக, இல்லாத ஊருக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. ஒட்டுமொத்த வங்கி துறையினரையும், ஆதாரத்துடனோ, ஆதாரம் இன்றியோ வழக்கில் சேர்த்தால், அது உண்மையில் துன்புறுத்துவதாகவே அமையும்.

    எனவே, மகாபாரதத்தில் அர்ஜூனனின் அறிவுரையை பின்பற்றுங்கள். பறவையின் கண் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபற்றி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில், “சிறிய அளவிலான பணம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சரமாரியாக குறிவைக்கப்பட்டபோது, மத்திய அரசு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் தொடர்பான வழக்குகளில், வங்கியாளர்கள் குறிவைக்கப்படும்போது, அருண் ஜெட்லியின் மனசாட்சி விழித்துக்கொண்டது ஏன்?” என்றார்.
    ×