search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர்"

    கனமழை காரணாக நீலகிரி, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. #TNRain #SchoolHoliday #RedAlert
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை பெய்து வரும் பகுதிகளில், சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக திண்டுக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளார்.



    திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில்  பள்ளி,  கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று  விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை நாட்காட்டியின்படி இன்று மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். #TNRain #SchoolHoliday #RedAlert
    ஜெயில்களில் சோதனை நடத்துவது காலம் கடந்த நடவடிக்கை என்று நல்லக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TNPrisons #Nallakannu

    நாகர்கோவில்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புழல் ஜெயிலில் கைதிகள் அறையில் பயன்படுத்தப்பட்ட டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் துணை இல்லாமல் ஜெயிலுக்குள் டி.வி. கொண்டு செல்ல முடியாது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது தமிழகம் முழுவதும் ஜெயில்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனை காலம் கடந்து நடத்தப்படும் நடவடிக்கை ஆகும்.

    தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாக கூறி வருகிறார்கள். ஆனால் மின்சாரம் தட்டுப்பாடு உள்ளது. இதை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


    27 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதில் சட்ட சிக்கலும் இல்லை. மக்கள் ஆதரவும் அளித்துள்ளனர். எனவே அவர்களை தாமதம் இல்லாமல் உடனே விடுதலை செய்ய வேண்டும்.

    தமிழக அமைச்சர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயபாஸ்கர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.

    ஆட்சியை தக்க வைக்க வேண்டும், வரும் தேர்தலை அதிகாரத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொண்டே அவர்கள் செயல் படுகிறார்கள். மக்களை பற்றி கவலைப்பட வில்லை. ஜனநாயக விரோத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

    அ.தி.மு.க. அரசு பாரதிய ஜனதாவின் கை பொம்மையாக உள்ளது. எச். ராஜா உள்பட ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் வரைமுறை இல்லாமல் பேசுகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தூத்துக்குடிக்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் வந்தபோது, அதே விமானத்தில் வந்த மாணவி சோபியா பாரதிய ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டதால் அவர் கைது செய்யப்பட்டும், அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கிய பிறகு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பிரதமர் மோடியும் காலம் கடந்து வந்தே இங்கு பார்வையிட்டனர். அப்போது அவர்கள் அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, மலை வாழ் மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை.

    நாகர்கோவிலில் தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான அடிப்படை வசதி பற்றி அரசு கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPrisons #Nallakannu

    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தை அடுத்த சாமியார் பேட்டை, காயல்பட்டு மதுரா, அய்யம்பேட்டை, சிலம்பிமங்கலம் மதுரா ஆகிய கிராமங்களில் உள்ள கடற்கரையில் இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    கடலூர்:

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சுனாமி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மாதிரி சுனாமி ஒத்திகை பயிற்சியை நடத்தியது.

    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தை அடுத்த சாமியார் பேட்டை, காயல்பட்டு மதுரா, அய்யம்பேட்டை, சிலம்பிமங்கலம் மதுரா ஆகிய கிராமங்களில் உள்ள கடற்கரையில் இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், அரசு அலுவலர்கள், டாக்டர்கள், நீச்சல் வீரர்கள், பேரிடர் மீட்பு குழு என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஒத்திகை பயிற்சியில் முதலில் ஒலிபெருக்கி மூலம் கடலோர கிராமங்களில் சுனாமி குறித்து எச்சரிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சுனாமியில் சிக்கியவர்களை எப்படி மீட்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். பின்னர் சுனாமியில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து அரசு டாக்டர்கள் விளக்கமளித்தனர்.

    சுனாமி அறிவிப்பு வந்த உடனே பொதுமக்கள் பீதியடையாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை நீச்சல் வீரர்கள் மாநில பேரிடர் மீட்புக்குழு, மருத்துவ குழு உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் மற்றும் கடலூர் மாவட்ட போலீசார் 150-க்கும் மேற்பட்டோர் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து படகு, லைப்ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாகனத்தில் எடுத்துக்கொண்டு சிதம்பரம் சாமியார்பேட்டை உள்ளிட்ட சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெறும் இடங்களுக்கு சென்றனர்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகளின் வசதிக்காக புதிதாக 14 குடிநீர் குழாய்கள் அமைக்கப்படுகிறது.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் மிகவும் பழமையான ரெயில் நிலையம். பஸ்நிலையத்துக்கு அருகாமையில் ரெயில் நிலையம் அமைந்து இருப்பதால் இங்கு ஏராளமான பொதுமக்கள் ரெயில் பயணம் செய்ய வருகிறார்கள். இதனால் 24 மணி நேரமும் பயணிகள் வந்து சென்றவண்ணம் இருப்பதை பார்க்க முடிகிறது.

    ஆனால் பயணிகளின் வருகைக்கு ஏற்ப போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ரெயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட திருச்சி கோட்ட அதிகாரிகள், திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்க இருப்பதாகவும், ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என தெரிவித்தார்.

    அதன்படி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த டிக்கெட் முன்பதிவு மையம் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    மேலும் ரெயில் நிலைய நடைமேடையில் பயணிகளின் வசதிக்காக 14 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நடைமேடையை உடைத்து குழாய்கள் அமைக்கும் பணியும், கட்டிடங்களை சீரமைக்கும் வகையில் வர்ணம் பூசும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் தற்போது நடைபெறும் சீரமைப்பு பணியின் போதே, ரெயில் நிலையத்தில் கழிப்பறை, மேற்கூரை போன்ற வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    கடலூரில் இன்று காலை பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் பவித்ரா (வயது 15). இவரது தாய்-தந்தை இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர்.

    இதனால் பவித்ரா தனது உறவினர்களால் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக சேவை இல்லத்தில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு விடுமுறைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் சேவை இல்லத்துக்கு வந்த அவர் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.

    பள்ளி முடிந்து சேவை இல்லத்துக்கு வந்த பவித்ரா முன்புபோல் யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை பவித்ரா தங்கி இருந்த அறைக்கு சென்ற அவரது தோழிகள் அவர் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது சேவை இல்லத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பவித்ரா சுடிதாரின் துப்பட்டாவில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து மற்ற மாணவிகள் சேவை இல்ல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் புதுநகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பவித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக ரெயில் சேவைகள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழகத்தில் விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் சூரிய ஒளி மின்நிலையத்தை அமைத்துள்ளது.

    இந்த 300 மெகாவாட் சூரிய ஒளிமின் நிலையத்தை மத்திய மந்திரி பியூஷ் கோயல் நெய்வேலியில் நடந்த விழாவில் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    இதை தொடர்ந்து, என்.எல்.சி. இந்தியா நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வுத்துறையுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி பணிக்கான ஒப்பந்தம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தானது.

    அதன்பின்னர் மத்திய மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்.எல்.சி. நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வடமாநிலத்துக்கு ரெயில் மூலம் நிலக்கரி எடுத்து செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம்-கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக ரெயில் சேவைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இயக்கப்படும் அந்த் தோதியா ரெயில் கடலூர் மாவட்டத்தில் நின்று செல்ல வேண்டும் என என்.எல்.சி.நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த ரெயில் கடலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் வேலை கேட்கிறார்கள். வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை என்.எல்.சி.நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால் வேலை அவர்களுக்கு உறுதியானது அல்ல. என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் போதிய ஊதியம் வழங்கவில்லை என கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சராசரி ஊதியத்தை விட அதிகமாக வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

    பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சத்தியசீலன், ஆயுதப்படை போலீஸ்காரர். இவரது மனைவி கவிதா (வயது 27). இவர் கடலூர் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை வேலையை முடித்துவிட்டு கவிதா வீட்டுக்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த கவிதா திடீரென வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கவிதாவின் உறவினர்கள் கூறும்போது, பணிச்சுமை, தொடர் வேலைகாரணமாக கவிதா மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கவிதா தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றனர்.

    இதுகுறித்து புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கு தீவைத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் தினமும் இரவு குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு 11.30 மணிக்கு அந்த பஸ் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    பஸ்சுக்குள் டிரைவரும், கண்டக்டரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.

    திடீரென்று அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சின் டயருக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அப்போது பஸ்சுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த டிரைவர்-கண்டக்டர் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் பஸ்சின் டயர் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியடித்து வெளியே வந்து கூச்சலிட்டனர்.

    அவர்களது சத்தம் கேட்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஓட்டலில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் டயர் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இது குறித்து தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் அந்த பஸ்சுக்கு மாற்று டயர் பொருத்தப்பட்டு உடனே கடலூர் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அரசு டவுன் பஸ்சுக்கு தீ வைத்த மர்ம மனிதர்கள் யார்? என்று போலீசார் தேடிவருகிறார்கள். மேலும் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது செம்மேடு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காலனிசுடுகாடு அருகே கெடிலம் ஆற்றங்கரையோரம் 37 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில், அரை நிர்வாணத்துடன் பிணமாக கிடந்தார். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசுக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் குமரய்யா, தாசில்தார் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.

    பிணமாக கிடந்த வாலிபரின் தலை நசுக்கப்பட்டிருந்தது. கையில் அரிவாள் வெட்டு இருந்தது. வலது கையில் ஸ்வஸ் த்திக் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. அவரது உடல் முழுவதும் என்ஜீன் ஆயில் ஊற்றப்பட்டிருந்தது. பிணமாக கிடந்தவர் யார்? எந்தஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    போலீஸ்சூப்பிரண்டு விஜயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை துரிதப்படுத்தினார். முதற்கட்ட விசாரணையில் வாலிபர் தலையில் கல்லைபோட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கொலையை மறைப்பதற்காக உடலில் என்ஜின் ஆயில் ஊற்றி எரிக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.

    செம்மேடு சுடுகாடு அருகே இதற்கு முன் ஏற்கனவே வெளியூரை சேர்ந்த ஒருவரை கொலை செய்து இங்கு வந்து போட்டுவிட்டு தப்பிய சம்பவம் நடந்தது. அதேபோல் தற்போதும் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. எனவே அந்த நபரை யாரேனும் கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவர் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவரா? அல்லது உள்ளூரை சேர்ந்தவரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செம்மேடு பகுதியில் மணல் திருட்டு அடிக்கடி நடைபெறுகிறது. எனவே மணல் கடத்தலில் ஏற்பட்ட தகராறில் யாரேனும் வாலிபரை கொலை செய்தனரா? எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.

    இந்த கொலை தொடர்பாக செம்மேடு மற்றும் ஏரிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களில் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காணாமல் போனவர்களின் விபரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

    இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து 8-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சு.கீணனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 40).

    இவரது மகள் மகாலட்சுமி(13) இவர் கம்மாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை 8.30 மணியளவில் மகாலட்சுமி பள்ளிக்கூடத்துக்கு சென்றார். அங்குள்ள பள்ளி வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அங்கு இருந்த மற்ற சக மாணவ-மாணவிகள் அவரை மீட்டு கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த நர்சு, மகாலட்சுமியின் உடலை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினார்.

    மகாலட்சுமி இறந்த தகவல் அவரது பெற்றோருக்கும், உறவினருக்கும் தெரியவந்தது. அவர்கள் அலறியடித்துக்கொண்டு கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திரண்டு வந்தனர். மகாலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாததால் மாணவி மகாலட்சுமி இறந்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். பின்னர் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே மாணவி இறந்ததை தொடர்ந்து அவருடன் படித்து வந்த மாணவ, மாணவிகள் விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ராஜாதாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தினர்.

    இந்தசம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி 13 கிலோ மனுக்களை தலையில் சுமந்தபடி மூதாட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்நேற்று குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கையில் மனுக்களுடன் வந்திருந்தனர்.

    அப்போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா கூத்துக்குடி புதுக்காலனியை சேர்ந்த மூதாட்டி குண்டுப்பிள்ளை(வயது 62) என்பவர், தனது மகன் குமாரவேலுவுடன் 13 கிலோ எடை கொண்ட கோரிக்கை மனுக்களை தலையில் சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர்கள் மனு நகல்களின் மூட்டையையும், புதிதாக கொடுக்க இருந்த மனுவையும் கலெக்டர் தண்டபாணியிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா, ஐவதுகுடி கிராமத்தில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டனர். இதை மீட்டு தரக்கோரி 11 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள், அமைச்சர்கள் என இதுவரை நான் கொடுத்த மனுக்களின் மொத்த எடை 13 கிலோ ஆகும்.

    இதோ அந்த மனுக்களின் நகல்கள். நல்லது நடக்க வேண்டும் என்றால் தீக்குளிக்கத்தான் செய்யணும். 11 ஆண்டுகளுக்கு முன்பு நான் குண்டாக இருந்தேன். மனுகொடுக்க அலைந்து மெலிந்து விட்டேன் என்றார்.

    உடனே கலெக்டர் தண்டபாணி, தீக்குளித்து விடாதீர்கள், மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். பின்னர் அந்த மூதாட்டி மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    கடலூரில் இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் உறவினரின் பெண்ணுக்கு வாலிபர் தாலிகட்டினார்.
    பண்ருட்டி:

    கடலூரை சேர்ந்தவர் அழகேசன் (வயது 28), பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஆசைமுத்து மகள் ரஞ்சிதம் (வயது 24) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி இரு வீட்டார்களும் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவந்தனர். இவர்களது திருமணம் இன்று கடலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் மணமகள் ரஞ்சிதம் கூறி விட்டு சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் ரஞ்சிதத்தை தேடினர். உறவினர் மற்றும் தோழிகளிடம் விசாரித்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் ரஞ்சிதத்தின் தந்தை ஆசைமுத்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரஞ்சிதத்தை தேடினர். மணமகள் மாயமானதை அறிந்த மணமகன் அழகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இன்று திருமணம் நடைபெற இருந்த கடலூர் தனியார் திருமண மண்டபத்துக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்தனர். மாயமான மணமகள் ரஞ்சிதத்தை இன்று காலை வரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே திருமண மண்டபத்துக்கு வந்திருந்த உறவினர் ஒருவரிடம் அழகேசனுக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்துதர விருப்பமா? என மணமகனின் பெற்றோர் கேட்டனர். அதற்கு அந்த பெண்ணின் பெற்றோரும் சம்மதித்தனர்.

    இதைத்தொடர்ந்து உறவினர் மகளும் அழகேசனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து புதுமணப்பெண்ணை அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். அழகேசன் அந்த மணப்பெண்ணின் கழுத்தில் குறித்த முகூர்த்த நேரத்தில் தாலிகட்டினார். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினர். திடீரென மணப்பெண்ணாக மாறிய பெண்ணை அனைவரும் பாராட்டினர். #Tamilnews
    ×