search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிக்கல்"

    மதுரையில் நாளை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். #PMModi #AIIMS
    மதுரை:

    டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்தது.

    இங்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க பல்வேறு இடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இறுதியாக அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, ரூ.1,264 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகள் தொடங்கின. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.



    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

    இதே விழாவில் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நாளை காலை டெல்லியில் இருந்து புறப்படுகிறார். பகல் 11.20 மணிக்கு விமானம் மதுரை வந்தடைகிறது.

    விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பிரதமர் மோடி, 3 கி.மீ. தொலைவில் உள்ள மண்டேலா நகர் செல்கிறார். பின்னர் விழாவில் பங்கேற்று ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பின்னர் அரசு விழா நடைபெறும் இடத்தின் அருகே நடைபெறும் பா.ஜனதா மண்டல மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து தொண்டர்களிடம் பிரதமர் மோடி பேசுகிறார்.

    அதன் பிறகு பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் கொச்சி செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விமான நிலையம் முதல் விழா திடல் வரை அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    விழா நடைபெறும் திடலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசு விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மதுரை கலெக்டர் நடராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பா.ஜனதா மாநாட்டு ஏற்பாடுகளை கட்சியின் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

    தேசிய பாதுகாப்பு படை ஐ.ஜி. குப்தா தலைமையிலான குழுவினர் மதுரை வந்து பிரதமர் மோடி பங்கேற்க உள்ள விழா திடல்களை ஆய்வு செய்தனர்.

    அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். பிரதமர் நிகழ்ச்சி முடியும் வரை அந்தப்பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #PMModi #AIIMS


    மதுரையில் ரூ.354 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். #SmartCity #MaduraiSmartCity
    மதுரை:

    ரூ.345 கோடி மதிப்பிலான திட்டத்தின் மூலம் மதுரை நகரம் சீர்மிகு நகரமாக மாற்றப்படுகிறது.

    மத்திய அரசின் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் மதுரையில் ரூ.1000 கோடி மதிப்பில் நகர் நவீன மயமாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக ரூ.345 கோடி செலவில் மதுரையை சீர்மிகு நகரமாக மாற்ற மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த நிதியில் இருந்து ரூ.160 கோடி செலவில் மிக பழமையான பெரியார் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையங்கள் இணைக்கப்பட்டு நவீனமயமாக்கப்படுகிறது. மேலும் ரூ.81 கோடி செலவில் ராஜா மில் சாலை முதல் குருவிக்காரன்சாலை வரையுள்ள வைகை ஆற்றங்கரை புனரமைப்பு செய்யப்படுகிறது.

    ரூ.40 கோடி செலவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் நவீன வாகனங்கள் நிறுத்தும் இடம், புராதன அங்காடி மையம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம் அமைக்கப்படுகிறது.


    ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பெரியார் பஸ் நிலையத்தின் மாதிரி தோற்றம்

    ரூ.2½ கோடியில் பெரியார் பஸ் நிலையம் அருகில் சுற்றுலா பயணிகளுக்கு தகவல் மையம், ரூ.22 கோடி செலவில் புராதன சின்னங்களை இணைக்கும் புராதன வழித்தடம், ரூ.4 கோடி மதிப்பில் ஜான்சிராணி பூங்கா அருகே சுற்றுலா பயணிகளுக்கான வருகை மையம் மற்றும் அங்காடி மையம்.

    ரூ.8 கோடி செலவில் குன்னத்தூர் சத்திரத்தில் வணிக வளாகம் அமைத்தல், ரூ.15 கோடி செலவில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் சீரமைப்பு, ரூ.12 கோடி செலவில் திருமலைநாயக்கர் மகாலை சுற்றி உள்ள பகுதிகள் மேம்படுத்தல் ஆகிய பணிகள் முதல் கட்டமாக செய்யப்பட உள்ளன.

    இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா பெரியார் பஸ் நிலைய பகுதியில் இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு நகராட்சி நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் நடராஜன் வரவேற்று பேசினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ‘ஸ்மார்ட்சிட்டி’ பணிக்கான அடிக்கல்லை நாட்டி சிறப்புரையாற்றினார்.

    அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோரும் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசினர். மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் நன்றி கூறினார்.

    இந்த ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டப்பணிகள் தொடங்குவதையொட்டி பெரியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் காலி செய்யப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தை இன்னும் ஓரிரு நாளில் மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிகமாக பஸ் நிலையங்கள் அமைப்பது குறித்து வருகிற 21-ந்தேதி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்துத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது, போக்குவரத்தை மாற்றி அமைப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து மதுரையின் மைய பகுதியான பெரியார் பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது.

    ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தை 1½ ஆண்டுகளில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் ஏற்பட்டுவிடும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.  #SmartCity #MaduraiSmartCity
    வருகிற 27-ந்தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்க திட்டமிட்டுள்ளார். #PMModi #MaduraiAIIMS
    மதுரை:

    மதுரை அருகே தோப்பூரில் ரூ.1264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலஆர்ஜிதம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் திட்டங்களை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டுகிறார்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் தென்னக ரெயில்வேயின் பல்வேறு திட்டப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மதுரை-சென்னை இடையிலான அதிநவீன தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.

    மோடி பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் நடத்துவதா? அல்லது மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்தலாமா? என்பது குறித்தும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகின்றன.

    பிரதமர் நிகழ்ச்சி நடைபெறும் இடம் இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து மதுரை ரிங் ரோடு மண்டேலா நகரில் பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்கும் மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக தனியாருக்கு சொந்தமான 120 ஏக்கர் பரப்பளவிலான இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த இடத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திடல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் மோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். எனவே மதுரை உள்ளிட்ட 10 பாராளுமன்ற தொகுதிகள் அடங்கிய பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க பா.ஜனதா நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.



    மேலும் மாநாட்டு மைதானத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மாநில பா.ஜனதா செயலாளரும், பிரதமரின் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளருமான சீனிவாசன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு பரிசாக தந்து விட்டு பிரதமர் மோடி மக்களை சந்திக்கிறார்.

    அரசியல் களத்தில் மதுரை மிகவும் ராசியான ஊர் என்பதால் அன்றைய தினம் நடைபெறும் பா.ஜனதா மாநாட்டில் பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் மதுரையில் இருந்தே தொடங்குகிறார்.

    மதுரை உள்ளிட்ட 10 பாராளுமன்ற தொகுதிகள் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi #MaduraiAIIMS
    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் கர்த்தார்பூர் தனிப்பாதைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார். #KartarpurSahibcorridor #Sikhtemple #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    சீக்கிய மதத்தவர்களின் முதன்மை குருவான குரு நானக் தேவ் என்பவருக்கு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் மிக பிரமாண்டமான பொற்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்தியாவின் பல மாநிலங்களிலும், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் குர்த்துவாரா என்றழைக்கப்படும் சீக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளன.

    அவ்வகையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நரோவால் மாவட்டம், ஷக்கார்கர் அருகேயுள்ள கர்த்தார்பூரில் ராவி ஆற்றின் கரையில் குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. சீக்கிய குருவான குரு நானக் தேவ் 18 ஆண்டுகள் வாழ்ந்த அந்த இடம், சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் குருத்துவாராவுக்கு சீக்கியர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப்பின் குருதாஸ்பூர் இருந்து பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைவரை தனிவழி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
     
    இதற்காக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கில் இருந்து சர்வதேச எல்லை வரை சீக்கிய ஆன்மிகப் பயணிகளுக்கு தனிவழி அமைக்கும் சாலை பணிகளுக்கு  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 26-ம் தேதி  அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி, விஜய் சம்பாலா, பஞ்சாப் முதல் மந்திரி கேப்டன் அம்ரீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பாதையை அமைக்கும் பணிகளை இன்னும் 4 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.



    இதேபோல், பாகிஸ்தான் நாட்டு எல்லையில் இந்த பாதையை இணைக்கும் சாலைக்கான பணிகளுக்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து வந்துள்ள மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி, பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  #KartarpurSahibcorridor #Sikhtemple #ImranKhan 
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அறுபதாயிரம் கோடி ரூபாய் அளவில் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு புகழாரம் சூட்டினார். #Modi #UP #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்காக இன்று பல்வேறு தொழில்நிறுவனங்களின் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்திரா காந்தி பிரட்டிஸ்தான் பகுதியில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உ.பி முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், உ.பி கவர்னர் ராம் நாயிக், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பல மத்திய மாநில மந்திரிகள் பங்கேற்றனர்.

    சுமார் 60 ஆயிரத்து 228 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார். இந்த திட்டங்களில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 10 ஆயிரம் கோடியும், பி.எஸ்.என்.எல் நிறுவனம் 5 ஆயிரம் கோடி ரூபாயும் தங்களது முதலீடுகளாக அளித்துள்ளனர்.

    மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், டாடா நிறுவனம் மற்றும் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் தலா 5 ஆயிரம் மற்றும் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாயும் தங்களது முதலீடுகளாக அளிக்க உள்ளனர். மேலும், இதுபோன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைப்பதற்கான முதலீடுகளை அளிக்க உள்ளனர்.



    இந்த திட்டங்கள் செயல்முறைக்கு வரும்போது சுமார் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் இந்த அடிக்கல் நாட்டு விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இது ஒரு வரலாற்று சாதனையான நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார். மேலும், முந்தைய உத்தரப்பிரதேச அரசு மாநிலத்தின் வளர்ச்சியின் மீது தெளிவான நோக்கம் இல்லாமல் ஆட்சி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போது நாடு சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும், 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களே காரணம் என மோடி சாடியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் முழு வளர்ச்சியையும் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் சிறப்பாக செய்துமுடிப்பார் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், செல்போன் தயாரிப்பதில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி 2019 மார்ச் மாதத்துக்குள் மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி அளிக்கப்படும் எனவும் மோடி உறுதியளித்துள்ளார். #Modi #UP #YogiAdityanath
    ×