search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதக்கங்கள்"

    சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், வீர தீர செயல்களுக்கான பதக்கங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #RepublicDay #RepublicDay2019 #BraveryAwards
    சென்னை:

    நாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் கோலாகலமாக விழா நடைபெற்றது. விழாவின் துவக்கமாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    அதன்பின்னர் வீரதீர செயல்களுக்கான பதக்கங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை திருமங்கலம் டிவி நகரைச் சேர்ந்த சூர்யகுமார், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மேலையூரைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோருக்கு வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.



    2018ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி மருத்துவர் அமுதாவிடம் செயின் பறித்து தப்பி ஓடிய கொள்ளையனை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த, துணிச்சல் மிக்க செயலுக்காக சூரியகுமாருக்கும், 2018 மார்ச் 11ல் குரங்கணி தீ விபத்தில் 8 பேரை காப்பாற்றியதற்காக ரஞ்சித்குமாருக்கும், 2018 டிசம்பர் மாதம் 2ம் தேதி வெள்ளங்கி ஏரியில் விழுந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை காப்பாற்றியதற்காக ஸ்ரீதருக்கும் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் பதக்கங்களையும் முதலமைச்சர் வழங்கினார். இதேபோல் புதுக்கோட்டை வடக்கு செட்டியாபட்டியைச் சேர்ந்த விவசாயி சேவியருக்கு வேளாண்மைத்துறை சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    விருது பெற்றவர்கள் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பின்னர் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. #RepublicDay #RepublicDay2019 #BraveryAwards
    ×