search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க"

    ஒடிசாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் அனைத்து அமைப்புகளையும் அடக்கியாள ஆர்எஸ்எஸ் நினைக்கிறது என குற்றம்சாட்டினார். #RahulGandhi
    புவனேஷ்வர்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசா மாநிலத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று சென்றார். புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    நாடு முழுவதும் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து அமைப்புகளையும் அடக்கியாள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

    பா.ஜ.க.வின் தாய் கழகமாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. கல்வி, நீதித்துறை என அனைத்திலும் அவர்கள் ஊடுருவி உள்ளனர். நடுத்தர மக்கள் கோடிக்கணக்கில் பணம் செலுத்தியும் தரமான கல்வி கிடைப்பதில்லை. மருத்துவ துறையிலும் இதே நிலை தான். இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும்.



    கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாற்றம் வேண்டும். இந்தியாவில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் வேலைவாய்ப்பு பெரிய சவாலாக உள்ளது. நாங்கள் மக்களின் தேவைகளை கேட்கிறோம்.

    மோடி என்னை வசைபாடும் போது எல்லாம் அவர் என்னை கட்டியணைத்துக் கொள்வதை போல் நினைத்துக் கொள்கிறேன். மோடிக்கு என்னிடமும், எனக்கு மோடியிடமும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. அவரை எதிர்க்கிறேன். அவர் பிரதமராக இல்லாமல் இருந்திருந்தால் அவரை நான் வெறுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். #RahulGandhi
    ம.பி.யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சி ஏழை மற்றும் விவசாயிகளுக்காக பாடுபடும் கட்சி என தெரிவித்தார். #AmitShah
    போபால் :

    மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைவதால் வரும் நவம்பர் 28-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    இதனிடையே அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. மலை மாவட்டமான ஜபுவாவில் பாஜக ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று உரையாற்றினார்.

    அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிக்க ராகுல் காந்தி வருவார், காங்கிரஸ்காரர்கள் வருவார்கள், வளர்ச்சி பற்றி பேசுவார்கள், ஜாதி மதத்தை பற்றி பேசுவார்கள். ஆனால், அதிகாரத்துக்கு வந்தவுடன் மக்களைப் பற்றி பேசியது எல்லாம் மறந்துவிட்டு மக்களுக்கான(பழங்குடியினர்) நலத்திட்ட பணத்தை அவர்களின் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார்கள்.

    ஆனால், பாரதிய ஜனதா கட்சியோ ஏழைகள், விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் கட்சி. எங்கள் ஆட்சியில் நலத் திட்டங்களுக்கான பணத்தை மக்களின் வீட்டுக்கு கொண்டு சேர்ப்போம். மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. ஆனால், ஜபுவா மாவட்டத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

    நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த போது, பிரதமர் மோடி இந்த ஆட்சி ஏழைகளுக்கும், விவசாயிகளுக்குமான ஆட்சி என தெரிவித்தார். இந்த வார்த்தைகள் அவரின் இதயத்தில் இருந்து நேரடியாக வந்ததாகும்.

    காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்களுக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்படவில்லை, ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஆதிவாசி கல்யான் மந்த்ராலயா ஏற்படுத்தப்பட்டது.

    இந்த மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் கேட்கிறேன் பழங்குடியினருக்கு என உங்கள் ஆட்சியின் போது பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என கூற முடியுமா? ஆனால், பாஜக ஆட்சியில் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். #AmitShah
    மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே உள்ள மர்ம கூட்டணி அம்பலமாகியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் நலன்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல், தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தன் சம்பந்தியின் ‘பார்ட்னர்’ வருமான வரித்துறை சோதனையில் சிக்கிக்கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக, மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, தன்னை எப்படியாவது ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றிவிடுங்கள் என்று சுயநலத்தின் உச்சமாக விண்ணப்பம் வைத்திருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கும் முற்றிலும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்க்க முதுகெலும்பின்றி, வருமான வரித்துறை சோதனையில் மிரண்டு, நடுங்கி பா.ஜ.க.விடம் மண்டியிட்டு, ஆதரவு தெரிவித்துள்ள முதல்-அமைச்சரும், தமிழ்நாட்டின் சுயமரியாதையை டெல்லி துரைத்தனத்திடம் மொத்தமாக அடகு வைத்திருக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்களும் தமிழக மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார்கள்.

    தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் பினாமி கம்பெனியாகச் செயல்படுகிறது என்பது தற்போது நூற்றுக்கு நூறு சதவீதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. “எங்களுக்குள் அரசு ரீதியான உறவு மட்டுமே இருக்கிறது” என்று இதுவரை வாய்கிழியப் பேசி வந்த அ.தி.மு.க பா.ஜ.க.வினரின் முகமூடி இப்போது கிழிந்து தொங்குகிறது. கண்ணை மூடிக்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்ததன் மூலம் “பா.ஜ.க. - அ.தி.மு.க.” இடையே உள்ள மர்மக் கூட்டணியும் அம்பலமாகிவிட்டது.

    திடீரென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு 4 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சருடைய சம்பந்தியின் பார்ட்னரின் நிறுவனங்களில் வருமான வரித்துறையை ஏவி சோதனை செய்த உள்நோக்கம் பா.ஜ.க.விற்கு நிறைவேறிவிட்டது. ஆகவே, அ.தி.மு.க. எம்.பி.க்களை வளைத்துப்போடுவதற்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு எடுத்த “பிரத்யேக முயற்சி” தான் இந்த வருமான வரித்துறை சோதனையே தவிர ஊழலை ஒழிக்கும் நடவடிக்கை அல்ல என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

    இதுவரை தமிழ்நாட்டு நலன்களை வஞ்சிப்பதில் அ.தி.மு.க. - பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்துச் செய்த துரோகம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்திருப்பதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக நம்பகத்தன்மை வாய்ந்த வருமான வரித்துறையை துஷ்பிரயோகம் செய்து அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு, மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசையும் மறைந்திருந்த பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதால், தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்; ஊழல் அ.தி.மு.க.வுடனோ வேறு எந்த வழியிலோ தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வை ஒரு போதும் தி.மு.க. அனுமதிக்காது; எப்போது தேர்தல் வந்தாலும் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
    தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். #Amitsha
    சென்னை :

    பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதல்கட்டமாக பாஜக சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன் ஒருபகுதியாக, தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா தனி விமானத்தில் இன்று சென்னை வந்தடைந்தார். அவரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் இருந்து வி.ஜி.பி. தங்க கடற்கரைக்கு செல்லும் அவர், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அதைத்தொடர்ந்து, பா.ஜ.க. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தில் மாலை 4 மணியளவில் பங்கேற்கும் அமித்ஷா, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை கட்சியின் சக்தி மற்றும் மகா சக்தி கேந்திரா அமைப்பின் பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடுவார் என பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×