search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 135775"

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • 16 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முஹம்மத் சைபுல் மற்றும் ஏட்டு குமரன் தலைமையிலான போலீசார் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 16 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மீண்டும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

    • பூங்காவில் சுற்றுலா பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடந்தது.
    • குழந்தைகள் டிராக்டர், ரெயிலில் ஏறி பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

    கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் துவக்கி வைத்தனர்.

    இந்த கண்காட்சியில் பல்வேறு துறை அரங்க ங்களும் இடம்பெற்றிருந்தன.

    இதில் குறிப்பிடும்படியாக கூடலூர் நகராட்சியை சேர்ந்த அரங்கமானது பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    தூக்கி எறியப்பட்ட பழைய பொருட்களில் இருந்து பிரம்மாண்டமான பட்டாம்பூச்சி, டயர்களில் வடிவமைக்கப்பட்ட பூந்தொட்டிகள், டிராக்டர், புகைவண்டி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    இது அங்கு வந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குழந்தைகளை கவர்ந்திழுத்தது. குழந்தைகள் டிராக்டர், ரெயிலில் ஏறி பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தாவரவியல் பூங்கா வி ற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் இந்த வடிவமைப்பின் முன் நின்றும், தங்கள் குழந்தைகளை அமர வைத்தும் புகைப்படம் மற்றும் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

    • மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்து.
    • கிலோ ரூ.4க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது. அப்போது மஞ்சூர், தங்காடு, மணலாடா, இத்தலார், எம்.மணியட்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிளில் மாற்றுப் பயிராக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காளிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், மேராக்காய், உகு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மட்டுமல்லாமல் பழ வகைகளும் பயிரிடப்பட்டன.

    இந்த காய்கறிகளுக்கு ஊட்டி, கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

    தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக, 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக, 30 டன் அளவுக்குத்தான் விற்பனைக்கு வருகின்றன.

    உறைபனி விழுவதால் மலை காய்கறிகளை பாதுகாக்க காலை நேரங்களில், 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. உறைபனி தாக்கத்தால் முட்டைகோஸ் பயிர் நிறம் மாறியுள்ளது.

    முட்டைகோசுக்கு நல்லவிலை கிடைத்து வந்தநிலையில் தற்போது அதன் விலை குறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் படிப்படியாக விற்பனை விலையில் சரிவு ஏற்பட்டு தற்போது கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் விட்டுவிடும் நிலை காணப்படுகிறது

    ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-

    ஊட்டியில் பயிரிடப்படும் கேரட், பீட்ரூட் உள்பட பல்வேறு மலைகாய்கறிகள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.

    தற்போது பிற மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவதால், நீலகிரி மலை காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. நேற்று ஊட்டி மார்க்கெட்டில் முட்டைகோஸ் கிலோ 4 ரூபாய்க்கு தான் விற்பனையானது.

    15 ரூபாய்க்கு மேல் விற்றால் தான் கட்டுபடியாகும். பீட்ரூட், கேரட் விலையும் இதுபோன்று குறைந்து தான் காணப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
    • கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.

    கூடலூர்,

    கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூடலூர் கோத்தர் வயல் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது 20 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக கூடலூரை சேர்ந்த அரவிந்த் (வயது 25) என்பவரை கைது செய்தனர். இதேபோல் மேல் கூடலூர் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த முகேஷ் (18) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்தனர்.

    • 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • 2-வது வார்டு உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பெட்டை லைன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான நடைபாதை இல்லாததால் மழைக்காலங்களில் குழந்தைகள், முதியோர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு 2-வது வார்டு உறுப்பினர் விக்டர் வசந்த் கேத்தி பேரூராட்சி தலைவர் முன்னிலையில் அப்பகுதியில் நடை பாதை அமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பூமி பூஜை கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேமா மாலினி தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து பேரூராட்சி தலைவர் ஹேமா மாலினி மற்றும் 2-வது வார்டு உறுப்பினர் விக்டர் வசந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி

    நீலகிரியில் பேராசிரியர் அன்பழகன் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் பேராசிரியரின் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோ, ராஜூ, செந்தில், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமா ராஜன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், தம்பி இஸ்மாயில், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் நாகராஜ், ஜெயராமன், ஆட்டோ ராஜன், மார்கெட் ரவி, தியாகு, அமலநாதன், ஊட்டி நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், மீனா, கிளை செயலாளர்கள் வெங்கடேஷ், ஆட்டோ பாபு, பெரியசாமி, ஸ்டான்லி, நிக்கோலஸ், ராஜம்மா, உதயகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.
    • அரிசி ராஜா யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் 15 வயதுடைய மக்னா யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. வீட்டை உடைத்து அரிசியை ருசித்து சாப்பிடும் இந்த யானையை அந்த பகுதியினர் அரிசி ராஜா யானை என்று அழைத்து வந்தனர்.

    இந்த யானை அந்த பகுதியைச் சேர்ந்த 2 பெண்களை மிதித்து கொன்றது. இதனால் இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இதன் காரணமாக ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கடந்த வாரம் வனத்துறையினர் பிடித்தனர்.

    பின்னர் அந்த யானை காங்கிரஸ் மட்டம் பகுதியில் விடப்பட்டது. யானையை ரேடியோ காலர் சிக்னல் மூலமாக கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் காட்டில் விடப்பட்ட மசினக்குடி வனப்பகுதிக்கு மீண்டும் திரும்பி இருப்பதை வனத்துறையினர் கண்ட றிந்துள்ளனர். அந்த யானை மீண்டும் ஊருக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதற்காக 7 கும்கி யானைகள் உதவியுடன் அரிசி ராஜா யானையை வனத்து றையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    அந்த யானை எக்காரணம் கொண்டும் கூடலூர் பகுதியில் நுழைந்து விடாமல் தடுக்க வேண்டும் என்றும், அதற்கு எத்தனை பணியாளர்கள், எத்தனை வாகனங்கள் ஆனாலும் உபயோகித்து கொள்ளலாம் என்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர். 

    • 68-வது ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 17-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில், அய்யப்ப பஜனை சபா சார்பில் 68-வது ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 17-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலையில் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு நிறமாலை பூஜை, அன்னதானம் மற்றும் அனைத்து மகளிர் சங்கத்தினரின் சார்பில் திருவிளக்கு பூஜை, ஹரிஹரன் பஜனை சபா சார்பில் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். செண்டை மேளம் முழங்க தேர் புறப்பட்டு வென்லாக் சாலை, கமர்சியல் சாலை வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. கால பைரவர் மாரியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் விளக்குகள் கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். அதில் பஞ்ச வாத்தியத்துடன் அய்யப்பன் பவனி வந்தார். இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் ஊட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஊட்டி,

    பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரை கண்டித்து நீலகிரி மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் ஊட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க இளைஞரணி தலைவர் பிரேம் யோகன் தலைமை தாங்கினார். இதில் நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன், நகரத் தலைவர் திரு பிரவீன் ,நகர பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், நகரத் துணைத் தலைவர் அரிகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    • தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
    • தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ ரேஞ்ச் எண்.1,2,3,4 பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து வருகின்றன. மேலும் குடியிருப்புகளை தாக்குவதோடு, தொழிலாளர்கள், பொதுமக்களை துரத்தி வருகின்றன. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு டேன்டீ தொழிலாளர்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் ரேஞ்ச் எண்.3-ல் தோட்ட பகுதியில் யானைகள் புகுந்ததால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதை அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் உத்தரவின்படி, வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானைகளை விரட்டினர்.

    • 100 கிலோ ரேஷன் அரிசி குவியல், குவியலாக கொட்டப்பட்டு இருந்தது.
    • விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? மற்றும் பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.இந்தநிலையில் ஊட்டி ஆர்.கே.புரம் சாலையில் உள்ள புதரில், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி கொட்டப்பட்டு கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வழங்கல் துறை அலுவலர் வாசுகி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் 100 கிலோ ரேஷன் அரிசி ஆங்காங்கே குவியல், குவியலாக கொட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி கூறுகையில் ரேஷன் அரிசியை மர்மநபர்கள் கடத்தி செல்லும்போது அதிகாரிகளிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க இங்கு கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.

    • அமைச்சர் ராமச்சந்திரன்-சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்
    • உணவகம் அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், முதன்முறையாக பல்வேறு வகையான சாகச விளையாட்டுகள் அமைப்பதற்கான பூமி பூஜையினை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மேலாண்மை இயக்குநர், சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்குவதால், உள்மாநிலம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை புரிகின்றனர். மேலும் ஊட்டி படகு இல்லத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சுற்றுலாத்துறை சாகச விளையாட்டுகளுக்கு விதிமுறைகளை கண்டறிந்து கடந்த செப்டம்பர் மாதம் நெறிமுறைப்படுத்தி விதி முறைகளை வெளியிட்டது. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா தல மேம்பாட்டு புதிய திட்டத்தினை வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 10 அல்லது 15 இடங்களை தேர்வு செய்து அரசின் நிதி பெற்று பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும். சில இடங்களில் தனியாருடன் இணைந்து பல்வேறு சாகச விளையாட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் ஊட்டி படகு இல்லம், கொல்லிமலை, ஜவ்வாதுமலை; ஏலகிரி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாகச விளையாட்டுகள் தனியாருடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் கிளேம்பிங் சைட் அமைக்கபட உள்ளது.

    இதில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையான சாகச விளையாட்டுகளான இழைவரிக்கோடு, விதானப் பயணம், இழைவரி சுழற்சி, மாபெரும் ஊஞ்சல், ரோலர் கோஸ்டர் இழைவரிக் கோடு, பங்கீ ஜம்பிங், ராக்கெட் வெளியேற்றி, தொங்கு பாலம், மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட மனித கைரோ, ஆகிய சாகச விளையாட்டுகள் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவாகும். இப்பணிகள் முடிவடைய 6 முதல் 7 மாதங்கள் வரை ஆகும். ஏற்கனவே இது போன்ற சாகச நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பவர்கள் பதிவு செய்து இது மட்டுமின்றி வேறு நிகழ்ச்சிகள் செய்பவர்களுக்கு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் இது போன்று நிகழ்ச்சிகளை மேற்கொள்ள சுற்றுலாத்துறையில் பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கு தேவையான அனுமதி வழங்கப்படும்.

    சுற்றுலாத்துறையின் மூலம் மிதக்கும் உணவகம் அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளது. மேலும், இதுபோன்று பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மண்டல மேலாளர் வெங்கடாச்சலம், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×