search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடவடிக்கை"

    உரிய அனுமதியின்றி மணல், கிரானைட் கற்கள் ஏற்றி செல்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்திற்கு வாகனங்களில் மணல் கொண்டு செல்வதை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணிகள் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்துறை, காவல் துறை மற்றும் சேலம் மண்டல பறக்கும் படை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமங்கள் இருப்பு வைத்தல் போக்குவரத்து மற்றும் கனிம முகவர்கள் விதிகள் 2011-ன்படி ஜல்லி, மணல் மற்றும் இதர கனிமங்கள் லாரிகளில் எடுத்து செல்லும் போது பொது மக்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாகனங்களில் மேற்பகுதிகளில் தார்பாய்கள் கொண்டு மூடி எடுத்து செல்ல அனைத்து குவாரி உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ கனிமங்கள் எடுத்துச் சென்றாலோ தமிழ்நாடு கனிம விதிகளின்படி வாகனம் கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிய அனுமதியின்றி மணல் மற்றும் கிரானைட் கற்கள் ஏற்றிவரும் வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகன உரிமத்தையும் ஓட்டுனர் உரிமத்தையும், ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    பாகிஸ்தானில் சீர்குலைந்து கிடக்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான் கடந்த மாதம் பதவியேற்றார். அவர் தலைமையிலான புதிய அரசுக்கு பல்வேறு சவால்கள் இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார சீரமைப்புதான் பிரதானமாக உள்ளது.

    ஏனெனில் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், அதிலிருந்து மீண்டுவர தடுமாறி வருகிறது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 18 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. எனவே இவற்றில் இருந்து பொருளாதாரத்தை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. இதை உணர்ந்துள்ள புதிய அரசும், பொருளாதார சீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக 18 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு சார்ந்தவர்கள் 7 பேரும், தனியார் துறையை சேர்ந்தவர்கள் 11 பேரும் அடங்குவர். தனியார் துறையை சேர்ந்தவர்களில் புகழ்பெற்ற வெளிநாட்டு பொருளாதார வல்லுனர்களையும் நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முந்தைய அரசுகளில் பொருளாதார ஆலோசனைக்குழுக்கள், நிதி மந்திரிகளின் தலைமையிலேயே அமைக்கப்பட்டு இருக்கும். எப்போதாவது நடைபெறும் இந்த கமிட்டியின் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கும் அரசுகள் செவிமடுப்பதில்லை.

    ஆனால் தற்போதைய அரசில், பொருளாதார ஆலோசனைக்குழுவுக்கு பிரதமர் இம்ரான்கானே தலைமை தாங்குகிறார். அது மட்டுமின்றி குழுவின் கூட்டத்தையும் விரைவில் கூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் முதற்கட்டமாக வெளிநாடுகளில் பாகிஸ்தானியர்கள் குவித்துள்ள சட்ட விரோத சொத்துகளை திரும்ப கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை 2 வாரங்களுக்குள் அளிக்குமாறு, இந்த கமிட்டி உறுப்பினர்களை இம்ரான் கான் கேட்டுக்கொண்டு உள்ளார்.  #Pakistan #ImranKhan 
    ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலையத்துக்குள் சென்று பயணிகளை தங்களது வாகனத்தில் பயணிக்குமாறு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலையத்திற்குள் சென்று பயணிகளிடம் பேரம் பேசி தங்களது வாகனத்தில் பயணம் செய்யுமாறு அழைப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் சில நாட்களாக புகார்கள் வருகின்றன. சமீபத்தில் இது தொடர்பாக ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கும், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் இதுகுறித்து தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திரகுமார் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் பணியாற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ரெயில் நிலையங்களின் உள்ளே பயணிகள் அமரும், நடமாடும் இடங்களுக்கு சென்று ஆட்டோ டிரைவர்கள் சிலர் பயணிகளை தங்கள் ஆட்டோவில் பயணம் செய்ய வருமாறு அழைப்பு விடுப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வருகிறது. ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகள் நடமாடும் இடத்துக்கு சென்று, தங்கள் வாகனங்களில் பயணம் செய்யுமாறு அழைக்க அனுமதி இல்லை.

    அதாவது டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் தான் நிற்க வேண்டும். அதனையும் மீறி ரெயில் நிலையத்துக்குள் ரெயில் பயணிகளுக்கான இடத்துக்கு சென்று அவர்களை அழைத்தால் ரெயில்வே சட்டத்தில் உள்ள பிரிவுகளின்படி டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

    எனவே இதுபோன்ற நடைமுறையை தடுப்பதற்கான நடவடிக்கையை எடுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அதிவேகமாக பஸ்கள் செல்வதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கூறியுள்ளனர்.
    கிணத்துக்கடவு:

    கிணத்துக்கடவு வழியாக கோவை- பொள்ளாச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தவழியாக 130-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும், தனியார்பஸ்களும் கோவை, பொள்ளாச்சி,வால்பாறை, உடுமலை, பழனி, மதுரை உள்ளிட்ட பல ஊர்களுக்கு கிணத்துக்கடவு வழியாக செல்கிறது.

    தற்போது கோவை- ஈச்சனாரியில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டி வரை உள்ள 26.85 கிலோமீடடர் தூரத்தில் உள்ள ரோடு 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவுபெற்று அதன்பின் இந்த வழியில் ரோட்டின் இருபுறங்களில் வழக்கம்போல் பஸ்கள் இயங்கும்.

    புதிய சாலை கான்கிரீட் கலவையால் நவீன முறையில் அமைககப்பட்டு வருவதால் இந்த சாலையில் வாகனங்களில் பயணிப்பதற்கு சொகுசாக அமையும் என நெடுஞ்சாலைத்துறையினர் கூறினார்கள். இதில் கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம் ஆகிய பகுதிகளில் ஊருக்குள் பாலம் கட்ட தூண்கள் அமைக்கும் பணிகளும், முள்ளுப்பாடி ரெயில்வே கேட் மற்ற பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

    தற்போது பொள்ளாச்சி ஆச்சிப்பட்டிமுதல் கிணத்துக்கடவு வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதால். ரோட்டில் இருபுறங்களிலும் தாறுமாறாக வாகனங்கள் செல்ல தொடங்கியுள்ளது .4 வழிச்சாலையில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் போவதற்கும் மற்றொரு பாதை வருவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது இருபகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள ரோட்டிலும் எதிர்திசையிலும் வாகனங்கள் ஒரே ரோட்டில் தாறுமாறாக வருவதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுவருகிறது.

    மேலும் பொள்ளாச்சி கிணத்துக்கடவு இடையே சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றதால் இந்த வழியில் தற்போது மீண்டும் தனியார் பஸ்களின் வேகம் அதிகரித்துள்ளது.

    கோவையில் இருந்து மலுமிச்சம்பட்டி பகுதிக்கு வந்ததும் வேகம் எடுக்கும் பஸ்கள் மின்னல் வேகத்தில் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில் பாளையம், ஆச்சிப்பட்டி வழியாக பொள்ளாச்சியை சென்றடைகிறது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அதிவேகத்தில் வரும் தனியார் பஸ்களால் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சந்தேகவுண்டன்பாளையம், தாமரைக்குளம் பகுதியில் விபத்து ஏற்பட்டு பலர் காயம்அடைந்தனர்.

    சிலவிபத்தில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோதவாடி பிரிவு, அரசம்பாளையம் பிரிவு பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பஸ்கள் கட்டுப்படுத்த முடியாமல் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புகள் மீது மோதியும் ரோட்டோரம் பள்ளத்தில் இறங்கியும் உள்ளது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கூறினர். #tamilnews
    2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Homework #HighCourt
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) பாடத்திட்ட விதிகளை மீறி தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதிகளை மீறுகின்றனர்.



    தனியார் நிறுவனங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கவேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சி.பி.எஸ்.இ., பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், ‘சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. இதுதொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதனடிப்படையில், மத்திய அரசும் உத்தரவிட்டது.

    இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், ‘2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    அதை படித்து பார்த்த நீதிபதி, ‘இந்த உத்தரவை காகித வடிவில் வைத்திருக்காமல், தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார். மேலும், ‘மராட்டியம், தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் புத்தக சுமையை குறைப்பது தொடர்பான மாதிரி திட்டத்தை உருவாக்கியுள்ளதை போல, தமிழகத்தில் அதுபோன்ற திட்டத்தை ஏன் உருவாக்கக்கூடாது?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    பின்னர், ‘2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து, 3 வாரங்களுக்குள் தேசிய மற்றும் மாநில மொழி பத்திரிகைகளில் சி.பி.எஸ்.இ. விளம்பரம் செய்யவேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அப்போது மனுதாரர் புருஷோத்தமன், ‘சி.பி.எஸ்.இ. 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பொதுஅறிவு பாடத்தில் ரஜினிகாந்த், ஜாக்கிசான், அமீர்கான், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், கத்ரீனா கைப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் இவர்களை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?. இதில் என்ன பொதுஅறிவு உள்ளது?’ என்று சி.பி.எஸ்.இ. மீது குற்றம் சுமத்தி வாதிட்டார்.

    அதற்கு நீதிபதி என்.கிருபாகரன், நாட்டிலேயே முதன்மையான கல்வி வாரியமாக விளங்கும் சி.பி.எஸ்.இ.யின் தரம் என்ன ஆனது?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.  #Homework #HighCourt 
    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது. #USWarn #China #Russia
    வாஷிங்டன்:

    வடகொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறியும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைக்கு மாறாகவும் அணுக்குண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வந்தது.

    இதற்காக வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறி வடகொரியாவுடன் ரஷிய நிறுவனமும், சீன நிறுவனங்களும் வர்த்தக உறவு கொண்டு இருந்தது அம்பலத்துக்கு வந்து உள்ளது.

    இதையடுத்து ரஷியாவின் பிராபினட் பீட்டி நிறுவனத்தை அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இதேபோன்று சீனாவின் டாலியன் சன் மூன்ஸ்டார் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்கல் டிரேடிங் கம்பெனி, அதன் சிங்கப்பூர் கிளை நிறுவனம் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

    சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, வடகொரியா அணு ஆயுத திட்டங்களை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர சம்மதித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, வடகொரியா நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் தந்து வருகிறது.

    இந்த நிலையில் இப்போது வடகொரியாவுடன் வர்த்தக உறவு கொண்டிருந்த ரஷிய, சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதித்து இருப்பது, அமெரிக்கா தன் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பதையே காட்டுகிறது.  #USWarn #China #Russia  #Tamilnews 
    ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீசார் மீது நாளை முதல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. #Helmet #Police
    சென்னை:

    தமிழகத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் 2015-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதும், கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டது.

    போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தும், லைசென்சை ரத்து செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் போலீசார் 75 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டி.ஜி.பி. மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றன. எனவே ஒழுங்கீனமான போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-


    தமிழக போலீசில் 1 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது இல்லை. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீசார் மீது நாளை முதல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் காலை 7 மணிக்கு ரோல்காலில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வந்துள்ளேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் போலீசாரிடம் வாகன சாவியை வாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் ஹெல்மெட் வாங்கி வந்த பிறகே அவரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Helmet #Police
    அசாம் மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி ராஜமார்த்தாண்டன் மீண்டும் பணியில் சேர ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடவடிக்கை எடுத்தார்.
    சென்னை:

    அசாம் மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜமார்த்தாண்டன் பொய் குற்றச்சாட்டின் பேரில் அம்மாநில காவல்துறை உயர் அதிகாரியால் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அவர் அசாம் மாநில முதல்-மந்திரியை தொடர்புக்கொண்டு ராஜமார்த்தாண்டத்தை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்தார்.

    இந்தநிலையில் ராஜமார்த்தாண்டத்தின் உறவினர்கள், நண்பர்களும் வைகோவை கலிங்கப்பட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தனர். அப்போது அசாம் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற வகையில் நினைவுப்பரிசு வழங்கி நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இதுதொடர்பாக வைகோ நிருபர்களிடம் கூறும்போது, உலகத்தில் எந்த தமிழனுக்கும் துன்பம் நேர்ந்தாலும் தன்னால் இயன்ற அளவுக்கு உதவி செய்வேன்’ என்று கூறினார்.

    மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்-லைன் பாஸ்போர்ட் சேவையை விரைவுபடுத்துதல் குறித்து போலீசாருக்கான பயிற்சி வகுப்பு நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆன்-லைன் மூலம் இ-சேவை பாஸ்போர்ட் கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தால் 3 நாட்களில் அவர்களுடைய சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியை முடிக்க வேண்டும். டிஜிட்டல் கையெழுத்து பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து அவர்களுடைய சான்றிதழ்களை போலீசார் பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த கையெழுத்தை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரிவோர் வந்து போட்டு செல்ல காலதாமதம் ஏற்படுவதால் அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதற்கும் தாமதம் ஏற்படுகிறது.

    மற்ற மாவட்டங்களில் 5 நாட்களுக்குள் இ-சேவை பாஸ்போர்ட் அளிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 30 நாட்களுக்கு மேல் ஆவதாக தெரியவந்துள்ளது. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு பணியை உடனுக்குடன் முடித்து விரைவாக பொது மக்களுக்கு பாஸ்போர்ட்டு கிடைக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்காக மாவட்டத்தில் உள்ள 56 போலீஸ் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை பணியை மேற்கொள்ளும் போலீசாருக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விரைவாக பாஸ்போர்ட் சேவை பணியை முடிக்க வேண்டும். மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 2,500 பேருக்கு பாஸ்போர்ட் பெற்றுத்தரப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ரசாயன கலவைகளை கொண்ட 343 வகை மருந்துகளுக்கும் சுகாதார அமைச்சகம் தடை விதிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. #Drugs #Banned
    புதுடெல்லி:

    பல்வேறு மருந்து கம்பெனிகள் தயாரிக்கும், குறிப்பிட்ட ஒரே அளவிலான ரசாயன கலவைகளை கொண்ட 349 வகை மருந்துகளை, பாதுகாப்பற்றவை என்று கூறி மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது.

    இந்த தடையை எதிர்த்து மருந்து கம்பெனிகள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, சுகாதார அமைச்சகம் விதித்த தடையை ரத்து செய்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த மருந்துகளின் தன்மை பற்றி, மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசு அமைத்த அந்த வாரியத்தின் துணைக்குழு, அந்த மருந்துகள் பற்றி ஆய்வு செய்து தயாரித்துள்ள அறிக்கையில், பெரும்பாலான கம்பெனிகள் தயாரிக்கும் குறிப்பிட்ட ஒரே அளவிலான ரசாயன கலவைகளை கொண்ட 343 மருந்துகள் பாதுகாப்பற்றவை என தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த 343 வகை மருந்துகளுக்கும் சுகாதார அமைச்சகம் தடை விதிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.  #TamilNews #Drugs #Banned
    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஷேர் ஆட்டோக்கள் விழுப்புரம் கோர்ட்டு முன்புறம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    மேலும் விழுப்புரம் நேருஜி சாலையில் மாதத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை சாலையின் வலதுபுறமும், அடுத்த 15 நாட்கள் சாலையின் இடதுபுறமாகவும் சுழற்சி முறையில் இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று காலை விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், சப்- இன்ஸ்பெக்டர் வசந்த், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் அதிரடியாக அகற்றினர்.

    அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையோரமாக இருந்த பழக்கடைகள், காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள், கடைகளின் விளம்பர பலகைகள் ஆகியவற்றை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் யாராவது ஆக்கிரமிப்பு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். 
    திருப்பூரில் 2 கடைகளில் இருந்து 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலித்தீன் பைகள், டம்ளர், விரிப்புகள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனால் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களை மாநகராட்சி அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். அதன்படி, திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பி.என்.ரோட்டில் உள்ள மொத்த வியாபார மளிகை கடைகளில் நேற்று காலை உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்து சுமார் 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

    இதேபோல் மற்றொரு கடையிலும் ½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக பொதுமக்களிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் ஆலோசனை கூறினார்கள். இந்த ஆய்வின் போது சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். 
    ×