search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்"

    தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை என்று மலேசிய கலைத்திருவிழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan
    சென்னை:

    மலேசிய நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான ‘ஆஸ்ட்ரோ’ சார்பில் 6-வது ஆண்டு பொங்கு தமிழ் கலைத்திருவிழா மற்றும் சர்வதேச வர்த்தக கண்காட்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேற்று தொடங்கியது. விழாவை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கிவைத்து பேசியதாவது:-



    தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை. தமிழர் என்பது தகுதி அல்ல, விலாசம். நான் தமிழன் என்பதை மட்டுமே தகுதியாக நினைத்துவிடக்கூடாது. தகுதிக்கு வேண்டிய எல்லா பயிற்சிகளையும் நாம் செய்ய வேண்டும்.

    எத்தனையோ ஏழைகள் கலைஞர்களாக வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒற்றையடி பாதையாவது போட்டுக்கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்த ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் காலம் வரும். நாளை நமதாகும் என்ற நம்பிக்கையில் இன்று பொங்குவது போன்று என்றும் பொங்கட்டும் தமிழ்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ‘ஆஸ்ட்ரோ’ நிறுவனத்தின் இந்திய மொழிகள் திட்டத் தலைவர் என்.சி.ராஜாமணி, மலேசிய நாட்டு துணை சபாநாயகர் ரவி, மலேசிய தூதர் சரவணன் கார்த்திகேயன், துணை இயக்குனர் லோகிதாசன் தனராஜ், எம்.எல்.ஏ. காமாட்சி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #KamalHaasan
    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறையில், முன்பு இருந்ததுபோன்று இந்த ஆண்டும் தமிழ் உள்பட 20 பிராந்திய மொழிகளில் தேர்வை நடத்தும்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார். #CTETExam
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பள்ளிகளான கேந்திர வித்யாலயா, டெல்லி மாநில பள்ளிகள், திபெத் பள்ளிகள் போன்ற தேசிய கல்வி முறைகளில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிய தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு தனி தேர்வாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு மற்றொரு தேர்வும் நடத்தப்படுகிறது.

    இந்த தகுதி தேர்வில் மொழி அடிப்படையில் 2 தேர்வுகள் எழுத வேண்டும். முதல் பேப்பரை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றில் எழுத வேண்டும். 2-வது பேப்பரை முதல் பேப்பரில் தேர்வு செய்த மொழி அல்லாத இன்னொரு மொழியில் எழுத வேண்டும்.

    2-வது பேப்பரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்க மொழி உள்ளிட்ட 20 பிராந்திய மொழிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், இந்த ஆண்டு தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் இடம்பெறவில்லை. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


    இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்பு இருந்ததுபோல் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். முன்பு இருந்ததுபோல் 20 மொழிகளில் தேர்வு நடத்த ஏற்கனவே உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #CTETExam #CTETLanguages #PrakashJavadekar
    தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து தமிழ் உள்பட 16 பிராந்திய மொழிகள் நீக்கப்பட்டுள்ளதால் இனி தமிழில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து தமிழ் உள்பட 16 பிராந்திய மொழிகள் நீக்கப்பட்டுள்ளதால் இனி தமிழில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. #CTET

    மத்திய அரசின் பள்ளிகளான கேந்திர வித்யாலயா, டெல்லி மாநில பள்ளிகள், திபெத் பள்ளிகள் போன்ற தேசிய கல்வி முறைகளில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிய தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தான் இந்த பள்ளிகளில் பணியாற்ற முடியும். மேலும் மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. மூலம் நடத்தப்படும் தனியார் பள்ளிகளிலும் இந்த தேர்வில் வெற்றி பெற்றிருப்பவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன.

    எனவே இந்த பள்ளிகளில் சேருவதற்காக தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு தனி தேர்வாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு மற்றொரு தேர்வும் நடத்தப்படுகிறது.

    இந்த தகுதி தேர்வில் மொழி அடிப்படையில் 2 தேர்வுகள் எழுத வேண்டும். அதில் முதல் பேப்பர், 2-ம் பேப்பர் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

    முதல் பேப்பரில் மொழியில் தகவல் பரிமாற்ற திறனை பற்றியும், 2-வது பேப்பர் தகவல் மற்றும் புரிதல் திறன் பற்றியும் கேள்விகள் இருக்கும்.

    முதல் பேப்பரை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றில் எழுத வேண்டும். 2-வது பேப்பரை முதல் பேப்பரில் தேர்வு செய்த மொழி அல்லாத இன்னொரு மொழியில் எழுத வேண்டும்.

    ஆனால் 2-வது பேப்பரில் இதற்கு முன்பு பிராந்திய மொழிகளும் இடம் பெற்றிருந்தன. தமிழ், மலையாம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்க மொழி என 16 பிராந்திய மொழிகள் அதில் இடம்பெற்றிருந்தன.

    அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து 2-வது பேப்பரை எழுத முடியும். ஆனால் இப்போது இதில் தமிழ் உள்ளிட்ட 16 மொழிகளையும் நீக்கி விட்டனர். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்மொழி இதில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதால் தமிழக ஆசிரியர்களுக்கு கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. தமிழக ஆசிரியர்களை பொறுத்த வரை இதற்கு முன்பு முதல் பேப்பரை ஆங்கில மொழியில் எழுதுவார்கள். 2-வது பேப்பரை தமிழ் மொழியில் எழுதுவார்கள்.

    இப்போது தமிழ்மொழி இல்லாததால் 2-வது பேப்பராக இந்தி அல்லது சமஸ்கிருதத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு போட்டியிடும் ஆசிரியர்கள் பலருக்கு இந்தி தெரியும் என்றாலும் அவர்களால் இந்தியை தாய்மொழியாக கொண்டு எழுதும் மாணவர்களுடன் போட்டிபோட முடியாது.

    தாய்மொழியான தமிழில் அவர்களும் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு இருந்தால் இந்தி மொழியில் எழுதுபவர்களுடன் இவர்களும் போட்டிபோட முடியும்.

    இதன் காரணமாக தமிழக ஆசிரியர்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பார்கள். ஆசிரியர் தகுதி தேர்வில் 150 மார்க்குக்கு, 30 மார்க் இந்த தேர்வுக்கு உள்ளது. அதை இழக்கும் சூழ்நிலை தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் பார்க்கப்படுகிறது.

    2016-ல் 7 லட்சத்து 6 ஆயிரம் பேர் நாடு முழுவதும் தேர்வு எழுதினார்கள். அதில் தமிழ்நாட்டில் இருந்து 12 ஆயிரத்து 700 பேர் தேர்வு எழுதினர்.

    பிராந்திய மொழி நீக்கப்பட்டது தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, அரசியல் சாசன சட்டம் 14, 15, 16, 21 பிரிவுகளின் படி மைனாரிட்டி மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வில் அதை கைவிட்டிருக்கிறார்கள். இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்று கூறினார். #CTET
    தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனவும் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கடந்த 70 நாட்களாக முதியவர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை கருவம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முத்துசாமி (80) இவர் கடந்த மார்ச் மாதம் 23 -ந் தேதி தனது பிறந்த நாள் முதல் யாரிடமும் பேசாமல் அவினாசி சாலை திருமுருகநாத சாமி கோவிலில் உள்ள பனைமரத்தடியில் நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்,

    பின்னர் அவர் எதுவும் பேசாமல் மவுன போராட்டத்தில் ஈடுபட்டார்.தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 70 நாட்களாக மவுன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.முத்துசாமி மவுன போராட்டம் குறித்து அவரது மனைவி சுப்புலட்சுமியிடம் கேட்ட போது கூறியதாவது-

    எனது கணவர் மவுனப் போராட்டம் நடத்துவது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத்தான். இன்றைய தலைமுறையினரிடம் தமிழில் பேசவும் எழுதவும் தடுமாற்றம் உள்ளது. பள்ளிகளில் முறையான தமிழ் கல்வி இல்லாமையே இதற்கு காரணம்.வீடுகளில் தமிழில் பேசுவதில் தொடங்கி எழுதுவது வரை தமிழ் எளிமையாக வர வேண்டும் .

    அந்த அளவிற்கு தமிழை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    சுப்புலட்சுமி சொல்லிய கருத்தை ஆமோதிக்கும் வகையில் முத்துசாமி தலையசைத்தார்.

    7-ம் வகுப்பு வரை படித்த முத்துசாமி, பின்னலாடை தொழிலில் இயற்கை முறையில் சாயமிடும் தொழிலில் வெற்றி கண்டுள்ளார்.

    அதுமட்டுமல்லாமல் தமிழை செம்மொழியாக அறிவிக்க கோரி தமிழ் அறிஞர்கள் டெல்லியில் நடத்திய சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். தமிழக ம் தலை நிமிர தமிழ் மொழி கல்வியே வழி வகுக்கும் என மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்துள்ளார். #tamilnews
    சிங்கப்பூரில் தமிழ் மொழி, அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதிபூண்டுள்ளதாக வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி (பொறுப்பு) ஈஸ்வரன் கூறியுள்ளார். #Singapore #Tamil #OfficialLanguage
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வரும் நிலையில், தமிழ் மொழிக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் 4 அலுவல் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அங்குள்ள பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது.

    தமிழ் மொழியின் இந்த அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதிபூண்டுள்ளதாக வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி (பொறுப்பு) ஈஸ்வரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்று அங்குள்ள தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்தது.

    அதில் மந்திரி கூறுகையில், ‘தமிழ் மொழி தொடர்பான அரசின் கொள்கை முடிவும், ஆதரவும் தெளிவாக உள்ளது. மற்றபடி ஒவ்வொரு நாளும் தமிழை பேசி அதை வாழும் மொழியாக மாற்றுவது அனைத்தும் அந்த சமூகம், குறிப்பாக இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது’ என்றார். தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்கு, தமிழ் மொழி திருவிழா நடத்துவது சிறந்த வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   #Singapore #Tamil #OfficialLanguage 
    புதுவையில் இன்று நடந்த கம்பன் விழாவில் தனது ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்த்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி மேடையிலேயே நன்றி தெரிவித்தார். #governorkiranbedi #narayanasamy
    புதுச்சேரி:

    புதுவையில் கம்பன் கலையரங்கில் இன்று கம்பன் விழா தொடங்கியது. விழாவை கவர்னர் கிரண்பேடி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது, எனக்கு ஆங்கிலம்தான் தெரியும். தமிழ் கொஞ்சம், கொஞ்சம் தெரியும். தமிழில் பேசவா? ஆங்கிலத்தில் பேசவா? என்று கேட்டார்.

    மேலும் ஆங்கிலத்தில் பேசினால் எத்தனை பேருக்கு புரியும்? அவர்கள் கை தூக்குங்கள் என்றார். இதற்கிடையே தனது ஆங்கில உரையை மொழிபெயர்க்க கல்வித்துறை அமைச்சர் மொழிபெயர்க்கலாமா? என கேள்வி எழுப்பினார்.

    விழாவில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணன் கவர்னருக்கு அருகில் மைக்கோடு வந்து பேசினார். கவர்னரின் ஆங்கில உரையை எனக்கு தெரிந்த ஆங்கில மொழிப்புலமையோடு மொழிபெயர்க்கிறேன். அதில் பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள் என ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசிவிட்டு அமைச்சர் கமலக்கண்ணன் மொழி பெயர்க்க தயாரானார்.

    அப்போது கவர்னர் கிரண்பேடி குறுக்கிட்டு, முதல்-அமைச்சர் நாராயணசாமி எனது உரையை மொழி பெயர்க்கட்டும் என கேட்டு கொண்டார்.

    இதையடுத்து நாராயணசாமி மொழிபெயர்க்க முன்வந்து கவர்னருக்கு அருகில் மைக்கோடு வந்தார். அப்போது, எனது பேச்சைதான் நாராயணசாமி மொழிபெயர்க்கிறாரா? என தெரியாது?

    ஆனால், அடுத்த 10 நிமிடத்திற்கு நான் முதல்-அமைச்சரை நம்புகிறேன் என்று கவர்னர் கூறினார். அப்போது நாராயணசாமியும், நானும் அந்த நிமிடங்கள் மட்டும் நம்புகிறேன் என்றார்.

    இதையடுத்து கவர்னர் கிரண்பேடி தற்காலிகமாக நாம் நண்பர்களாக இருக்கலாம் என நாராயணசாமியுடன் கை குலுக்கி விட்டு, இந்த நட்பு காலம் முழுவதும் தொடர வேண்டும் என்றும் விரும்புகிறேன் என மைக்கில் கூறி தனது உரையை தொடங்கினார்.

    கவர்னரின் ஆங்கில உரையை முழுமையாக நாராயணசாமி தமிழில் மொழி பெயர்த்தார்.

    பின்னர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்த்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார். #governorkiranbedi #narayanasamy


    ×