search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வு"

    டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லங்களின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றி வந்த ஜஸ்பீர்சிங் பஜாஜ் பணி ஓய்வு பெற்றார். #TNHouse
    புதுடெல்லி:

    தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ஜஸ்பீர்சிங் பஜாஜ், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லங்களின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றி வந்தார். இவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.

    இதையொட்டி அவருக்கு தமிழ்நாடு இல்லத்தில் பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மற்றொரு முதன்மை உறைவிட ஆணையர் என்.முருகானந்தம், துணை ஆணையர் சின்னத்துரை மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜஸ்பீர் சிங்கின் பணியை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். #TNHouse

    தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்த ஐ ஜி பொன் மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். #IGPonManickavel #PonManickavel
    சென்னை:

    போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தமிழக போலீஸ் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    காவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கிய இவர் கடந்த சில ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின்னர்தான் அந்த துறையின் செயல்பாடுகள் வெளியில் தெரிந்தன. அதிரடியாக செயல்பட்டு தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால சிலைகளை மீட்டார். அவரது செயல்பாட்டுக்கு பாராட்டுகள் குவிந்தன.

    அதே நேரத்தில் தமிழக அரசு, சிலை கடத்தல் தொடர்பான தகவல்களை அவர் அரசிடம் சரியாக தெரிவிப்பது இல்லை என்று குற்றம் சாட்டியது. இதன் காரணமாக அவர் ரெயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டார்.

    இருப்பினும் கோர்ட்டு தலையிட்டு, சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிப்பார் என்று உத்தரவிட்டது. இதனால் 2 பணிகளையும் அவர் செய்து வருகிறார்.

    தமிழக போலீசில் நேரடி டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த பொன் மாணிக்கவேல் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதிலும் திறமையாக செயல்பட்டார். செங்கல்பட்டு கிழக்கு போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார். சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது தற்கொலை வழக்கு ஒன்றை தூசு தட்டி கொலை வழக்காக மாற்றினார். இதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கி கொடுத்தார்.


    டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவு பிரிவிலும் பணியாற்றியுள்ளார். சென்னை மத்திய குற்ற பிரிவு இணை ஆணையராகவும் இருந்துள்ளார். தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்த பொன் மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார்.

    சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பாக விசாரித்து வருவதால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்பது நாளை தெரியும்.

    இந்த நிலையில் சென்னை எழும்பூரில் பொன் மாணிக்கவேலுக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

    ரெயில்வேயில் வழிப்பறியில் ஈடுபட்டால் 14 ஆண்டு வரையில் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் சட்டப் பிரிவுகள் உள்ளன. சாட்சிகள் இல்லாத நிலையில் குற்றவாளிகளிடம் வாக்கு மூலம் வாங்கினாலே செல்லுபடியாகும், அதனை யாரும் செய்வது இல்லை. கீழ்நிலை காவலர்களுக்கு அது சொல்லிக் கொடுக்கப்படுவது இல்லை.

    குற்றவாளிகளுக்கு எதிராக 9 எம்.எம். துப்பாக்கியை காட்டுவதை விட போலீசார் தங்களது செல்போனில் அவர்களின் வாக்கு மூலத்தை வீடியோவாக பதிவு செய்வது நல்லது. நல்லது, கெட்டது இரண்டையும் ஏற்கும் மனநிலைக்கு போலீசார் வரவேண்டும். சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்.ஐ.ஆர். போடுவதற்கு பயப்படக் கூடாது.

    இவ்வாறு பொன் மாணிக்கவேல் பேசினார். #IGPonManickavel #PonManickavel
    அயர்லாந்து இரட்டை சகோதரிகள் சிசிலியா ஜாய்ஸ், இசோபெல் ஜாய்ஸ் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். #ICCWomensWorldT20 #Ireland
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ‘பி’ பிரிவில் நடந்த கடைசி லீக்கில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை துவம்சம் செய்த திருப்தியுடன் வெளியேறியது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை நியூசிலாந்து அணி 7.3 ஓவர்களில் எட்டியது. இந்த ஆட்டத்துடன் அயர்லாந்து இரட்டை சகோதரிகள் 35 வயதான சிசிலியா ஜாய்ஸ், இசோபெல் ஜாய்ஸ் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

    தனது கடைசி ஆட்டத்தில் ஒரு ரன்னில் கேட்ச் ஆன சிசிலியா மொத்தத்தில் 43 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி 659 ரன்கள் எடுத்துள்ளார். இதே போல் ரன் ஏதுமின்றி வீழ்ந்த இசோபெல் 55 ஆட்டங்களில் ஆடி 944 ரன்கள் சேர்த்து இருக்கிறார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த ஒரே அயர்லாந்து வீராங்கனையான 37 வயதான கிளார் ஷில்லிங்டன், சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான சியாரா மெட்கால்ப் ஆகியோரும் இதுவே தங்களது கடைசி சர்வதேச போட்டி என்று ஏற்கனவே கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது. #ICCWomensWorldT20 #Ireland
    ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான ஜான் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார். #JohnHastings
    ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான ஜான் ஹேஸ்டிங்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். 29 ஒருநாள் போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரே போட்டியில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 9 முறை டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதுபற்றி  ஜான் ஹேஸ்டிங்ஸ் கூறுகையில், ‘கடந்த 3 அல்லது 4 மாதங்களாகவே என் உடல் நிலையில் மாற்றம் தெரியத் தொடங்கியது. மிகவும் கடினமான காலக்கட்டமாக இருந்தது. ஒவ்வொரு முறை பந்து வீசத் தயாராகும் போதும் இருமல் வந்து ரத்த வாந்தி எடுத்தேன்.

    இதனால் பவுலிங் செய்ய முடியவில்லை. எனவே இது என்ன என்று கண்டுபிடித்து தீர்வு காணாதவரை எனக்கு நிம்மதியில்லை. இது எனக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் இப்போது இதனை நான் கவலையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கடந்த 4 அல்லது 5 மாதங்களாக மிகவும் கடினமாக உள்ளது.



    பவுலிங் செய்யும் போது நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்படாது என்று மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்காததால் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்’ என மன வேதனையுடன் அறிவித்தார். #JohnHastings
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வெய்ன் பிராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.#Bravo #WestIndies
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வெய்ன் பிராவோ. 35 வயதான இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். அவர் கடைசியாக 2014-ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.

    பிராவோ டெஸ்டில் 2,200 ரன்னும், 86 விக்கெட்டும் எடுத்தார். ஒரு நாள் போட்டியில் 2968 ரன்னும், 199 விக்கெட்டும், 20 ஓவரில் 1142 ரன்னும், 52 விக்கெட்டும் எடுத்தார்.



    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவார். #Bravo #WestIndies
    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு இந்திய மூத்த வீரர் கம்பீர் பதில் அளித்தார். #GautamGambhir #IndianTeam #Retirement
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த கவுதம் கம்பீர் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். டெல்லியை சேர்ந்த கம்பீர், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் சில தினங்களுக்கு முன்பு அரியானாவுக்கு எதிரான கால்இறுதியில் 72 பந்தில் 104 ரன்கள் விளாசி அசத்தினார்.

    2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (75 ரன்), 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (97 ரன்) கம்பீரின் பங்களிப்பை யாரும் மறந்து விட முடியாது.

    இந்த நிலையில் 37 வயதான கம்பீர் அளித்த ஒரு பேட்டியில், ஓய்வு பெறுவது எப்போது, அதற்கு முன்பாக கிரிக்கெட்டில் ஏதேனும் இலக்கு வைத்து இருக்கிறீர்களா? போன்ற கேள்விகள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து கம்பீர் கூறியதாவது:-

    குறிப்பிட்ட இலக்கு என்பது எல்லாம் இல்லை. இப்போது வரைக்கும் தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே விளையாடுகிறேன். அது தான் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. ரன்கள் குவிப்பது, வெற்றி பெற வைப்பது, வீரர்கள் ஓய்வறையில் மகிழ்ச்சியாக இருப்பது இவை தான் என்னை உற்சாகப்படுத்தும்.

    இந்த நாள் வரைக்கும் எனக்குள் கிரிக்கெட் உணர்வு முழுமையாக பரவி இருக்கிறது. எப்போதும் ஓய்வறையில் சந்தோஷமான சூழலில் இருக்க விரும்புகிறேன். அதைத் தொடர்ந்து செய்கிறேன். தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு மீதான ஆர்வமும், ஆக்ரோஷமும் எப்போது குறைகிறதோ? அப்போது விடைபெறுவேன்.

    உங்களது பயணத்தில் ஏதேனும் வெற்றிடம் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். கிரிக்கெட்டை பொறுத்தவரை எப்போதும் நீங்கள் ஏதாவது ஒரு வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டு இருக்கலாம். அதற்கு முடிவே கிடையாது. விரும்பிய இலக்கை அடைந்து விட்டேன் என்று உணரும் போது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக் கொள்வேன்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முன்பை விட இப்போது மிக கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கின்றன. நிறைய புதிய வீரர்கள் வருகிறார்கள். அதனால் சவால்களும் வித்தியாசப்படுகின்றன. அணிகளின் உரிமையாளர்களும் வீரர் களை தேர்வு செய்வது உள்ளிட்ட விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள். எந்த ஒரு விளையாட்டு வீரர்களுக்கும் இதுபோன்ற சவால்கள் தான் தேவையாகும். அந்த சவால்களோடு பயணிக்கும் போது நமது ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.   #GautamGambhir #IndianTeam #Retirement
    ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார். #JamesAnderson #Retirement #England
    லண்டன்:

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி கலக்கினார். கடந்த செவ்வாய்க்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடைசி விக்கெட்டாக முகமது ஷமியை போல்டு செய்தார்.



    இதன் மூலம் ஆண்டர்சன் 143 டெஸ்டில் விளையாடி மொத்தம் 564 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 4-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை ஆண்டர்சன் தன்வசப்படுத்தினார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மெக்ராத்திடம் (563 விக்கெட்டுகள், 124 டெஸ்டில்) இருந்து தட்டிப் பறித்து தனக்கு சொந்தமாக்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முரளிதரன் (இலங்கை), வார்னே (ஆஸ்திரேலியா), கும்பிளே (இந்தியா) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    சாதனை படைத்த 36 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதில் மெக்ராத்தின் சாதனையை நான் முறியடித்து இருந்தாலும், என்னை விட சிறந்த பவுலர் மெக்ராத் தான். பவுன்ஸ், ஸ்விங் செய்வது, தளர்வின்றி கடுமையாக பந்து வீசுவது, துல்லியமாக, ஆக்ரோஷமாக செயல்படுவது உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் மெக்ராத் என்னை விட உயர்வானவர். அவரது பந்து வீச்சின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தான் எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

    போட்டிக்கு மெக்ராத் தயார் ஆகும் விதத்தை நான் கவனித்து இருக்கிறேன். அது எனக்கு உதவிகரமாக இருந்து இருக்கிறது. தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் எதுவும் எனக்கு இல்லை. 2006-ம் ஆண்டு ஆஷஸ் போட்டி தொடரில் மெக்ராத் கலந்து கொள்ளும் போது ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லையாம். ஆனால் அந்த போட்டி தொடர் முடிவில் அவருக்கு ஓய்வு எண்ணம் உதித்து விடைபெற்றதாக கருத்து தெரிவித்ததை நான் படித்து இருக்கிறேன். அதுபோல் எனக்கும் நடக்கலாமே? அது யாருக்கு தெரியும்.

    ஓய்வு எண்ணம் இதுவரை எனது மனதில் உதிக்கவில்லை. அது குறித்து நான் சிந்திப்பதும் கிடையாது. சிறந்த திறனை வெளிப்படுத்துவதிலும், அடுத்த போட்டி மற்றும் அடுத்த தொடர் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இலங்கை போட்டி தொடருக்கு முன்பு எங்களுக்கு போதிய இடைவெளி இருக்கிறது. இலங்கை தொடரில் சிறப்பாக பந்து வீச முயற்சிப்பேன்.

    இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.  #JamesAnderson #Retirement #England
    சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஆக்கி அணி வீரர் சர்தார் சிங் தெரிவித்தார். #SardarSingh #Retirement #InternationalHockey
    புதுடெல்லி:

    இந்திய ஆக்கி அணியின் முன்னணி நடுகள வீரரும், முன்னாள் கேப்டனுமான சர்தார் சிங் 2006-ம் ஆண்டில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார்.

    அரியானாவை சேர்ந்த 32 வயதான சர்தார் சிங் இதுவரை 350 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். 2008-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார். சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். கடந்த முறை தங்கப்பதக்கம் வென்று இருந்த இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டியில் இந்த முறை வெண்கலப்பதக்கம் தான் பெற்றது. சர்தார் சிங் ஆட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.



    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமனில் அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கான பயிற்சி முகாம் புவனேஸ்வரத்தில் வருகிற 16-ந் தேதி முதல் அக்டோபர் 14-ந் தேதி வரை நடக்கிறது. தேசிய பயிற்சி முகாமுக்கான 25 வீரர்கள் பட்டியலை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. இதில் சர்தார் சிங் பெயர் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் சர்தார் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது வாழ்க்கையில் போதுமான அளவுக்கு ஆக்கி விளையாடி விட்டேன். 12 ஆண்டுகள் என்பது நீண்ட காலமாகும். வரும் தலைமுறையினருக்கு வழி விடுவதற்கு இதுவே சரியான தருணமாகும். எனது குடும்பத்தினர் மற்றும் ஆக்கி இந்தியா நிர்வாகிகள், நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த ஓய்வு முடிவை எடுத்தேன். ஆக்கியை தவிர்த்து எனது வாழ்க்கையை சிந்திக்க இது சரியான நேரமாக கருதுகிறேன்.

    ஓய்வு முடிவு எடுக்க எனது உடல் தகுதி காரணம் இல்லை. இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடக்கூடிய உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு காலகட்டம் உண்டு. வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர இது தான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எனது ஓய்வு முடிவை தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங்குக்கு தெரிவித்து விட்டேன். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சர்தார் சிங் டெல்லியில் நாளை ஓய்வு முடிவை முறைப்படி அறிவிப்பார் என்று தெரிகிறது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை விளையாட ஆர்வமாக இருப்பதாக சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்த சர்தார்சிங் கட்டாயத்தின் பேரில் ஓய்வு முடிவுக்கு வந்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேசிய பயிற்சி முகாமுக்கான வீரர்கள் பட்டியலில் உங்களுக்கு இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவுக்கு வந்தீர்களா? என்ற கேள்விக்கு சர்தார் சிங் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    அரியானா போலீஸ் துறையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சர்தார் சிங் 2 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். 2012-ம் ஆண்டில் அர்ஜூனா விருதையும், 2015-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.  #SardarSingh #Retirement #InternationalHockey 
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #RPSingh
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங். 2005ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பின்னர் அனைத்து வகை போட்டிகளிலும் விளையாடினார். 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

    அவர் மொத்தம் 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளும், 14 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார்.



    இந்நிலையில், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆர்.பி.சிங் அறிவித்துள்ளார். தன்னுடைய கிரிக்கெட் பயணம் இனிமையானதாகவும் மறக்க முடியாத நினைவுகள் கொண்டதாகவும் இருக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். #RPSingh
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. #MSDhoni #Retirement
    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி 2-வது ஆட்டத்தில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். டோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது.



    லீட்சில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. தோல்வி கண்டு வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பிய போது டோனி, நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக போட்டி தொடரை வென்றாலோ? அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்லுவார்கள்.

    தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. 37 வயதான டோனி 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். 
    தலைமை நீதிபதி மீது புகார் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்திய சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார். #JusticeChelameswar #SC
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்தவர் செல்லமேஸ்வர்.

    கடந்த 2011-ம் ஆண்டு, அக்டோபர் 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி ஏற்ற இவர், நேற்று பணி நிறைவு செய்து ஓய்வு பெற்றார்.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்ற நாளில் இருந்து, இவரிடம் பணியாற்றி வந்த தனிச்செயலாளர், நீதிபதி செல்லமேஸ்வர் பற்றி கூறுகையில், “அவர் ஒரு நல்ல மனிதர். நீதித்துறையின் கண்ணியத்தை நிலைநிறுத்தியவர்” என குறிப்பிட்டார்.



    நீதிபதி செல்லமேஸ்வர், இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றில் இல்லாத வகையில் சக நீதிபதிகளுடன் கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி நிருபர்களை சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக புகார் கூறி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவு கூரத்தக்கது. #JusticeChelameswar #SC
    அரசு டாக்டர்களின் பணி ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுபவர் கே.புருஷோத்தமன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2007-ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி, அரசு டாக்டர்களின் பணி ஓய்வு பெறும் வயது 70 என்று நிர்ணயம் செய்துள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில், அரியானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 58-ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வு வயதை உயர்த்தியதை பிரதமரும் வரவேற்றுள்ளார்.



    ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதனால், பொதுமக்களுக்கு மிகவும் நன்மை ஏற்படும். அனுபவம் வாய்ந்த டாக்டர்களிடம் அவர்கள் சிகிச்சை பெறலாம். அதுமட்டுமல்ல, மருத்துவ மாணவர்களுக்கும் நன்மை ஏற்படும்.

    எனவே, அரசு டாக்டர்களின் ஓய்வு வயதை உயர்த்தும்படி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந்தேதி கோரிக்கை மனு கொடுத்தேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. பணி ஓய்வுபெறும் வயதை உயர்த்தினால், என் வயதையொட்டி உள்ள 800 டாக்டர்கள் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்தனர்.

    பின்னர், மனுதாரர் கடந்த ஆண்டு கொடுத்த கோரிக்கை மனுவை தமிழக தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும். அப்போது மனுதாரர் மட்டுமல்லாமல், அரசு டாக்டர்களின் கருத்தையும் கேட்கவேண்டும். அதன்பின், ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்து தகுந்த முடிவினை எடுக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 
    ×