search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளியம்மன்"

    காளியம்மன் கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர்.
    மணப்பாறையில், திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி திருவிழா நேற்று முன்தினம் இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது.

    நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) காலை அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுவதல், மாவிளக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    அதைத்தொடர்ந்து அன்னதானமும், மாலை பெண்கள் நடத்தும் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கரகம் களைதல் நிகழ்ச்சியும், அதன் பின்னர் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர். 
    சேலம் அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில், சின்னக் கடைத் தெருவில் அமைந்துள்ளது குஞ்சு காளியம்மன் ஆலயம். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும்.
    சேலம் அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில், சின்னக் கடைத் தெருவில் அமைந்துள்ளது குஞ்சு காளியம்மன் ஆலயம். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும்.

    திருமணி முத்தாறு கரையில் சலவைத் தொழிலாளர்கள் சலவை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சலவைத் தொழிலாளியின் மகள், கரையில் இருந்த குடையை எடுக்க முடியாமல் திணறினார். குடையை தூக்க முடியாததன் காரணத்தை எண்ணி அவள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.

    அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘நான் தான் அம்மன் வந்திருக்கிறேன். எனக்குக் குஞ்சன் காட்டிற்குச் செல்லும் வழியைக் காட்டு’ என்றது அந்தக் குரல். சலவைத் தொழிலாளியின் மகள் கொஞ்சம் திகைத்தாளும், அம்மனின் கூற்றை ஏற்று குஞ்சன்காடு வந்து சேர்ந்தாள்.

    இதற்கிடையில் மகளைக் காணாது சலவைத் தொழிலாளி ஊர் மக்களுடன் தேடி அலைந்தார். அப்போது அடர்ந்த காட்டில் ஓரிடத்தில் கழுகுகள் கூட்டமாக வட்டமிட்டிருந்ததைக் கண்டனர். அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சலவைத் தொழிலாளியின் மகள், தன்னிலை மறந்து நின்றிருந்தாள். அவளை ஊர் மக்கள் சகஜ நிலைக்கு கொண்டு வந்து, ‘என்ன நடந்தது?’ என்று கேட்டனர்.

    உடனே அவள் நடந்த அனைத்தையும் ஊர் மக்களிடம் கூறினாள். அதே நேரத்தில் அங்கு அசரீரி ஒலித்தது. ‘நான் இங்கு எழுந்தருளியுள்ளேன். இங்கே எனக்கு ஆலயம் எழுப்புங்கள்’ என்றது அந்தக் குரல்.

    அந்தப் பகுதியில் பெரியவரான ஒருவர் ‘இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தாய். நகர்புறத்தில் உனக்கு பெரிய ஆலயம் எழுப்புகிறேன்’ என்றார்.

    ஆனால் அம்மனோ, ‘நான் இங்குதான் நிரந்தரமாக வாசம் செய்ய விரும்புகிறேன்’ என்றாள். மேலும் சலவைத் தொழிலாளியின் மகளது கணவரே தனக்கு பூஜை செய்யட்டும்’ என்றும் கூறினாள்.

    அம்மனின் ஆசைப்படியே அங்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அம்மன் ‘குஞ்சுக் காளியம்மன்’ என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.

    சேலத்தில் பிரசித்தி பெற்றதான, கோட்டை மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்ததாக, இந்த ஆலயத்தில் நிறைய பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் இருந்து தான் அனைத்து ஆலயங்களுக்கும் சக்தி அழைப்பு என்னும் நிகழ்வு நடைபெறுகிறது.

    ஆலய அமைப்பு

    இந்த ஆலயக் கருவறையில் அம்மன் அமர்ந்த கோலத்தில் இரு கரங்களுடன், புன்னகை தவழும் முகத்துடன் காட்சி தருகிறார். கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கின்றார். சிரசில் அக்னி சூலை ஏந்தி அருள்பாலிக்கிறார். குஞ்சுக் காளியம்மன், குஞ்சு மாரியம்மன் இருவரும் ஒரே சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிப்பது இவ்வாலய சிறப்பு அம்சமாகும்.

    ஒரு தோட்டக்காரர் கனவில் வந்து, தோட்டத்தில் உள்ள தன்னை குஞ்சுக் காளியம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு அருளியதன் அடிப்படையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார்.

    இவ்வாலயத்தில் உள்ள அரசு மற்றும் வேம்பு மரத்தடியில் ராகு மற்றும் கேது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ராகு- கேது தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி பூஜை செய்து பலனடைகின்றனர்.

    விநாயகர் சன்னிதியில் வெற்றிலை, பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் வைத்து வழிபட மக்களுக்கு ஏற்படும் விஷக் காய்ச்சல் தீருகிறது என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். திருமணத்தடை விலக, தொழிலில் மேன்மை பெற, நினைத்த காரியம் நிறைவேற, குழந்தை பாக்கியம் கிடைக்க, அம்மனை மனமார வேண்டி காரிய வெற்றியடைகின்றனர்.

    இந்த ஆலயத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தும் நிகழ்வு, முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. அம்மனுக்கு ஆடி மாதத்தில் வளைகாப்பு நடத்தி, அம்மனுக்கு அணிவித்த வளையல்களை, குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பெண்களிடம் கொடுத்து அணியச் செய்கிறார்கள்.

    இத்தலத்தில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் அபிஷேகத்தில் 108 கிலோ மஞ்சள்பொடி உபயோகப்படுத்தப்படுகிறது.

    இந்த ஆலயத்தின் தல விருட்சமாக அரசு மற்றும் வேம்பு மரங்கள் உள்ளன.

    இந்து சமய அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கோவில், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். 
    ×