search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்கல்"

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதை தோற்கடிக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.#TripleTalaq #RajyaSabha
    புதுடெல்லி:

    இஸ்லாமியர்களிடையே நிலவும் ‘உடனடி முத்தலாக்’ மூலம் விவாகரத்து செய்யும் முறையை கிரிமினல் குற்றமாக கருதும் மசோதா, கடந்த 17-ந் தேதி, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா, சில எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கிடையே, கடந்த 27-ந் தேதி நிறைவேற்றப்பட்டது.

    மாநிலங்களவையிலும் நிறைவேறினால்தான், மசோதா சட்ட வடிவம் பெறும். எனவே, முத்தலாக் தடை மசோதாவை, மாநிலங்களவையில் இன்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்கிறார்.

    மாநிலங்களவையில், ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. 245 உறுப்பினர்களை கொண்ட சபையில், பெரும்பான்மைக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், பா.ஜனதா கூட்டணிக்கு 93 உறுப்பினர்கள்தான் இருப்பதாக தெரிகிறது. எனவே, எந்த அணியையும் சேராத கட்சி உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்த்து மத்திய அரசு நம்பிக்கையுடன் உள்ளது.

    மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்தார். சபையில் இன்று தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால், மாநிலங்களவையில் மசோதாவை தோற்கடிப்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை தோற்கடிப்பதில் மற்ற கட்சிகளுடன் கைகோர்த்து செயல்படுவோம். மக்களவையில் 10 கட்சிகள் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அரசுக்கு ஆதரவான அ.தி.மு.க. போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, தற்போதைய வடிவத்தில் மசோதாவை நிறைவேற்ற விட மாட்டோம்” என்றார்.

    முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. காங்கிரஸ் உறுப்பினர்கள் தவறாமல் சபைக்கு வருமாறு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, முத்தலாக் மசோதாவுக்கு அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவி சாயிஸ்டா அம்பர் கூறியதாவது:-

    முத்தலாக் சட்டம், குரான் சொன்னபடி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அதில், உடன்பாட்டுக்கான வாய்ப்பு இருக்க வேண்டும். பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக, ஆண்களை தண்டிப்பதற்கே முக்கியத்துவம் அளித்தால், நாங்கள் போராட்டம் நடத்துவோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குடும்பங்கள் அழிந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. #FireCracker #SupremeCourt
    புதுடெல்லி:

    தீபாவளி, தசரா பண்டிகை காலத்தில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதாக கூறி, டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி மற்றும் ஜேயா ராவ் பசின் என்ற 3 சிறுவர்கள் சார்பில் அவர்களுடைய தந்தையர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.



    சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், பல்வேறு இந்து அமைப்புகள் என சுமார் 100 பேர் எதிர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு முன் மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆத்மாராம் நட்கர்னி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

    * கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகளுடன் தீபாவளி சமயத்தில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு பற்றி கலந்தாலோசித்து ஆலோசனைகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தீபாவளியின்போது பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மீது பரிசோதனை நடத்தப்படும். குறைந்த அளவில் புகையை வெளியிடும் பட்டாசுகள் தயாரிக்க வலியுறுத்தப்படும்.

    * சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமை பட்டாசுகள் தயாரிக்க அறிவுறுத்தப்படும்.

    * பட்டாசு தயாரிப்பில் பேரியம் உப்பு தடை செய்யப்படும். பட்டாசுகளில் அலுமினியம் தாது கலப்பதை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு மறு ஆய்வு செய்யும்.

    * தீபாவளிக்கு 14 நாட்களுக்கு முன்பும் தீபாவளி முடிந்து 7 நாட்களுக்குப் பிறகும் அலுமினியம், பேரியம், இரும்புத்தாதுப் பொடி ஆகியவை பட்டாசுகளில் பயன்படுத்துவது குறித்தும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

    * சரவெடிகளால் சுற்றுச்சூழல் மிகவும் மாசு அடைவதால் அவற்றின் தயாரிப்புக்கு தடை விதிக்கலாம்.

    * வெளிநாடுகளைப் போல இந்தியாவின் பெரிய நகரங்களில் குடியிருப்போர் சங்கங்கள் வழியாக குடும்பங்கள் கூட்டாக பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்யலாம். அதற்கான இடம், மைதானத்தை மாநில அரசுகள் முன்கூட்டியே தீர்மானித்து அறிவிக்கலாம்.

    * மாநிலம் மற்றும் தேசிய அளவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.

    மேலே கூறப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக அரசு நிறுவனங்களுக்கும் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் 2 வாரங்களில் அவற்றை அமல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே கோர்ட்டு 2 வாரங்களுக்குள் இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், வரும் தீபாவளியில் அமல்படுத்தலாம்.

    இவ்வாறு கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கு இடையே தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, பா.வினோத் கன்னா ஆகியோர் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் தங்கள் வாதத்தில் கூறியதாவது:-

    இத்தனை நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு, சிவகாசியில் அனைத்து ஆய்வு வசதிகளும் கொண்ட மத்திய அரசு நிறுவனமான பட்டாசு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் ஏன் ஆலோசனை மேற்கொள்ளவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இது குறித்து உத்தரவு பிறப்பித்தும் மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்தியாவின் 90 சதவீத பட்டாசு உற்பத்தி தமிழ்நாட்டில் குறிப்பாக சிவகாசியில் நடைபெறுகிறது. அதில் 40 சதவீதம் டெல்லிக்கு அனுப்பப்படுகிறது. டெல்லி, பட்டாசுக்கான வர்த்தக மையமாக செயல்படுகிறது. அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தராஞ்சல் போன்ற மாநிலங்களுக்கும் டெல்லியில் இருந்து பட்டாசு அனுப்பப்படுகிறது.

    எனவே, டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தால் தமிழகத்தின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். சிவகாசியின் பட்டாசு உற்பத்தியாளர்கள் அனைவரும் சிறுகுறு நடுத்தர தொழில் முனைவர்கள் ஆவார்கள். 1,070 பட்டாசு தொழிற்சாலைகளால் 5 லட்சம் குடும்பங்கள் பயன் அடைகின்றன. பட்டாசுகள் பிரச்சினை என்று கருதி, தீர்வாக பட்டாசுக்கு தடை விதிப்பது மேலும் பல பிரச்சினைகளை உருவாக்கிவிடும். பட்டாசு மீதான தடை என்பது கண்டிப்பாக ஒரு தீர்வாக இருக்காது. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

    இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் என்னும் தனியார் தொண்டு அமைப்பின் சார்பில் வக்கீல் ஜே.சாயி தீபக் வாதிட்டபோது, “தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. இது கொண்டாட்டம் சார்ந்த மத ரீதியான நடவடிக்கை. இந்துக்கள் மட்டுமே பட்டாசு வெடிப்பதில்லை. சீக்கியர்களும் சமணர்களும் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தங்கள் பண்டிகைகளில் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். பட்டாசு வெடிப்பதற்கு எதிரான முறையான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் இதுவரை முழுமையாக செய்யப்படவில்லை. இங்கு தீபாவளி என்பது பிரச்சினை அல்ல. சுற்றுச்சூழல் மாசுபடுவதே பிரச்சினை. எனவே மத்திய அரசு பரிந்துரைத்தபடி சில கட்டுப்பாடுகளுடன் பட்டாசு தயாரிப்புக்கும் விற்பனை, உபயோகம் ஆகியவற்றுக்கும் அனுமதி வழங்கலாம்” என்று குறிப்பிட்டார்.

    வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 28-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  #FireCracker #SupremeCourt #Tamilnews
    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இடையூறாக அமைந்த 27 தனியார் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வழக்குதாரர் தரப்பில் ஒரு ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #NilgirisElephant #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது.

    அந்த தடையை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு கடந்த 9-ந் தேதியன்று விசாரித்தது.



    அப்போது, “யானைகள் வழித்தடத்தில் விதிமுறைகளை மீறி 39 வணிக நிறுவனங்கள் இருப்பதாக கலெக்டர் கூறி இருக்கிறார். இவற்றில் 27 விடுதிகள் சார்பாக யாரும் ஆஜர் ஆகவில்லை. எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது. அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்‘ வைக்கப்பட வேண்டும். மீதம் உள்ள 12 விடுதிகளும் தங்களுக்கு அனுமதி உள்ளதா என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்தனர்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மூல வழக்குதாரரும், வக்கீலுமான யானை ராஜேந்திரன் நேற்று ‘கேவியட்’ மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில் அவர், “யானைகள் வழித்தட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து யாரேனும் மேல்முறையீட்டு வழக்கு போட்டால், அந்த வழக்கில் என்னையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு என்னுடைய தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது” என கூறி உள்ளார்.  #NilgirisElephant #SupremeCourt
    நாடாளுமன்ற மக்களவையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தாக்கல் செய்தார். #PrakashJavadekar #TeacherTrainingInstitution
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தாக்கல் செய்தார். மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) சட்டப்படி அங்கீகாரம் பெறாதபோதிலும், கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டு வரை ஆசிரியர் பயிற்சி படிப்புகளை வழங்கி இருந்தால், அத்தகைய நிறுவனங்களுக்கு முன்தேதியிட்டு அங்கீகாரம் வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.

    இந்த மசோதாவால், இதுபோன்ற 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பலன் அடையும் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். அ.தி.மு.க. உறுப்பினர் எம்.உதயகுமார், மசோதாவை ஆதரித்து பேசினார். 
    வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
    சென்னை:

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

    சென்னை வருமானவரித்துறை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வருமானவரி சட்டம் 44 ஏ.பி.ன் கீழ் தங்கள் கணக்குகளுக்கு தணிக்கை தேவைப்படாத பிரிவினர் 2018-2019 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2017-2018 நிதியாண்டு) வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய இந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி கடைசி நாளாகும். மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டுச் சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் ஆகியோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

    வருமானவரி சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 234 எப் பிரிவின் படி கால தாமதக்கட்டணம் (அபராதம்) செலுத்த வேண்டியவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    * வருமானவரி கணக்கை அதற்குரிய நாளான 31.07.2018-க்கு முன்னதாக தாக்கல் செய்வோர்களுக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை.

    * மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை 31.07.2018க்கு பிறகும் 31.03.2019-க்கு முன்பாகவும் தாக்கல் செய்தால் அபராதக் கட்டணம் ரூ.1000.

    * ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை 31.07.2018-க்கு பிறகு ஆனால் 31.12.2018-க்கு முன்னதாக தாக்கல் செய்தால் அபராதம் ரூ.5,000.

    * மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை 31.12.2018-க்கு பிறகு ஆனால் 31.03.2019-க்கு முன்னதாக தாக்கல் செய்தால் அபராதம் ரூ.10,000.

    வருமானவரி சட்டத்தின் புதிய நடைமுறையின்படி 139-வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டின் இறுதிக்கு பிறகு எவ்வித வருமானவரி கணக்கும் தாக்கல் செய்ய இயலாது. உதாரணமாக மதிப்பீட்டு ஆண்டு 2018-2019-க்கு 31.03.2019-க்கு பிறகு வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

    மேலும் அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்யவேண்டும். கீழே குறிக்கப்பட்டுள்ள பிரிவினர் விரும்பினால் காகித வடிவில் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் ஒரேயொரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் அல்லது தோராய வருமானம் உள்ளோர் ஐ.டி.ஆர்.1 அல்லது ஐ.டி.ஆர்.4 (சுகம்) படிவங்களில் வருமானவரி கணக்கை கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தாக்கல் செய்யலாம்.

    முந்தைய ஆண்டில் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள், 5 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட மொத்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் தங்களது வருமானவரி கணக்கில் திரும்ப கிடைக்க வேண்டிய தொகை கோராதவர்கள்.

    வரி செலுத்துவோர் தங்களது வருமானவரி கணக்கை செலுத்துவதற்கு ஏதுவாக சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலை இலக்கம் 121-ல் செயல்படும் ஆயக்கர் பவன் வளாகத்தில் வருமானவரி கணக்கு முன் தயாரிப்பு கவுண்ட்டர்கள் செயல்படும். இந்த கவுண்ட்டர்கள் அனைத்து வேலை நாட்களிலும் 16-ந் தேதி முதல் 2018 ஆகஸ்டு 3-ந் தேதி வரை செயல்படும். வரி செலுத்துவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தி வரக்கோரி, மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனு தாக்கல் செய்தது. #PNBFradu #NiravModi
    மும்பை:

    ரூ.13 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன. இவ்விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, நிரவ் மோடி மற்றும் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    அதன் அடிப்படையில், நிரவ் மோடிக்கு எதிராக மும்பை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்தி வரக்கோரி, மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனு தாக்கல் செய்தது. நிரவ் மோடி இங்கிலாந்து, பெல்ஜியம் உள்பட எந்த நாட்டில் இருந்தாலும் அவரை நாடு கடத்திக்கொண்டு வருமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  #PNBFradu #NiravModi #Tamilnews 
    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் இன்று வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. #CauveryMangementBoard #CauveryDraftScheme
    புதுடெல்லி:

    காவிரியில் ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழ் நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு அதை உறுதிப்படுத்துவதற்காக ஒரு “ஸ்கீம்” தயாரித்து தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    ஆனால் ஸ்கீம் என்பது எதை குறிக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உருவானது.

    ஸ்கீம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருப்பது காவிரி மேலாண்மை வாரியத்தை குறிக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக மாநில அரசு ஸ்கீம் என்பதற்கு வாரியம் அமைக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல என்று தெரிவித்தது.

    இதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்று தமிழ்நாடு-கர்நாடகாவில் விவசாயிகள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிரமாக பிரசாரம் நடந்ததால் மத்திய அரசு தனது முடிவை அறிவிப்பதில் தாமதம் செய்தது.

    சுப்ரீம்கோர்ட்டில் அடுத்தடுத்து 3 தடவை மத்திய அரசு மனு செய்து கால அவகாசம் பெற்றது. கடைசியாக கடந்த 8-ந்தேதி காவிரி நதிநீர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிபதிகள் மிகவும் கண்டிப்பான உத்தரவு ஒன்றை வெளியிட்டனர்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “14-ந்தேதி கண்டிப்பாக காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய தினம் மத்திய நீர்வளத் துறை செயலாளர் அவசியம் கோர்ட்டுக்கு வர வேண்டும். இந்த வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் எதையும் பெற தேவை இல்லை” என்று கூறி இருந்தனர்.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) சுப்ரீம்கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 11 மணிக்கெல்லாம் இதில் விடை தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 வழக்குகளுக்கு பிறகு காவிரி வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

    இதனால் சற்று தாமதமாக காவிரி வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆனார்.

    அவர் கோர்ட்டில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார். சீலிடப்பட்ட கவரில் வைத்து அந்த வரைவு செயல் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அதில் மத்திய அரசு என்ன கூறி இருக்கிறது என்பது தெரியாமல் இருந்தது.

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அதில் வழிவகை செய்துள்ளதா? அல்லது ஆணையம் அமைக்க கூறி உள்ளதா? அல்லது குழு ஒன்று அமைக்க பரிந்துரை செய்து உள்ளதா? என்பது தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் சில விளக்கங்கள் வெளியிடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    காவிரி நதிநீரை பங்கீடு செய்து கொள்ள 10 பேர் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அந்த அமைப்பில் மத்திய நீர்வளத் துறை செயலாளரும் இடம் பெறுவார்.

    அந்த அமைப்பில் ஒரு தலைவர், ஒரு நிரந்தர உறுப்பினர். 2 பகுதி நேர உறுப்பினர்கள், 2 முழு நேர உறுப்பினர்கள், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா ஒரு உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.

    அந்த அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர் 5 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். அல்லது 65 வயது வரை பதவியில் இருக்கும் வகையில் செய்யலாம்.

    இந்த அமைப்பானது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அமைப்பாக இருக்கும். காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்துள்ள அனைத்து உத்தரவைகளையும் இந்த அமைப்பு அமல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

    காவிரி நதிநீரை பங்கீடு செய்து கொள்வதற்கு வாரியம் அல்லது அமைப்பு எதுவாக இருந்தாலும் அது சுமூகமாக செயல்பட வேண்டியது முக்கியம் ஆகும். அதை 10 பேர் கொண்ட குழு செய்யும்.

    இந்த 10 பேர் குழுவுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசுகள் 40 சதவீத சம்பளம் வழங்க வேண்டும். கேரளா அரசு 15 சதவீதமும், புதுச்சேரி மாநில அரசு 5 சதவீதமும் சம்பளம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு தகவல்கள் வெளியாகி உள்ளன.



    காவிரி வரைவு திட்டம் தாக்கல் மற்றும் மத்திய அரசின் விளக்கத்தை தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டு திருப்தி அடைந்துள்ளது. மத்திய அரசு சீல் வைத்து கொடுத்துள்ள கவரில் உள்ள தகவல்களை 2 நாட்களில் ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.

    அதன் பிறகு நீதிபதிகள் தங்களது முடிவுகளை வெளியிடுவார்கள். அதற்கு வசதியாக இந்த வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு (16-ந்தேதிக்கு) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    அன்றைய தினம் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள காவிரி நதிநீர் பங்கீடு அமைப்பு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. அந்த அமைப்புக்கு காவிரி நீர் திறப்பு உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்படுகிறது.

    எனவே காவிரி மேலாண்மை வாரியம் இல்லாவிட்டாலும் அதற்கு இணையான ஒரு நிர்வாகத்தை அமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு உருவாக்கி இருப்பதால் உரிய பலன்கள் கிடைக்கும் தெரிகிறது. #CauveryMangementBoard #CauveryDraftScheme 
    ×