search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகர்வால்"

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அகர்வால், புஜாரா, கோலி ஆகியோர் சிறப்பாக ஆடிய நிலையில், இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. #INDvAUS
    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் விளையாடும் இப்போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இப்போட்டியில் இந்திய தொடக்க ஜோடியான முரளி விஜய்-லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டனர். புதுமுக வீரர் மயங்க் அகர்வால், ரோகித்சர்மா, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்புக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார்.

    டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால்-ஹனுமா விகாரி களம் இறங்கினர்.

    இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை கவனமுடன் எதிர்கொண்டனர். ஆடுகளத்தில் பந்து நன்கு பவுன்ஸ் ஆனது. திடீரென்று பந்து பேட்ஸ்மேன் கால் முட்டிக்கு கீழேயும் சென்றது.

    இதனால் விகாரி மிகவும் பொறுமையுடன் விளையாடினார். மயங்க் அகர்வால் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்.

    பேட் கும்மின்ஸ் வீசிய பவுன்ஸ் பந்தை விகாரி தவிர்க்க முயன்றபோது கையுறையில் பட்டு கேட்ச் ஆனது. விகாரி 66 பந்தில் 8 ரன் எடுத்தார். அப்போது ஸ்கோர் 40 ரன்னாக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார்.

    மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 28 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன் எடுத்து இருந்தது. மயங்க் அகர்வால் 34 ரன்னுடனும், புஜாரா 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளைக்கு பிறகு மயங்க் அகர்வால் 95 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. இந்தியா 45-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மயங்க் அகர்வால் 76 ரன்னில் அவுட் ஆனார். அவர் கும்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் டிம்பெய்னிடம் கேட்ச் ஆனார். இந்த ரன்னை மயங்க் அகர்வால் 161 பந்தில் எடுத்தார். இதில் 8 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும். அறிமுக போட்டியில் அவர் ஆஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    அகர்வால் அவுட் ஆனவுடன் தேனீர் இடைவேளையின்போது இந்தியா 54.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 33 ரன்னுடன் களத்தில் இருந்தார்.



    தேனீர் இடைவேளைக்கு பிறகு புஜாரா, கேப்டன் கோலி இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இந்தியா 63-வது ஓவரில் 150 ரன்னை தொட்டது. தொடர்ந்து ஆடிய புஜாரா அரை சதம் கடந்தார். மறுமுனையில் விராட் கோலியும் அரை சதத்தை நெருங்க, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. புஜாரா 68 ரன்களுடனும், விராட் கோலி 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர் மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் இணை கேப்டனாக சேர்க்கப்பட்டான். இதய கோளாறால் பல்வேறு அறுவை சிகிச்சை செய்துள்ள அவனுக்கு ஆஸ்திரேலிய அணி கேப்டனாக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

    இதையடுத்து அவன் ஆஸ்திரேலிய அணியின் 15-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளான். டாஸ் போடும்போது கேப்டன்களுடன் சிறுவன் ஆர்ச்சி சில்லரும் வந்திருந்தான். #INDvAUS
    ×