search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றப்பத்திரிகை"

    பிரிட்டன் நாட்டில் இருக்கும் விஜய் மல்லையா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய தீர்மானித்துள்ளார். #Mallya #VijayMallya #Mallyaappeal #UKcourt
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. 

    இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. 

    இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மல்லையாவுக்கு எதிராக சில செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 

    விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. 

    இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட  ஆவணங்களை தாக்கல் செய்தன. 

    இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து  இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் சென்றிருந்தனர்.

    இந்த வழக்கில் கடந்த பத்தாம் தேதி  தீர்ப்பளித்த நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் அடுத்தகட்ட முயற்சிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    அவரை நாடு கடத்தும் உத்தரவு பிரிட்டன் நாட்டு உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கோர்ட்டின் உத்தரவுக்கு சாதகமாகவே முடிவுகள் எடுக்கப்படும் என்னும் நிலையில் கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும்.

    இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 14 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

    இந்நிலையில், நாடு கடத்தும் தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா  மேல்முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் ஆனந்த் டூபே இன்று தெரிவித்துள்ளார். அப்படி செய்யப்படும் மேல்முறையீட்டை நிராகரிக்கவோ, விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவோ நீதிமன்றத்துக்கு உரிமையுண்டு.

    அப்படி மேல்முறையீடு வழக்கு நடத்தப்பட்டால் இந்திய அரசை சேர்ந்த அதிகாரிகள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. #Mallya #VijayMallya #Mallyaappeal #UKcourt #extraditionverdict #Mallyaextradition 
    ×