search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143253"

    திமுக தலைவர் கருணாநிதி நன்றாக தேறி வருகிறார் என்றும் மேலும் சில நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #KarunanidhiHealth #Karunanidhi #DMK #KauveryHospital
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 27-ம் தேதி நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த 5 ஆவது அறிக்கையை காவேரி மருத்துவனை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும். 29-ம் தேதியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பின்னர் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.



    அவரது உடல்நிலை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் முக்கிய உறுப்புகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. அவரது கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டம் சீராக்கப்பட வேண்டியதுள்ளது.

    என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார். #KarunanidhiHealth #Karunanidhi #RahulGandhi #DMK
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்க இன்று வருகை தந்தார்.  ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்தார். 

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “கருணாநிதி தைரியமானவர் நலமாக இருக்கிறார். அவர் நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறினார்.
    கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிய மருத்துவமனை வந்த இலங்கை அமைச்சர் மற்றும் எம்.பி, இலங்கை அதிபரின் வாழ்த்து கடிதத்தையும் ஸ்டாலினிடம் வழங்கினர். #Karunanidhi #KarunanidhiHealth #MaithripalaSirisena
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இன்று இலங்கை எம்.பி. ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

    கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் அவர்கள் கேட்டறிந்தனர். அப்போது, இலங்கை மைத்திரிபால சிறிசேனா எழுதிய வாழ்த்து கடிதத்தையும் அவர்கள் ஸ்டாலினிடம் கொடுத்தனர். “உலகத் தமிழர்களின் தலைவரான கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்” என அவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
    கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டதால் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் மிக குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
    தருமபுரி:

    கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் தவறான வதந்திகள் பரப்பப்பட்டன. இதனால் தருமபுரியில் நேற்று இரவு 9 மணிக்கே கடைகள் அடைக்கப்பட்டன.

    ஞாயிற்றுக்கிழமை மாலையிலும், இரவிலும் சீனிவாசராவ் தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு, பி.ஆர்.சுந்தரம் தெரு, முகமது அலி கிளப் ரோடு, பைபாஸ் ரோடு, 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். வதந்திகள் பரவியதால் நேற்று இரவு அந்த அளவுக்கு கூட்டம் இல்லை.

    நேற்று இரவு தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் மிக குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களிலும் பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே இருந்தது. வழக்கமாக திங்கட்கிழமை காலை தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் இருந்து பலர் பெங்களூருவுக்கு வேலைக்கு செல்வார்கள். இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதும்.

    ஆனால் இன்று காலை பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் இல்லை. தனியார் பஸ்களில் மட்டுமே கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று காலை தொப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி டோல்கேட்களில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படும். ஆனால் இன்று வாகன நெரிசல் இல்லாமல் போக்குவரத்து சீராக இருந்தது. வாட்ஸ்அப்களில் பரவும் வதந்தியே இதற்கு காரணமாக இருந்தது.

    பெங்களூருவில் வேலை பார்க்கும் தமிழர்கள் வெள்ளிக்கிழமை மாலை கார்களில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வந்துவிட்டு பெங்களூருவுக்கு திங்கட்கிழமை காலை செல்வார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் பயணத்தை தவிர்த்து விட்டனர்.

    இதேபோன்று இன்று காலை தருமபுரி டவுன் பஸ் நிலையம் மற்றும் ரூட் பஸ் நிலையத்தில் குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. டவுன் பஸ் நிலையத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அரசு பஸ் குறித்த நேரத்தில் வராததால் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களிலும் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். #tamilnews
    மேற்கு வங்காள முதல்வர் மம்தாபானர்ஜி சார்பில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ.பிரெய்ன் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். #karunanidhi #mkstalin #trinamoolcongressmp

    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று மு.க.ஸ்டாலின் மற்றும் டாக்டர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தாபானர்ஜி சார்பில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ.பிரெய்ன் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.


    பின்னர் அவர், ‘‘கருணாநிதி உடல்நலம் தேறி விரைவில் மக்கள் பணியாற்ற தாம் இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என்று மம்தாபானர்ஜி கூறியதாக மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து, ‘‘கலைஞர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என்ற வாசகம் அடங்கிய மம்தா பானர்ஜியின் கடிதத்தையும் அவரிடம் வழங்கினார்.

    பின்னர் டெரிக் ஓ.பிரெய்ன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தி.மு.க. தலைவர் கருணாநிதி முழு உடல்நலம் பெற மேற்குவங்க மக்களுடன் இணைந்து இறைவனை பிரார்த்திக்கிறோம்’’ என்றார்.  #karunanidhi #mkstalin #trinamoolcongressmp

    திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை முன்பு காத்திருந்த தொண்டர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையின் வெளியே மழையிலும் கட்டுக்கடங்காத தொண்டர்கள் கூட்டம் கூடியுள்ளது

    கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என்ற காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானதையடுத்து மருத்துவமனைக்கு வெளியே இருந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். இதைத்தொடந்து, மருத்துவமனையை விட்டு கலைந்து செல்லுமாறு காரின் மீது ஏறி ஆ.ராசா தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்தார்.

    காவேரி மருத்துவமனைக்கு வெளியே கூடியிருக்கும் ஏராளமான தொண்டர்கள் கலைந்து செல்ல காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும், கூட்டம் கலைந்து செல்லாததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தொண்டர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.

    மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, அங்கிருக்கும் தொண்டர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    சென்னை:

    இரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது. காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் உறவினர்கள் அனைவரும் விரைந்தது மற்றும் போலீசாரின் திடீர் பாதுகாப்பு ஏற்பாடுகளால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும் சிகிச்சை பிறகு அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, 'கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது நேரம் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் உடல்நிலை சீராகி வருகிறது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்' என அவர் தெரிவித்தார். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நலம் விசாரித்துள்ளார். #Karunanidhi #DMK #VenkaiahNaidu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வருகை தந்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.  

    கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்று அவரை நேரடியாக வெங்கையா நாயுடு மற்றும் கவர்னர் பன்வாரிலால் பார்த்தனர். இதுவரை மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் கருணாநிதியை நேரடியாக பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    கருணாநிதியை சந்தித்த தகவலை வெங்கையா நாயுடு  தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த சீமான், ‘நலம்பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும்’ என கூறியுள்ளார். #KarunanidhiHealth #Karunanidhi #Seeman
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஓ பிரையன், பாஜகவின் முரளிதர் ராவ், தமிழிசை, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராஜா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருணாநிதி நலம்பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். கருணாநிதி உடல்நலம் குறித்து நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் சிலர் அவதூறு பரப்புகின்றனர்; முகம் தெரியாத நபரின் பதிவுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது, எனினும் வருந்துகிறோம்” என கூறினார்.
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இன்று வருகை தர உள்ளார். #Karunanidhi #DMK #VenkaiahNaidu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனை வர உள்ளார். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.  
    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவடைந்து காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கருணாநிதிஹெல்த் எனும் ஹேஸ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. #KarunanidhiHealth
    சென்னை:

    தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்து காணப்பட்டதால் அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

    கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான தகவல்கள் பரவி வருவதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. 

    மறுபக்கம், கருணாநிதி குணமடைந்து மீண்டு வர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். பொதுவாகவே சமூக வலைதளங்களில் அன்றாடம் குறிப்பிட்ட ஒரு நிகழ்வு ட்ரெண்டாவது வழக்கமாகும். 

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிகப்பட்டுள்ள நிலையில் ட்விட்டரில் 'KarunanidhiHealth' எனும் ஹேஸ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

    இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி கருணாநிதியின் நினைவுகளை பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். #KarunanidhiHealth

    திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலைக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மீதான பற்று காரணமாக 85 வயதான பாட்டி திருக்குவளையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.
    சென்னை:

    சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று நலிவுற்று இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால், தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றநிலை தொற்றிக்கொண்டது. மருத்துவர்களின் கண்காணிப்பில் கருணாநிதி இருந்து வருவதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று, விடிய விடிய கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் வெளியே தொண்டர்கள் கூடி நின்று கொண்டு ‘தலைவர் வாழ்க’ என கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். பல்வேறு கட்சியின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து சென்றனர்.

    கோபாலபுரத்தில் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள தெருவில் போலீசார் தடுப்புகள் அமைத்து கூட்டம் கூடுவதை தடுத்து வருகின்றனர். எனினும், பலர் அங்கு காத்துக்கொண்டு இருக்கின்றனர். காலை 11 மணி அளவில் கூட்டத்தின் நடுவே இருந்த 85 வயது மூதாட்டி ஒருவர் திருக்குவளையில் இருந்து வருவதாகவும் தனது பெயர் ரத்தினாம்பாள் என்றும் கருணாநிதியை பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.

    இதனை அடுத்து, அங்கு கூடியிருந்த திமுகவினர் பாட்டி வந்த தகவலை சென்னை மாவட்ட செயலாளர் சேகர் பாபுவிடம் தெரிவித்தனர். கருணாநிதியை சந்திப்பதற்காகவே திருக்குவளையில் இருந்து சென்னைக்கு தனியாக வந்ததாக சேகர்பாபு எம்எல்ஏ.விடம் பாட்டி தெரிவித்தார்.



    ‘தலைவர பார்க்கனும்பா டீவியில ராத்திரி பார்த்தேன், ஏதேதோ சொன்னாங்க, மனசு தாங்கல கிளம்பி வந்துட்டேன்… காலையில 10.30 இறக்கி விட்டாங்க அங்கிருந்து கேட்டு கேட்டு பஸ் ஏறி இங்க வந்துட்டேன்’ என்றார் ரத்தினாம்பாள்.

    ‘தலைவரை பாக்கனும்… ஒரு ஓரமா நின்னு பாத்துட்டு போய்டுறேன்… எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதே தலைவர்தான்பா’ என்று கண்ணீரோடு நின்றவரை கண்ட சேகர்பாபு அவரிடம் விசாரித்து உள்ளே அழைத்து சென்று ஸ்டாலினை சந்திக்க வைத்து வெளியே கொண்டு வந்தார்

    ‘தலைவரை பார்க்க முடியல டாக்டர் பார்கறாங்களாம்’ என்று சோகத்தில் வெளியே வந்த ரத்தினாம்பாளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து சேகர்பாபு ஊருக்கு அனுப்பி வைத்தார்.
    ×