search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143253"

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் வெண்கல சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு மு.க அழகிரி கடிதம் எழுதியுள்ளார். #DMK #Karunanidhi #MKAzhagiri
    மதுரை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். ஸ்டாலினுக்கு எதிராக அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்த மு.க அழகிரி, கடந்த 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி ஒன்று நடத்தினார். 

    இந்நிலையில், அடுத்தகட்டமாக மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அனுமதி கேட்டு அவர் மாவட்ட கலெக்டருக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார்.  'நான் 35 ஆண்டுகளாக வாழுகின்ற மதுரை மாநகரில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் தலைவர் கலைஞர் அவர்களின் வெண்கல சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டுகிறேன்” என அழகிரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    கருணாநிதி மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவரது நினைவிடத்தில் கவிஞர்கள் இன்று கவிதை வாசித்து அஞ்சலி செலுத்துகின்றனர். #Karunanidhi
    சென்னை :

    கருணாநிதி மறைந்து ஒரு மாதம் ஆனாலும் திரண்டு வரும் கண்ணீரோடு தங்கள் மனம் கவர்ந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்த மட்டும் தினமும் திரண்டு வருகிறது மக்கள் கூட்டம்.

    வங்க கடலோரம் துயில் கொண்டிருக்கும் அண்ணாவின் நிழலில் அவரது தம்பி இளைப்பாறி கொண்டிருக்கிறார்.

    ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஒய்வெடுக்கிறார் என்று பொறிக்கப்பட்ட வாசகங்களுடன் கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டுடன் மறையாத புன்னகையுடன் சட்டத்துக்குள் படமாக இருந்து மெரினாவில் தனது உடன் பிறப்புகளை பார்த்து கொண்டிருக்கிறார்.

    உதய சூரியனாகவே தமிழகம் முழுவதும் வலம் வந்து பிரகாசித்துக் கொண்டிருந்த கலைஞர் என்ற சூரியன் அஸ்தமித்து 30 நாட்கள் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

    மறந்தால்தானே நினைப்பதற்கு பயணித்து களைத்து நிரந்தர ஓய்வுக்காக விடை பெற்ற கலைஞரின் உடலை லட்சக் கணக்கான மக்கள் சுமந்து சென்று மெரினா கடற்கரையில் இளைப்பாற வைத்தார்கள்.

    தலைவனைத் தான் காண முடியவில்லை. அவர் துயில் கொள்ளும் இடத்தையாவது பார்ப்போம் என்று அன்று முதல் தினம் கூட்டம் கூட்டமாக தொண்டர்களும், அனுதாபிகளும் நினை விடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    அடக்கம் நடந்த மறுநாளே அடங்காத கண்ணீருடன் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் வந்தமர்ந்து அஞ்சலி செலுத்தி சென்றார்கள்.

    தமிழ்பாலூட்டி தந்தையாய் அரவணைத்த தன் தாய் தமிழுக்கு கவிப்பேரரசு வைரமுத்து பாலூற்றி நன்றி கடமையாற்றினார்.

    கூட்டம் அதிகரித்ததால் சுற்றிலும் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டு போலீசாரும், தி.மு.க. தொண்டர்களும் பாதுகாப்பு பணியில் இறங்கினார்கள்.

    மாவட்ட வாரியாக வந்து அஞ்சலி செலுத்தி செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளனர். கட்சி அமைப்புப்படி 65 மாவட்டங்கள். அதில் சுமார் 30 மாவட்ட தொண்டர்கள் இதுவரை அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

    அஞ்சலி செலுத்த வருபவர்களில் அரசியல், கட்சி, கொள்கைகளுக்கு அப்பாற் பட்டு சமகாலத்தில் வாழ்ந்த முதுபெரும் தலைவர் என்ற உணர்வுடன் வந்து பார்த்து மரியாதை செலுத்தி செல்பவர்களும் ஏராளம்.



    கலைஞர், அரசியல், கலை இலக்கியம் என்று அத்தனையிலும் முத்திரை பதித்தவர். கலைகளை ரசிப்பது மட்டுமல்ல, வடிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே.

    அப்படிப்பட்ட தலைவருக்கு தொண்டர்களும் தங்கள் ரசனைக்கு ஏற்றபடி நினைவிடத்தில் மலர்கள், பழங்கள் என்று பலவகை பொருட்களால் அலங்காரம் செய்து வருகிறார்கள். அன்னாசி பழங்களால் உதய சூரியன், சுற்றிலும் பலவகை பழங்களால் அலங்காரம் செய்து அழகுபடுத்தினார்கள்.

    விதவிதமான மலர்களால் நட்சத்திரத்தை வடிவமைத்து என்றும் நீங்கள் எங்களுக்கு துருவ நட்சத்திரமே என்பதை சொல்லாமல் சொன்னார்கள்.

    கலைஞரின் பேனா முனைக்கு நிகரான வலிமையும் இல்லை. கருப்புக் கண்ணாடிக்கு நிகரான அழகும் இல்லை. கலைஞரின் நிரந்தர அடையாளமாக திகழும் இவற்றை அடை யாளப்படுத்தும் வகையில் பிரமாண்டமான மூக்கு, கண்ணாடி மற்றும் பேனா வடிவத்தில் அவரது நினை விடத்தை நடிகர் மயில்சாமி அழகுபடுத்தினார்.

    மலை முகடுகளுக்கு இடையில் இருந்து உதய சூரியன் உதித்து வருவது போன்ற கட்சி சின்னத்தை வண்ண வண்ண பூக்களால் தினமும் வடிவமைத்தனர். மு.க. என்ற எழுத்தையும் மலர்களால் பிரமாண்டமாக வடிவமைத்து வைத்தார்கள்.

    பகலில் கூட்டமாக இருக்கும். அமைதியாக நின்று பார்க்கவும், அஞ்சலி செலுத்தவும் சிரமமாக இருக்கும் என்பதால் பலர் குடும்பம் குடும்பமாக நள்ளிரவிலும் வந்து செல்வது எந்த அளவுக்கு கலைஞர் ஒவ்வொரு வரையும் ஈர்த்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.

    வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்று திரும்பிய விஜயகாந்த் நேரடியாக கலைஞர் நினைவிடம் சென்று கண்கலங்கி அழுதார். நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் இரவு நேரத்தில் தனியாக சென்று அஞ்சலி செலுத்தி னார்கள்.

    மக்கள் மனம் கவர்ந்த தலைவரைப் பற்றி அறிந்து வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்த பயணிகளும் நினைவிடத்தை பார்க்க தவறவில்லை.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், மவுன ஊர்வலமாக சென்று தன் மனம் கவர்ந்த கலைஞருக்கு அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து சென்றார்.

    ஒரு மாதம் நிறைவடையும் நிலையில் மு.க. அழகிரி பிரமாண்டமாக அமைதி பேரணி நடத்தி அஞ்சலி செலுத்தினார். அரசியல் பார்வை இருந்தாலும் கட்சி தலைவருக்கு செலுத்திய மவுன அஞ்சலி தான் என்றார் மு.க. அழகிரி.

    30-வது நாளான இன்று ஆயிரம் கவிஞர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை கவிதாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு காலை 7 மணிக்கு 100 கவிஞர்கள் கலைஞர் நினைவிடத்தில் சென்று கவிதை பாடுகிறார்கள்.

    முத்தமிழாய் வாழ்ந்த முத்தமிழ் அறிஞரின் நினை விடம் முப்பது நாள் மட்டுமல்ல என் நாளுமே தமிழ் போல் கவரும் என்பதில் சந்தேகமில்லை. #Karunanidhi
     
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #DhayaluAmmal
    சென்னை:

    திமுகவின் தலைவராக இருந்தவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 6-ம் தேதி வயோதிகம் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பின்னர், கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்ட்டர்.

    இந்நிலையில், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    திமுக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், இன்று ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். #DMK #Karunanidhi #MKStalin
    சென்னை:

    திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். தலைவர் பதவிக்கு மு.க ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிடுகின்றனர்.

    இன்று வேட்புமனு தாக்கல் செய்வதை ஒட்டி காலை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்த மு.க ஸ்டாலின், வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அதேபோல, துரை முருகனும் தனது வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்தினார். 

    இதனை அடுத்து, அவர்கள் அண்ணா அறிவாலயம் வந்த அவர்கள் வேட்புமனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் தாக்கல் செய்தனர். ஸ்டாலினை 65 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிந்துள்ளனர்.

    எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். 
    சென்னையில் நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பதாக திமுக வட்டாரத்தில் கூறப்படும் நிலையில், சுப்பிரமணிய சாமி ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMK #BJP #AmitShah #Karunanidhi
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதில், அமித் ஷா கலந்து கொள்ள உள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், “திமுக கூட்டத்தில் கட்சி தலைவர் அமித் ஷா கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்துள்ளார் என்பது குறித்து அறிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ட்வீட் செய்துள்ளார்.

    அமித் ஷா பங்கேற்கவில்லை என்றால் அக்கட்சி சார்பாக பொன் ராதாகிருஷ்ணன் அல்லது தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது.
    சென்னையில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #DMK #BJP #AmitShah #Karunanidhi
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    திமுக முன்னாள் எம்.பி டி.ஆர் பாலு ஸ்டாலின் சார்பாக அமித் ஷாவை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.



    சென்னை பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு மு.க ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் இன்று மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கருணாநிதி சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என முன்னாள் மத்திய மந்திரி மு.க அழகிரி தெரிவித்துள்ளார். #MKAlagiri
    மதுரை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர், அவரது மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க அழகிரி தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். வரும் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

    இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது, “தற்போது திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை. நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை தெரிவிப்பேன். செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கருணாநிதி சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். பேரணிக்கு பின்னர் எனது முடிவை தெரிவிப்பேன்” என அவர் தெரிவித்தார்.
    திமுக பொதுக்குழு வரும் 28-ம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 6-ம் தேதி காலமானார். இதனை அடுத்து, சமீபத்தில் கூடிய அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி மட்டும் பேசப்பட்டது. தலைவர் உள்ளிட்ட மற்ற பதவிகள் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை.

    இந்நிலையில், அடுத்தவாரம் 28-ம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு மு.க ஸ்டாலின் தலைமையில் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக மு.க அழகிரி அறிவித்துள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூடுவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
    திருச்சி நாடார் பேரவை சார்பில் நடத்த கூட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி நாடார் பேரவை சார்பில் நடத்த கூட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திருச்சி நாடார் பேரவை உறுப்பினர் கூட்டம் பீம நகரில் நடந்தது. இதில் கவுரவத்தலைவர்கள் ஜெயமோகன், குணசேகரன், ஜெயராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுச் செயலாளர் ராஜ் குமார், தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ், பொருளாளர் டாக்டர் மனோஜ், மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.வி.மணி, புறநகர செயலாளர் சுப் பிரமணியன், இளைஞரணி செயலாளர் பன்னீர் செல்வம், மாநில துணை செயலாளர் ஜாம்சன், துணைத்தலைவர் ஜெடிக்ஸ், இளைஞரணி துணை செயலாளர் ஜெயபால், மாநகர துணைச்செயலாளர் செல்வக்குமார், சட்ட ஆலோசகர் தாமஸ், பொதுக்குழு ஆலோசகர் ஜான்ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக வணிக வரித்துறை அலுவலர் லெட்சுமணன் கலந்து கொண்டு மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பீமநகர் பகுதி செயலாளர் கண்ணனை நியமித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை லெட்சுமணன் வெளியிட பொதுச்செயலாளர் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் ஜெயராஜ், தர்மராஜ், பாலகிருஷ்ணன், பட்டுமுருகன், விஜி, ராஜேஷ், சாமி ஸ்டோர் ராஜேஷ், ரெங்கநாராயணன், பீமநகர் எஸ்.ராஜேஷ், பால்துரை, செல்வம், ஜானகிராமன், முருகானந்தம், சாமுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது மறைவுக்கு திருச்சி நாடார் பேரவை சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். #RIPKarunanithi #Vijayakant
    சென்னை :

    தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் கடந்த 8-ம் தேதி தி.மு.க தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக காலமானார்.

    கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்சியில் நேரில் பங்கேற்க இயலாத விஜயகாந்த் அவரது மறைவிற்கு கண்ணீர் மல்க வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்தார்.

    பார்ப்பவர்களை நெகிழச்செய்யும் விதமாக இருந்த அந்த வீடியோவில், ‘ நான் அமெரிக்காவில் இருந்தாலும் என் எண்ணங்களும், நினைவுகளும் தமிழகத்தில்தான் இருக்கிறது.

    கலைஞர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கருணாநிதியைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திமுக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதிஷ் ஆகியோருடன் மெரினாவுக்கு சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.  #RIPKarunanithi  #Vijayakant
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறுதிச்சடங்கில் இந்தியாவின் அனைத்து தலைவர்களும் வந்த நிலையில், தமிழக முதல்வர் வந்திருக்க வேண்டாமா? என நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். #Rajinikanth #Karunanidhi
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதவது:-

    திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. இலக்கியம், சினிமா என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். பழையவராகவே, புதியவராகவோ இருந்தாலும், கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர்.

    பல வஞ்சனைகளை தாண்டி அரசியலில் ஜொலித்த கருணாநிதியால் அரசியலுக்கு வந்தோர் லட்சம் பேர் உள்ளனர். அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். அதிமுக உருவானதற்கு காரணம் கருணாநிதிதான்.

    தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் மு.க.ஸ்டாலின் யாரை கூப்பிட போகிறார் என்று தெரியவில்லை. மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். 

    இந்த இடத்தில் இதை சொல்லியே ஆக வேண்டும். கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு ராகுல் காந்தி, பல மாநில முதல்வர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவே வந்த நிலையில் முதலமைச்சர் வர வேண்டாமா?. அமைச்சர்கள் வந்திருக்க வேண்டாமா?. 

    என ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
    நடிகர் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் ஸ்டாலின், ரஜினிகாந்த் மற்றும் நடிக, நடிகைகள் பங்கேற்றுள்ளனர். #Karunanidhi #MKStalin #Rajinikanth
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்கள் கருணாநிதி குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
    ×