search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டை"

    தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோட்டை வளாகத்தில் உள்ள டீக்கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை. #Plasticban #TN
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    இது சம்பந்தமான விழிப்புணர்வு பிரசாரங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பை, கப், பேப்பர், ஸ்டிரா, பிளாஸ்டிக் இலை போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையாமல் புழக்கத்தில் உள்ளது.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அலுவலகங்கள் அமைந்துள்ள கோட்டை வளாகத்தில் ஏராளமான டீக்கடை, ஜூஸ் கடை, பெட்டிக்கடைகள் உள்ளன.



    இந்த கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை. வழக்கம் போல் பிளாஸ்டிக் டம்ளரில் தான் ஜூஸ் கொடுக்கிறார்கள்.

    உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சாலையோரம் ஆங்காங்கே வீசப்பட்டு குப்பையாக காட்சி அளிக்கிறது. இதே நிலைதான் மற்ற பகுதிகளிலும் காணப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சாமுவேல் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் உபயோகத்தை ஒரே நாளில் தடை செய்துவிட முடியாது. இதை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

    பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் இதை முழுமையாக செயல்படுத்த முடியும். மளிகை கடை, காய்கறி கடைகளுக்கு வருபவர்கள் வெறும் கையுடன்தான் வருகிறார்கள்.

    கடைக்காரர்கள்தான் இலவசமாக பிளாஸ்டிக் பையில் பொருட்களை போட்டு கொடுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் கடைக்கு வருபவர்கள் தான் துணிப்பை கொண்டு வர வேண்டும்.

    மற்ற மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படாததால் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து இங்குள்ள கடைகளுக்கு பிளாஸ்டிக் பை, கப் போன்றவை வந்துவிடும். எனவே இதை நடைமுறைபடுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம்.

    நாங்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு காலண்டருக்கு பதில் துணிப்பை வழங்க முடிவு செய்துள்ளோம். காய்கறி கடைகளுக்கு வருபவர்களுக்கு தரமான கூடைகளை அன்பளிப்பாக கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சூப்பர் மார்க்கெட், போன்ற பெரிய நிறுவனங்களில் 1-ந்தேதி முதல் அட்டை பைக்கு 6 ரூபாய் தனியாக வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். #Plasticban #TN

    ×