search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 145409"

    • இத்திருவிழா 26-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 5-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறும்.
    • தேரோட்டம் 3-ந்தேதி நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழா நடைபெறும். முக்கிய விழாக்களில் தைத்தேர் திருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 5-ந்தேதி வரை 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி நடைபெறுகிறது.

    தைத்தேரோட்ட விழாவை முன்னிட்டு தெற்கு உத்திர வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

    அப்போது, முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர். இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தைத்தேரோட்ட திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் 2-ம் நாளான 27-ந்தேதி காலை நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும்,

    28-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 29-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 30-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 31-ந்தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார்.

    1-ந்தேதி நெல் அளவு கண்டருளூகிறார். 2-ந்தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 3-ந்தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு காலை4.30 மணிக்கு வருகிறார். காலை 4.30 மணிமுதல் காலை 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 4-ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான பிப்ரவரி 5-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • ரெங்கநாச்சியார் திருவாபரணங்கள் அணிந்து திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவுபெற்றதை தொடர்ந்து கடந்த 13-ந் தேதி முதல் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பகல் பத்து உற்சவம் 5 நாட்கள் நடைபெற்றது. பகல் பத்து உற்சவ நாட்களில் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே இரண்டாயிரம் திருவாய்மொழி பாசுரங்களை தினமும் மாலையில் கேட்டருளினார்.

    இதைத்தொடர்ந்து ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ரெங்கநாச்சியார் சவுரிக்கொண்டை, அர்த்த சந்திரா, நெற்றிச்சரம், வைரத்தோடு, வைர அபய ஹஸ்தம், பருத்திக்காய் காப்பு மாலை, 6 வடம் முத்துச்சரம், பங்குனி உத்திரப்பதக்கம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    முன்னதாக மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு அலங்காரம், கோஷ்டி வகையறா கண்டருளி திருவாய்மொழி பாசுரங்களை கேட்டருளினார். பின்னர் அங்கிருந்து ரெங்கநாச்சியார் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    • பங்குனி உத்திர நாளில் ஸ்ரீரங்கத்தில் மட்டையடி உற்சவம் நடைபெறுகிறது.
    • பெருமாளுக்கும் தாயாருக்கும் அப்படி என்ன ஊடல்? அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா, பங்குனி உத்திரம் திருவிழா தான். பிரம்மா இவ்விழாவைக் கொண்டாடியதால் இது ஆதி பிரம்மோற்சவம் எனப்படுகிறது. இன்னொரு சிறப்பு என்னவென்றால் பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு, அவர்கள் பிரிந்திருந்து மீண்டும் இருவரும் இணைந்தது ஒரு பங்குனி உத்திர நன்னாளில்தான்.

    பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடை பெறும் பாசப் போராட்டம் என்பார்கள். அதாவது, ஜீவாத்மா வான மனைவியும், பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிது படுத்தாமல் அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் என்னும் தத்துவத்தை இது விளக்குகிறது.இந்தக் கருத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீரங்கத்தில் மட்டையடி உற்சவம் நடைபெறுகிறது.

    சரி, பெருமாளுக்கும் தாயாருக்கும் அப்படி என்ன ஊடல்? அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    திருச்சியில் உள்ள உறையூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் ஒரு சோழ மன்னன். அந்த சோழனுக்கு குழந்தை பாக்கியமில்லை. அந்தக் குறையை போக்க மகாலட்சுமி தாமரை மலரில் அவதரித்தார். அதனால் அவள் கமலவல்லி ஆனாள். அவளை ரெங்க நாதர் திருமணம் செய்தார். உறையூரில் கமலவல்லி நாச்சியார் என்ற பெயரில் கோவிலும் அமைந்துள்ளது.

    தாயாரின் திருநட்சத்திரம் -ஆயில்யம். எனவே, பங்குனியில் ஆயில்ய நட்சத்திர நன்னாளில் ரெங்கநாதர் உறையூருக்கு வருவார். அவருடன் கமலவல்லி நாச்சியார் சிம்மாசனத்தில் திருக்காட்சி தருவார். உறையூரில் நாச்சியாருடன் வீதிவுலா வந்து விட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு வருவார் ரெங்கநாதர்.

    பெருமாளைக் காணாமல் அவரின் வருகைக்காக காத்திருப்பார் ரெங்கநாயகித் தாயார். பெருமாள் எங்கு சென்று விட்டு வருகிறார் என்பதனை அறிந்து, கோபத்துடன் புளித்த தயிர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகளை பெருமாள் மீது வீசியெறிவார். பெருமாள் தன்னைப் பார்க்க வரக்கூடாது என தடைகள் செய்வார் பிராட்டியார்.

    இந்தப் பிணக்கை தீர்த்து வைக்கிறார் நம்மாழ்வார்.பெருமாள் தாயாரிடம் சொல்லி மன்னிப்பு கேட்க, தாயாரும் சமாதானம் ஆகிறார். பிறகு பெருமாளும் தாயாரும் அருகருகே கல்யாண கோலமாய் எழுந்தருளி சேர்த்தி என்னும் சேவை சாதிப்பர். இந்த சேவை, ஆலயத்தின் 5-வது திருச்சுற்றில் பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும். இவ்விழாவைக் காண்பவர்களுக்கு திருமணப்பேறு உண்டாகும். இந்த வைபவத்தைக் காணும் பக்தர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    பங்குனி உத்திர நாளன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தைக் கண்குளிரத் தரிசித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள், மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என் பது நம்பிக்கை.

    பூ முடித்தல், தாலிக்குப் பொன்னுருக்குதல், திருமண ஓலை எழுதுதல், சீமந்தம், புதிய பொருள்கள் வாங்குதல், புதிய சிகிச்சை மேற்கொள்ளுதல், புதிய கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், செடி நடுதல், வணிகம் தொடங்குதல், வேலையில் சேருதல், புதிய இடத்துக்கு மாறுதல், நீர் நிலைகளை உருவாக்குதல், போர்ப்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்கு உகந்த நாள் பங்குனி உத்திரத்திரு நாள்.

    எண்ணற்ற பல மங்களகரமான, தெய்வீக நிகழ்வுகள் நடைபெற்ற பங்குனி உத்திரத்திரு நாளில் நாமும் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.

    • நம்பெருமாளுக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் நாட்களில் சிறப்பு புறப்பாடுகளும், வைபவங்களும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார் சகிதம் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார்.

    நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் உள்ள கனு மண்டபம் வந்து சேர்ந்தார்.

    அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள் மாலை 4.30 மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு, பாரிவேட்டை நடத்தியபடி தெற்குவாசல் பகுதி ராஜகோபுரம் வரை வந்து பின்னர் கோவிலுக்கு திரும்பினார்.

    இதில் திரளான பக்தர்கள் தெற்குவாசல் கடைவீதியில் இருபுறங்களிலும் காத்திருந்து, குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், கைங்கர்யபரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • முகலாயர்களின் முதல் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கத்திருத்தலம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
    • ஸ்ரீரங்கத்து அரங்கன் அனைவருக்கும் பொதுவானவன்.

    ஸ்ரீரங்கத்து அரங்கன் அனைவருக்கும் பொதுவானவன். இவன் மனித பிறவியில் உயர்வு தாழ்வு பார்த்ததில்லை. ஏன், மதங்களிடையே வேறுபாடு கண்டதில்லை. அனைவரையும் அரவணைத்து செல்லும் பேரருளாளன் இவன். இந்த பிரமாண்ட ஆலயத்தின் இரண்டாவது பிராகாரத்தில் அமைந்திருக்கும் துலுக்க நாச்சியார் சந்நதி, புதிதாக வருபவர்களை வியப்பில் ஆழ்த்தும். ஆமாம், முகமதிய பெண்மணிக்கும் அருள்பாலித்தவன் இந்த அரங்கன்.

    கண்ணன் அடிதொழ ஜாதி வேண்டாம், மதம் வேண்டாம், அன்பு ஒன்றே போதும் என நிரூபித்த சம்பவம் இது. முகலாயர்களின் முதல் படையெடுப்பின் போது இந்த ஸ்ரீரங்கத்திருத்தலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. சுல்தானின் படைகள் திருவரங்கத்தை நெருங்குவதை அறிந்து கொண்ட பக்தர்கள், மூலஸ்தானத்துக்கு முன்பாக ஒருதற்காலிக சுவற்றை எழுப்பி அதன் முன் உற்சவரான நம்பெருமாளை வைத்து விடுகின்றனர்.

    கோவிலை சூறையாட வந்த மாலிக்கபூரின் படையினர் உற்சவர் நம்பெருமாளின் விக்ரகத்தை டெல்லிக்கு தூக்கி சென்று விடுகின்றனர். அந்த விக்ரகத்தை பார்த்த சுல்தானின் மகள், அதை தன் அறையிலேயே வைத்துக் கொண்டாள். அது மட்டுமல்லாமல் அந்த அரங்கரனை அவள் உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள்.

    திருவரங்கத்து வாழ் பெரியோர்கள் நம்பெருமாளை எப்படி மீட்பது என ஆலோசித்தனர். கசன்பி பாதுஷாவிற்கு ஆடல், பாடல் என்றால் மிகவும் விருப்பம் என்று அறிந்தனர். அதில் சிறந்தவர்களில் 60 பேர் பாதுஷாவின் மாளிகைக்கு சென்றனர். புகழ் பெற்ற ஜக்கிந்தி நடனம் ஆடினார்கள். மனம் மகிழ்ந்த பாதுஷா நிறைய பரிசுகள் வழங்கினார். அதை வேண்டாம் என்று கூறிய நடன குழுவினர் எங்கள் அரங்கன் சிலையை பரிசாகத் தாருங்கள் என்று கேட்டனர்.

    வெறும் சிலையை மட்டும் கேட்கிறார்களே என வியந்த பாதுஷா அந்தபுரத்திலிருந்து எடுத்துக் கொள்ள கூறினார். சுரதாணிக்கு தெரியாமல் அவர்கள் அரங்கன் சிலையை கொண்டு வந்துவிட, சுரதாணி அரங்கனைக் காணாமல் அழுது புலம்பினாள். அவளின் நிலையை கண்ட பாதுஷா அரங்கனை மீட்டு வருமாறு வீரர்களை அனுப்பினார். அரங்கனை காண வேண்டும் எனும் ஆசையில் சுரதாணியும் படைகளோடு சென்றாள். படை வருவதை அறிந்த நாட்டிய குழுவினர், அரங்கனை எடுத்துக் கொண்டுபோய் திருமலை காட்டுப்பகுதியில் மறைத்து வைத்தார்கள்.

    வீரர்களுடன் திருவரங்கம் வந்த சுரதாணி அரங்கனைக் காணாமல் மிகுந்த துயரம் அடைந்தாள். துக்கம் தாங்காமல் கோவிலின் முன் மயங்கி விழுந்து உயிர் துறந்தாள். அப்போது அங்கு அரங்கனின் விஸ்வரூபம் தோன்றியது. சுரதாணியின் உடலில் இருந்து ஒரு துளி கிளம்பி அரங்கனின் திருமேனியில் ஐக்கியம் அடைந்தது.

    பல்லாண்டு காலம் திருமலையில் மறைத்து வைக்கப்பட்ட அரங்கன், ஒருசோழ மன்னனால் திருவரங்கம் கொண்டு வரப்பட்டு மறுபடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டார். சோழனின் கனவில் தோன்றி சுரதாணிக்கு ஒரு சன்னிதி அமைக்கும்படி அரங்கன் கூறினான்.

    அதன்படி சோழ மன்னன், அரங்கன் கருவரைக்கு வடகிழக்கு மூலையில் ஒரு சன்னிதி அமைத்து, அதில் சித்திர வடிவில் சுரதாணியின் வடிவை தீட்டச் செய்தான். இன்றும் கோவில் இரண்டாம் பிரகார வடகீழ் மூலையில் சித்திர வடிவில் சுரதாணி காட்சி அளிக்கிறார். இன்றும் நம்பெருமாளுக்கு ஏகாதசி அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து துலுக்க நாச்சியாருக்கு நைவேத்தியம் படைக்கப்பட்ட பிறகு அரங்கனுக்கு படைக்கப்படுகிறது. அடுத்த முறை அரங்கனை தரிசிக்க திருவரங்கம் சென்றால், மறக்காமல் அன்னை துலுக்க நாச்சியாரையும் தரிசித்துவிட்டு வாருங்கள்.

    • ரெங்கநாத சுவாமி கோவிலின் கோபுரம் இந்தியாவின் 2-வது உயரமான கோபுரமாக கருதப்படுகிறது.
    • ராஜகோபுரம் மட்டும் 1987-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களில் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், 9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளில் கிடைக்கப்பெற்ற கல் வெட்டுகளே கோவிலில் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, ஹொய்சள மற்றும் விஜய நகர பேரரசுகளின் காலத்தை சேர்ந்தவையாகும். அது மட்டுமல்லாமல் அரசுகள் மாறினாலும், ஒவ்வொருவரும் கோவிலைப் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளனர்.

    ரெங்கநாத சுவாமி கோவிலின் கோபுரம் இந்தியாவின் 2-வது உயரமான கோபுரமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொத்தம் 21 கோபுரங்களை கொண்ட இந்தக் கோயிலின் ராஜகோபுரம் 236 அடி உயரத்தில், கர்நாடகாவிலுள்ள முருதேஸ்வர் கோவிலுக்கு பிறகு ஆசியாவிலேயே 3-வது உயரமான கோபுரமாக அறியப்படுகிறது. எனினும் ஏனைய 20 கோபுரங்கள் 14 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜகோபுரம் மட்டும் 1987-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    அதாவது 400 ஆண்டு காலமாக 55 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்படாமல் நின்று கொண்டிருந்த கோபுரம் 236 அடி உயரத்தில் அஹோபில மடத்தால் முழுமை பெற்றது.ரெங்கநாதசுவாமி கோவிலில் திருவுண்ணாழி திருச்சுற்று, ராஜமகேந்திரன் திருச்சுற்று, குலசேகரன் திருச்சுற்று, ஆலிநாடான் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று, திருவிக்கிரமன் திருச்சுற்று, கலியுகராமன் திருச்சுற்று ஆகிய 7 திருச்சுற்றுகள் அமையப் பெற்றுள்ளன. இந்த 7 திருச்சுற்றுகளுக்குள்ளே தென்திசை நோக்கி கருவறையில் பள்ளி கொண்டுள்ளார் ரெங்கநாதர்.

    • இந்த விழா வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று முதல் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவம் முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி, வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். இன்று முதல் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார்.

    ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழி திருநாள் வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • கடந்த 2-ந் தேதி மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • தினமும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கிய வைகுண்ட ஏகாதசி விழா நேற்று காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது.

    வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 20 நாட்களில் 14 லட்சத்து 45 ஆயிரத்து 289 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட கடந்த 2-ந் தேதி மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த மாதம் 23-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியில் சேவை சாதித்தார். இதை காண தினமும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் சிறப்பு கட்டண சீட்டு முறையும் அமல்படுத்தப்பட்டு இருந்தது.

    மூலவரை தரிசிக்க நடப்பு ஆண்டு ரூ.1 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 600-க்கு கட்டண சீட்டு விற்கப்பட்டுள்ளது.

    • வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
    • இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெற்றது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளன்று திருக்கைத்தல சேவையும், 8-ம் நாளன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நம்பெருமாள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. மேலும் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.

    • நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூர் திலகமும், துளசி மாலையும் அணிவிக்கப்பட்டது.
    • இன்று இரவு இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங் கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 23-ந்தேதி பகல் பத்து உற்சவம் ஆரம்பமானது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் நாளான கடந்த 8-ந்தேதி திருக்கைத்தல சேவை நடைபெற்றது. 8-ம் நாளான 9-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.

    10-ம் நாளான நேற்று நம்பெருமாள் கோவிலில் உள்ள சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நம்பெருமாள் நேற்று இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம் மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடத்தி காட்டப்பட்டது.

    பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார். அதன்பின் நம் மாழ்வாரை அச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படுமாறு சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர்.

    பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின் பல்வேறு வேதங்களை சொல்லியபடி நம் மமாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர்.

    இதையடுத்து நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்தாக தெரிவித்தனர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூர் திலகமும், துளசி மாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர் காலை 8 மணி முதல் காலை 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் நாளை (13-ந்தேதி) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

    அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

    • இன்று நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது
    • நாளை இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழிப்பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக காலை 10.30 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்தார். அங்கு காலை 11 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளுளினார்.

    இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீரை தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. தீர்த்தவாரிக்கு பின் தீர்த்தபேரர் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு மதியம் 1 மணிக்கு சென்றடைந்தார். அங்கு மதியம் 1.30 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுஜன சேவை நடைபெற்றது.

    பின்னர் மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுஜனசேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். இரவு 11 மணிமுதல் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெறும். அதிகாலை 4 மணிமுதல் காலை 6 மணி வரை பொதுஜன சேவையும், காலை 6 மணிமுதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது.பின்னர் காலை 8 மணிமுதல் காலை 9 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் அதிகாலை (வெள்ளிக்கிழமை) 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

    அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை5 மணிவரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

    • நாளை நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.
    • 13-ந்தேதி வரை இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக காலை 10.30 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்தடைவார்.

    அங்கு காலை 11 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராடுவார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளுவார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்வர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீரை தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும். தீர்த்தவாரிக்கு பின் தீர்த்தபேரர் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைவார்.

    நம்பெருமாளர் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு மதியம் 1 மணிக்கு சென்றடைவார். அங்கு மதியம் 1.30 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுஜன சேவை நடைபெறும். பின்னர் மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுஜனசேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுவார்.

    இரவு 11 மணிமுதல் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெறும். அதிகாலை 4 மணிமுதல் காலை6 மணிவரை பொதுஜன சேவையும், காலை 6 மணிமுதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணி முதல் காலை9 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் அதிகாலை (13-ந்தேதி) 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

    அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை5 மணிவரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

    ×