search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்டா"

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #SouthTN #DeltaDistricts
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென் தமிழகத்தின் கடற்கரையையொட்டி உள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மாலத்தீவு பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.



    தமிழகத்தின் வட கடலோர பகுதி, புதுச்சேரி, தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இருக்காது. கிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வடக்கு நோக்கி சற்று நகர்ந்தால்தான் வட தமிழக பகுதிகளில் மழை பெய்யும். இல்லையென்றால் தென் தமிழக பகுதிகளுக்கே மழை வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கொள்ளிடத்தில் 7 செ.மீட்டரும், சிதம்பரம், சீர்காழியில் 6 செ.மீட்டரும், பரங்கிபேட்டை, சேத்தியா தோப்பு, மயிலாடுதுறையில் 5 செ.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

    அக்டோபர் 1-ந் தேதி முதல் இன்று வரை வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் 31 செ.மீட்டர் பதிவாகி இருக்கிறது. இந்த கால கட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவு 35 செ.மீட்டராகும். இயல்பை விட 12 சதவீதம் குறைவாக இருக்கிறது.

    இன்னும் ஒரு மாதம் இருப்பதால் பொறுத்து இருந்து பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Rain #SouthTN #DeltaDistricts
    கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மக்களுக்கு உதவும் வகையில் விஜய் நிவாரண பொருட்களை தனது ரசிகர் மன்றம் மூலம் வழங்கி வருகிறார். #GajaCycloneRelief #Vijay
    கஜா புயலால் பாதிக்கப் பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு திரை உலகினர் நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறார்கள்.

    நடிகர் விஜய்யும் புயல் பாதித்த மக்களுக்கு ஓசையில்லாமல் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

    நேற்று காலை ரூ.5 லட்சத்துக்கான நிவாரண பொருட்கள், மெழுகுவர்த்தி, பால், வேட்டி சேலை போன்ற பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இவற்றை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அனுப்பி அவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்ய அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் புயலால் பாதிக்கப் பட்ட 7 மாவட்டங்களில் உள்ள மக்கள் இயக்கத் தலைவர்களின் வங்கி கணக்குகளுக்கும், விஜய் ஓசையில்லாமல் பணம் அனுப்பி உள்ளார்.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.



    நேற்று காலை விஜய் தொடர்பு கொண்டு, ரூ.5 லட்சத்திற்கான நிவாரணப் பொருட்கள் மெழுகுவத்தி, பால், வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

    அதை மக்களுக்குக் கொடுத்து உதவுங்கள் என்று தெரிவித்தார். இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், என் வங்கிக் கணக்கில் ரூ.4.50 லட்சம் பணம் வந்திருந்தது. யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று பார்த்தோம். அது, சென்னையிலிருந்து விஜய் என்ற பெயரில் தளபதியிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பணம்.

    இதுபற்றி மக்கள் இயக்கம் தலைமைக்குத் தொடர்புகொண்டு கேட்டபோது, நாகை மாவட்ட புயல் நிவாரண நிதிக்காக அனுப்பிவைக்கப்பட்ட பணம். அதை மக்களுக்கு உதவுகின்ற வகையில் செலவு செய்யுமாறு விஜய் அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதுபோல, மதுரை மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் தங்கபாண்டியனின் வங்கிக்கணக்கிலும் ரூ.2 லட்சம் அனுப்பப்பட்டிருக்கிறது. விஜய் அனுப்பிவைத்திருக்கும் பணத்தை குடிசை வீடுகளை இழந்த மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து, மீதமுள்ள பணத்தை பல்வேறு பொருள்களாக மக்கள் பயனடையச் செய்வோம்.

    இவ்வாறு தெரிவித்தனர். #GajaCycloneRelief #Vijay

    கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief
    கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதி அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரணமும், விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிவாரணமும் வழங்கியுள்ளனர்.

    விஜய், சிவகார்த்திகேயன், ஜி.விபிரகாஷ் குமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் டெல்டா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,


    கனடாவில் உள்ள துரந்தோவில் டிசம்பர் 24-ஆம் தேதி தான் நடத்தும் இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் என்று அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief

    நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் அனல்மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுது, மத்திய தொகுப்பில் இருந்து உரிய மின்சாரம் கிடைக்காததால் தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு நிலவுகிறது. #Coalshortage #Powercut
    சென்னை:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள 2 நிலைகளில் 5 அலகுகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அனல் மின் நிலையத்தில் 1வது நிலை 3-வது அலகில் 210 மெகாவாட்டும், 2-வது நிலை 1-வது அலகில் 600 மெகாவாட்டும் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே 2-வது நிலை 2-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளன. மொத்தம் 1410 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் பழுது ஏற்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

    வழக்கமாக இந்த சமயங்களில் கிடைக்கும் காற்றாலை மின்சார உற்பத்தியும் குறைந்து விட்டது. மத்திய தொகுப்பில் இருந்தும் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை.

    தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 14,200 மெகாவாட் மின்சாரம் தேவை. இதில் 2,500 மெகாவாட் அளவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மின்சார தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு நிலவுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் 3 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகலில் 2 மணி நேரமும், இரவு, நள்ளிரவு நேரங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாகவும், அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடி துணைமின் நிலையத்தின் மூலம் மின்சாரம் கிடைக்கும் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவும் பகலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் நகரில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு 3 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவி வருகிறது.

    தேனி மாவட்டத்தில் 3 முதல் 4 மணி நேர மின் வெட்டு நிலவி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் இரவு 3 மணி நேரமும், பகலில் 2 மணி நேரமும் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. நகர் பகுதியில் இரவில் 3 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துகிறது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தினமும் 4 அல்லது 5 முறை மின்சாரம் தடைபடுகிறது. இரவிலும் மின்தடை செய்யப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் பகலில் 3 முறையும், இரவில் 2 மணி நேரமும் மின்தடை செய்யப்படுகிறது.

    மதுரையில் 15 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பகல் வேளையிலும், இரவிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. கீழப்பாவூர், ஆலங்குளம் பகுதிகளில் மின்வெட்டு காரணமாக அரிசி ஆலைகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சங்கரன் கோவில், புளியங்குடி பகுதியில் விசைத்தறி கூடங்களில் மின்வெட்டு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    கிராமப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலும், நகர்ப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு அதிகமாகவும் மின்வெட்டு ஏற்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள காற்றாலை களில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மின் வெட்டு நிலவுகிறது.

    தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மணிக்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டு வருகிறது.

    நேற்று மின்சாரம் நிறுத்தம் என்ற பெயரில் கடத்தூர், ராமியனஅள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, பொம்மிடி, வெ.முத்தம்பட்டி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    தர்மபுரி மாவட்டத்தில் மாதத்தில் 2 நாட்கள் மின் தடை என்று அறிவித்து மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் மின் தடை ஏற்படுகிறது. இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    குமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவு இருக்கும். தற்போது காற்றாலையில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் மின்சாரத்தை சுழற்சி முறையில் வழங்கி வருகிறோம். எனவே மின்தடை ஏற்படுகிறது. மின் உற்பத்தி சீரானதும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Coalshortage #Powercut
    ×