search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துவரி"

    ஆலந்தூரில் மிக அதிகமாக உள்ள சொத்து வரியை குறைக்ககோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. #DMK #ChennaiHighCourt
    சென்னை:

    சென்னையில் சொத்து வரி போயஸ்கார்டன், தி.நகர், கோபாலபுரம் பகுதியில் மிக குறைவாகவும், அம்பத்தூர், ஆலந்தூர், முகப்பேர், மாதவரம் பகுதிகளில் 3 மடங்கு அதிகமாகவும் உள்ளது.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே சீரான வரி விதிக்க வேண்டும் என்று புறநகர் பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    கடந்தவாரம் முகப்பேர் பகுதியில் முன்னாள் கவுன்சிலர் பி.வி. தமிழ்ச் செல்வன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இப்போது ஆலந்தூர் பகுதியில் 3 மடங்கு வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து அங்குள்ள மக்கள் ஆவேசத்துடன் மாநகராட்சிக்கு மனு அனுப்பி வருகின்றனர்.

    ஆலந்தூரில் மிக அதிகமாக உள்ள சொத்து வரியை குறைக்ககோரி தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆலந்தூர் நகராட்சி தலைவராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது ஏராளமான நலத்திட்டங்களை அமல் படுத்தினேன். ஆலந்தூர்பல்லாவரம் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம், பாதாள சாக்காடை திட்டம் என்று பல திட்டங்களை அமல்படுத்தினேன்.

    இந்த நிலையில், ஆலந்தூர் நகராட்சியை, சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசு இணைத்தது. இந்த பகுதி, சென்னை மாநகராட்சியின் 160 முதல் 167வது வார்டுகளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூலை 19ந்தேதி சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    இதன்படி, சென்னை மாநகராட்சியும் சொத்து வரியை உயர்த்தியுள்ளது. அதாவது ஆலந்தூர் நகராட்சியாக முன்பு இருந்த வார்டு 160 முதல் 167 வரையிலான பகுதியில், முக்கிய சாலைக்கு அருகேயுள்ள சொத்துக்களுக்கு, ஒரு சதுர அடிக்கு ரூ.3.75 என்றும் தெருக்களில் அமைந்துள்ள சொத்துக்களுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.2.50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, லஸ் சர்ச் சாலை, ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலை, தி.நகர் வெங்கட் நாராயணா சாலை ஆகிய முக்கிய சாலையோரம் உள்ள சொத்துக்களுக்கு சதுர அடிக்கு ரூ.1.50 என்று குறைந்த தொகையை சொத்துவரியாக நிர்ணயம் செய்துள்ளனர்.

    எனவே, ஆலந்தூர் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியை திரும்ப பெறவேண்டும் சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்யவேண்டும் என்று கடந்த 1ந்தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, ஆலந்தூர் பகுதியில் சொத்து வரியை மறுநிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர். மாநகராட்சி சார்பில் வக்கீல் டி.சி.கோபாலகிருஷ்ணன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டனர்.

    அப்போது நீதிபதிகள், ‘மனுதாரர் வீடு ஆலந்தூரில் இருக்கும்போது, சொத்து வரி குறித்து பொதுநல வழக்கு எப்படி தொடர முடியும்? வரியை உயர்த்துவதற்கு முன்பு, பழைய சொத்து வரியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள வணி ரீதியான கட்டிடம் எத்தனை ? என்பது உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் மனுதாரரிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த புள்ளி விவரங்களை சேகரித்து தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற டிசம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். #DMK #ChennaiHighCourt
    கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் சொத்துவரியை 518 சதவீதம் உயர்த்துவதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்ததை விட பல மடங்கு அதிகமாக சொத்துவரி உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களைச் சுரண்டும் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரி உயர்த்த வேண்டும் என்று விதி இருந்தாலும், 1998-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்த ஆணையிட்டது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் சொத்துவரியை விருப்பம் போல உயர்த்தியுள்ளன. சென்னையின் சில பகுதிகளில் சொத்து வரி 518 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

    சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில் 958 சதுர அடி பரப்புள்ள தனி வீட்டுக்கான ஆண்டு சொத்துவரி 390 ரூபாயிலிருந்து ரூ.2410 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கான ஆண்டு சொத்துவரி 1100 ரூபாயிலிருந்து ரூ.3370 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 206 சதவீதம் உயர்வாகும்.

    ஆலந்தூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கான சொத்துவரி 256 ரூபாயிலிருந்து ரூ.1480 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 478 சதவீதம் உயர்வாகும். சில இடங்களில் இதைவிட அதிகமாக சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வீடுகளுக்கான சொத்துவரியை ஒரே நேரத்தில் 518 விழுக்காடு அளவுக்கு உயர்த்துவது எந்த அடிப்படையில் நியாயம் என்பது தெரியவில்லை. எந்த அளவீடுகளின் அடிப்படையில் சொத்துவரியை சென்னை மாநகராட்சி இந்த அளவு உயர்த்தியது என்பதும் தெரியவில்லை.

    அதேநேரத்தில் சிலருக்கு மட்டும் மிகக்குறைந்த அளவிலேயே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னைக் கோடம்பாக்கத்தில் 394 சதுர அடி பரப்பளவுள்ள தனி வீட்டுக்கு இதுவரை சொத்துவரியாக ஆண்டுக்கு ரூ.1802 வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது இது ரூ.2020 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வெறும் 12 சதவீதம் உயர்வு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பல குடியிருப்புகளுக்கு குறைந்தபட்சமாக 10 சதவீதம் வரையிலும், வணிக நிறுவனங்களுக்கு 40 சதவீதம் வரையிலும் மட்டுமே சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் இவர்களுக்கு வரி குறைவாக உயர்த்தப்பட்டது என்பது ரகசியமாகவே உள்ளது. இவற்றை யார், எந்த அடிப்படையில் தீர்மானித்தனர் என்பது தெரியவில்லை.

    சொத்துவரி தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்படும் என்று கடந்த ஜூலை 23-ந்தேதி அறிவிப்பு வெளியானது.

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் பின் தேதியிட்டு இந்த வரி வசூலிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. ஆனால், பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து சொந்தப் பயன்பாட்டுக்கான வீடுகளுக்கான சொத்து வரி 50 சதவீதம் வரை மட்டுமே உயர்த்தப்படும் என்றும், பின்தேதியிட்டு ஏப்ரல் மாதத்திலிருந்து வசூலிக்கப்படாது என்றும், அக்டோபர் மாதம் முதல் தான் புதிய வரி வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

    ஆனால், தமிழக அரசின் அரசாணையை தமிழக அரசே மதிக்கவில்லை. அதிகபட்ச வரி உயர்வை விட 10 மடங்குக்கும் கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏப்ரல் மாதம் முதல் பின்தேதியிட்டு சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

    நகர்ப்புற உள்ளாட்சிகளின் செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், அதை சமாளிக்க சொத்துவரியை ஓரளவு உயர்த்த வேண்டியது அவசியம் தான். ஆனால், அது மக்களைப் பாதிக்காவாறு இருக்க வேண்டும். மக்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் விருப்பம் போல சொத்து வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமமானதாகும். மக்களை சுரண்டவும், கொள்ளை அடிக்கவும் ஓர் எல்லை உண்டு என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

    வீடுகளுக்கான சொத்து வரி 50 விழுக்காட்டுக்கும் மேல் உயர்த்தப்படாது என்று உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்த தமிழக அரசு, அதை விட 10 மடங்குக்கும் மேலாக சொத்துவரியை உயர்த்தி இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதை உணர்ந்து சொத்துவரி உயர்வை 50 சதவீதம் என்ற அளவுக்கு அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.

    அதுமட்டுமின்றி, சொத்துவரியை உயர்த்தும் அரசின் முடிவை ஏதேனும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்தால் அவர்களை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பை மிகக் கடுமையாக கையாள வேண்டும். இதற்கு காரணமான அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னையில் வீட்டு வரி வசூல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #PMK #Ramadoss #PropertyTax
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவொற்றியூர் மற்றும் அதையொட்டிய குடியிருப்புகள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் என்று கூறப்பட்டாலும் அங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எதுவும் பெரிய அளவில் செய்யப்படவில்லை.

    கட்டமைப்பு வசதிகளின் தரம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாக இருக்கும் நிலையில், வீட்டு வரியின் அளவு அமெரிக்க நகரங்களுக்கு இணையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவொற்றியூரில் வீட்டு வரி ஓரளவு நியாயமாகவே இருந்தது.

    ஆனால், ஒரு கட்டத்தில் எந்த நியாயமும் இல்லாமல் வீட்டு வரி கண் மூடித்தனமாக உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட வரி ஏழை மற்றும் நடுத்தர மக்களால் கட்ட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

    சென்னையில் பணக்கார மக்கள் வாழும் பகுதியாகவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாகவும் கருதப்படும் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெசன்ட்நகர் ஆகிய பகுதிகளில் கூட சதுர அடிக்கு சராசரியாக ஒரு ரூபாய் மட்டுமே சொத்துவரியாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத திருவொற்றியூர் பகுதியில் ஒரு சதுர அடிக்கு ரூ.4.15 வீட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது.

    இத்தகைய சூழலில், வீடுகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், அந்த வீடுகளை மறுமதிப்பீடு செய்து கூடுதல் வரி விதிக்கும் அதிகாரிகள், அந்த கூடுதல் வரியை 5 ஆண்டுகள் முன்தேதியிட்டு செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

    இதனால், ஆண்டு வரியாக ரூ. 2000 செலுத்த வேண்டிய வீட்டுக்கு ரூ.41,500 வரி செலுத்த வேண்டியுள்ளது. சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படும் வரியை விட இது 20 மடங்குக்கும் அதிகம்.

    இத்தகைய அதிக வரி விதிப்பால் மாநகராட்சிக்கு எந்த வகையிலும் கூடுதல் வருவாய் கிடைக்கவில்லை. மாறாக, தவறான நோக்கம் கொண்ட அதிகாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் தான் பயனடைகின்றனர்.

    பொதுமக்களிடம் கையூட்டு வாங்கிக் குவிக்கும் அதிகாரிகள், கையூட்டு கொடுத்தவர்களுக்கு மட்டும் வீட்டு வரியை குறைத்து நிர்ணயிக்கின்றனர். அதிக வரி நிர்ணயிக்கப்பட்ட மக்கள் வரி செலுத்த மறுப்பதால் மாநகராட்சியின் வருமானம் குறைந்துள்ளது. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் வரிக் குறைப்பு செய்ய மாநகராட்சி மறுப்பது நியாயமல்ல.

    இவை ஒருபுறமிருக்க சென்னை மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் வீட்டு வரி உயர்த்தப்பட்டு, புதிய வரி மதிப்பிடப்பட்டு வருகிறது. அதன்படி, இப்போது இருப்பதை விட இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே மக்கள் வரிச்சுமையையும், விலை வாசியையும் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக உயர்த்தப்படும் வரி மக்களின் சுமைகளை அதிகரிக்கும். மக்களின் சுமைகளை உணராமல் வீட்டு வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமமாகும்.

    எனவே, திருவொற்றியூர் மண்டலத்தில் வீட்டுவரியை சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படுவதற்கு இணையாக குறைக்க வேண்டும். அது மட்டுமின்றி, வீட்டு வரியை குறைத்து நிர்ணயிப்பதற்காக கையூட்டு வாங்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMK #Ramadoss #PropertyTax
    ராயப்பேட்டையில் சொத்துவரியை செலுத்த நோட்டீஸ் அனுப்பியும் வரியை கட்டாத 5 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி 9-வது மண்டலத்திற்கு உட்பட்ட ராயப்பேட்டை ஒயிட் சாலை பகுதியில் 5 கடைகளின் உரிமையாளர்கள் முறையான சொத்துவரி மாநகராட்சிக்கு செலுத்தவில்லை.

    மேலும் தொழில் உரிமமும் பெறவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு சொத்துவரி நிலுவை தொகையினை மாநகராட்சிக்கு உடனே செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஆனாலும் சொத்துவரி பாக்கி தொகை ரூ.22 லட்சம் செலுத்தப்படாமல் இருந்தது. சொத்துவரியை செலுத்த 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பிறகும் அவர்கள் செலுத்தவில்லை.

    இதனையடுத்து அந்த 5 கடைகளையும் இன்று மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கடையின் முகப்பு பகுதியில் எச்சரிக்கை நோட்டீசையும் ஒட்டினர். அவை டயர் விற்பனை செய்யக் கூடிய வியாபாரிகளின் கடைகளாகும். மாநகராட்சி அதிகாரிகள் லட்சுமி நாராயணன், தமிழ்செல்வன், சீனிவாசன், ராஜூ ஆகியோர் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சிக்கு 2014-ம் ஆண்டு முதல் சொத்துவரி செலுத்தவில்லை. மேலும் தொழில் உரிமமும் பெறவில்லை. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். #tamilnews
    சொத்து வரி உயர்வை தொடர்ந்து குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் சொத்து வரியை 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த வரி உயர்வு வருகிற அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது. சென்னை மாநகராட்சியில் குடியிருப்புகளுக்கான சொத்து வரி பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சொத்து வரி உயர்வை தொடர்ந்து குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுவரை ரூ.300 கட்டணம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் ரூ.180 கூடுதலாக சேர்த்து ரூ.480 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ஆனால் குடிநீர் கட்டணம் பல மடங்கு கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    தற்போது கட்டண விவரங்கள் பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த அரையாண்டு கட்டணத்திலும் இப்போது பலமடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த எஸ்.எம்.எஸ்.சை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் குடிநீர் கட்டணம் செலுத்த அளிக்கப்படும் காலக்கெடு முடிந்தாலும் சில நாட்கள் விலக்கு அளிக்கப்படும் . அதன்பின்பு கட்டணம் ெலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

    ஆனால் தற்போது நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவை தாண்டினாலே அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், தமிழக அரசு அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், தமிழக அரசு அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் புதுபஸ் ஸ்டாண்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.

    ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, நல்ல தம்பி, மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீசன், பாடாலூர் சோமு. மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன் உட்பட பலர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், நூருல்ஹிதா இஸ்மாயில், பாஸ்கர், ரவிச்சந்திரன், வக்கீல் மாரிக்கண்ணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வக்கீல் செந்தில் நாதன், மகாதேவி, ஹரிபாஸ்கர், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    சென்னை மாநகராட் சியில் சொத்துவரி, தொழில் வரி, மின்கட்டணம், குடிநீர் வரி ஆகியவற்றை ஸ்மார்ட் கார்டு மூலம் செலுத்தும் நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. #Chennaicorporation

    சென்னை:

    சென்னை மாநகராட்சியுடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இணைந்து ஸ்மார்ட்கார்டு வசதியை உருவாக்கி வருகிறது. இந்த கார்டு அடுத்த மாதம் முதல் இ-சேவை மையங்களில் கிடைக்கும்.

    இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் விரைவில் மெட்ரோ ரெயில், மின்சார ரெயில், மாநகர போக்குவரத்து கழகங்களிலும் பயணம் செய்யும் வசதியை உருவாக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நம்ம சென்னை செயலி மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சொத்து வரி, தொழில் வரி, வர்த்தக உரிமம் போன்ற 5 சேவைகள் இப்போது இணைக்கப்பட்டுள்ளது.

    நம்ம சென்னை செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பிறப்பு, இறப்பு, தொழில் வரி, சொத்துவரி மற்றும் வர்த்தக உரிமம் சான்றிதழ்கள், ரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் கூடுதலாக இதன் நிலைப்பாடு பற்றியும் இச்செயலி வாயிலாக அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #Chennaicorporation

    ×