search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை"

    ஊட்டி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
    ஊட்டி:

    மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. ஊட்டியில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடைசீசன் காலம் ஆகும். இந்த சீசன் காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 2-வது சீசன் அக்டோபர், நவம்பர் மாதங்களாகும். இதுபோன்ற சீசன் காலத்தை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது.

    நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் சொந்த வாகனங்களில் வருகிறார்கள். ஆனால் அந்த வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஊட்டியில் அதிகளவில் ஆட்டோக்கள் இயங்குவதால், பல இடங்களில் ஆட்டோ நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி நகரில் குதிரை, பசு, எருமை, ஆடு போன்ற கால்நடைகள் கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, கலெக்டர் அலுவலக சாலை, புளுமவுண்டன் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்லும் போதும், சாலையோரத்தில் ஊட்டியின் சீதோஷ்ண காலநிலையை ரசித்தபடி நடைபாதையில் நடந்து செல்லும் போதும் கால்நடைகள் வேகமாக துரத்தி வந்து தாக்குகிறது.

    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சேகரமாகும் காய்கறி கழிவுகளை உண்பதற்காக, சிலர் தங்களது கால்நடைகளை பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர். குதிரைகள் சாலைகளில் தாறுமாறாக ஓடி சுற்றுலா பயணிகளை உதைப்பதும், கடிப்பதும் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் பயந்து ஓடும் போது வாகனங்கள், தடுப்பு கம்பிகளில் எதிர்பாராதவிதமாக மோதி சாலையோரத்தில் உள்ள குழிகளில் விழுந்து காயம் அடைந்து உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இரவில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டு ஓடி வந்தது. இதனை கண்டு பயந்து ஒரு பெண் பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அதேபோல் தலைகுந்தா பகுதியில் குதிரை திடீரென ஓடி வந்ததில், மினி பஸ் டிரைவர் காயம் அடைந்தார். ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று முதியவரை தாக்கியதால், காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே கால்நடைகள் திடீரென செல்வதால், சிலர் கீழே விழுந்து காயம் அடைந்து உள்ளனர்.

    கடந்த வாரம் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த சுப்ரியா என்ற சுற்றுலா பயணி தனது குடும்பத்தினருடன் ஊட்டி சேரிங்கிராசில் சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மிரண்டு ஓடி வந்த தோடர் வளர்ப்பு எருமைகளில் ஒன்று சுப்ரியாவை முட்டி தாக்கியதால், அவர் படுகாயம் அடைந்தார். இதுபோன்ற சம்பவங்கள் ஊட்டியில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் ஊட்டியை சுற்றி பார்க்க வருபவர்கள் தங்களது திட்டத்தை கைவிட்டு ஆஸ்பத்திரிக்கும், சொந்த ஊர்களுக்கும் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு அப்போதைய நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், ஊட்டி நகராட்சி பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளை கண்டறிந்து, அவைகளுக்கு உரிமம் பெறவும், சாலைகளில் கால் நடை கள் சுற்றித்திரியாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால், இந்த திட்டம் அதிகாரிகள் இடமாறி சென்றதால் செயல்படுத்தாமல் கைவிடப்பட்டு உள்ளது. தற்போது கால்நடைகள் ஊட்டி நகரில் சுற்றித்திரிவதால் பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    எனவே, மாவட்ட கலெக்டர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊட்டி நகர மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
    திருப்பூரில் கால்நடை கணக்கெடுப்பு பணியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 20-வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 2-வது தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணி இன்று (நேற்று) முதல் வருகிற 31-12-2018 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்புகளில் கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை ஆய்வாளர்கள், பணி ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை ஆய்வாளர்கள், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தனியார் செயற்கை முறை கருவூட்டாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் மொத்த வீடுகள் 6 லட்சத்து 91 ஆயிரத்து 810. இதில் ஊரகப்பகுதிகளில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 549 மற்றும் நகர்புறங்களில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 261 என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு கணக்கெடுப்பாளருக்கு கிராமப்பகுதிகளில் 4 ஆயிரத்து 500 குடியிருப்புகள் எனவும், நகரப்பகுதிகளில் 6 ஆயிரம் குடியிருப்புகள் எனவும் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 கணக்கெடுப்பாளருக்கு ஒரு மேற்பார்வையாளர்கள் எனவும், 8 மேற்பார்வையாளருக்கு ஒரு தணிக்கையாளர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் 147 கணக்கெடுப்பாளர்கள், 30 மேற்பார்வையாளர்கள் மற்றும் 4 தணிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்டு கால்நடை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்களது கால் நடைகள் விவரத்தினை கணக்கெடுப்பாளர்களுக்கு விடுபாடின்றி தெரிவித்திட வேண்டும்.

    இந்த கணக்கெடுப்பின்படி கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள், தடுப்பூசிகள், அரசு நலத்திட்டங்கள் போன்றவை வழங்கப்பட உள்ளது. இதுதவிர இந்த கணக்கெடுப்பின் போது கால்நடை உபகரணங்கள் மற்றும் மீன்வளர்ப்பு விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள், பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், உதவி இயக்குனர்கள் அன்வர்தீன், முருகேசன் மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ஊதியூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளாடுகளை நாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் பலியானது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே உள்ள அய்யாக்குட்டி வலசு, செம்மடைக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (76). விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை முத்துச்சாமி தனது 9 வெள்ளாடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது 9 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளாடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியது தெரியவந்தது. முத்துசாமியின் ஒரு ஆடு காயங்களுடன் உயிர் பிழைத்தது.

    இதே பகுதியில் பழனிசாமி என்பவரது தோட்டத்தில் 2 வெள்ளாடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றது. இறந்த ஆடுகளை கடலைக்காட்டுபுதூர் கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தார்.

    இறந்த ஆடுகளின் மதிப்பு 90 ஆயிரம் ரூபாய் ஆகும். வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி முத்துசாமி, பழனிசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

    திருநெல்வேலியில் கால்நடை, கோழித்தீவன தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கையில் எம். எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அந்தத் துறையின் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பதிலளித்தார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

    பசுந்தீவனம் வீணாவதை தவிர்க்க ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு தானியங்கி புல் வெட்டும் கருவிகள் 75 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்படும். விவசாயிகள் வளர்க்கும் சேலம் மேச்சேரி செம்மறி ஆடுகளின் மரபுத் தரம் உயர்த்தப்படும். மாட்டினம் மற்றும் ஆட்டினங்கள் ரூ.6.29 கோடி செலவில் காப்பீடு செய்யப்படும்.

    கால்நடை நிலையங்களில் மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக்ஸ்) மற்றும் அசோலா செயல்விளக்க அலகுகள் ஏற்படுத்தப்படும். 500 கால்நடை நிலையங்களுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்மாதிரி கால்நடை கட்டுப்பாட்டுக் கருவிகள் வழங்கப்படும்.

    ஈச்சங்கோட்டை, ஓசூர், உதக மண்டலம் கால்நடைப் பண்ணைகளில் உறைவிந்து உற்பத்தி நிலையங்களில் தரமான உறைவிந்தைப் பெறுவதற்கு ஏதுவாக பொலிகாளைகள் மற்றும் காளைக் கன்றுகளுக்கு கால்நடை கொட்டகைகள் ஏற்படுத்தப்படும்.

    கால்நடை நிலையங்களில் உள்ள குளிர் சங்கிலி வசதிகளை மேம்படுத்த 480 தொடர் குளிர் சாதனப் பெட்டிகள், ஒரு குளிர் பதன அறை, ஆயிரத்து 61 குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் ஆயிரத்து 500 தடுப்பூசிப் பெட்டிகள் கால்நடை நிலையங்களுக்கு வழங்கப்படும்.

    திருநெல்வேலியில் கால்நடை மற்றும் கோழித்தீவன தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும். சென்னை மாதவரத்தில் ஊரக கோழி உள்ளடு மற்றும் திறன் வளர்ப்பு மையம் அமைக்கப்படும்.

    கால்நடை மற்றும் கோழியின நோய்களைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான மையம், சென்னை மாதவரத்தில் ஏற்படுத்தப்படும்

    மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக்) அலகுகளை உருவாக்க சென்னை மாதவரத்தில் மையம் அமைக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் ஆலம்பாடியில் இன ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். 
    ×