search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடதமிழகம்"

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த பகுதி வலுவடையாமல் அதே நிலையில் நீடித்து வருவதால் வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #IMD
    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டு இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த காற்றழுத்த பகுதி மேலும் வலுவடையாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது.

    இது மேலும் நிலப்பகுதியில் நிலவி வருவதால் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய கன மழை பெய்தது.

    வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை மற்றும் புதுச்சேரிக்கு அருகில் நிலவி வருகிறது.

    இது நிலப்பகுதியில் நிலவுவதால் தொடர்ந்து மழை பெய்யக்கூடும். காற்று அதிகம் இல்லாமல் மழை நின்று பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு மேல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஒன்றும் உள்ளது. இதன் காரணமாகவும் வட மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

    வட கடலோர பகுதிகளில் அநேக இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழை விட்டு விட்டு பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

    இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழை இன்றும் நீடித்து வருகிறது. சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெளியேற முடியாமல் வெள்ளம் போல் காட்சியளிக்கின்றன. காற்று இல்லாமல் மழை நின்று பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

    ஒரே நேரத்தில் கன மழை பெய்து அந்த தண்ணீர் கடலுக்குள் வீணாக சேருவதை காட்டிலும் தற்போது பெய்து வரும் மழை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் 10 செ.மீ., சென்னை, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் 9 செ.மீ., தாம்பரம், திருத்தணி தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. #Rain #IMD

    வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். #TNRains #TamilNaduWeatherman #RedAlert
    சென்னை:

    தனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான பிரதீப் ஜான், தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்காக நகர்ந்து, கடலூர் பகுதியை நோக்கி 21-ம் தேதி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் காற்று பலமாக வீசாது, இது நாளை நிலப்பகுதி அருகே வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால் அதற்கான சூழல்கள் சாதகமாக இருக்கின்றன. அது ஒருவேளை வலுவிழந்த புயலாக இருந்தால்கூட, வியப்படையக்கூடாது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும். இதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.

    கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றில் மிக, மிக கனமழை பெய்யும். காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

    வடதமிழகத்தில் பெய்யும் இந்த மிக கனமழையால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடக்கூடும். ஏனென்றால், வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும்.

    சென்னையில் இன்று முதல் மிதமான மழை ஆங்காங்கே இடைவெளி விட்டு பெய்யக்கூடும். இன்று இரவு முதல் கனமழை பெய்யும். நாளை காலையில் மீண்டும் மழை பெய்யும், இந்த மழை 22-ம் தேதி வரை நீடிக்கும். 23-ம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும்.

    சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 850மிமீ மழை சராசரியாகப் பெய்யும், ஆனால், தற்போதுவரை 225 மிமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்கள் சென்னைக்கு மிக முக்கியமானது. இந்த மழையை சென்னை தவறவிடாது.


    தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்கூட ஒருநாள் மழை இருக்கும்.

    நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் வீசப்படும் காற்றை கஜா புயலோடு ஒப்பிட முடியாது. இது கடற்கரைப் பகுதியை கடக்க ஒரு நாள் ஆகும். இது நிலப்பகுதியை அடையும் போது வலுவடையவும் வாய்ப்புள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது உறுதியாகியுள்ளது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறலாம். இதனால், 50 முதல் 60 கி.மீ வரை வடதமிழக மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரியில் காற்று வீசக்கூடும்.

    தமிழகத்துக்கு வடகிழக்குப் பருவமழையின் மூலம் இதுவரை 305மிமீ மழை பதிவாகி இருக்க வேண்டும், ஆனால், இதுவரை 243 மிமீ மழை மட்டுமே கிடைத்திருக்கிறது. அடுத்த 3 நாட்கள் வடதமிழகத்தில் மழை இன்னும் தீவிரமாகி, எதிர்பார்த்த மழை பொழிவு கிடைக்கும். டிசம்பர் மாதம் மீண்டும் எம்ஜேஓ நம்முடைய கடற்பகுதிக்கு வருகிறது. இதனால், தமிழகத்துக்கு கூடுதலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNRains #TamilNaduWeatherman #RedAlert
    ×