search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிமோனியா"

    நிமோனியா ஜுரம், வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளால் நுரையீரலில் ஏற்படும் தொற்று ஆகும். நிமோனியாவால் குழந்தைகள் மட்டுமா பாதிக்கப்படுகின்றனர்? வயதில் மூத்தவர் மற்றும் ஏனையோர் பாதிக்கப்படுகின்றனர்.
    இன்று (நவம்பர் 12-ந் தேதி) உலக நுரையீரல் அழற்சி தினம்.

    மனிதனின் வாழ்க்கையில் சுவாசமானது முக்கிய பங்கு வகிக்கிறது. மூச்சு நின்றுவிட்டால் ஒரு மனிதனின் வாழ்க்கை முடியப்போகிறது என்று அர்த்தம். எனவே மூச்சு வாங்குதல் அல்லது திணறல் ஏற்படுவது ஒருவருக்கு அபாய எச்சரிக்கையாகும். நாம் காற்றை சுவாசிப்பதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் நுரையீரல் மூலமாக உள்ளே செல்கிறது. இதற்கு நுரையீரலில் இரண்டு பாகங்கள் உள்ளன. இவை காற்றை நுரையீரலுக்குள் எடுத்துச்செல்லும் மூச்சுக்குழாய் மற்றும் காற்றில் இருந்து ஆக்ஸிஜன் உடலுக்குள் அனுப்பும் பலூன் போன்ற மெல்லிய பாகம் ஆகும். மூச்சுக்குழாய் பாதிப்பு ஏற்படும் நோய்கள் ஆஸ்துமா தொடர் மூச்சிறைப்பு நோய் போன்றவையாகும்.

    இந்த பிரச்சினைகள் இருமல் மூச்சிறைப்பு மற்றும் விசில் சத்தத்துடன் சுவாசம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். சுவாசக்குழாய் பிரச்சினைகள் பெரும்பாலும் தூசி, புகை, பலூன் போன்ற மெல்லிய பாகம் பெரும்பாலும் கிருமிகள் அல்லது நுரையீரல் அழற்சி நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றால் பாதிக்கப்படும். இவை நிம்மோனியா அல்லது நுரையீரல் அழற்சி நுரையீரல் வீக்கம் போன்றவை ஆகும். நுரையீரல் அழற்சி பாதிப்பு உள்ளவர்கள் சளியுடன் கூடிய இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகளோடு மருத்துவரிடம் வருவார்கள்.

    நுரையீரல் வீக்கம் உள்ளவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவார்கள். ஆக மொத்தத்தில் சுவாசப்பிரச்சினைகள் நுரையீரலை மையமாக வைத்தே வருகின்றன. பொதுவாக நுரையீரல் பிரச்சினைகள் குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும். இதில் மிக முக்கியமான ஒன்று நுரையீரல் அழற்சியாகும் (நிமோனியா ஜுரம்). பெரும்பாலும் நிமோனியாவால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். நிமோனியா ஜுரம், வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளால் நுரையீரலில் ஏற்படும் தொற்று ஆகும்.

    உலக சுகாதார அமைப்பின் அறிவிப்புகள், குழந்தைகள் இறப்பு விகிதம், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் அதிகமாக காணப்படுவதை பறைசாற்றுகிறது. இதை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 12-ந் தேதி ‘உலக நுரையீரல் அழற்சி தினம்’ ஆக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. நுரையீரல் அழற்சி குழந்தைகளை பாதிக்காமல் இருக்க இந்த அமைப்பு சில நிபந்தனைகளை பரிந்துரை செய்துள்ளது. அவை, 1) தாய்ப்பால் மற்றும் சுகாதாரமான உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பது. 2) நிமோனியா தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதுடன், கைகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எய்ட்ஸ் நோயாளிகள் பாதுகாப்பு அவசியம். 3) இது தவிர நிமோனியா பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு விரைவாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கிடைக்க செய்வது.

    நிமோனியாவால் குழந்தைகள் மட்டுமா பாதிக்கப்படுகின்றனர்? வயதில் மூத்தவர் மற்றும் ஏனையோர் பாதிக்கப்படுகின்றனர். இதில் நமக்கு வில்லனாக அமைவது பன்றி காய்ச்சல் ஏற்படுத்தும் நுரையீரல் தொற்று ஆகும். இந்த வருடம் இந்த காய்ச்சல் ஏற்படுத்திய பாதிப்பு சொல்லில் அடங்காது. இதைப்பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

    பன்றி காய்ச்சல் 2009-ல் மனிதனை முதன் முதலாக தாக்கியது. இது எச்1 என்1 என்ற வைரஸ் கிருமியால் வரும் ஒரு வகையான புளூ ஜுரமாகும். பாதிக்கப்பட்டவர்கள் ஜுரம், உடல் வலி, மூக்கில் நீர் வருதல், தொண்டை வலி, இருமல் மற்றும் மூச்சிரைப்பு போன்றவற்றால் அவதிப்படுவர். இது இருமல் மற்றும் தும்மல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது.

    மற்றும் பாதிக்கப்பட்டவர் கைகளில் உள்ள வைரஸ்கள் கைப்பிடி மற்றும் கதவுகளில் தொற்றிக்கொள்கிறது. மற்றவர்கள் இந்த இடத்தை தொட்டு விட்டு தங்கள் மூக்கு அல்லது கண்களைத் தொடும் போதும் அவர்களை இந்த வைரஸ் தாக்குகிறது. பன்றி காய்ச்சல் எல்லோரையும் சமமாக தாக்குகிறதா? இல்லை. ஆஸ்துமா மற்றும் தொடர் மூச்சிரைப்பு நோய் போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்கள் மற்றும் சிறு நீரகம், கல்லீரல், இருதய நோயாளிகள், இதனால் தீவிரமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் வென்டிலேட்டர் வரை சமயங்களில் செல்வதுடன், இறக்கவும் நேரிடுகிறது.

    இந்த எமனிடம் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படிமேற் கூறியவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் இதற்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். நோய் உள்ளவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வாயை மூடி கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுவது, கண், மூக்கு பகுதிகளை கைகளால் தொடாமல் இருப்பது அவசியம். பொது இடங்களை தவிர்ப்பது நல்லது.

    பாதிக்கப்பட்டவர்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    டாக்டர் ஆ.சுரேஷ், நுரையீரல் சிறப்பு மருத்துவர்

    ×