search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மாநிலங்கள்"

    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த தென் மாநிலங்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. #Sabarimala #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்தபோது அங்கு சாமி தரிசனத்திற்கு செல்ல முயன்ற இளம்பெண்களை ஐயப்ப பக்தர்கள் விரட்டி அடித்தனர். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டு சபரிமலையில் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    இந்த நிலையில் சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்பட உள்ளது. மறுநாள் 17-ந்தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 27- ந் தேதி மண்டல பூஜையும், 2019 ஜனவரி 14- ந் தேதி மகரவிளக்கு நடக்கிறது.

    மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களிலும் சபரிமலைக்கு திரளான பெண் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த காலங்களில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு சபரிமலைக்கு வருவார்கள்.

    இதையொட்டி 5 தென் மாநிலங்களை சேர்ந்த அறநிலையத் துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் என்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தென் மாநில அறநிலையத்துறை மந்திரிகள் யாரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பினராயி விஜயனும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

    மண்டல மகர விளக்கு சீசனை முன்னிட்டு சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி உட்பட அனைத்து இடங்களிலும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் நவம்பர் 11- ந் தேதிக்கு முன்னதாக சீரமைக்கப்படும்.

    மற்ற மாநில அரசுகளின் உதவியுடன் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பெண் போலீசாரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து தனியார் வாகனங்களும் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். நிலக்கல்லில் இருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்கப்படும்.

    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார், கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா, ஐ.ஜி. மனோஜ் ஆபிரகாம், தமிழ்நாடு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலைய துறை கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வா வர்மா, தமிழ்நாடு அறநிலையத்துறை இணை ஆணையர் அன்பு மணி, மக்கள் தொடர்பு துறை அதிகாரி உண்ணிகிருஷ்ணன்.

    ஆந்திரா அறநிலையத் துறை தலைமை அதிகாரி சுப்பாராவ், தெலுங்கானா அறநிலையத்துறை இணை ஆணையர் கிருஷ்ண வேணி, புதுச்சேரி அறநிலைய துறை ஆணையர் தில்லைவேல், கர்நாடகாவை சேர்ந்த பிரதீப் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். #Sabarimala #SabarimalaTemple
    ×