search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிக்கெட்"

    சென்னை மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 11,357 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.19,20,800 வசூலிக்கப்பட்டுள்ளது. #ChennaiCitybus
    சென்னை:

    சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் 3,400-க்கும் மேற்பட்ட பேருந்துகளை, 673-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கி வருகிறது.

    9.88 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கி, ஏறத்தாழ 37 லட்சம் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும்பங்காற்றி வருகிறது.

    சாதாரண பேருந்துகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்ற ஸ்டிக்கர் பேருந்துகளில் ஒட்டப்பட்டதன் பயனாக, பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை ஏறத்தாழ 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போர் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. பரிசோதனையின் போது பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அபராதத் தொகை அதிகப்பட்சமாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் கடந்த ஜூலை மாதத்தில் 3,575 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.5,67,900ம், ஆகஸ்ட் மாதத்தில் 4,082 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.6,74,650-ம் வசூலிக்கப்பட்டது.

    செப்டம்பர் மாதத்தில் 3,700 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.6,78,250-ம் ஆக மொத்தம் 11,357 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.19,20,800 வசூலிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார். #ChennaiCitybus
    கர்நாடகா அரசு போக்குவரத்து பஸ்சில் கோழிக்கு அரை கட்டணம் வசூலித்த கண்டக்டரிடம் விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    பெங்களூர்:

    பஸ்களில் பயணிகளுடன் கோழிகள், ஆடுகள், நாய்கள் போன்றவை பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால் கர்நாடக மாநில அரசு பஸ்களில் அவை பயணம் செய்ய அனுமதிப்பதுடன் அவற்றுக்கு டிக்கெட் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் சிகாபலாபுரா மாவட்டத்தில் உள்ள பெட்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். விவசாயி ஆன இவர் கவுரிபிதானூரில் இருந்து பெட்டனஹள்ளிக்கு காலை 7.10 மணியளவில் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.

    அப்போது தன்னுடன் 2 கோழிகளை எடுத்து சென்றார். அவற்றை தலா 150 ரூபாய்க்கு வாங்கி இருந்தார். பஸ்சில் அவரிடம் கண்டக்டர் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார்.

    அவர் தன்னிடம் இருந்த 50 ரூபாயை கொடுத்தார். கவுரிபிதானூரில் இருந்து பெட்டனஹள்ளிக்கு செல்ல ரூ.26 டிக்கெட் கட்டணம். எனவே கண்டக்டர் மீதம் ரூ.24 தருவார் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் 2 ரூபாய் மட்டுமே வழங்கினார்.

    இதனால் ஒன்றும் புரியாத அவர் இது குறித்து கண்டக்டரிடம் கேட்டார். அதற்கு அவர் தலா அரை டிக்கெட் வீதம் ரூ.24 வசூலித்து இருப்பதாக கூறினார். அவரது பதில் புரியாத விவசாயி ஸ்ரீனிவாஸ் நான் மட்டும்தானே பயணம் செய்கிறேன்.

    என்னுடன் குழந்தைகள் யாரும் பயணம் செய்யவில்லையே என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கண்டக்டர், கோழிகளுக்கு தலா அரை டிக்கெட் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீனிவாஸ் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ்சில் 6 முதல் 12 வயது வரை பயணம் செய்யும் குழந்தைகளுக்கு அரை டிக் கெட்கட்டணம் வசூலிக்கப்படும்.

    அவர்கள் 23 முதல் 30 கிலோ எடை இருப்பார்கள். ஆனால் கோழி தலா 2½ கிலோ எடை மட்டுமே உள்ளது. அவற்றை நான் இருக்கையில் அமர வைக்கவில்லை. அப்படியிருக்க 30 நிமிட நேர பயண தூரத்துக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? என ஆதங்கப்பட்டார்.

    ஆனால் கர்நாடக அரசு பஸ் நிர்வாகம் கோழி, நாய், ஆடு போன்ற வீட்டு வளர்ப்பு பறவைகள் மற்றும் பிராணிகளுக்கு அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இத்தகவல் கர்நாடக அரசு பஸ் இணைய தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதில் முயல்கள், நாய்கள், பூனைகள், பறவைகள் மற்றும் கூண்டுகளில் அடைத்து பஸ்களில் எடுத்து வரும் வளர்ப்பு பிராணிகளுக்கு தலா அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அது குறித்து கவுரி பிதானூர் அரசு பஸ் டெப்போ மேலாளர் ஏ.யூ. ‌ஷரிப்பீடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் போக்குவரத்து கழக சட்டப்படிதான் விவசாயி ஸ்ரீனிவாசிடம் கோழிகளுக்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
    ‘காலா’ படத்திற்கு டிக்கெட் கிடைக்காத அதிர்ச்சியில் ரஜினி ரசிகர் மயங்கி விழுந்து இறந்தார்.
    போடி:

    தேனி மாவட்டம் போடி கீழராஜவீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் குமரேசன் (வயது29). நகை பட்டறை தொழில் செய்து வந்தார்.

    தீவிர ரஜினி ரசிகரான இவர் நேற்று போடியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்திற்கு சென்றார். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் குமரேசன் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினார்.

    பின்னர் சோர்வுடன் காணப்பட்ட அவர் வீட்டு வாசலில் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவரம் அறிந்ததும் அவரது உடலுக்கு ஏராளமான ரஜினி ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    ×