search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்தினசபாபதி"

    டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் கருணாஸ் உள்பட மேலும் 4 எம்.எல்.ஏ.க்களை நீக்குவது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது. #ADMK #Karunas #Kalaiselvan #Prabhu #RathinaSabapathy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கவர்னரிடம் மனு கொடுத்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.

    இந்த தகுதி நீக்க நடவடிக்கை சரியானதுதான் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, டி.டி.வி.திகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களும் பதவியை இழந்துள்ளனர்.

    தமிழக சட்டசபையில் ஏற்கனவே கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளன. நேற்று 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டு விட்டதால் மொத்தம் 20 தொகுதிகள் காலி இடங்களாக உள்ளன.

    இந்த 20 தொகுதிகளுக்கும் அரசியலமைப்பு சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த 20 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

    குறிப்பாக 20 தொகுதி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ள மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மற்றும் கருணாஸ் ஆகியோரே அந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அ.தி.மு.க. கட்சி விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியவராக உள்ளார். எனவே அவர் மீது கட்சி விதி மீறல்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூன்று பேரும் டி.டி.வி.தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் இருந்து கொண்டே அ.தி.மு.க. அரசை ஊழல் அரசு என்று குற்றம் சாட்டினார்கள்.

    அந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் சமரசம் செய்ய சில மூத்த அ.தி.மு.க. தலைவர்கள் முயன்றனர். ஆனால் மூன்று எம்.எல்.ஏ.க்களும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருந்து பின் வாங்கவில்லை. எனவே அவர்கள் மூன்று பேரையும் அரசியல் ரீதியாக முழுமையாக ஓரம் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    அதுபோல “இரட்டை இலை” சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் கருணாசும் வெளிப்படையாக டி.டி.வி. தினகரனை ஆதரித்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி.டி.வி. தினகரன், கவர்னரை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த வேண்டும் என்று மனு கொடுக்க சென்றபோது, நடிகர் கருணாசும் உடன் சென்றிருந்தார்.


    கடந்த மாதம் அவர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். மேலும் அ.தி.மு.க. அரசை விமர்சித்து பேசி வருகிறார். இவையெல்லாம் கட்சி விதி மீறல்களாக உள்ளன.

    அ.தி.மு.க. கட்சி விதிகளை நடிகர் கருணாஸ் மீறியதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. எனவே இரட்டை இலை தயவால் வெற்றி பெற்ற கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகரால் மிக, மிக எளிதாக பறிக்க முடியும்.

    கருணாஸ், ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 4 பேர் மீதும் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2 வாரங்களுக்கு முன்பு சூசகமாக தெரிவித்தார். எனவே டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் இந்த 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் எந்த நேரத்திலும் தகுதி நீக்கம் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    4 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு..க. கட்சி விதிகளை முழுமையாக மீறியுள்ளனர். அரசை தொடர்ந்து அவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

    எனவே “உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது. அதன் பிறகு 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த அ.தி.மு.க. மூத்த தலைவர் கூறினார்.

    இந்த நிலையில் கலைச்செல்வன், பிரபு, ரத்தின சபாபதி மூவரும் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்கள் கூறி வருகிறார்கள். கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கூறுகையில், “அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. துரோகிகளை நீக்குவதே எங்கள் நோக்கம்” என்றார்.

    பிரபு எம்.எல்.ஏ. கூறுகையில், “என் மீது நடவடிக்கை எடுத்தால் சட்ட ரீதியாக சந்திக்க தயார்” என்று கூறியுள்ளார். டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 4 எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து விமர்சித்து வருவதால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க.வில் வலுத்து வருகிறது.

    இதற்கிடையே நடிகர் கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்தால் அது அ.தி.மு.க. அரசுக்கு சாதகமான அம்சமாக மாறும் என்று தெரிய வந்துள்ளது. சட்டசபையில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. எனவே எந்த நேரத்திலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம்.

    தற்போது சட்டசபையில் 214 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 108 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அ.தி.மு.க.வுக்கு 110 எம்.எல்.ஏ.க்களின் உறுதியான ஆதரவு உள்ளது. எனவே அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்த விதத்திலும் ஆபத்து இல்லை.

    என்றாலும் சட்டசபையில் கூடுதல் பலமுடன் இருக்க வேண்டும் என்பதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதன்படி கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 210 ஆக குறையும்.

    அந்த நிலையில் அ.தி.மு.க., தனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்து காட்ட 106 எம்.எல்.ஏக்கள் இருந்தாலே போதும். எடப்பாடி பழனிசாமியை 110 எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பதால் சற்று அதிக பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியை நடத்த முடியும். எனவே நடிகர் கருணாஸ் உள்பட 4 பேரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

    அந்த 4 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், திருவாடானை, அறந்தாங்கி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளும் காலி இடங்களாக அறிவிக்கப்படும். அந்த 4 தொகுதிகளுக்கு தனியாக இடைத்தேர்தல் நடத்தப்படும். #ADMK #Karunas #Kalaiselvan #Prabhu #RathinaSabapathy
    ×