search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புஷ்கரம்"

    புஷ்கரத் திருவிழா என்பது குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழாவாகும்.
    புஷ்கரத் திருவிழா என்பது குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழாவாகும்.

    மூன்றரைக்கோடி தீர்த்தத்துக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்து தங்கி இருப்பதாக ஐதீகம்.

    12 வருடத்திற்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் நடைபெறும். இதை காவிரி புஷ்கரம் என்பர்.

    ஒரு நதியில் நடைபெறும் இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும்போது அதனை மகாபுஷ்கரம் என்று அழைப்பர்.

    புஷ்கரத்துக்கும், குருப்பெயர்ச்சிக்கும் தொடர்பு உள்ளது. இதுகுறித்து புராணம் கூறும் தகவல்:-

    புஷ்கரம் என்பவர் ஒரு முனிவர். இவர் வருண பகவானின் தாய்மாமன் ஆவார். இவர் ஒருமுறை சிவனை நோக்கி கடும் தவம் இருந்து அவரிடம் இருந்து ஜலமூர்த்தியை (தீர்த்தம்) பெற்றார். இதனால் புஷ்கரம் 3½ கோடி தீர்த்தங்களுக்கு அதிபதி ஆனார்.

    பிரம்மாவின் கமண்டலத்தில் புஷ்கரம் தங்கி இருக்கிறார். ஒரு சமயம் குருபகவான் பிரம்மாவை நோக்கி கடும் தவம் இருந்தார். அப்போது பிரம்மா குருபகவான் முன்பு தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு குருபகவான் உங்களிடம் உள்ள 3½ கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியாகிய புஷ்கரத்தை தாருங்கள் என்று கேட்டார். அதற்கு பிரம்மாவும் ஒப்புக்கொண்டார். ஆனால் புஷ்கரம் இதற்கு சம்மதிக்க மறுத்து, பிரம்மாவிடம் நான் உங்களிடமே இருப்பேன். என்னை பிரித்து விடாதீர்கள் என்று வேண்டிக்கொண்டார்.

    இதனால் பிரம்மா தர்மசங்கடம் அடைந்தார். கொடுத்த வாக்கை பின்வாங்காமல் பிரம்மா குருபகவானிடமும், புஷ்கரத்திடமும் சமாதானமாக பேசி ஒரு முடிவு எடுத்தார்.

    அதன்படி குருபகவான் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிரவேசிக்கிறபோது அந்தந்த ராசிக்கு உரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி குருபகவான் மேஷ ராசியில் இருக்கும்போது கங்கை நதியிலும், ரிஷபத்தில் நர்மதை, மிதுனத்தில் சரஸ்வதி, கடகத்தில் யமுனை, சிம்மத்தில் கோதாவரி, கன்னியில் கிருஷ்ணா, துலாம் ராசியில் காவிரி, விருச்சிக ராசியில் தாமிரபரணி, தனுசில் சிந்து, மகரத்தில் துங்கபத்ரா, கும்பத்தில் பிரம்மபுத்ரா, மீனத்தில் பரணிதா நதியிலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு ராசியிலும் குருபகவான் பிரவேசிக்கிறபோது அந்த ராசிகளுக்குரிய நதிகளில் முதல் 12 நாட்கள் புஷ்கரம் வசிக்க வேண்டும். இந்த 12 நாட்களில் சிவன், பிரம்மா, மகாவிஷ்ணு, பார்வதி, சரஸ்வதி, மகாலட்சுமி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் அஷ்டதிக்கு பாலர்கள் வாசம் செய்வார்கள்.

    அப்போது அந்த நதியில் நீராடினால் அனைத்து வகை பாவங்களும் நீங்கி 3½ கோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். அனைத்து கடவுள்களின் அருளாசியும் ஒருங்கே பெறலாம். கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும் என புராண நூல்கள் கூறுகின்றன.

    குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயரும் நாள் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவின் தொடக்கத்தை குறிக்கிறது.

    தாமிரபரணி புஷ்கரம் வருகிற 12.10.2018 தொடங்கி தொடர்ச்சியாக 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து 23.10.18 வரை அதாவது 23-ந் தேதி வரை தங்கி இருப்பார்.

    இந்தியாவில் உள்ள கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்ரா, பிரம்மபுத்ரா, பரணிதா என்ற 12 புண்ணிய நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    தற்போது இந்த புஷ்கர விழா தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு வருவதால் தாமிரபரணி மகாபுஷ்கரம் என்ற பெயரில் வெகு சிறப்பாக தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகை மலையில் இருந்து தாமிரபரணி பாயும் இடங்கள் முதல் திருச்செந்தூருக்கு வடதிசையில் கடலில் சங்கமிக்கும் வரை உள்ள புண்ணிய தீர்த்தக் கட்டங்களில் கொண்டாடப்படுகிறது.

    புஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுக்கிரஹோரையில் காஞ்சி சங்கராச்சாரியார், மடாதிபதிகள், ஆதீனகர்த்தர்கள் புனித நீராடி விழாவை தொடங்கிவைக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான துறவிகள், பொதுமக்கள் புனித நீராடுகின்றனர்.

    தாமிரபரணி புஷ்கரம் 2018 விழாக்குழு தலைமை அமைப்பாளர் எஸ்.மகாலட்சுமி சுப்ரமணியன் கூறியதாவது:-

    திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதுபோல தாமிரபரணி நதியை தரிசித்தாலோ, அதை நினைத்தாலோ, ஸ்நானம் செய்தாலோ, அதன் தீர்த்தத்தை பருகினாலோ எல்லா பாவங்களும் அகன்று முக்தி பெறலாம் என்று தாமிரபரணி மகாத்மியம் புகழ்கின்றது.

    இதைவிட இன்னும் உயர்வாக கலியுகத்தின் முடிவில் தாமிரபரணி தீரத்தில் கல்கி என்ற பெயரால் பகவான் விஷ்ணு அவதரிப்பார் என்று பாகவ தாதி புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    இத்தகைய பெருமை வாய்ந்த தாமிரபரணி புஷ்கர திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி தொடங்குகிறது. 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு ஹோமங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெறுகிறது.

    13-ந் தேதி நவக்கிரக ஹோமம், 14-ந் தேதி துர்கா ஸ்வருப சுயம்வர கலாபார்வதி ஹோமம், 15-ந் தேதி பைரவ ஹோமம், வடுக பூஜை, 16-ந் தேதி மகா சுதர்சன ஹோமம், 17-ந் தேதி புத்ரகாமேஷ்டியாகம், சண்முக ஹோமம், 18-ந் தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், வித்யா மகா சரஸ்வதி ஹோமம், 19-ந் தேதி தன்வந்திரி ஹோமம், 20-ந் தேதி குபேர மகாலட்சுமி ஹோமம், 21-ந் தேதி மிருத்யுஞ்ஜய ஹோமம், 22-ந் தேதி ஆயுஷ்ய ஹோமம், 23-ந் தேதி மகா ருத்ர சத சண்டி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமங்களின்போது சங்கராச்சாரியார், ஆதினகர்த்தாக்கள், மடாதிபதிகள் கலந்துகொள்கின்றனர்.

    12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் காலையில் சதுர்வேத பாராயணமும், மகாருத்ரஜபம், சண்டிபாராயணம் ஹோமங்கள் நடைபெறும். பிறகு அந்த கலச தீர்த்தங்கள் தினமும் மதியம் 12 மணியளவில் தாமிரபரணியில் சேர்க்கப்பட்டு புஷ்கர நீராடல் நடைபெறும். மாலை தாமிரபரணி ஆரத்தி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, ருதிரக்ரம அர்ச்சனைகள், கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் முதலானவை நடைபெறும்.

    விழாக்காலங்களில் திருநெல்வேலி சுற்றுப்புற கோவில்களில் இருந்து சுவாமி புறப்பாடு செய்து தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவும், ஹோமங்கள் யாகங்கள், வேதம், திருமுறை பாராயணம் ஆன்மிகச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாலை நேரத்தில் தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் தாமிரபரணி நதியில் வாசம் செய்வதால் இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்களை செய்தால் பன்மடங்கு பலனை தரும்.

    இந்த மகா புஷ்கரமானது எல்லா ராசிக்கும் உகந்தது என்றும், இந்த குருப்பெயர்ச்சியின்போது மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. புஷ்கர காலங்களில் தானங்கள் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும். பித்ருக்களுக்கு தர்பணம், திதி முதலிய சடங்குகள் செய்து முன்னோர்களை வழிபட்டால் பிதிர்சாபம் நீங்கி வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கப் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி கோவில்கள் மற்றும் ஆற்றில் அழைப்பிதழை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா வருகிற 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் மகா புஷ்கர விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    துறவிகள் சார்பில் மகா புஷ்கர விழாவுடன் மகா சித்தர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த விழா, மாநாட்டுக்கான அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டு உள்ளது. அந்த விழா பத்திரிகை நேற்று பாபநாசம் கோவில், நெல்லையப்பர் கோவிலில் சுவாமி, அம்பாள் முன்னிலையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    மேலும் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம் முன்பு தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அழைப்பிதழை வைத்து பூஜைகள் செய்தனர். பின்னர் ஆற்றில் மலர் தூவி ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் விழா அழைப்பிதழ் மீது தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு ஆகியவை வைத்து ஆற்றில் விடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனமும் அகில பாரத துறவிகள் சங்க தலைவருமான சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், செயலாளர் ராமானந்தா சுவாமி, பெரம்பலூர் பிரம்மரிஷி மலை சித்தர் சாமி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கூறியதாவது:- 12 ராசிகளுக்கு ஏற்ப 12 நதிகளில் குருபெயர்ச்சியையொட்டி புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. அதில் தமிழகத்தில் 2 நதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மயிலாடுதுறை ஆற்றில் காவிரி புஷ்கர விழா விழா கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு பொதிகை மலையில் உற்பத்தியாகி வங்க கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    விழாவில் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து துறவிகள், ஆதீனம், மடாதிபதிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையினர் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். இந்த விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.

    இந்த விழாவில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    அகில இந்திய துறவிகள் சங்கத்தின் சார்பில் நடைபெறுகின்ற தாமிரபரணி மகாபுஷ்கர விழா அழைப்பிதழ் மற்றும் இணையதளம் வெளியீட்டு விழா நேற்று மாலையில் நெல்லை சந்திப்பில் நடந்தது. துறவிகள் சங்க செயலாளர் ராமானந்தாசுவாமிகள் தலைமை தாங்கினார். தலைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், அழைப்பிதழை வெளியிட்டார். டாக்டர் சிவராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இதில் சாராதா கல்லூரி தாளாளர் பக்தானந்தா சுவாமிகள், திருப்பாதசுவாமிகள், மன்னார்குடி ஜீயர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    திக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு பிறகு மகா புஷ்கர விழா நடக்கிறது. இந்த விழா வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
    விருச்சிக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடையும்போது நடக்கும் நிகழ்ச்சி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் ஆலய தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் 144 ஆண்டுகளுக்கு பின்னர் மகா புஷ்கரவிழா நடக்கிறது.

    இந்த விழா வருகிற 12-ந்தேதி(அக்டோபர்) தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று திக்குறிச்சி மகாதேவர் ஆலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழாக்குழு ஒருகிணைப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். திருகயிலை சிவனடியார்கள் கூட்ட தலைவர் ஜெயந்தி வெள்ளத்துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிவனடியார்கள் கூட்ட துணைத்தலைவர் பார்வதி, செயலாளர் அனிதா பாண்டியன், துணை செயலாளர் ஜெயலட்சுமி, பொருளாளர் கீதா ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் குழிச்சல் செல்லன், பா.ஜனதா மாநில விவசாய அணி செயலாளர் ரவீந்திரன் மற்றும் திக்குறிச்சி மகாதேவர் ஆலய பக்தர்கள் சேவா சங்க செயலாளர் சசிகுமார், வினோத், கிராம கோவில் கூட்டமைப்பு செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    விழா நடக்கும் 12 நாட்களும் தாமிரபரணி ஆற்றில் ஹோமங்கள், முன்னோர்கள் நினைவு தர்ப்பணம், கோ தானம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவை வெள்ளிமலை சைதன்யானந்தஜி தொடங்கி வைக்கிறார்.

    நிறைவு நாள் விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், கல்லிடைகுறிச்சி பரமாசாரிய சுவாமிகள், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மிக தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த விழா 144 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்படுகிறது. இதில் 5 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள். எனவே பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை குறுக்குத்துறை-தைப்பூச மண்டபத்தில் தாமிரபரணி புஷ்கர விழா வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி அறிவித்துள்ளார்.
    செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தாமிரபரணி நதிக்கரையில் பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சார்பில் தாமிரபரணி புஷ்கர வழிபாடு மேற்கொள்வதற்கு கோவில்களுக்கு சொந்தமான மண்டபங்கள் மற்றும் படித்துறைகள், கோவில் வளாகங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.

    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புஷ்கர விழா நடத்த அதிகமான பக்தர்கள் செல்ல போதுமான பாதை வசதி இல்லை. அதிகமான பக்தர்கள் கூடுவதற்கு இடவசதியும் இல்லை. பருவமழைகாலத்தில் ஆற்றில் அதிகமாக தண்ணீர் செல்லும்போது நீராடுபவர்களை பாதுகாப்பது சிரமம் என்றும், அந்த பகுதி நெரிசலான பகுதி என்பதால் அந்த இடத்தில் புஷ்கர விழா நடத்த இயலாது என்றும் கலெக்டர் தெரிவித்து உள்ளார். எனவே, அந்த இடத்தில் தாமிரபரணி புஷ்கர விழா வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் நெல்லை சந்திப்பில் உள்ள பிள்ளையன்கட்டளைக்கு சொந்தமான தைப்பூச மண்டபம் மற்றும் அந்த பகுதியில் உள்ள படித்துறைகள் மிகவும் பழமையானது ஆகும். அந்த பகுதியில் உள்ள ஆறு மிகவும் ஆழமானது என்பதாலும், நீர்ச்சுழல் உள்ள பகுதி என்பதாலும் அந்த இடத்திலும் புஷ்கர விழா வழிபாடு நடத்த அனுமதி கிடையாது. எனவே, குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் மண்டபம் மற்றும் படித்துறைகளை புஷ்கர விழா வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி ஆன்மிக அமைப்புகளுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என கோவில் நிர்வாகிகளுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    புஷ்கர விழாவிற்காக கோவிலில் இருந்து சுவாமி எழுந்தருள செய்வது ஆகமவிதிகளுக்கு மாறானது ஆகும். எனவே கோவில்களில் தொன்று தொட்டு உள்ள பழக்க வழக்கத்திற்கு மாறாக சுவாமி எழுந்தருள செய்வது போன்றவை கூடாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

    தாமிரபரணி புஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி தொடங்கி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் இந்த விழா 18 இடங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையில் நடக்கிறது. இதற்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கிறது. நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ளதால் அங்கு புஷ்கர விழாவிற்கு வந்து நீராடுபவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதேபோல் தைப்பூச மண்டபம் மற்றும் அதன் அருகில் உள்ள படித்துறைகளிலும் ஆழம் அதிகமாக உள்ளதால் அங்கு குளிக்க வருகின்ற பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆகவே இந்த 2 இடங்களில் மட்டும் புஷ்கர விழா வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது. மற்ற இடங்களில் வழக்கம்போல் புஷ்கர விழா நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    தாமிரபரணி புஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கும், புனித நீராடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் மற்றும் அமைச்சர்கள், மத்திய மந்திரிகள், துறவிகள் உள்பட இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகள் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் தாமிரபரணி புஷ்கர விழா சிறப்பாக நடைபெறவேண்டி நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறையில் நேற்று சிறப்பு ஆரத்தி விழா நடந்தது. இதில் துறவிகள் சங்க செயலாளர் ராமானந்தா சுவாமிகள், செண்பக மன்னார் ஜீயர், நாராயண ஜீயர், வேதானந்த மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தாமிரபரணி நதிக்கு பால், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்து ஆரத்தி காட்டினார்கள்.

    இந்த ஆரத்தி விழாவில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாமிரபரணி நதிக்கு ஆரத்தி காட்டினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வர உள்ளனர். எனவே இந்த புஷ்கர விழாவுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுக்கவேண்டும். இது சாதி, மதம், மொழி பார்த்து நடக்கும் விழா இல்லை. இந்த விழா நமது தாமிரபரணிக்கு நடக்கிற விழா. எனவே இந்த விழாவை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட வேண்டும். இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். புஷ்கர விழாவுக்கு வருகிறவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி பாளையங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் வைத்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெறும். அதன்படி வருகிற அக்டோபர் 11-ந் தேதி தொடங்கி, 22-ந் தேதி வரை புஷ்கர விழா நடைபெற உள்ளது. 149 தீர்த்த தலங்களில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவுக்கான முயற்சிகளை அகில பாரத துறவியர் சங்கம் மற்றும் தாமிரபரணி புஷ்கர கமிட்டியினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த விழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அகஸ்தியர், தாமிரபரணி தேவி சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளுக்கு பாளையங்கோட்டையில் உள்ள சிருங்கேரி மடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பார்த்ததீர்த்த சுவாமி தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன. பின்னர் அங்கிருந்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு ரத யாத்திரை ஊர்வலத்தில் பல ஊர்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் நெல்லைக்கு வந்தது.

    நெல்லை மாநகரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று பாளையங்கோட்டையில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலுக்கு இந்த சிலைகள் எடுத்து செல்லப்பட்டது. அங்கு இந்த சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
    ×