search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருப்பெயர்ச்சி"

    தாமிரபரணி நதியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்களிலும் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மகா ஆரத்தியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதையடுத்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    பல்வேறு ஆன்மீக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல்வரை தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா நடக்கிறது. நேற்று இந்த விழா பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

    பாபநாசம், நெல்லை அருகன்குளம், திருப்புடைமருதூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மகா புஷ்கர விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். அருகன்குளம் எட்டெழுத்துபெருமாள் கோவில் ஜடாயுத்துறையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மகா ஆரத்தியை தொடங்கி வைத்தார்.

    தாமிரபரணி நதியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்களிலும் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக பாபநாசம் இந்திர கீல தீர்த்தத்தில் நேற்று மாலை மகா ஆரத்தி நடைபெற்றது. இதையொட்டி வேத பண்டிதர்கள், ஆதீனங்கள், சாதுக்கள் திரளானோர் கலந்துகொண்டு சதுர்வேதம், பஞ்சபுராணங்கள் பாடினர். தொடர்ந்து நடைபெற்ற மகா ஆரத்தியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து தாமிரபரணியில் புனித நீராடினார்கள்.



    காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடைமருதூர் புடார்ச்சன தீர்த்தத்தில் நடைபெற்ற மகா ஆரத்தியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் அம்பை, கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி, பழவூர், கோடகநல்லூர் தீர்த்தக் கட்டங்கள், படித்துறை களிலும் தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடந்தது.

    நெல்லை அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயுவுக்கு ராமபிரான் மோட்சம் கொடுத்த சிறப்புடைய தீர்த்தக்கட்டத்தில் புஷ்கர விழா கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு அங்குள்ள கோசாலையில் 54 யாக குண்டங்கள் அமைத்து ஓமங்கள் நடந்து வருகின்றன. கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலையில் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் நடந்த புஷ்கர விழாவில் கலந்து கொண்டார்.

    முன்னதாக கோசாலைக்கு வந்த அவருக்கு மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோசாலையில் கோபாலகிருஷ்ணரை தரிசனம் செய்த கவர்னர் பின்னர், பசுக்களுக்கு பழங்கள் வழங்கி கோபூஜை செய்து அவரே ஆரத்தி காட்டினார். அவருக்கு கோசாலை சார்பில் 144 கிலோ எடை கொண்ட லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    மாலை 6.05 மணிக்கு கோசாலை ஜடாயு படித்துறைக்கு வந்த கவர்னர் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ள தாமிரபரணி, அகஸ்தியர் சிலைகளுக்கும், தாமிரபரணி நதிக்கும் புனிதநீர் ஊற்றி மலர்களை தூவினார். அங்கு பரணி தீப ஆரத்திக்காக வைக்கப்பட்டு இருந்த குத்துவிளக்கை ஏற்றினார். தொடர்ந்து, சப்தரிஷிகளான அகஸ்தியர், காசியப்பர், அத்ரி, பரத்வாஜயர், வியாசர், கவுதமர், வசிஷ்டர் ஆகியோர் கங்கையில் கங்கா ஆரத்தி செய்வது போல் இங்கு ஏழு பரணி தீப மகா ஆரத்தியும், நாகஆரத்தியும் நடந்தது.



    ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபரணி ஆரத்தி செய்யப்பட்டது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்களும் வந்திருந்தார்கள். வேத மந்திரங்கள் முழங்க இந்த மகாபரணி ஆரத்தி நடந்தது. இதை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

    அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக நெல்லை தைப்பூச படித்துறையில் நேற்று மாலை தாமிரபரணி நதிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, அலங்கார தீபாராதனை மற்றும் மகா ஆரத்தி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தாமிரபரணியில் தீபங்கள் ஏற்றி வணங்கினார்கள். தாமிரபரணி புஷ்கர குறுக்குத்துறை கமிட்டி சார்பில் வேணு வன தீர்த்தம் எனப்படும் குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் நடைபெற்ற விழாவில் தாமிரபரணிக்கு மங்கள ஆரத்தி நடந்தது.

    தெட்சண காசி எனப்படும் முறப்பநாட்டில் தாமிரபரணி வடக்கில் இருந்து தெற்காக தட்சண வாகினியாக பாய்கிறது. காசிக்கு நிகரான இந்த தலத்தில் புஷ்கர விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் நதி ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை தாமிரபரணி ஈஸ்வரம் அறநிலை செய்திருந்தது.

    இதேபோல் ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், உள்ளிட்ட இடங்களிலும் தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. தாமிரபரணி படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் தாமிரபரணி நேற்று ஆரத்தியால் ஜொலித்தது. எங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
    தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா தொடங்கியது. மகா புஷ்கர விழாவையொட்டி, நெல்லை ஜடாயு படித்துறையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில் உள்ள படித்துறைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    நெல்லை பகுதியில் கைலாசபுரம் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் தீர்த்தக்கட்ட படித்துறை, மேலநத்தம் அழியாபதீசுவரர் கோவில் படித்துறை, ராஜவல்லிபுரம் செப்பறை கோவில் படித்துறை, பாலாமடை படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் நேற்று காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் தமிழகம், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சாமியார்கள் புனித நீராடி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சென்றனர்.

    நெல்லை அருகன்குளத்தில் ஜடாயு துறையில் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி ஆற்றங்கரையில் 144 அடி நீளத்துக்கும், 16 அடி அகலத்துக்கும் கருங்கற்களால் புதிய படித்துறை கட்டப்பட்டு உள்ளது. நேற்று காலை அந்த படித்துறைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தேனி ஓம்காரனந்தா சுவாமி சிறப்பு பூஜை நடத்தி புனிதநீர் ஊற்றினார்.

    எட்டெழுத்து பெருமாள் தருமபதி அறக்கட்டளை நிர்வாகி ராமலட்சுமி தேவி புதிய படித்துறையை மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் அங்கு வரதராஜ பெருமாள் சுவாமி தலைமையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அங்கு வெற்றிலையில் கற்பூர ஜோதி ஏற்றி பெண்கள் ஆற்றில் விட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் இந்த படித்துறையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆரத்தி பூஜையை தொடங்கி வைத்தார்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கிருந்து மேளதாளம், வேதமந்திரங்கள் முழங்க கொடிமரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தைப்பூச மண்டபத்தின் முன்பு சிறப்பு பூஜை நடத்தி கால் நாட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், லட்சுமணன் எம்.எல்.ஏ., அமைப்பாளர்கள் உஷா ராமன், நிர்மலா ராமரத்தினம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    குருவை நாம் வழிபட்டுக் கொண்டே இருந்தால் அவர் பல நன்மைகளையும் நமக்கு வழங்குவார். தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற குரு பகவான் அருள்பாலிக்கும் சிறப்பு தலங்களை பார்க்கலாம்.
    நவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டுக்கான குருபெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி கடந்த வாரம் நடைபெற்றது. குருவை நாம் வழிபட்டுக் கொண்டே இருந்தால் அவர் பல நன்மைகளையும் நமக்கு வழங்குவார்.

    குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கூட குரு பகவானை தரிசித்து வரலாம். வியாழக் கிழமையில் விரதம் இருந்து, நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.

    தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற குரு பகவான் அருள்பாலிக்கும் சிறப்பு தலங்களை பார்க்கலாம்.

    திருச்செந்தூர்

    குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர் களைக் காக்க முருகப்பெருமான் அசுரர் களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப் படுகிறது. இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானை களுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலது கையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தி யின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவ சியம் ஒரு முறையாவது சென்று வரவேண் டிய தலம் இது.

    பாடி திருவலிதாயம்

    சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோவில், குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.

    தென்குடி திட்டை

    திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ் டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்ப தாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.

    குருவித்துறை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னி தியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின் றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ‘மிருத சஞ்சீவினி’ மந்திரம் கற்றிருந்தார். இத னால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திர த்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியா ரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

    தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவ தாகச் சொன்னான். அதன்படி சுக்ராச் சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந் தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச் சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

    கசனைக் காணாத தேவயானி, தந்தை யிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.

    ஆலங்குடி

    நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங் களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தலத்துச் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் உள்ளார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம் - குரு தட்சிணாமூர்த்தி என்பதால், இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர். தட்சிணா மூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான். வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. தேவர் களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ‘ஆலங்குடி’ என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவருக்கும் எவ்விதத் தீங்கும் உண் டாவதில்லை என்று சொல்லப்படுகிறது.

    பட்டமங்கலம்

    கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பட்டமங் கலத்தில் அருளுகிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக் கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.

    அகரம் கோவிந்தவாடி

    காஞ்சீபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில், கம்மவார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரி கிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

    தக்கோலம்

    வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இத்தலத்து இறைவன் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.
    ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 (12x12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. அதன்படி இந்த ஆண்டு மகாபுஷ்கரம் நடைபெறுகிறது.
    12-10-2018 முதல் 23-10-2018 வரை

    பிரம்மதேவரின் கையில் இருந்தது தீர்த்தம் ‘புஷ்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த புஷ்கர தீர்த்தத்தை கடுமையான தவம் இருந்து பிரம்மதேவரிடம் இருந்து வரமாகப் பெற்றார், குரு பகவான். ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 (12x12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. அதன்படி இந்த ஆண்டு மகாபுஷ்கரம் நடைபெறுகிறது.

    நம் நாட்டில் உள்ள முக்கியமான 12 நதிகள், 12 ராசிகளுக்குஉரியவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி விருச்சிக ராசிக்குரியதாக தாமிரபரணி நதி சொல்லப்பட்டு ள்ளது. குரு பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசியில் குரு சஞ் சரிப்பதால், தாமிரபரணியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் அவர்களின் தேவியர்கள், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பார்கள்.

    நதிகளெல்லாம் தெய்வீகம் வாய்க்கப் பெற்றவை என்று கருதுவது நம் நாட்டு ஐதீகம் ஆகும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதில் மகிமை காண்பவர்கள், அதனுள்ளே கடவுள் உறைந்திருப்பதை உணர்கின்றனர். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி.

    அகத்தியரை ‘தென் நாடு செல்க’ எனக் கட்டளையிட்டார், சிவபெருமான். அதற்கு அகத்தியர், தனக்கு அங்குள்ள தமிழ் மொழியை உணர்த்தும்படி வேண்டினார். சிவபெருமானும், அகத்தியரை தன் அருகே அமர வைத்து தமிழ்மொழியைக் கற்பித்தார். பின்னர் அங்கிருந்து பொதிகைமலை வந்து அமர்ந்த அகத்தியர், கடும் தவம் செய்தார். அவர் முன் தோன்றிய சூரிய பகவான், அகத்தியருக்கு தமிழ் இலக்கணங்களை கற்றுக் கொடுத்தார்.

    இதையடுத்து முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராய் இருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர். இந்த நிலையில் அகத்தியர் நீராடும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார். அந்த நதி தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அதற்கு ‘தாம்பிர வர்ணி’ என்று பெயர் வந்தது. காலப்போக்கில் அதுவே மருவி ‘தாமிரபரணி’ என்றானது.

    அகத்தியருக்காக ஈசனால் உருவாக்கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமான திருக் கோவில்கள் உள்ளன. பாபநாசம் முதல் புன்னக்காயல் (முகத்து வாரம்) வரையான இதன் கரையோரத்தில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன. இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை படித்து றையில் 12-10-2018 அன்று மகாபுஷ்கரத் திருவிழா தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

    திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி புஷ்கரம் ஆரம் பம். 23-10-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் விழா பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.

    இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது. 12-ந் தேதி (வெள்ளி) - விருச்சிகம், 13-ந் தேதி (சனி)- தனுசு, 14-ந் தேதி (ஞாயிறு) - மகரம், 15-ந் தேதி (திங்கள்)- கும்பம், 16-ந் தேதி (செவ்வாய்) - மீனம், 17-ந் தேதி (புதன்) - மேஷம், 18-ந் தேதி (வியாழன்) - ரிஷபம், 19-ந் தேதி (வெள்ளி) - மிதுனம், 20-ந் தேதி (சனி) - கடகம், 21-ந் தேதி (ஞாயிறு) - சிம்மம், 22-ந் தேதி (திங்கள்) - கன்னி, 23-ந் தேதி (செவ்வாய்) - துலாம்.

    ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக் குரிய தேதி, கிழமையில் தாமிரபரணி நதியில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும். குடும்பத் தலைவரோடு தொலை தூரத் திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எது வோ, அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும். 12 நாட் களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமமானது.

    இந்த 12 நாட்களிலும் தாமிரபரணிக் கரையில் தானம் செய் வது சிறப்பு. தானங்களுள் ‘கோ தானம்’ முக்தியை அளிப்பதாக சொல்லப்படுகிறது. நல்ல பசுவைத் தானம் செய்வதால், மோட்ச சித்தி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இது தவிர புஷ்கரம் தங்கியிருக்கும் 12 நாட்களிலும், தாமிர பரணி நதிக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ரு தோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலுவும் பெறும். பாபநாசம் முதல் புன்னக்காயல் வரையான 143 படித்துறைகளில் எவற்றில் வேண்டுமானாலும் நீராடலாம், தானம் செய்யலாம், திதி கொடுக்கலாம்.

    சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீராடுவது மிக மிகப் புண்ணியமாகும்.

    திருமணமாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடினால் மட்டுமே நற்பலன் கிட்டும். திருமணமானவர்கள் அதிகாலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராட லாம். துறவு வாழ்க்கை மேற்கொள்பவர்கள் அதி காலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.

    நவக்கிரகங்களில் குரு பகவானை ‘புத்திரகாரகன்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புத்திர பாக்கியத்திற்கு காரணகர்த்தா இவரே. குரு பகவானின் அனுக்கிரகம் நிரம்பப் பெற்ற தலங்களிலும், குரு பகவான் சஞ்சாரத்தால் சிறப்பு பெறும் புஷ்கர நதியிலும் நீராடினால் புத்திரப்பேறு கிடைப் பது நிச்சயம். அந்த வகையில் தாமிரபரணியில் நீராடுவது சிறந்த பலனைத் தரும். குரு திசை, குரு புத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், புஷ்கர நாளில் தாமிரபரணியில் நீராடினால் புதுவாழ்வு பூக்கும்.

    ராசிகளுக்குரிய நதிகள்

    மேஷம் - கங்கை

    ரிஷபம் - நர்மதை

    மிதுனம் - சரஸ்வதி

    கடகம் - யமுனை

    சிம்மம் - கோதாவரி

    கன்னி - கிருஷ்ணா

    துலாம் - காவிரி

    விருச்சிகம் - தாமிரபரணி

    தனுசு - சிந்து

    மகரம் - துங்கபத்ரா

    கும்பம் - பிரம்மநதி

    மீனம் - பிரணீதா
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது.
    குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழாவாகும். இதையடுத்து புஷ்கர விழாவை பிரமாண்டமாக கொண்டாட சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், சித்தர்கள் கோட்டம், தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள், தாமிரபரணிக்கு ஆரத்தி வழிபாடு நடத்த‌ ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன. நெல்லை அருகன் குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணி மூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித் துறைகள் முற்றிலும் புதுப் பித்து கட்டப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடியில் முறப்ப நாடு தலத்தில் படித்துறைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. இந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை (11-ந்தேதி) தொடங்குகிறது.

    நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை நாளை காலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். பின்பு அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் கவர்னர் பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடக்கும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

    மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக தீர்த்த கட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக் கரையில் 144 அடியில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. .

    ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபாரணி ஆரத்தி செய்யப் படுகிறது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு வேத பண்டிதர்களும் வந்துள்ளனர். படித்துறையில் 7 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தைப்பூச மண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

    விழாவின்போது தாமிர பரணியின் மையப்பகுதியில் படகுகளில் மீட்பு படையினரும், போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபடு கிறார்கள். புஷ்கர விழாவுக்காக எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 54 யாக குண்டங்களும், நடுவில் பத்ம குண்டமும் அமைக்கப் பட்டுள்ளன.

    இதேபோல் பாபநாசம் சித்தர்கோட்டம் சார்பாக நடைபெறும் விழாவில் நாளை காலை 7.30 மணி யளவில் புனித தீர்த்தமான கல்யாண தீர்த்தத்தில் இருந்து அடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து நதிக்கு வழிபாடு தொடங் குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6.15 மணியளவில் பஞ்சபூத மேடையில் 16 வகை தீபங்கள், 5 வகை உபச்சாரங் களுடன் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும்.

    ஸ்ரீவைகுண்டம் படித்துறை யில் நாளை முதல் 23-ந்தேதிவரை புஷ்கர விழா நடக்கிறது. விழாவில் தினசரி கோ பூஜை, சுமங்கலி பூஜை, திருமணம் கைகூடுவதற்கு, புத்திர பாக்கியம், தம்பதி ஒற்றுமை, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான சிறப்பு பூஜைகள், சுதர்‌ஷண ஹோமம், பாராயணம் முற்றோதுதல், நாலாயிர திவ்ய பிரபந்தம், வித்யா ஹோமம், பொங்கல் வழிபாடு, கனக தாரா ஜெயம் மற்றும் இதர பூஜைகள் நடைபெற உள்ளன.

    புஷ்கர விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. விழாவை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. இதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் நெல்லையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

    ஏற்கனவே ஆற்றுக்குள் உள்ள ஆழம் குறித்தும், எந்தெந்த இடங்களில் எத்தனை அடி தூரம் வரை பக்தர்களை அனுமதிப்பது என்றும் விழா குழுவினர் அறிக்கை தயார் செய் துள்ளனர். அதன்படி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பக்தர்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாத வகையில் இரும்பு கம்பிகளை நிறுவி, இரும்பு வலைகளை கட்டி பாதுகாப்பு வளையம் அமைக்கப் பட்டுள்ளது.

    புஷ்கர விழாவுக்காக நெல்லை மாநகரில் 600 போலீசாரும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 3500 போலீ சாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குமரி மாவட்டத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட உள்ளனர். தேவைப்பட்டால் இதர மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி மாவட் டத்தில் பக்தர்கள் நீராடுவதற் காக 29 படித்துறைகள் கண்டறியப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி முறப்பநாடு, அகரம், நாணல்காடு, ஆழிக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகில், ஆழ்வார் திருநகரி திருசங் கனை, அகோப்பில்லா, காந்தீஸ்வ ரர், பட்சிராஜன், நாயக்கர் பகுதி, பிள்ளையார் கோவில், தோணித்துறை, பால்குளம், தென்திருப் பேரை, குரங்கனி, ஏரல் இரட்டை திருப்பதி, மங்கள குறிச்சி, சேர்மன் அருணாசலசுவாமி கோவில், வாழவல்லான், உமரிக்காடு, சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழங்கரை, முக்காணி ஆற்றுப்பாலம் மேற்கு மற்றும் கிழக்கில் 2 இடங்கள், சேர்ந்த பூமங் கலத்தில் 2 இடங்கள் ஆக மொத்தம் 29 இடங்களில் உள்ள படித்துறைகளில் பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவையொட்டி 3 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில், 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 16 துணை போலீஸ் சூப்பிரண்டு கள் உள்பட சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 90 போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினரும், 27 படகுகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஸ்ரீயோகா ஞான தட்ணாமூர்த்தி கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
    குரு பகவான் நேற்று இரவு 10.05 மணி அளவில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ந்தார்.

    இதையொட்டி திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஸ்ரீயோகா ஞான தட்ணாமூர்த்தி கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    முன்னதாக கோவிலில் 8 மணிக்கு துர்கா ஹோமம், காளி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தட்சணாமூர்த்தி மூலமந்திரம் ஹோமம், ஸ்ரீயோகஞான தட்சணாமூர்த்தி அஸ்த்ர ஹோமம் நடந்தது.

    தொடர்ந்து தட்சணா மூர்த்திக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேகம் நடைபெற்றது. சரியாக இரவு 10.05 மணிக்கு குரு பெயர்ச்சி அடையும் நேரத்தில் மகா தீபாராதனை நடந்தது.

    இதில், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் பரிகார மகா யாகத்தில் கலந்து கொண்டனர். இதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார ஹோமங்கள் நடத்தப்பட்டது.
    சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகையாற்று கரையில் குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் வளாகத்தில் நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் கோடி புண்ணியம் வழங்கும் குருபகவான் ளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதே சன்னதியில் சக்கரத்தாழ்வாரும் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம்.

    இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான குருப் பெயர்ச்சி விழா கடந்த 2-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. நேற்று மாலை வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு ரெங்கநாத பட்டர், ஸ்ரீதர் பட்டர், சடகோப பட்டர் உள்பட உப அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க பரிகார யாகபூஜையை நடத்தினர். மேலும் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்து குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    குருவித்துறை கோவிலில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

    இதனைத்தொடர்ந்து இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியில் இருந்து வந்த குருபகவான் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மன்னாடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயதேவி, நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்ததையொட்டி வரதராஜ பண்டித் தலைமையில் குருபகவானுக்கு பரிகார யாகபூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபரும், பா.ஜ.க. நிர்வாகியுமான மணி முத்தையா, எம்.வி.எம். கலைவாணி பள்ளி தாளாளர் மருதுபாண்டி, நிர்வாகி வள்ளிமயில், கோவில் தக்கார் சுசிலாராணி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியாக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படும் குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி விழா கடந்த 1-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று இரவு 10.05 மணிக்கு குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அப்போது குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறினார். இதையொட்டி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி சந்தனகாப்பு அலங்காரத்தில் வெள்ளி அங்கியுடன் காட்சி அளித்தார்.

    முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைதொடர்ந்து உற்சவர், 6 கார்த்திகை பெண்கள், 4 முனிவர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். குருப்பெயர்ச்சியான நேரத்தில் மூலவர், உற்சவர் மற்றும் கோபுரம் ஆகியவற்றிக்கு ஒரே நேரத்தில் சிறப்பு மகா தீபாராதனைகள் நடந்தது.

    குருப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் நேற்று நீண்டவரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராம.வீரப்பச்செட்டியார் குடும்பத்தினர் செய்திருந்தனர். 
    குருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு.
    குருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு. அதிகாலையில் சான்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், குருவாக நம்மை வழிநடத்திச் செல் பவர்களிடம் நேரில் அல்லது தொலைபேசி வாயிலாக ஆசி பெறுவது நல்லது.

    நமது ஜாதகத்தில் குரு வரப்போகும் இடத்தைப் பொறுத்து, பெயர்ச்சிக்கு முன்னதாக அல்லது பெயர்ச்சியன்றோ எப்படி, எப்போது எங்கு குருவை வழிபடுவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா கிரகங்களையும் பெயர்ச்சிக்குப் பின்னால் தான் வழிபடுவர். ‘குரு’ சுப கிரகம் என்பதால் நாம் பெயர்ச்சி அன்று அல்லது அதற்கு முன்னால் நமது ஜாதகப்படி யோகபலம் பெற்றநாளில் சென்று வழிபட்டு வரவேண்டும் என்பர்.

    அவ்வாறு வழிபட்டால் நாளும் நல்லதே நடக்கும். எல்லா தெய்வங்களுக்கும் உதவியாளர்களைக் கொண்டு அர்ச்சனைகள் செய்யலாம். ஆனால் குருவிற்கு மட்டும் தாங்களே சென்று வழிபட்டால் தான் ‘குருபார்க்க கோடி நன்மை’ என்ற பழமொழிக்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடி வரத் தொடங்கும்.

    இல்லையேல் யார் வழிபடச் செல்கிறார்களோ அவர்களுக்குத் தான் பலன் கிடைக்கும். குரு சன்னிதியில் குரு கவசம் பாடினால் காரியங்களில் வெற்றி கிட்டும். சுண்டல், கடலை தானம் கொடுத்தால் அண்டிவந்த துயரங்கள் அகன்று ஓடும். குரு பகவானைக் கொண்டாடி வழிபட்டால் நன்மை செய்வார். 
    எந்தக் குருப்பெயர்ச்சிக்கும் இல்லாத பெருமை இந்தக் குருப் பெயர்ச்சிக்கு உண்டு. காரணம் இந்த முறை குரு பெயர்ச்சியாகும் நாள், குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமை.
    சுபஸ்ரீ விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18-ம் நாள் (4.10.2018) வியாழக்கிழமை இன்று இரவு 10 மணிக்கு விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் விருச்சிக ராசியில் குரு பகவான் சஞ்சரிக் கின்றார்.

    எந்தக் குருப்பெயர்ச்சிக்கும் இல்லாத பெருமை இந்தக் குருப் பெயர்ச்சிக்கு உண்டு. காரணம் இந்த முறை குரு பெயர்ச்சியாகும் நாள், குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமை. அதுமட்டுமல்லாமல் குருவிற்குரிய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் ஆகும். மேலும் விருத்தியம்சம் தருகின்ற ராசி விருச்சிக ராசி.

    3 யோகங்கள்

    விருச்சிக ராசிக்கு குரு பகவான் அடியெடுத்து வைத்து 9-ம் பார்வையாக சந்திரனை பார்த்து ‘குருச்சந்திர யோகம்’ உண்டாக்குகின்றார். குருப்பெயர்ச்சியாகும் நேரத்தில் உச்சம்பெற்ற செவ்வாய், சந்திரனைப் பார்த்து ‘சந்திர மங்கள யோகம்’ உருவாகின்றது. சுக்ரன் துலாம் ராசியில் சொந்த வீட்டில் சஞ்சரித்து புதனுடன் இணைந்து ‘புத-சுக்ர யோகம்’ தருகின்றார். இந்த 3 யோகங்களும் அமைந்த நேரத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்வதால் மக்கள் அனைவருக்கும் மகத்தான பலன் கிடைக்கப் போகின்றது. சிக்கல்கள் தீரும், செல்வநிலை உயரும். அக்கம் பக்கத்தில் உள்ளவர் களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிகம் தழைக்கும்.

    நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். அந்த குருவருள் இருந்தால் தான் நமக்கு திருவருள் கிடைக்கும். அப்படிப்பட்ட குருவின் பார்வையை பெறும் 3 ராசிகள் ரிஷபம், கடகம், மீனம் ஆகிய ராசிகளாகும். ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும் தன பஞ்சமாதிபதியாக விளங்கும் குரு பகவான் தன வரவை அதிகரிக்க வைக்கும் ராசியாக விருச்சிக ராசி விளங்குகின்றது. எனவே மேற்கண்ட 4 ராசிக் காரர்களுக்கும் தொட்டது துலங்கும், தொகை வரவு உயரும். பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும்பெருகி இயல்பான வளம் கிடைக்கும்.

    மற்ற ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே குரு பீடங்களுக்குச் சென்று மஞ்சள் வண்ண வஸ்திரமும், முல்லைப்பூ மாலையும் அணிவித்து, வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் எல்லையில்லாத நற்பலன்கள் இல்லம் தேடிவரும்.

    விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இடையில் வக்ரமும் பெறுகின்றார். தனுசு ராசிக்கு அதிசாரமாகவும் செல்கின்றார். 13.3.2019 முதல் 18.5.2019 வரை தனுசு ராசிக்கு மூல நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ் சரிக்கும் பொழுது, அதன் பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம், ஆகிய 3 ராசிகளும் புனிதமடைகின்றன. எனவே அந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.

    குருப்பெயர்ச்சிக் காலத்தில் ராகு-கேதுக்களும் பெயர்ச்சியாகின்றன. 13.2.2019 அன்று கடக ராசியில் சஞ்சரிக்கும் ராகு மிதுன ராசிக்குச் செல்கின்றார். மகர ராசியில் சஞ்சரிக்கும் கேது தனுசு ராசிக்குச் செல்கின்றார். இந்தப் பின்னோக்கிச் செல்லும் கிரகங்கள் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வழிவகுக்கும்.

    இருப்பினும் ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் யோகபலம் பெற்ற நாளில் நாகசாந்திப் பரிகாரங்களை, தங்கள் சுயஜாதக அடிப்படையில் அனுகூலமான ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்தால் தனவரவில் இருக்கும் தடைகள் அகலும். எந்த நாளும் இனிய நாளாக அமையும்.

    குருவின் வக்ர இயக்கம், அதிசார இயக்கம், ராகு-கேது பெயர்ச்சி, சுழலும் மற்ற கிரகங்களின் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    மேஷத்திற்கு அஷ்டமத்து குருவாகவும், மிதுனத்திற்கு ரோக ஸ்தான குருவாகவும், சிம்மத்திற்கு அர்த்தாஷ்டம குருவாகவும், தனுசுக்கு விரய குருவாகவும், கும்பத்திற்கு 10-ம் இடத்து குருவாகவும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள், தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடக்கும் திசாபுத்தி பலம் பார்த்து, பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகத்தின் பலமறிந்து, அதற்கு பொருத்தமான ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் வளர்ச்சியின் உச்சத்துக்குச் செல்லலாம். திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி, பணவரவு போன்ற அனைத்தையும் வரவழைத்துக்கொள்ள இயலும்.

    தங்கம், வீடு, மனைகள் விலை உயரும்

    குருப்பெயர்ச்சிக் கால கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தங்கத்தின் விலை நினைக்க இயலாத அளவு உயரப்போகின்றது. அதே நேரம் வெள்ளியின் விலை குறையும்.

    ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூமி விற்பனை செய்பவர்களுக்கு இது பொன்னான நேரமாகும். உச்சம் பெற்று செவ்வாய் விளங்குவதால் பூமியின் விலை பலமடங்கு உயரப்போகின்றது. கட்டிட உபயோகப் பொருட்கள் கிடைப்பது அரிதாகி பல கட்டிடங்களின் பணிகள் பாதியிலேயே நிற்கலாம்.

    அரசியல் களம்

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் இப்போது அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார்கள். இனி மேலும் சில திரைப்படக் கலைஞர்கள் புதிது புதிதாக அரசியலில் நுழைவார்கள்.

    ஆயினும் அவர்கள் தனித்து இயங்கி வெற்றிபெறுவது அரிது. ஏதேனும் ஒரு அரசியல் அமைப்போடு இணைந்து செயல்பட்டால் வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.

    சனிபகவான் ‘வில்’ சின்னம் பெற்ற தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் அரசியல் களம் மிக மிகச் சூடுபிடிக்கும். தலைவர்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உருவாகி கட்சிகள் உடையலாம், ஓட்டுகள் பிரியலாம்.

    அரசு அதிகாரிகளுக்கு திடீர், திடீரெனச் சிக்கல்கள் உருவாகும். அவர்களுக்கு இது சோதனைக்காலம் என்ப தால் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது.

    மழை-வெள்ளம்

    செவ்வாயோடு கேதுவும், சந்திரனோடு ராகுவும் இணைந்திருப்பதால் இயற்கை சீற்றங்கள், நில நடுக்கங்கள், மழை வெள்ளங்களால் தத்தளிப்பு போன்றவை அதிகரிக்கலாம்.

    பெட்ரோல், டீசல் விலை உயரும்

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்களின் விலையும் உயர்ந்து கொண்டே போகலாம். இருப்பினும் வாங்கும் திறன் மக்களுக்கு அதிகரிக்கும்.

    பொதுவாக விருச்சிக குருவின் காலத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பலமடங்கு உயரும் வாய்ப்பு உண்டு.

    வழிபாட்டு தலங்கள்

    குரு பீடமாக விளங்கும் திருச்செந்தூர், திருவாரூர் மடப்புரம் தட்சிணாமூர்த்தி, தஞ்சை மாவட்டம் ஆலங்குடி, திட்டை ராஜகுரு, பட்டமங்கலம் திசைமாறிய தட்சிணாமூர்த்தி, குருவித்துறை, திருவேங்கிவாசல், சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியிலுள்ள பாடுவார் முத்தப்பர் ஆலயம், அனைத்து சிவாலயங்களிலும் உள்ள அறுபத்து மூவர் வழிபாடு, சிங்கம்புணரி முத்துவடுகநாதன் சித்தர்ஆலயம், தக்கோலம், புளியரை, சென்னை திருவாலி தாயம், திருவெற்றியூர், திருவாடானை ஆகிய இடங் களில் இருந்து அருள்வழங்கும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

    உள்ளூரில் உள்ள சிவாலயத்தில் இருந்து அருள்வழங்கும் நவக்கிரகத்தில் உள்ள குருவையும், குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபடலாம். குருவருள் இருந்தால் உங்களுக்கு கூடுதல் வளர்ச்சி ஏற்படும். வரலாற்றிலும் இடம்பெற்று வாகை சூடி மகிழலாம்.

    நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். குருப்பெயர்ச்சியான இன்று குரு கவசம் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம்.
    ‘வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே’ என்ற குரு கவசப்பாடலை அவர் சன்னிதியில் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம்.

    குருவே நீபார்த்தால் போதும்

    கோடியாய் நன்மை சேரும்!

    திருவருள் இணைந்தால் நாளும்

    திருமணம் வந்து கூடும்!

    பொருள்வளம் பெருகும் நாளும்

    பொன்னான வாழ்வும் சேரும்!

    அருள்தர வேண்டி உன்னை

    அன்போடு துதிக் கின்றோமே!

    என்று குரு கவசம் எடுத்துரைக்கின்றது.

    மாலை கிடைக்க வேண்டுமானாலும், மழலை பிறக்க வேண்டுமானாலும் குரு பகவான் தான் பச்சைக்கொடி காட்ட வேண்டும்.
    குரு பார்க்க கோடி நன்மை... என்பது ஆன்மிக சொற்களாகும். இன்று குரு பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி, உத்தமர் கோவிலில் சிறப்பு பரிகார ஹோமங்கள் நடைபெற்றன.
    குரு பார்க்க கோடி நன்மை... என்பது ஆன்மிக சொற்களாகும். இத்தகைய சிறப்புக்குரிய குருபகவான் இன்று இரவு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் பிரவேசிக்க இருக்கிறார். இதில் குரு பார்வையால் கடகம், ரிஷபம், துலாம், மீனம் ராசிக்காரர்கள் நன்மை அடைவார்கள் என்றும் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் பரிகார பூஜைகள் செய்து கொள்ள வேண்டும் என்றும் ஐதீகமாக நம்பப்படுகிறது.

    திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் குருபெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதர் சாமி கோவிலிலும் குரு பெயர்ச்சியையொட்டி தெட்சிணா மூர்த்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது.

    உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 8 மணிக்கு குரு பெயர்ச்சியையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பு யாகம் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு தெட்சிணாமூர்த்தி சன்னதியில் மகா தீபாராதனை நடக்கிறது.

    இதேபோல் நெ.1 டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் குருபரிகார தலமாக விளங்கும் உத்தமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி நேற்று சிறப்பு பரிகார ஹோமங்கள் நடைபெற்றது. இதை முன்னிட்டு மாலை 6 மணிக்கு பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்கள் கோவில் வெளி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பூ பந்தலில் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியாக எழுந்தருளினர். பிரம்மா சன்னதியில் புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், கும்ப பூஜை, பிரம்மா மூல மந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து தட்சிணாமூர்த்தி சன்னதியில் புண்யாகவாசனம், பஞ்சகவ்யம் பூஜை, பஞ்சாசன பஞ்சவர்ண வேதிகா அர்ச்சனை நடைபெற்று, மகா கணபதி ஹோமம் நடைபெற்றது.

    இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நெல், பொரி, நாட்டுசர்க்கரை, கல்கண்டு, பேரிச்சம்பழம், திராட்சை, முந்திரி, தேன், நெய் உள்ளிட்ட அஷ்ட திரவியங்கள், கோதுமை, நெல், துவரை, பச்சைபயிறு, எள்ளு உள்ளிட்ட நவதானியங்கள் மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, மாசிக்கா, மாசிபச்சை உள்ளிட்ட 96 வகையான மூலிகை பொருட்களை கொண்டு குரு பிரீதி, நவக் கிரக, வஸ்வதாரா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

    இதனைதொடர்ந்து இரவு 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு அபிஷேகம், விசேஷ பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார ராசிக்காரர்கள் தங்கள் ராசிகளுக்கு பரிகாரம் செய்து தெய்வங்களை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி உத்தரவின்பேரில் கோவில் செயல் அலுவலர் பெ.ஜெய்கிஷன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு 10.05 மணிக்கு குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிப்பதை முன்னிட்டு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. 
    ×