search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒசமணி"

    பெண்கள் உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கபடி பயிற்சியாளர் ஒசமணி தற்கொலை செய்து கொண்டார். #SAIKabaddiCoach #Suicide #MolestingGirl
    பெங்களூரு:

    பெங்களூரு ஞானபாரதியில் இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) செயல்பட்டு வருகிறது. இங்கு கபடி பயிற்சியாளராக ருத்ரப்பா வி.ஒசமணி (வயது 59) பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி பெண்கள் உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்த அவர், அங்கு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். மேலும், இந்திய விளையாட்டு ஆணையத்திலும் சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து ருத்ரப்பா வி.ஒசமணி மீதான புகாரை விசாரிக்க இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டது. தனிக்குழு நடத்திய விசாரணையின் முடிவில் ருத்ரப்பா வி.ஒசமணி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், ஞானபாரதி போலீசில், ருத்ரப்பா வி.ஒசமணி மீது புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது ‘போக்சோ‘ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே, பயிற்சியாளரான ருத்ரப்பா வி.ஒசமணி தாவணகெரே மாவட்டம் ஹரிஹராவுக்கு கடந்த 14-ந் தேதி சென்றார். அங்குள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து அவர் தங்கினார். அதன்பிறகு, அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் நேற்று முன்தினம் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. கதவை தட்டியபோதும் அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஹரிஹரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் அவர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஹரிஹரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், அவர் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், ‘எனக்கு மனவருத்தம் ஏற்பட்டதாலும், உதவ யாரும் முன்வராததாலும் இந்த முடிவை தேடிக்கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். மகனே ராகேஷ், நீ உன் அம்மா தேவிகாவை நன்றாக பார்த்து கொள். எனது உடலை தானம் செய்து விடுங்கள். உயிர் விடுவதற்கு முன்பு உங்களை பார்க்க விரும்பினேன். என்னிடம் புகைப்படம் இல்லாததால் உங்களை என்னால் பார்க்க முடியவில்லை’ என்று அவர் உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார்.  #SAIKabaddiCoach #Suicide #MolestingGirl 
    ×