search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SterliteProtest #CBI
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல மனுக்கள் தொடரப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 
    தூத்துக்குடியில் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் விதிமுறைகளை மீறி காற்றாலைகள் அமைக்க ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது. #WindPower #MadrasHC
    மதுரை:

    தூத்துக்குடி பராக்கிரமபாண்டியன் பகுதியில் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் தனியார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி காற்றாலை அமைப்பதாக அருமைராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, காற்றாலை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் டெல்லி பசுமைத்தீர்ப்பாயத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. #Sterlite #ThoothukudiShooting
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 


    ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில், அங்கு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. #Rajinikanth #Thoothukudi
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதன்முறையாக நேரடியாக மக்களை சந்திக்கும் ஒரு முயற்சியாக இன்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் ரஜினிகாந்திடம், “யார் நீங்கள்?” என்று கேட்டார்.

    அதற்கு சிரித்துக்கொண்டே, “நான் ரஜினி” என அவர் பதிலளிக்க, “எங்கிருந்து வந்தீங்க?” என அந்த இளைஞர் கேட்க, “சென்னையிலிருந்து” என ரஜினி கூறினார். “சென்னையிலிருந்து இங்கே வர 100 நாட்கள் ஆச்சா” என அந்த இளைஞர் கேள்வி எழுப்ப ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார். 



    100 நாட்களுக்கும் மேலாக ஸ்டெர்லைட் போராட்டம் நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தற்போது அங்கு சென்றுள்ளதை மையமாக வைத்து பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
    அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதன்முதலாக பொது களத்தில் இறங்கும் விதமாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதுக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்ல உள்ளார். #Rajinikanth #Thoothukudi
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்தாண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கட்சியை இன்னும் தொடங்கவில்லை என்றாலும் அதற்கான ஆரம்ப கட்ட பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற நாளை ரஜினிகாந்த் தூத்துக்குடி செல்ல உள்ளார். காலை விமானத்தில் அங்கு செல்லும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
    தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். #SterliteShut #EdappadiPalanisamy
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி கலெக்டர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டர். இதற்கிடையே, சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது:-

    மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பசுமை தீர்பாயம் வெளியிட்ட விதிமுறைகளை ஸ்டெர்லைட் நிறுவனம் பின்பற்றவில்லை. இதனை அடுத்து, அனுமதியை புதுப்பிக்க அந்நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.

    ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடியில் முழு அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; போராட்டத்தின்போது காயமடைந்தவர்களுக்கு  உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    13 பேர் பலியான தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது கடந்த 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் தெரிவிக்கப்படாமலேயே இருந்தது.

    முதல்வர் மற்றும் துணை முதல்வர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், 2 துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரின் பெயர்கள் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன. வன்முறை ஏற்பட்ட நிலையில், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்துள்ளவர்கள் தூத்துக்குடி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை போலீஸ் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் பார்வையிட்டார். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.  பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) டி.கே ராஜேந்திரன் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.

    காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்த அவர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்க கூடியது. அமைதியை நிலைநாட்ட மக்கள், வணிகர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

    மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். நிலைமை சீராக சீராக போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

    இதனை அடுத்து, நான்கு மண்டல டிஐஜி, மாவட்ட எஸ்.பி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். போலீசாரை படிப்படியாக குறைப்பது, நள்ளிரவு முதல் இணையசேவையை மீண்டும் வழங்குவது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையில், தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சினிமா இயக்குனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பொது மக்களின் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதற்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.



    இதில் இயக்குனர்கள் பா.இரஞ்சித், பாலாஜி சக்திவேல், ராஜீவ் முருகன், சீனுராமசாமி, சசி, ராம், நவீன் குமாரசாமி, எஸ்.பி.ஜனநாதன், பாண்டிராஜ், நவீன், கமல் கண்ணன் ஆகியோரும், நடிகர் அரவிந்த் ஆகாஷ், பாடலாசிரியர் உமாதேவி, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் துப்பாக்கி சூட்டை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதல்வரை சந்திக்க முடியவில்லை என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், பரபரப்புக்காக ஸ்டாலின் அப்படி கூறுகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    11 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் நடப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதன் பெயரில் நான் கலந்து கொண்டேன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உறுப்பினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திடீரென எழுந்து சென்றுவிட்டார். 

    சிறிது நேரத்திற்கு, பின்னர் முதல்வரை சந்திக்க முடியவில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், கூட்டத்தில் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பேசியுள்ளார். 2013-ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலை மீது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால், அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்து. சில நிபந்தனைகளுடன் அந்நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஆலையின் பணியை நிறுத்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.

    ஆனால், எதிர்க்கட்சிகள் அப்பாவி மக்களை தூண்டி விட்டு இத்தகைய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடந்தது விரும்பத்தகாத சம்பவம்.

    அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில பேர் செயல்பட்டு கலவரத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை பலியாக்கிவிட்டனர்.
    வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

    இவ்வாறு முதல்வர் கூறினார்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட ஸ்டாலின், கமல், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், பாலகிருஷ்னன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13-பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசன், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், பாலகிருஷ்னன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.



    இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அங்கு சென்றதால் அவர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நேற்று முன் தினம் 100-வது நாளை எட்டியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அங்குள்ள வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    மோதல் கலவரமாக மாறிய சூழலில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 10 பேர் பலியாகினர். நேற்று, அண்ணாநகர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு இளைஞர் பலியாகினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பை மின்சார வாரியம் துண்டித்துள்ளது. இன்று காலை 5.30 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×