search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 164241"

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, கோலி நிதானமாக விளையாடி வருகிறார். #ENGvIND #EdgbastonTest #ViratKohli

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய பவுலர்கள் நேர்த்தியாக பந்து வீச இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஒட்டுமொத்தமாக இந்தியாவை விட 193 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

    இந்திய அணியின் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 194 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 6 ரன்களிலும், ஷிகர் தவான் 13 ரன்களிலும் பிராட் பந்தில் ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து களமிறங்கிய லோகேஷ் ராகுல் 13 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரஹானே 2 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார்.

    4-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் விராட் கோலி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். தற்போது வரை 26 ஓவருக்கு இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை எடுத்துள்ளது. கோலி 34 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    வெற்றிக்கு இன்னும் 111 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா போராடி வருகிறது. முதல் இன்னிங்கில் கோலி 149 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
    தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்குள் அதிக அகதிகள் வருவதாக மக்களவையில் மத்திய இணை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியது அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கியது. #MonsoonSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் அகதிகள் தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு பதிலளித்து பேசினார். தனது பேச்சில், “வங்கதேசம், மியான்மர், தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அகதிகள் வருகிறார்கள்” என்று கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

    தமிழகம் இந்தியாவில் இருக்கிறது, தமிழக்தில் இருந்து அகதிகள் இந்தியாவுக்குள் எப்படி நுழைய முடியும் என்று அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் எம்.பி.க்கள் கோஷமிட்டு, கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து, நான் இலங்கையில் இருந்து அகதிகள் என்று கூறுவதற்கு பதிலாக, தமிழ்நாடு என்று வாய்தவறி கூறிவிட்டேன் என்று ரிஜிஜு கூறினார். ஆனால், அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட்டு, உறுப்பினர்களை அமைதிப்படுத்தி, தவறுதலாக மந்திரி அவ்வாறு பேசிவிட்டார் அமைதியாக அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
    பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக உள்ள இம்ரான்கான், அப்போதைய குஜராத் முதல்வர் மோடி உடன் கை குலுக்கிய சம்பவத்தில் ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. #ImranKhan #PMModi

    பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தெஹரிக்-இ இன்சாப் கட்சி அதிகமான இடங்களில் வென்று கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. அந்த கட்சியின் தலைவரும் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான்கான் விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    தேர்தல் முடிவுகளுக்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான்கான், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

    புதிய பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் அமைதி முயற்சியைத் தொடர விரும்புவது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தான் ராணுவமும், புதிய அரசும் தீவிரவாதத்தை குறித்து எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை என்ற போதும், தெற்காசியாவை பயங்கரவாதம் மற்றும் வன்முறையற்ற பிரதேசமாக்க ஆக்கப்பூர்வமான வழிகளில் செயல்பட வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்தது.

    இம்ரான்கான் பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. இந்த வாழ்த்து இரு நாடுகளுக்கு இடையே தற்போது உடைந்து கிடக்கும் உறவை ஒட்ட வைக்கவும் வாய்ப்பு உள்ளது. 

    இந்நிலையில், இம்ரான்கான் - மோடி ஏற்கனவே சந்தித்து கை குலுக்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கை குலுக்கல் சம்பவத்தை விட அது நடந்த போது இருந்த சூழலே இங்கு முக்கியமானது.

    கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, இம்ரான்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார் என்பதை அறியாத இம்ரான்கான் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். 

    திடீர் அதிர்ச்சியாக இம்ரான்கானுக்கு வலது பக்கத்தில் மோடி வந்து அமர்ந்துள்ளார். அதன் பிறகே இருவருக்கும் ஒரே நேரம் ஒதுக்கப்பட்டுள்ள செய்தி இம்ரான்கானுக்கு தெரிந்துள்ளது. குஜராத் கலவரம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என மோடி மீது ஒரு அடையாளம் படிந்திருந்தது. 

    இதனால், மோடியுடன் தான் இருப்பது போன்ற புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானால் தனது நாட்டில் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும் என நினைத்த இம்ரான்கான் மோடியை கண்டும் காணதது போல இருந்துள்ளார். மோடியும் அவ்வாறே இருக்க ஏதோ ஒரு புள்ளியில் இருவரது பார்வையும் மோதின.

    அப்போது, உடனே மோடி இம்ரான்கானின் கையை தனது கைகளால் எடுத்து கை குலுக்கியுள்ளார். இதனை சிறிதும் எதிர்பாராத இம்ரான்கான் வாயடைத்து போயுள்ளார். எனினும் ஒரு இறுக்கமான சூழல் விலகியதால், இருவரும் பரஸ்பர வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    மேற்கண்ட தகவல்களும், மோடிக்கு கை கொடுக்கும் போது ஒருவித குமட்டலான மனநிலையை இம்ரான்கான் கொண்டிருந்ததாகவும் இம்ரான்கானின் சுயசரிதை புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘இம்ரான் v இம்ரான்’ என்ற புத்தகம் ப்ராங் ஹஸுர் என்பவரால் எழுதப்பட்டதாகும்.


    2014-ம் ஆண்டு சந்திப்பு

    2014-ம் ஆண்டில் இந்திய பிரதமராக மோடி பதவியேற்றார். அப்போது, பாகிஸ்தானின் முக்கிய கட்சியாக இம்ரான்கானின் கட்சி அவதாரம் எடுத்தது. நவம்பர் மாதம் இந்தியா வந்திருந்த இம்ரான்கான் மோடியை சந்தித்து பேசினார். முக்கியமாக மோடியிடம் கை குலுக்கினார். அப்போது இம்ரான்கானின் மனநிலை என்ன? என்பது அவருக்கே தெரிந்த ஒன்று.

    2006-ம் ஆண்டில் மோடி உடனான கை குலுக்கல் இம்ரான்கானுக்கு ஒரு விதமான மனநிலையை தந்திருந்தாலும், இப்போது அவர் பிரதமரான பின்னர் ஒருவேளை இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் போது கை குலுக்கினால் என்ன மனநிலையில் இருப்பார்? என்பது இம்ரான்கானுக்கே வெளிச்சம்.
    ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபர் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹிராநகர் சர்வதேச எல்லை பகுதியில் உள்ள போபியா அருகே இன்று காலை பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருநபர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்துள்ளார். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதையும் மீறி அவர் முன்னேறி வந்ததை அடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த நபரை சுட்டு வீழ்த்தினர். 
    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் செயலாளராக பணியாற்றிய ஆஸ்டின் பெர்னாண்டோ இந்தியாவுக்கான புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். #India #Srilanka
    கொழும்பு:

    இந்தியாவுக்கான இலங்கை தூதராக தற்போது சித்ராங்கனே வாகிஸ்வரா பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், புதிய தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோவை நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். எனினும், உயர் பதவி நியமனங்களுக்கான பாராளுமன்ற கமிட்டி ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் அவர் பொறுப்பேற்பார்.

    மைத்ரிபால சிறீசேனாவிடம் செயலாளராக பணியாற்றிய ஆஸ்டின் பெர்னாண்டோ சமீபத்தில் தனது பதவியை ராஜீனாமா செய்திருந்தார். மேலும், அதிபரின் ஆலோசகராகவும் கிழக்கு மாணத்தின் கவர்னராகவும் ஆஸ்டின் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஈரான் உடனான உறவை துண்டிக்க அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளியுறவு இணை மந்திரி பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். #MansoonSession #VKSingh
    புதுடெல்லி:

    ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், ஈரானிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. 

    நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிடில் பல விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என அமெரிக்கா கூறியிருந்தது.

    சவூதி, ஈராக் நாட்டுக்கு அடுத்தபடியாக இந்தியா ஈரானிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அமெரிகாவின் எச்சரிக்கை இந்தியா, சீனா என பல நாடுகளுக்கும் பொருந்தும் நிலையில், இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.



    இந்நிலையில், இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விளக்கமளித்த மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:-

    ஈரானுடனான உறவை, சுதந்திரமாக இந்தியா முடிவு செய்யும். இதில் 3ஆவது நாட்டின் தலையீட்டுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் நமது நாட்டின் நலன்களைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் நேரிடும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. 

    என அவர் பேசினார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழு, இந்தியாவுக்கு சமீபத்தில் வந்து, டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 
    இந்தியா - இங்கிலாந்து மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனியின் ஆட்டம் விமர்சிக்கப்பட்ட நிலையில், கேப்டன் கோலி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். #ENGvIND #MSDhoni #Kohli

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 116 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்தார். இதனால், 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. 

    கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் சொதப்ப,
    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ஓரளவு தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த சுரேஷ் ரெய்னா 45 ரன்களில் அவுட்டாகினார். 

    பெரிதும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தோனி 59 பந்துகளுக்கு 37 ரன்னில் வெளியேற இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.
    அடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

    ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 12-வது வீரர் என்ற தனிப்பட்ட சாதனையை தோனி நேற்று பெற்றிருந்தாலும், அவரது நேற்றைய ஆட்டம் ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது. இதனால், சமூக வலைதளங்களில் பலரும் அவரை விமர்சனம் செய்தனர்.

    இதற்கிடையே, தோனி மீதான விமர்சனத்துக்கு கோலி பதிலடி கொடுத்துள்ளார். “தோனி மீதான விமர்சனம் அணியினரை பாதிக்கவில்லை. அவர் களத்தில் நினைப்பதை செய்து முடிப்பதில் தோல்வி அடைந்தால், மீண்டும் மீண்டும் அவர் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒரு போட்டியை வைத்து ஒருவரின் செயல்திறனை முடிவு செய்வது பலரது மோசமான செயலாக உள்ளது. அவர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என கோலி தெரிவித்துள்ளார். 
    இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பான்யா, தன்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா (வயது 24). இங்கிலாந்திற்கு எதிரான 3வது மற்றும் இறுதி சர்வதேச டி20 போட்டியில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று 2-1 என்ற புள்ளி கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.  நேற்று நடந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பாண்ட்யா சிறப்புடன் செயல்பட்டார்.

    அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டி20 போட்டிகளை வேடிக்கையான ஒன்றாகவே நான் காண்கிறேன்.  பந்து வீச்சில் யார்கர்களுக்கு பதிலாக வேறுபட்ட வகையில் பந்து வீசுவதிலேயே நான் கவனம் செலுத்தினேன்.

    நான் ஒவ்வொரு போட்டியிலும் எனது தவறுகளில் இருந்து கற்று கொள்கிறேன் என்பதனை உறுதி செய்து கொள்கிறேன். அது எனக்கு உதவிடுகிறது என கூறியுள்ளார்.

    எனது பந்து வீச்சில் முதல் ஓவரில் 22 ரன்கள் எடுக்கப்பட்ட தருணத்தினை நான் நினைவில் கொள்கிறேன்.  நான் இயல்புடனேயே இருந்தேன்.  நீங்கள் சரியான தொலைவில் பந்து வீசினால் விக்கெட்டுகளை கைப்பற்றி, மிக பெரிய அளவில் ரன்கள் விட்டு கொடுப்பதனை நிறுத்திடலாம் என அவர் கூறியுள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்க உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகிய இருவருக்கும் இது முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. #ENGvIND

    இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நாளை முதல் டி20 போட்டி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியது.

    அப்போது, தோல்விக்கு கூறப்பட்ட முக்கிய காரணம் விரிஸ்ட் ஸ்பின்னர்கள் (மணிக்கட்டை சுழற்றி பந்து போடும் சுழற்பந்து வீச்சாளர்கள்) இல்லை என்பதே. அப்போது, அணியில் இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது பார்மில் இல்லாததால் ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை.

    அவர்களுக்கு பதிலாக சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் உள்ளனர். இவர்கள் இருவரையும்தான் கோலி மலைபோல நம்பியுள்ளார். இடைநிலை ஓவர்களில் நிச்சயமாக சுழற்பந்து வீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியும் என விராட் கோலி இங்கிலாந்து டூருக்கு கிளம்பும் முன்னர் கூறியிருந்தார். 

    இருந்தாலும், இங்கிலாந்து அணி தற்போதுதான் ஆஸ்திரேலியாவை 6-0 என்ற கணக்கில் அடித்து துவைத்தது. அதிலும், 481 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனையும் படைத்தது. இந்த வெற்றி இந்திய அணியை சற்றே கலங்க வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதனால், எந்த இடத்திலும் சறுக்கிவிடக்கூடாது என்பதில் கோலி திட்டவட்டமாக உள்ளார். இந்த தொடர் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக இருக்கும். தட்ப வெப்ப நிலை, ஆடுகளத்தின் தண்மை என அனைத்தையும் வீரர்கள் புரிந்து கொள்ளலாம்.

    இந்தாண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் குல்தீப் யாதவ் 17 விக்கெட்டுகளையும், சாஹல் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தனர்.

    கடந்தாண்டு இந்திய அணியில் அறிமுகமான குல்தீப் யாதவ் விளையாடிய 20 ஒருநாள் போட்டியில் 15 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல, சாஹல் விளையாடிய 23 போட்டிகளில் இந்தியா 19 போட்டிகளில் வென்றுள்ளது. 

    இங்கிலாந்து அணியில் உள்ள பட்லர், ஜேசன் ராய், பைர்ஸ்டோ ஆகிய அதிரடி வீரர்களை குல்தீய், சாஹல் இணை வீழ்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது. 
    பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் உருவாகிக் கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். #NikkiHaley
    புதுடெல்லி :

    ஐ.நா.விற்கான அமெரிக்க தூதரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான நேற்று நிக்கி இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டருடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றி பார்த்தார்.

    இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசினார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் உருவாகிக்கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதை பாகிஸ்தான் அரசிடமும் தொடர்புகொண்டு தெரிவித்துவிட்டோம் .

    இந்தியா மற்றும் அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இனி வரும் காலங்களில் இதைவிட சிறப்பான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து ஈடுபட முடியும்.

    மத சுதந்திரம் ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆகவே, இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் சகிப்புத்தன்மையை பின்பற்றுவதால் மட்டுமே ஒற்றுமையாக இருக்க முடியும்.

    பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்கரி-லா பேச்சுவார்த்தையில் உரையாற்றும் போது, இந்திய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான சரக்கு போக்குவரத்து மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என் தெரிவித்திருந்தார். இந்திய பசுபிக் பிராந்திய பாதுகாப்பில் மோடியின் பார்வையையே டிரம்ப்பும் கொண்டுள்ளார் என அவர் தெரிவித்தார். #NikkiHaley
    மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவுகளில் இந்தியா உள்பட 26 நாடுகள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட போர் பயிற்சி இன்று தொடங்க உள்ளது.
    ஹவாய்:

    மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவு அமெரிக்காவின் ஒரு மாநிலமாக செயல்பட்டு வருகிறது. இந்த தீவில் உள்ள பியர்ல் துறைமுகம் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 26 நாடுகள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கடற்படை போர் பயிற்சி இங்கு இன்று தொடங்க உள்ளது.

    இதற்காக, இந்திய கடற்படையில் உள்ள நவீன போர் கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி கேப்டன் சாந்தனு ஜா தலைமையில் பியர்ல் துறைமுகத்திற்கு நேற்று சென்றடைந்தது. கடல் பாதுகாப்பில் உள்ள அம்சங்களை புரிந்து கொள்ள இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    செஷல்ஸ் தீவில் இந்திய கடற்படை தளம் அமைக்க அந்நாட்டு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்ட நிலையில், அதனை நிறைவேற்ற பணியாற்றுவோம் என மோடி - டேனி பயூரே இணைந்து தெரிவித்துள்ளனர். #Seychelles #India #AssumptionIsland
    புதுடெல்லி:

    இந்திய பெருங்கடலில் இருக்கும் நாடான செஷல்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள அஸ்சம்ப்சன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைக்க கடந்த ஜனவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கடற்படை தளம் அமைந்தால் இந்திய பெருங்கடல் பிராந்தியம் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் சீனாவின் கை ஓங்காது என இந்தியா கணக்கிட்டது.

    ஆனால், இந்த திட்டத்தால் தமது நாட்டு பகுதியை இன்னொரு நாட்டுக்கு தாரை வார்த்தது போல ஆகிவிடும் என குற்றம் சாட்டிய செஷல்ஸ் எதிர்க்கட்சிகள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இதனால், இந்த திட்டத்திற்கான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை.



    இந்த சூழ்நிலையில், 5 நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் அதிபர் டேனி பயூரே இந்தியா வந்துள்ளார். இன்று டெல்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அஸ்சம்ப்சன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    சந்திப்பின் முடிவில் இருநாடுகளுக்கு இடையே சில துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. செஷல்ஸ் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா 100 மில்லியம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

    இதனை அடுத்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த போது, இரு நாடுகளின் உரிமைகளின் அடிப்படையில் அஸ்சம்ப்சன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைப்பதில் இணைந்து பணியாற்ற உறுதியுடன் இருப்பதாக கூறினர். 
    ×