search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக்கல்வித்துறை"

    • வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ந்தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
    • இந்த எண்ணிக்கையை மே இரண்டாவது வாரத்துக்குள் 4 லட்சமாக உயா்த்தத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள், உயா்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000 ஊக்கத்தொகை, இந்த ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கான ஊக்கத்தொகை திட்டம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ந்தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தீவிர முயற்சிகள் காரணமாக அரசு பள்ளிகளில் புதிய மாணவா் சோ்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 940 மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கையை மே இரண்டாவது வாரத்துக்குள் 4 லட்சமாக உயா்த்தத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

    • அனைத்து பள்ளிகளும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும்.
    • மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது.

    சென்னை:

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆண்டு இறுதித் தேர்வும் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மற்ற மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுவிட்டது.

    இந்த நிலையில் கோடைகால விடுமுறை நாட்களில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கல்வித் துறைக்கு புகார்கள் வந்திருக்கின்றன.

    இந்த புகாரைத் தொடர்ந்து கல்வித்துறை, அனைத்து பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று சுற்றறிக்கையை அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், அது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் பெறப்பட்டு இருக்கிறது.

    இந்த புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். அந்த நாட்களில் மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது.

    இந்த உத்தரவை கண்டிப்பாக பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனியாா் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு வருகிற 22-ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
    • 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி, தகுதியான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரத்தை, தனியாா் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தனியாா் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு வருகிற 22-ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

    விண்ணப்பதாரா்கள் rte.tnschools.gov.in என்ற இணையதள வழியாகவோ, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த வட்டார வளமைய அலுவலகங்களிலோ கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

    25 சதவீத இடஒதுக்கீட்டின்படி, தகுதியான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரத்தை, தனியாா் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்.
    • பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.

    சென்னை:

    பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில்,

    * பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.

    * 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்.

    * ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் சரி பார்க்க வேண்டும்.

    * வாகன ஓட்டுநர், உதவியாளர் மது அருந்தியுள்ளார்களா என்பதை தினமும் பரிசோதிக்க வேண்டும்.

    * போக்சோ சட்ட விதிகள் பற்றி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும்.

    * பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    * பள்ளி வாகனங்களில் ஓட்டுநர், உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233 பேர் சேர்ந்து முதலிடத்தில் உள்ளது.
    • 23-ந் தேதி ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி முடிக்க கல்வித்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    2024-2025-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1-ந்தேதி பள்ளி கல்வித்துறை தொடங்கியது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5.5 லட்சம் மாணவ-மாணவிகளை சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அங்கன்வாடி மையங்களில் 5 வயது உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    வருகிற 12-ந் தேதிக்கு முன் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து பணிபுரிய வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

    மாணவர்கள் சேர்க்கை விவரங்களை உடனுக்குடன் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (எமிஸ்) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் நேற்று வரை நடந்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233 பேர் சேர்ந்து முதலிடத்தில் உள்ளது. கள்ளக்குறிச்சி 16,938 பேரும், கிருஷ்ணகிரியில் 13,205 பேரும் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர். 23-ந் தேதி ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி முடிக்க கல்வித்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் எம்.பழனிசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    இதற்கு வருகிற 23-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மே 22-ந் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22-ந்தேதி முதல் மே 22-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    • அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், 4 முதல் 9 வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை, அனைத்து பள்ளிகளுக்குமாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 26-4-2024 அன்று இந்த கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுவதால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 2-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடத்தப்படும். 13-ந்தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளன.

    மேலும் ஏப்ரல் 23-ந் தேதி முதல் 26-ந்தேதி வரையில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 26-4-2024 அன்று இந்த கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வித்துறை இயக்குனர்கள் அறிவொளி மற்றும் கண்ணப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.
    • விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும், மதிப்பெண்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றும் பணிகள் தொடங்கி நடைபெறும்.

    சென்னை:

    பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு 22-ந்தேதியுடனும், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 25-ந்தேதியுடனும் தேர்வு நிறைவு பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

    இந்த நிலையில் பொதுத் தேர்வு நிறைவு பெற்றதும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும். அந்த வகையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்ற தகவலை பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி, பிளஸ்-2 வகுப்புக்கு அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரையிலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி ஆரம்பித்து 22-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும், மதிப்பெண்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றும் பணிகள் தொடங்கி நடைபெறும். ஏற்கனவே பொதுத் தேர்வு அட்டவணை வெளியிட்ட நேரத்தில், பிளஸ்-2 வகுப்புக்கு மே மாதம் 6-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு மே 10-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு மே 14-ந்தேதியும் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மற்றும் மதுரையில் அரசு பள்ளிகளில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள்.
    • சென்னையை பொருத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர் சேர்க்கை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 1-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்மூலம் கடந்த 1-ந்தேதி முதல் அரசு பள்ளிகளில் 2024-2025-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக பள்ளிகளை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை மையமாக வைத்து இந்த பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது.

    இதன்மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் மட்டும் 3.31 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். சேலம் மற்றும் மதுரையில் அரசு பள்ளிகளில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 19,242 மாணவர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

    இதையடுத்து மதுரையில் 18,127 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். திண்டுக்கல்லில் 17,036 மாணவர்களும், திருவள்ளூரில் 15,207 மாணவர்களும், திருவண்ணாமலையில் 13,679 மாணவர்களும், திருப்பூரில் 13,204 மாணவர்களும் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர்.

    சென்னையை பொருத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். சென்னை மாதவரத்தில் 1,568 மாணவர்களும், சிந்தாதிரிப்பேட்டையில் 1,058 மாணவர்களும், ஆலந்தூரில் 1,220 மாணவர்களும், ராயபுரத்தில் 1,298 மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    • அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
    • அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ந்தேதி முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

    5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர்கள் அறிவொளி மற்றும் கண்ணப்பன் ஆகியோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி அதில் உள்ளூர் பிரமுகர்களை பங்கு பெறச்செய்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

    மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமைகள் குறித்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும்.

    அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது உடையவர்களை கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

    வீடு தோறும் நேரடியாக சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5 வயது உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வருகிற கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஷிவ் நாடார் பவுண்டேஷன் இணைந்து, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.

    தொடர்ந்து, மணற்கேணி இணையம் இனி கணினியிலும் காணும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஷிவ் நாடார் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு 6ம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    மணற்கேணி செயலியார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 2 லட்சம் அளவில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    அதேபோல், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை ஒரு கான்செப்ட் எப்படி வந்துள்ளது என்பது போல் அந்த வீடியோக்கள் இருக்கும். தனியார் பள்ளி கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வியை கொண்டு சேர்த்தார்கள். அதை அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது கொண்டு சேர்த்து வருகிறது.

    வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒன்றரை லட்சம் கோடி தி.மு.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற வரலாற்றிலேயே இந்த ஆண்டு தான் 44 ஆயிரம் கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளில் பந்தல் அமைப்பது, குடிநீர் வைப்பது உள்ளிட்ட கோடைகால தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் செய்வது போல் இந்த ஆண்டும் தயாராக உள்ளது.

    ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வில் ஒவ்வொரு முறையும், செய்வது போல் இந்த ஆண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், நிதி நிலைமை சீர் அடையும் போது அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2023-24-ம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையிலான இடங்களில், 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது.
    • அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடன் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித் துறையில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி, தொடக்கக் கல்வி இயக்குனரின் கருத்துரு, அரசின் விரிவான பரிசீலனைக்கு பிறகு 2023-24-ம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையிலான இடங்களில், 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது.

    இந்த நிலையில் அந்த பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட தொடக்கக் கல்வி இயக்குனருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடன் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.

    தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 இடைநிலை ஆசிரியர்களில் தேர்வு செய்யப்படுபவர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். அவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யும்போதே அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×