search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மதுரை அணியுடனான தோல்வி குறித்து பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சன்னிகுமார் கருத்து தெரிவித்துள்ளார். #TNPL2018 #CSG #MP
    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரையிடம் வீழ்ந்து 2-வது தோல்வியை தழுவியது.

    நெல்லையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்எடுத்தது.

    கே.கவுசிக் 21 பந்தில் 37 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), கஜீத் சந்திரன் 29 பந்தில் 37 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), நிலேஷ் சுப்பிரமணியன் 28 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர். முருகன் அஸ்வின், சன்னிகுமார் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், சித்தார்த் 2 விக்கெட்டும், அலெக்சாண்டர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பின்னர் விளையாடியது. அந்த அணி 20 ஓவர்களில் 127 ரன்னில் (ஆல்அவுட்) ஆனது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 26 ரன்னில் தோற்றது.

    கார்த்திக் அதிகபட்சமாக 28 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்), கங்கா ஸ்ரீதர் ராஜூ 24 ரன்னும் (3 பவுண்டரி), முருகன் அஸ்வின் 17 பந்தில் 22 ரன்னும் (1பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரகீல்ஷா, வருண் சக்கரவர்ததி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டும், கவுசிக் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் தோற்றது. போட்டி முடிந்த பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சன்னிகுமார் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது அணியின் முடிவு. எங்களது பந்துவீச்சு பலம் வாய்ந்தது. இதனால் தான் எதிர் அணியை 153 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினோம். எங்களது பேட்டிங் தான் சிறப்பாக அமையவில்லை. ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் இன்னும் சற்று நம்பிக்கையோடு விளையாடி இருக்க வேண்டும்.

    அதேநேரத்தில் மதுரை அணி பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்து வீசினார்கள்.

    எங்களது பந்துவீச்சும், பீல்டிங்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கில் தான் இன்னும் முன்னேற்றம் தேவை. அடுத்தப்போட்டியில் நாங்கள் திறமையை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டி.என்.பி.எல். வரலாற்றில் மதுரை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணி வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியதாவது:-

    இந்த வெற்றியை பெருமையாக கருதுகிறேன். முதல் ஆட்டத்தில் நிறைய தவறுகள் செய்தோம். இந்த ஆட்டத்தில் நம்பிக்கையோடும், கனவோடும் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். இதை தக்க வைத்துக்கொள்வோம்.



    சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தது. ரகீல்ஷாவுடன் இணைந்து சிறப்பாக பந்துவீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்தர போட்டிகளில் நிறைய அனுபவம் பெற்றவர் என்பதால் அவரிடம் இருந்து நான் சிறப்பானவற்றை கற்றுக்கொள்ள முயற்சித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது 3-வது ஆட்டத்தில் காரைக்குடி காளையுடன் வருகிற 21-ந்தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. மதுரை அணி 3-வது போட்டியில் ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்சை 22-ந்தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டம் திண்டுக்கல்லில் நடக்கிறது.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #CSG #MP
    திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #TNPL2018 #ChepaukSuperGillies #SiechemMaduraiPanthers
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அருண் கார்த்திக், ரோகித் ஆகியோர் இறங்கினர். அவர்கள் இருவரும் விரைவில் அவுட்டாகினர்.

    மதுரை அணியில் ஷிஜித் சந்திரன், ஜகதீசன் கவுசிக் ஆகியோர் ஓரளவு விளையாடி தலா 37 ரன்கள் எடுத்தனர். நில்ஷ் சுப்ரமணியன் 31 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.



    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் முருகன் அஷ்வின், சன்னி குமார் சிங் ஆகியோர் 3 விக்கெட்டும், சித்தார்த் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கோபிநாத், கங்கா ஸ்ரீதர் ராஜு ஆகியோர் இறங்கினர்.

    கோபிநாத் 8 ரன்னிலும், ராஜு 24 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய சசிதேவ், பாஸ்கரன் ராகுல் ஆகியோரும் விரைவில் அவுட்டாகினர். இதனால் சேப்பாக் அணி 12 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. சற்று பொறுப்புடன் ஆடிய கார்த்திக் 28 ரன்களில் அவுட்டாகினர். 14 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.



    இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 127 ரன்கள்  மட்டுமே எடுத்தது. இதயடுத்து, மதுரை பாந்தர்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மதுரை அணி சார்பில் ரஹில் ஷா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் 3 விக்கெட்டும், கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். போட்டியின் இடையில் பலத்த காற்று வீசியதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
    திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் லைகா கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. #TNPL2018 #LycaKovaiKings #KaraikudiKaalai
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடைபெற்ற லீக் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை லைகா கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற காரைக்குடி காளை பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் மான் மாப்னா 22 பந்தில் 44 ரன்கள் அடித்தார். அவருக்கு ஆதித்யா ஒத்துழைப்பு தந்தார். அவர் 36 ரன்களில் அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடாததால் காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.



    கோவை கிங்ஸ் சார்பில் பிரசாந்த் ராஜேஷ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். ஷாருக் கான் 32 ரன்களும், அஷ்வின் வெங்கட்ராமன் 34 ரன்களும் எடுத்தனர்.

    மற்றவர்கள் நிலைத்து நிற்காததால் கோவை அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.

    சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய கோவை கிங்ஸ் ஒரு ஓவரில் 1 விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய காரைக்குடி காளை 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கோவை கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
    சென்னையில் நடைபெற்ற திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தோல்வி அடைந்தது. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் பரத் ஷங்கர், பாபா இந்த்ரஜித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    பரத் ஷங்கர் 14 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த எஸ் அரவிந்த் 1 ரன்னில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு பாபா இந்த்ரஜித்தும், சுரேஷ் குமாரும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய சுரேஷ் குமார் 37 பந்தில் அரைசதம் அடித்தார்.

    மறுமுனையில் அரைசதம் அடித்த இந்த்ரஜித் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த்ரஜித் - சுரேஷ்குமார் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் குவித்தது. சுரேஷ் குமார் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 74 ரன்கள் சேர்த்தார். இறுதியில், ரூபி திருச்சி வாரியர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.



    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களமிறங்கியது.

    கோபிநாத், அருண்குமார் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். திருச்சி வாரியர்ஸ் சிறப்பாக பந்து வீசியதால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
     
    அருண்குமார் ஒரு ரன்னிலும், கோபிநாத் 11 ரன்னிலும், கங்கா ஸ்ரீதர் ராஜு 15 ரன்னிலும், கார்த்திக் 5 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 7 ஓவரில் 40 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய பாஸ்கரன் ராகுல், சசிதேவும் நிதானமாக ஆடினர். இந்த ஜோடி அரை சதம் கடந்தது. பொறுப்புடன் ஆடிய சசிதேவ் 30 ரன்னில் வெளியேறினார். சிறிது நேரத்தில் பாஸ்கரன் ராகுல் 53 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கியவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தோல்வி அடைந்தது.

    திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் சந்திரசேகர் கணபதி 5 விக்கெட் வீழ்த்தினார்.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் மதுரை பாந்தர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ். #TNPL #SMPvDD
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று 2-வது ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக சீசெம் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி மதுரை அணியின் அருண் கார்த்திக், ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் 24 ரன்களும், தலைவன் சற்குணம் 26 ரன்களும், அருண் கார்த்திக் 61 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில் ஷிஜித் சந்திரன் 35 ரன்கள் சேர்க்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.

    திண்டுக்கல் அணியில் அஸ்வின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 170 ரன்களை இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. ஹரி நிஷாந்தும், ஜகதீசனும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    ஹரி நிஷாந்த் 28 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விவேக் ஜகதீசனுடன் சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 15.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஜகதீசன் 42 பந்துகளில் 68 ரன்களும், விவேக் 33 பந்துகளில் 70 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நெல்லையில் நாளை தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. #NammaOoruNammaGethu #TNPL2018
    நெல்லை:

    டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் டூட்டி பேட்டிரியாட்ஸ் (தூத்துக்குடி) அணி அறிமுக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. கடந்த ஆண்டு நடந்த 2-வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

    3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நெல்லையில் நாளை (11-ந் தேதி) தொடங்குகிறது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

    நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் ஆகிய 3 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.

    நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், வி.பி.காஞ்சி வீரன்ஸ், லைகா கோவை கிங்ஸ், சீசெம்மதுரை பாந்தர்ஸ், ஐடிரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை இந்த முறை புதிய உரிமையாளர்கள் வாங்கி இருப்பதால் அதன் பெயர்களை மாற்றி உள்ளனர். அதன்படி ஐடிரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் பெயர் வி.பி.காஞ்சி வீரன்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    மொத்தம் 32 போட்டிகள் நடக்கிறது. நெல்லை, திண்டுக்கல்லில் (நத்தம்) தலா 14 ஆட்டங்களும், சென்னையில் 4 போட்டிகளும் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரண்டு போட்டிகளும் (மாலை 3.15, இரவு 7.15) மற்ற தினங்களில் ஒரே ஒரு ஆட்டமும் (இரவு 7.15) நடைபெறும்.

    ஆகஸ்டு 5-ந் தேதி வரை ‘லீக்’ ஆட்டம் நடைபெறும். 7-ந் தேதி ‘பிளே ஆப்’ சுற்று தொடங்குகிறது. ‘தகுதி சுற்று1’ ஆட்டம் (குவாலிபையர்1) நெல்லையிலும், வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) மற்றும் தகுதி சுற்று-2 (குவாலி பையர் 2) ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும் நடக்கிறது. இறுதிப்போட்டி ஆகஸ்டு 12-ந் தேதி சென்னையில் நடக்கிறது.

    முதல் 2 சீசனிலும் ஒவ்வொரு அணியிலும் விளையாடிய வீரர்கள் இந்த சீசனில் வேறு அணிக்காக ஆடுகிறார்கள். 3-வது டி.என்.பி.எல். சீசனுக்கான வீரர்கள் புதிதாக ஏலம் விடப்பட்டனர். இதனால் முதல் 2 போட்டியை விட இந்த சீசன் போட்டி அதை விட விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வீரரும் தங்களதுதிறமையை வெளிப்படுத்த கடுமையாக போராடுவார்கள்.

    3-வது டி.என்.பி.எல். போட்டியில் முதல் முறையாக வெளி மாநில வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் 2 வீரர்கள் என மொத்தம் 16 வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நாளை (புதன் கிழமை) இரவு 7.15 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.



    முன்னதாக தொடக்க விழா கோலாகலமாக நடக்கிறது. 8 அணிகளின் கேப்டன்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்சை எதிர் கொள்கிறது. அந்த ஆட்டம் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) சென்னையில் நடக்கிறது.

    டி.என்.பி.எல். போட்டிகள் அனைத்தும் ஸ்டோர் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1’ சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #NammaOoruNammaGethu #TNPL2018
    ×